நோயற்ற வாழ்வு என்பது உடல் நலன் மட்டுமல்ல. உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ‘நோய்’ இல்லாமல் வாழ்வது. அதுபோல், தனி மனித நலன் என்பது, அவனை சுற்றியுள்ள நல்லோர், அது-அல்லோர் மட்டுமல்லாது, இயற்கை வளங்களையும் உள்ளடக்கிய கூட்டுத் தொகையாகும்.
உலகமே மிகச் சிறியதொரு குறுகிய கிராமமாக மாறி வருகிறது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகள் மறுகோடி வரை பிரதிபலிப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அவ்வாறு இருக்கையில், நம் அருகிலேயே – நமது தெருவிலேயே – நமது ஊரிலேயே வசிக்கும் அன்பர்கள், நண்பர்கள் செய்யும் தவறுகளும் – அதைக் கண்டும் காணாமல் முகம் திருப்பிக் கொள்வதும் - நாமும் அதையே செய்வதும் – எவ்வளவு அதிகமான சுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்பதை நாம் உணர்ந்துள்ளோமா?
நீரின்றி அமையாது உலகு – நீ இன்றி அமையாது உலகு.
ஒவ்வொரு மனிதனுக்கும் – ஏன்? ஒவ்வொரு ஜீவராசிக்குமே - தண்ணீர் இன்றியமையாதது. அப்படிப்பட்ட ஒரு அத்தியாவசியமான தேவை நமதூரில் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கிறதா? என்றால் - “கேள்வி விஞ்சி நிற்கின்றது. பதிலோ... அஞ்சி ஒழிகின்றது”.
மோட்டார் வைத்து குடி-தண்ணீர் எடுப்பது குற்றம் என சட்டம் சொல்கிறது. நமது மனசாட்சி கூட ஆட்சேபனை தெரிவிக்கின்றது. இருந்தும், சில ஆண்டுகளுக்கு முன் எண்ணிக்கையில் அடங்கிய “தண்ணீர் மோட்டார்கள்” இன்று எண்ணிலடங்காமல் இருப்பதாக மக்களால் பரவலாக புள்ளி விபரக்கணக்கு சுட்டிக்காட்டிப் பேசப்படுகிறது. அறிந்தும் அறியாமையாலும் நிகழ்த்தப்படும் இந்த “தண்ணீர் ஆக்கிரமிப்பு” திருத்தப்பட, நிறுத்தப்பட வேண்டாமா? எனதருமை சகோதரர்களே! சிந்திப்போம் வாருங்கள்.
மோட்டார் வைத்து குடி தண்ணீர் எடுப்பதைப் பற்றிய குற்ற உணர்வு சிறிதேனும் நம்மிடம் உள்ளதா? அல்லது, அதனால் ஏற்படும் சமூக-அநீதி பற்றிய பய உணர்வோ அல்லது விழிப்புணர்வோ உள்ளதா? - என்பது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.
நமது வீட்டிற்கான தண்ணீரை எடுத்துக் கொள்வதில் நாம் காட்டும் ஆர்வத்தை, அவசரத்தை நமது அண்டை வீட்டாரை, அக்கம்பக்கத்துத் தெருவைப் பற்றி யோசிப்பதில் காட்டுவதில்லையே!. மோட்டார் வைக்க வசதியில்லாதோரும், மனமில்லாதோரும் – மனதாலும், உடலாலும் - எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை. “தமக்கு லாபம் தரும் அனைத்து காரியங்களும் - நல்ல விஷயங்கள்” என்றும், “தன்னை நேரடியாக பாதிக்காத வரை - தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும்” தான் சிலரது மனநிலையாக உள்ளது. “மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகின்றது”.
தேர்வானாலும், தேர்தலானாலும் வெற்றிக் கனியை பறிப்பது எப்படி என எண்ணுவது இயல்பேயாகும். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அனைவருக்கும் தண்ணீர் சம அளவில் சென்றடைய வேண்டாமா? ஆனால், வெற்றி அடைந்த பின்னர் ஒருவர் செய்து முடிக்கும் நற்காரியங்கள் மட்டுமே அவருக்கு நிலையான பெயரையும் புகழையும் மனநிறைவையும் பெற்று தரும் என்பதுதான் நிதர்சனம்.
“ஊரை மேன்படுத்துவேன்” - என வாக்குறுதி கொடுத்து வாக்குகள் பெற்ற சமூகத் தொண்டாற்றுவோர் அனைவரும் அவர்தம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீக கடமை உண்டு என்பதை மறுத்துவிடவோ, மறந்துவிடவோ கூடாது. அதுவும், தனக்கு வாக்குகள் அளித்தோரையும், தன்னை வெறுத்தோரையும் ஒரே நிலுவையில் ‘நெற்றிக்கண்’ கொண்டு பார்க்க வேண்டுமெனவும் சட்டம் உரக்கக் கூவுகிறது. அவ்வண்ணமே மக்களும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், இன்றைய ஆட்சி முறை எப்படி நடக்கிறது?...
ஆர்வமுடன் உழைப்பவன் – நேரம்
போதவில்லை என்கிறான்,
அரட்டையுடன் ஊதியம் பெறுபவன் – நேரம்
போகவில்லை என்கிறான்.
லட்சம் மக்களின் வாக்குகளை - லட்சியம்
என்ற பெயரில் சேகரிக்கிறான்,
லட்சங்களைச் சேர்க்க – தான்
கொண்ட லட்சியங்களை விற்கிறான்.
ஆசையுடன் கையூற்று பெறுபவன் – அரசனால்
ஆட்டி வைக்கப்படுகிறான்.
அரசனாக வலம் வருபவன் – ஆசையுடன்
ஆட வைத்துப் பார்கிறான்.
மனிதன் தவறு செய்பவன் என்பதால்தான் அவனை ஆட்சி செய்ய ஒரு குழுவை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். அந்த ஆட்சி குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? அனைவருக்கும் சம அளவு தண்ணீர் சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது அந்த ஆட்சிக் குழுவின் கடமை இல்லையா?. குடிதண்ணீர் மோட்டர்களை அகற்ற, நகராட்சி நிர்வாகமும் அதன் உறுப்பினர்களும் ஆண்டாண்டு காலமாக ஒவ்வொரு முறையும் மேம்போக்காக நடவடிக்கை எடுக்க அலோசித்துக் கொண்டு மட்டுமே இருக்கையில், அவை பெருகிக் கொண்டேயிருப்பதுதான் இப்போதைய அவதிநிலை.. அவலநிலை. இந்த துக்கம் நமது தூக்கத்தைத் துரத்த வேண்டாமா? இந்த தண்ணீர் - மோட்டார் எனும் அநீதிக்கு நகர்மன்றம் நீதியை நிலை நாட்ட, என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ற கேள்வியை மக்கள், ‘மன்றத்தின்’ முன் வைக்கிறார்கள். நியாயமான கோரிக்கைதானே?.
மனிதன் என்பவன் ஒரு சமூக பிராணி. ஒருவருக்கொருவர் உதவி செய்து மகிழ்ந்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழும் - பண்புக்கும், பழக்கத்திற்கும் உரியவனாவான். ‘நான் வாழ்ந்தால் போதும்’ என நினைப்பதை விட்டு, ‘நாம் வாழ்வோமே!’ என எண்ணுதல் மட்டுமே மேன்மை தரும். சுய நலத்தின் நிழல் நம்மை சூழ்ந்து விடாது காத்தல் மிக முக்கியம். தூய்மையான நல்ல சிந்தனைகளும், அதை நிறைவேற்றும் விடாமுயற்சியும் தான் ஒரு சமூகத்தை அடுத்த படித்தரத்திற்கு அழைத்துச் செல்லும்.
அறிவுக்கு அறிவு தேவையில்லை. மாறாக, செயல்கள் அறிவு செரிந்ததாக இருத்தல் வேண்டும். அறிவு என்பது செயல்களாக பரிணமிக்கும் போது தான் அந்த அறிவே புத்துயிர் பெறுகிறது. ஒருவனின் எண்ணம் என்னவாக இருக்கிறதோ அதுவாகவே அவனும் மாறுகிறான். ஆழ்மனம் எனும் அடிமனத்தில் - நல்லவற்றையும், ஆக்கரீதியான கொள்கைகளையும், சமூக ஒற்றுமையையும் வி(பு)தையுங்கள். அதன் விளைச்சல் நல்ல மகசூலாகவே இருக்கும். மனதை உழுது தான் வாழ்க்கையை செம்மைப்படுத்த முடியும். மனதை உழுது கிடைக்கும் அறிவை, பட்டைத் தீட்டிக் கொண்டால் வைரம் போல் ஜொலிக்கும். வைரம் போல் ஜொலிக்கும் அறிவை கொண்டு செய்யும் செயல்கள், சமூக வளர்ச்சிக்கு நல்ல-பாதை அமைப்பதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பரிதவிப்பில் விட்டு விடும்.
“நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” – என்ற எண்ணங்களைத் தன்னைச் சுற்றி படரவிட்டு, வாழ்க்கையை கோணலற்ற, குறிக்கோள் மிக்கதாக மாற்ற அறிந்தவன் - மனிதன். மகிழ்ச்சி என்பது நமது சமூகமும், சுற்றுசூழலும் நமக்கு தருகின்ற கொடை. அது, ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் இருந்தும் பொங்க வேண்டிய நன்னீர் ஊற்று. அதை வெளியே வெயிலில் தேடி அலைந்தால் ஏமாற்றமும் நாவறட்சியுமே மிஞ்சும்.
படிப்பது வேறு. கற்பது வேறு. நாம் இதுவரை எதைப் படித்தோமோ? எதை ‘சரி என்று தவறாக கடைப்பிடித்தோமோ?’ அது போன்ற ஆசைகளுக்கெல்லாம் முற்று புள்ளி வைப்போம். ஏனெனில், “தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது குற்றம். தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும். குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டும்”. நம் வீட்டை மட்டும் சோலைவனமாக மாற்றும் முயற்சியில் அண்டை அயலை பாலைவனமாக மாற்றாது இருக்க இன்றே சபதம் ஏற்போம்..
தனி மரம் தோப்பாகாது., அதே போன்று மானங்காப்பதும் ஒரு ‘நூல்’ அல்ல., பெரிய, சிறிய தறிகளில் ‘நெசவு’செய்யப்பட்ட ஆடைகள்தான். தண்ணீர் மெயினாக, மக்கள் கைடாக, நகராட்சி ரெய்டாக – செயலில் இறங்கினால், அறுவடையை அடுத்த தினமே காணலாம். “கட்டுப்படுத்தப்படாத சக்தி உடையவன், சாவியை பயன்படுத்துவதற்கு பதில் கோடாரியை பயன்படுத்துகிறான்”.
“வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்து என்பது மூலதனம்”. நகராட்சி நிர்வாகமும், ஜமாத்துகளும், பொது நல அமைப்புகளும், சமூக நல்லெண்ணம் கொண்ட மக்களும் ஒன்று கூடி இவ்விஷயத்தில் நல்லத் தீர்வை அமல்படுத்தி ஆணையிட்டால் நிறைந்த மனங்கள்...
நிறைய மனங்கள் மகிழ்ச்சி கொள்வது நகராட்சிக்கே சொந்தம்... நாம் ஒவ்வொருவரும் “ஊரையும், உலகத்தையும் மாற்றிவிட வேண்டுமென விரும்புகிறோம். ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள ஒருவரும் விரும்புவதில்லை”. “முட்டாளை படிப்பாளியாக்கலாம். ஆனால், சிந்தனையாளன் ஆக்க முடியாது”. நாம் சிறந்த மனிதர்கள். சிந்திக்கப் பிறந்தவர்கள். அதை நடைமுறைப் படுத்தும்போது மானமுள்ள மனிதர்கள் மாமனிதர்கள் ஆகிறார்கள்.
உங்கள் நோக்கு ஓராண்டுக்குறியது மட்டுமென்றால்
பூக்களை உருவாக்கும் செடிகளை நடுங்கள்...
உங்கள் நோக்கு பத்தாண்டுக்களுக்கு என்றால்
நிழல் தரும் மரங்களை நடுங்கள்...
உங்கள் நோக்கு என்றும் முடிவில்லாத காலத்திற்கென்றால்
மனிதர்களைப் பக்குவபடுத்துங்கள் - நல்லவர்களாக...
மாறுங்கள்...
மாற்றுங்கள்...
மறைவான விஷயங்களை படைத்தவன் நன்கு அறிந்தவனாக... |