அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் பொருளாளர் - மக்கீ மாமா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட எம்.என்.முஹம்மத் இப்ராஹீம் மக்கீ அவர்கள் கடந்த 14-01-2016 அன்று சாதாரண சளி, காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணித்துவிட்டார்கள் என்ற செய்தி அஸ்ஹர் ஜமாஅத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொது வாழ்வில் அர்ப்பணிப்பும், காதலும் கொண்ட ஓர் அருமையான மனிதரை இழந்து விட்டோம்.
தொழில் ரீதியாகவும் பொதுச் சேவைகள் மூலமும் அவர்களுடன் இணைந்து பழகியவர்கள் அவர்களின் செயல்பாட்டில் நிறைய அம்சங்களைக் கற்றிருப்பார்கள்.
நாணயம் - நம்பிக்கையுடன் வாழ்ந்ததுடன், பண விஷயமென்றால், என்னதான் சொந்தம் - நட்பு என்ற உறவிருந்தாலும் - அது சமுதாயம் சார்ந்த விஷயமென்றால் யாரிடமும் எவ்வித சார்புத் தன்மையையும் காட்டமாட்டார்கள். ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதைச் சீராகவும் செம்மையாகவும் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் கொண்டிருந்தார்கள்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம்.) சார்ந்த ஒரு வேலை என அலுவலகத்திற்குச் சென்றால் அநேகமான நேரங்களில் தென்படுபவர் மக்கீ மாமாவாகத்தான் இருப்பார்.
மக்கீ மாமா மறைந்துவிட்டார்கள் என்றாலும் அஸ்ஹர் அலுவலகத்தின் பக்கம் செல்லும் போதெல்லாம் என்னையுமறியாமல் என் கண்கள் அவர்களை ஏனோ தேடுகின்றன. அவர்கள் இல்லாத அலுவலகம் ஏதோ பொலிவிழந்ததாக உணர்கிறேன். அந்தளவுக்கு அஸ்ஹர் மற்றும் ஐ.ஐ.எம். சார்ந்த அனைத்து செயல்பாடுகளிலும் தன்னை ஏதோ ஒரு விதத்தில் ஈடுபடுத்தி செம்மையாகச் சேவையாற்றி நம் மனதையெல்லாம் கொள்ளைகொண்டு விட்டார்கள்.
எழுபத்தி நான்கு வயதிலும் ஓர் இளைஞனைப் போன்று - அதிகாலை முதல் இரவு பின்னேரம் வரை சுறுசுறுப்பாக சுழன்று செயல்பட்டது பிரமிக்கத்தக்கது.
தினமும் காலை எட்டரை மணிக்கு, எல்.கே.ஜி. மாணவர்களுடன் குத்துக்கல் தெருவில் விஸ்டம் பள்ளிப் பேருந்திற்காகக் காத்திருப்பதைக் காண முடியும். பகல் பின்னேரம் வரை - அவர்கள் அறங்காவலர்களுள் ஒருவராகப் பணியாற்றிய அப்பள்ளிக்கூடத்தில் பொறுப்பாற்றிவிட்டு, சற்று நேர ஓய்வுக்குப் பின் மஃரிபிலிருந்து இரவு 10-11 மணி வரை அஸ்ஹர் அலுவலகத்தில் காணலாம். விடுமுறை நாட்களில் காலை முதல் பகல் 2.30 மணி வரையிலும் அஸ்ஹர் அலுவலகத்தில்தான் இருப்பார்கள்.
அல் ஜாமிவுல் அஸ்ஹரின் அன்றாடக் கணக்கு வழக்கு,
அதன் புதிய கட்டிட கணக்கு,
அதன் மக்தப் - ஹிஃப்ழு மத்ரஸா - தீனியாத் கணக்கு,
ஐ.ஐ.எம். அமைப்பு மற்றும் அதன் பைத்துல்மால் கணக்கு,
என பல செயல்பாட்டுக் கணக்குவழக்குகளை தனியே அமர்ந்து தம் கையாலேயே எழுதிப் பராமரித்தும், பாதுகாத்தும் வந்தார்கள்.
கணினி இருந்தும், கணினி முறையில் எழுத ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தும் - முதலில் தன் கைப்பட எழுதிய பின்பே கணினியில் பதிவேற்றக் கொடுப்பார்கள்.
“கணினியை கற்றுக் கொள்ளுங்கள் மாமா!” என்று சொன்னால், “போ... போ...! உனக்கு வேலைதானே நடக்கனும்...? நடக்குதா, இல்லையா...? குறையிருந்தால் சொல்லு!” என்பார்கள்.
மக்கி மாமாவின் மறைவால் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை.
அவர்களின் இடத்தை வேறு ஒரு தனி மனிதனால் ஈடு செய்ய முடியுமா என்பது ஐயத்திற்குரியதே.
மெதுவாகத்தான் செய்தார்கள்; ஆனால் முழுமை இருந்தது. பழைய முறைகளைத்தான் பின்பற்றினார்கள்; ஆனாலும் எந்தக் குறையுமின்றி நிறைவாக இருந்தது.
என்னதான் பழையதாகவும், மெதுவாகவும் சென்றாலும் ‘ஓடிக்கொண்டிருப்பதுதான் சிறந்த வாகனம்’என்ற ஒரு சொல்லாடல் உருது மொழியில் உள்ளது. இந்த ஒப்பீடு மக்கீ மாமாவுக்கு மிகவும் பொருந்தும்.
நேர்மை, நேரந்தவறாமை, பணியாளர்களிடம் கனிவுடன் கூடிய கடுமை, யாருக்காகவும் வளைந்து போகாமை, அவ்வப்போது சினம் கொண்டாலும் அநேகமான நேரங்களில் சிரிப்பும் நகைச்சுவையும் கூடிய தன்மை என பல ‘மை’களைக் கொண்டு ஆமை போல செயல்பட்டு, வேகத்தில் கூடிய முயலையே வென்ற நல்ல பண்பாளர். பொதுப் பணத்தை - சிக்கனம், வீண்விரயம் இரண்டையும் பகுத்தறிந்து பாதுகாத்தவர்.
அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது உற்சாகமும், மகிழ்ச்சியும் மிகுதியாக இருக்கும். பிறர் தன்னைக் கேலி செய்வதையும் ரசித்து சிரிக்கக்கூடிய சீரிய மனிதரல்லவா அவர்...?
ஒவ்வொரு நாளும் ‘தான் நாளையே இறந்து விடலாம்’ என்று எண்ணியே அன்றைய வேலைகளை அன்றைய நாளிலேயே முடிக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதிபட வாழ்ந்தவர்.
அதனால்தான், தான் கடைசியாக சுகவீனப்பட்டபோது தன் குடும்பத்தாரிடம், “எல்லாக் கணக்குவழக்கையும் முடிச்சிட்டேன்... நான் யாருக்கும் எந்தத் தொகையையும் கொடுக்க வேண்டியதில்லை... யாருக்கும் நான் பொறுப்பாளியில்லை...” என்று கடைசியாகப் பேசுவது போலவே பேசி, வீட்டை விட்டும் மருத்துவமனைக்கு விடைபெற்றுச் சென்றதாக அறிந்துகொண்டேன்.
ஒவ்வொரு ஜூம்ஆ வசூலும், பெருநாள் வசூலும் ஏதோ தனக்குக் கிடைக்கப் போவதைப் போன்று ஆட்களை ஏவுவதும், வசூலான பணத்தை எண்ணும்போது சென்ற ஆண்டை விட இம்முறை கூடுதலாக வந்துள்ளதா என பரபரப்புடன் எதிர்பார்ப்பதும், பணத்தை எண்ணுபவர்கள் வேண்டுமென்றே கூட்டலில் குறைவாகக் காட்டி அவர்களைக் கிண்டல் செய்வதும் - இனி கிடைக்கவே கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும்.
நோன்பு காலத்தில் கஞ்சி ஏற்பாடு, குர்ஆன் வகுப்பிற்கு ஆலிம்களை வரவழைத்தல், அவர்கள் உண்ண, உறங்க இட ஏற்பாடுகளைச் செய்தல், உள்ஹிய்யா மிருகங்கள் வாங்குவது தொட்டு, பங்கிட்டு வினியோகிப்பது வரையிலுள்ள அனைத்துப் பணிகளுக்கும் தானே முன்னின்று செயல்படுவதுடன் அந்தந்த குழுவினரை உற்சாகப்படுத்தி வேலை வாங்குதல் என அனைத்திலும் சகல வல்லமை பொருந்தியவர்.
கணினியை வைத்துள்ள நாம் கவனக் குறைவுகளாலும், சோம்பலாலும் நிறைய வேலைகளைத் தேக்கி வைத்திருக்கலாம். ஆனால் கணினி முறைக் கணிதத்தைக் கற்காத மாமாவின் கணக்கில் ஒரு நாளும் அடித்தல் திருத்தல் இருந்ததில்லை... கூட்டல் கழித்தலில் தவறு என்றுமே ஏற்பட்டதில்லை.
கருணையுள்ள அல்லாஹுத் தஆலா மக்கீ மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சேவையை ஒப்புக் கொள்ளப்பட்ட சேவையாக ஏற்று, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நல்லோருடன் நிறைவாக அமர்ந்திருக்கும் நல்ல பாக்கியத்தை அவர்களுக்கும், நம் யாவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.
|