திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணத் துவங்கியவுடன் நினைவுக்கு வருவது - கை ரிக்ஷா ஒழிப்பு முதல், காப்பீட்டுத் திட்டம் வரையிலான கலைஞரின் கணக்கற்ற சாதனைகள் மாத்திரமல்ல! கடந்த ஐந்தாண்டு காலமாக செயலற்றுக் கிடக்கும் ஒரு மக்கள் விரோத அரசின் காணொளி ஆட்சியும் கூட!
குமாரசாமியின் கால்குலேட்டரில் கை நழுவிப் போன நீதி, ஆச்சாரியாவின் அசுரப் பிடியில் பெங்களூரின் காராக்கிரகக் கதவுகளை மீண்டும் திறந்துவிடக் கூடும். ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வருமேயானால், மீண்டும் ஒரு பொம்மை அரசாங்கம், எல்லா நிலையிலும் - எல்லாத் துறைகளிலும் செயலற்ற தன்மை வியாபித்துவிடும்.
நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில் 6 முனைப் போட்டி, 7 முனைப் போட்டி என்று சொல்வதெல்லாம் யதார்த்தத்திலிருந்து மாறுபட்ட விவாதமாகும். மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்தின் வருகைக்குப் பிறகு மனநலம் குன்றிய கூட்டணியாக மாறி - வைகோ, பிரேமலதா போன்றோரின் பொறுப்பற்ற பேச்சுக்களாலும், செயல்களாலும் கரைந்து காற்றோடு கலந்து, களத்திலேயே இல்லாமலாகிவிட்டது.
ஆளும் அண்ணா திமுகவின் மக்கள் விரோதக் கொள்கைகளால் இன்று அவர்களது அமைச்சர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் எங்குமே போய் வாக்கு சேகரிக்க இயலாத படி, பொதுமக்கள் அவர்களை ஊரை விட்டே விரட்டியடிப்பது அன்றாடம் செய்தித்தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
சாலைகள் அமைப்பது, பள்ளிக்கூடங்கள் - அணைகள் - பாலங்கள் கட்டுவது என இவையாவும் ஓர் அரசாங்கத்தின் வழமையான செயல்பாடுகளே. இந்தச் சமூகத்தையே புரட்டிப் போடும் பல்வேறு சமூக நீதித் திட்டங்களை கடந்த கால கலைஞர் அரசு திறம்பட செய்து முடித்தது. குறிப்பாக முஸ்லிம்களுக்காக 3.5 சதவிகிதத்தை இடஒதுக்கீடாகத் தந்தது, கலப்புத் திருமண சட்டம், விதவைகள் மறுவாழ்வுத் திட்டம், மனிதரை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாவை தடை செய்தது, அனைவரும் அர்ச்சகராகும் சமநீதித் திட்டம், சமத்துவபுரங்கள், உழவர்களே விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உழவர் சந்தைகள் - என்று எழுதிக்கொண்டே சென்றால் தேர்தல் நாள் வந்துவிடும்.
ஏறத்தாழ எல்லாக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வெளிவந்துவிட்ட நிலையில், கல்விப் பணிக்கும் - விவசாயத்திற்கும் அன்றி வேறெதற்கும் இனிக்கும் இலவசங்களை நாக்கில் தடவாமல், இருண்டு கிடக்கும் தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான அனைத்து அம்சங்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது.
அதில் முதன்மையானது மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழிதான். நடந்துகொண்டிருக்கும் ஜெயலலிதா ஆட்சியில் எந்தளவிற்கு மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து, அதற்காக தனிப் பரிசுத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு, மது விற்பனை அதிகரிக்க கலெக்டர் முதல் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் வரை பாடுபட்ட வரலாறு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திற்கும் வாய்த்திடவில்லை. மதுவிற்கெதிரான பாடல்களைத் தந்ததற்காக ஓர் எளிய கலைஞன் கோவனை தேச விரோத சட்டத்தில் கைது செய்ததும், அதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த - மதுவுக்கெதிரான மாணவர் போராட்டத்தை - காவல்துறையின் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டு நசுக்கியதும், மதுவுக்கெதிரான போராட்டத்தில் தனித்தன்மையுடன் முனைந்து நின்ற சசிபெருமாளை கோபுரத்தில் ஏற்றி - அவரே தற்கொலை செய்துகொண்ட காட்சியும் அரங்கேற்றப்பட்டது இந்த அரசால். இந்த லட்சணத்தில் இவர்கள் படிப்படியாக மதுவைக் குறைப்பார்களாம்.
கடந்த ஐந்தாண்டு காலம் கலைஞர் அரசு உற்பத்தி செய்த மின்சாரத்தை விட ஒரேயொரு மெகாவாட் அதிகமாக இந்த அரசு மின் உற்பத்தி செய்தது என்பதை மின்மிகை மாநிலம் என்று கதையளக்கும் கண்ணியவான்கள் நிரூபிக்கத் தயாரா?
கடந்த ஐந்தாண்டு காலமாக - தான் வசிக்கும் சென்னை மாவட்டம், தனது உல்லாசபுரியைத் தாங்கி நிற்கும் நீலகிரி மாவட்டம் – இந்த இரண்டு மாவட்டங்களையும் தவிர, இந்த முதலமைச்சர் வேறு எந்த மாவட்டத்திற்கேனும் சென்றதுண்டா? தனது மக்களைக் கூட, அவ்வளவு ஏன்? மந்திரிகளையும், அதிகாரிகளையும் கூட சந்திப்பதற்கு நேரம் தராத இவரது கதை, மத்திய மந்திரி ப்யூஷ் கோயலின் பட்டவர்த்தனமான குற்றச்சாட்டில் பட்டம் போல் பறக்கிறது.
கடந்த ஐந்தாண்டு காலமாக ஒரேயொரு குடும்பத்திற்குக் கூட ரேஷன் அட்டையைப் புதிதாக வழங்காத இந்த அரசு, ரேஷன் ஒன்றுக்கு ஒரு மொபைல் இலவசமாகத் தருவதாகக் கூறுவது - சாதமே போடாமல் சாம்பார் ஊற்றுவது என்று சொல்வது போலத்தான்! சர்வதேச தொழில் வீதிகளில், தரம் குறைந்தது என்ற சான்றிதழுடன் குப்பைத் தொட்டியில் வீசப்படும் இயந்திரங்களையெல்லாம் ஒன்றிணைத்து, இவர்கள் தரப்போகும் மொபைல் தொலைபேசியால் எத்தனை உயிர் போகப்போகிறது என்பதை இன்றே அரூடம் சொல்ல இயலாது. ஆனால் நாம் முன்வைக்கும் கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் மாத்திரம் தமிழ் மக்களின் தலைகளில் ஒன்றரை லட்சம் கோடி கடன் சுமையைச் சுமத்திய இந்த அரசுக்கு இன்னமும் இலவச திட்டங்களைச் செயல்படுத்த எங்கிருந்து நிதி வரும்? இதற்கும் அறிவுஜீவிகளான அவர்களது அடிபொடிகள் விடை தரட்டும்!
நீதிமன்றத் தீர்ப்பால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறைச்சாலைக்குச் சென்று வந்த பிறகும், இவரது ஆணவம் கொஞ்சமும் அடங்கவில்லை என்பதை, அண்மைக் காலத்தில் இவர் அறிமுகப்படுத்தியிருக்கும் இரட்டை மேடைகள் சாட்சி பகர்கின்றன.
இதற்கெல்லாம் மேலாக, இந்தத் தேர்தலில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, சமுதாயத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், “12 முஸ்லிம்களேனும் சட்டமன்றத்திற்குச் செல்லும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்” என்று கலைஞரிடம் முன்வைத்த கோரிக்கையை அவர் அப்படியே ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாக இன்றைக்கு திமுக கூட்டணியில், கிட்டத்தட்ட 15 முஸ்லிம்கள் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
1967இல் அண்ணா காலத்தில் அமைந்த ஆரோக்கியமான சட்டமன்றம், திமுகவை ஆளுங்கட்சியாகவும், காங்கிரஸை எதிர்க்கட்சியாகவும் கொண்டு அமையவிருக்கிறது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த அடுக்கடுக்கான சாதீய ஆவணக் கொலைகள், சீரழிந்த சட்டம் ஒழுங்கு, மக்களையே சந்திக்காத மக்கள் பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள் சுதந்திரத்தின் கழுத்து நெறிப்பு, ஆட்சியின் எல்லா மட்டங்களிலும் ஊழல் என்ற நிலைகள் மாறி, மீண்டும் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க, இம்முறை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டியது அவசியம் என உணர்ததுக்கிறது.
நாடெங்கிலும் திமுகவின் அலை வீசுவதாக அனைத்து ஊடகங்களும் கணிக்கின்றன. 93 வயது சிங்கம் கர்ஜிக்கத் துவங்கியவுடனேயே, சில்லறைகளின் சலசலப்பு அடங்கிவிட்டது. அந்தகார இருளகற்றும் சூரியன் வலம் வரத் தொடங்கியதும், சந்து முனைகளில் சிந்து பாடும் சோடியம் வேப்பர் விளக்குகள் ஒண்டி ஒளிந்துகொண்டன.
ஆட்சி மாற்றத்திற்கான பொதுமக்களின் தாகம் மே 19இல் தணிந்துவிடும். ஆறாவது முறையாக, அன்னைத் தமிழகத்தின் அரியணையை அலங்கரிக்கவிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் - சொன்னதையும் செய்வார்; சொல்லாததையும் செய்வார் என்று நம்பிக்கை வைப்போம்! திமுக கூட்டணிக்கே வாக்களிப்போம். நல்லாட்சி மலர நாமும் ஒரு வித்தாவோம். |