சமகால வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்திட பெரும்பாலும் பெண்களை வைத்து காணக் கூசும் காட்சிகளையே தொலைக்காட்சி விளம்பரங்களாய் தயாரிக்கின்றன.
அதில் வரக் கூடிய காட்சிகள் வரம்பு மீறியதாகவும், அந்தப் பொருளோடு எவ்வித தொடர்பின்றியும் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இத்தகைய பண்பாடற்ற சந்தைக் கலாச்சாரச் சூழலில் இப்படி ஒரு அழகான தொலைக்காட்சி விளம்பரமா?
பெண்களை அரை குறை ஆடையோடு அசிங்கப்படுத்தாமல் அதே நேரம் சமூக மேம்பாட்டிற்கான நல்ல ஒரு சிந்தனையை {MESSAGE} ஒரு விளம்பரத்தினூடாக மக்கள் மனங்களில் விதைக்க முடியுமா?
நிச்சயம் முடியும்! என்று சொன்ன அந்தத் தனியார் வர்த்தக நிறுவனத்தின் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை தற்செயலாகக் காண நேர்ந்தது ...
அது ஒரு அழகிய வீட்டின் அலுவல் அறை....
கணணி முன்னால் கருமமே கண்ணாக
அலுவலக வேலையில் மூழ்கியிருக்கும்
கட்டிடக் கலைஞரான ஒரு தந்தை...
அவரை நோக்கி கவலை தோய்ந்த முகத்துடன் ஓடோடி வரும்
ஏழு வயதே மதிக்கத் தக்க அவரது மகள்....
அங்கிருக்கும் நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொள்கிறாள்.
தந்தையின் முகத்தையே ஏக்கத்துடன் உற்று நோக்கிய வண்ணம்
அங்குள்ள மேசையில் கிடக்கும் ஒரு பென்சிலை
தன் பிஞ்சுக் கரத்தால் முன்னும் பின்னும் உருட்டி விளையாடிக் கொண்டே
தன் தந்தையுடன் உரையாடத் தொடங்குகிறாள்
அந்தக் குழந்தை.... இப்படி
அப்பா...!
ம்ம்ம்...
அப்பா! வேலையா?
ம்ம்ம்...
முக்கியமான வேலையா?
ம்ம்ம்...
என்ன வேலை அப்பா..?
என் வாடிக்கையாளரின் புதிய வீடு ஒன்றை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்.... ஏன் ?
அப்பா..! அப்பா..! அந்த வீட்டிலாவது இதைப் போன்ற அலுவல் அறை ஒன்றை வைக்காதீங்கப்பா ...
ஏன்..?
அப்பத்தான் அந்த வீட்டிலுள்ள அப்பாவாவது அவரோட மகளை கண்டும் காணாமல் இருக்க மாட்டார்...
என்று சொன்னதும் நொறுங்கிப் போன அந்தத் தந்தை தன் அன்பு மகளை அப்படியே அள்ளி அணைத்து ஆரத் தழுவி முத்தமிடுகிறார்.
தனக்கென ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை இன்னொன்று விழுங்கி விட்டதை தன் தந்தையிடம் எவ்வளவு நேர்த்தியாக உணர்த்தி விட்டாள் அந்தச் சின்னஞ் சிறுமி.
இதனை ஒரு சாதாரண விளம்பரப் படம் என உதறித் தள்ளிவிட முடியவில்லை.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் குழந்தைகளில் பலருக்கும் தம் உரிமையைக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். ஆனாலும் அதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
இந்தத் தந்தையைப் போவே நம்மில் சிலர் நம் குழந்தைகளைப் புரிந்து கொள்ள மறந்து விடுகிறோம். அன்றாடம் குழந்தைகளில் பலர் தம் பிஞ்சு உணர்வுகளை சுமந்த வண்ணம் தங்கள் அன்புக்குரிய பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாய் காத்துக் கிடக்கின்றனர்.
ஆனாலும் சிலர் தங்கள் குழந்தைகளின் காத்திருப்புக்களை கண்டு கொள்வதில்லை
அல்லது அவர்களால் அதற்கான நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.
பாடசாலை சென்று வரும் ஒவ்வொரு குழந்தையும் தன்னில் பதிந்து கொண்ட அன்றாட வகுப்பறை நிகழ்வுகளை, அதை ஒட்டிய அனுபவங்களை தன் நம்பிக்கைக்குரிய தந்தையிடம் (SHARE) பகிர்ந்து கொள்ள ஆர்வமுடன் வீடு வருகின்றனர். தன் சின்னச் சின்னச் சாதனைகளை மட்டுமின்றி அதன் ஆழ்மனதில் புதைந்திருக்கும் சின்னச் சின்ன வேதனைகளையும் சேர்த்தே. இத்தகைய உணர்வுகளை அது யாரிடம்தான் கொண்டுபோய் சொல்லும்...? அது எப்படித்தான் ஆறுதல் அடையும்? பாவம்.... அந்தப் பிஞ்சுகள்!!!
மனச் சுமைகளை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புகள் மறுக்கப்படும்போதும் அதற்கான வாசல்கள் மூடப்படும்போதும் குழந்தைகள் வடிகால் தேடி பாதை மாறிப் போய் விட நாமே காரணி ஆகிவிடும் அபாயத்தை இங்கே மறுப்பதற்கில்லை.
தம் சாதனைகளை தங்கள் தந்தையரிடம் மட்டுமே காதோடு காதாகச் சொல்ல வேண்டும். அவரின் பாராட்டு (LIKE) மழையில் நனைந்திட வேண்டும் என்ற கனவோடு ஆசை ஆசையாய் ஓடோடி வருகின்றனர்.
அவ்வாறான பொழுதில் அந்தத் தந்தையோ நவீன தொடர்பு சாதனத்தில் தன்னைத் தொலைத்திருப்பார். ஒன்று முகநூலில் முகம் புதைத்திருப்பார். அல்லது வலை தள மெங்கும் வலம் வந்து கொண்டிருப்பார். கரை கடந்து கடல் கடந்து யாரோ ஒருவரோடு அளவளாவிட ஆன்லைனில் அசராமல் காத்திருப்பார்.
படித்ததை, பார்த்ததை, பிடித்ததை, பிடிக்காததையும் SHARE செய்வார். அவர் பகிர்ந்ததை, சரியோ பிழையோ LIKE செய்வார். அதற்கென அன்றாடம் மணிக்கணக்கில் நேரம் ஒதுக்குவார். ஆனால் தான் கண்டதை, கேட்டதை SHARE செய்து LIKE தேடும் ஆவலில் தன் குழந்தை தனக்காக காத்திருப்பதை கண்டு கொள்ள மறந்திடுவார்.
பொதுவாக குழந்தைகளின் உலகம் ஆனந்தமானது அதில் அவர்கள் உலா வரும் அழகே அலாதியானது. அதிலும் தம் தந்தையரிடம் தனக்குள்ள முன்னுரிமையை எளிதில் விட்டுக் கொடுப்பதில்லை. அதனை எதிர்பார்ப்பதும் இயல்பு. அதே வேளை அவர்களின் முன்னுரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் மலரினும் மெல்லிய அந்தப் பிஞ்சுகளின் உணர்வுகள் ஊனமாகிப் போகாதா ? அது பிரசவிக்கும் மன வேதனையை எந்தக் குழந்தையால் தாங்கிக் கொள்ள முடியும்?
நம் நேசத்துக்குரிய குழந்தைகளை நாம் வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டோம். இருந்தபோதும் நம்மை ஆக்கிரமித்துள்ள தொடர்பாடல் எனும் நவீன போதை எத்துனை ஆபத்தானது. அது நம்மை எந்தளவு அடிமையாக்கி தனிமைப்படுத்தி இருப்பதை நாம் இன்னும் உணரவில்லை. இல்லையா?
நம் வீடுகளைப் பாருங்கள். ஒவ்வொருவரிடமும் TAB என்றும் SMART PHONE என்றும் வித விதமான நவீன டிஜிட்டல் ஆயுதங்கள். இவைகளை கையில் எடுத்து விட்டால் குனிந்த தலை நிமிராது . நம் பேச்சும் மூச்சும் நின்று போய் விடும். மௌன விரதம் அனுஷ்டிப்பதைப் போல் வீட்டில் அப்படி ஒரு மயான அமைதி.
ஆளுக்கு ஒரு மூலையில் போனோடு புதைந்து போவதில் அப்படி என்ன இலாபம்? மனைவியோ கணவனோ ஒருவர் மற்றவரை அழைத்தால் அது அவர்களின் காதுகளில் விழுவதில்லை. கொஞ்ச நேரம் முகத்தோடு முகம் பார்த்து பேச முடிவதில்லை. எங்கே ஒரு உறவுக்குள் பேச்சு சுருங்கி விடுகிறதோ அங்கே விரிசல் விழத் தொடங்கி விடும். அல்லவா ? .
உறவுகளை வலுப்படுத்திட, குடும்பத்தோடு கூடியிருந்து அளவளாவிய அருமையான பொழுதுகளெல்லாம் பழங்கதையாகிப் போனதோ... எனப் புலம்பத் தோன்றுகிறது.
இந்த நவீன தொடர்பாடல் வசதி பல்வேறு நன்மைகளை இந்தச் சமூகத்திற்கு வழங்கி இருக்கும் அதே வேளை தூர இருப்பவர்களை கிட்டேயும் , நெருங்கி இருப்பவர்களை தொடர்பு எல்லைக்கு வெளியேயும் தள்ளியிருக்கிறது . இது நவீன சாதனங்களின் பிழை அல்ல . மாறாக நேரத்தை, நவீனத்தை, முறையாக கையாளத் தெரியாமல் தினறும் அறியாமையின் விளைவு.
இன்றைய நவீன வாழ்வியல் முறையில் குடும்பத்தினரோடு கூடி இருந்து பேசி மகிழ்ந்திட மட்டுமின்றி குறித்த நேரத்தில் நம்மைப் படைத்த இறைவனை வணங்கி வழிபட நேரம் ஒதுக்குவதும் நமக்கு மிகக் கடினமான காரியமாய் போய் விட்டதே.. ! இல்லையா ? இதிலிருந்து நாம் எந்த அளவுக்கு வரையின்றி, முறையின்றி நவீனத்தில் சிக்கித் தொலைந்து கொண்டிருக்கிறோம் ? என்பது புரிகிறதல்லவா?
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்று சொல்லும் இது போன்ற பாலர் பாடங்களை புரட்டிப் பார்ப்பது சில வேளை நம்மில் சிலருக்குப் பயன் தரக்கூடும் .
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,
"இறைத் தூதர் அவர்களே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்?” என்று கேட்டார்.
"உன் தாய்" என்றார்கள்.
“பின்பு யார்?” என்று கேட்டார். "உன் தாய்" என்றார்கள்.
பிறகு யார்? என்று கேட்டார். "உன் தாய்" என்றார்கள்.
பிறகு யார் ? என்று கேட்டார். "உன் தந்தை" என்று கூறினார்கள். (புஹாரி :5971)
மேற்கண்ட நபிமொழி பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் பேணப்பட வேண்டிய உறவு முறையை எவ்வளவு அழகாக எடுத்தியம்புகிறது பாருங்கள்? சமகால முதியோரிடம் கொஞ்சம் காதுகொடுத்துப் பாருங்கள். உங்களின் தேவை என்ன? என்று. அது உங்கள் தாயாகவோ தந்தையாகவோ இருக்கலாம். அவர்கள் பொருளை, பணத்தை, கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. மாறாக உங்கள் பொழுதை, பாசத்தை அவர்களுடன் பகிரக் கேட்பார்கள். உங்களின் அருகாமை, அரவணைப்பை மட்டுமே வேண்டி நிற்பார்கள்.
மனிதனின் இரண்டாவது குழந்தைப் பருவத்தை அல் குர் ஆன் இப்படிச் சொல்கிறது. "அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர்" (அல் குர்ஆன் 22:5)
இத்தகைய தள்ளாமையின் விளிம்பில் நிற்கும் நம் பெற்றோரின் இறுதிப் பகுதியில்எஞ்சி நிற்கும் எதிர்பாப்புகள் என்னவாய் இருக்கும்? சற்றே சிந்தித்துப் பார்த்ததுண்டா...?
பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனாலும் நீங்கள் அருகிருந்து ஆதரவாய் பேச வேண்டும் என ஆவலாய் துடிப்பார்கள். தொலை தூரத்தில் இருந்தால் தொலை பேசியினூடாவது பேச வேண்டும் எனத் தவிப்பார்கள். உங்கள் முகம் காண நீங்கள் வரும் நாளை எண்ணி ஏக்கத்துடன் காத்திருப்பார்கள். இது போன்ற சின்னச் சின்ன ஆசைகளே அவர்களின் இதயத்தை இயங்கச் செய்யும் பிராணவாயு. ஏனெனில் நீங்களே அவர்கள் பெற்றெடுத்த செல்வங்கள்.
இன்று நமது குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் வேண்டி நிற்கும் பாசப் பிணைப்பை நேரப் பகிர்வை நமது பெற்றோர் அவர்களின் குழந்தைகளிடம் தேடி நிற்கின்றனர். இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். நாளை ஒரு நாள் நாமும் முதுமை அடையலாம். இன்றைய நம் பெற்றோரின் தேடல் நாளை நமது தேடலாகவும் மாறலாம். அந்தத் தேடலின் இலக்காக இருக்கப் போவது நம் அன்புக்குரிய குழந்தைகளே...!
அவர்கள் நம்மிடம் வேண்டி நிற்கும் நேசத்தை, நேரத்தை இன்று நாம் சரியான முறையில் பகிர்ந்து கொண்டால் நாளை நமக்கு வேண்டியதை அவர்களும் பகிர்ந்து கொள்வார்கள். அத்தோடு அவர்களின் இளம் பிராயம் தொட்டே இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை கற்பிப்பதினூடாக முதுமையில் நம் நிலை அறிந்து நம்மைப் புரிந்து நடக்கும் நன் மக்களாக உருவாக்கலாம் இன்ஷா அல்லாஹ். இப்போதே அதற்கான விதை விதைக்கப்பட வேண்டும்.
இருந்த போதும் சமகால நவீன தொழிற் நுட்பத்தின் அசுர வளர்ச்சி இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.... |