எனது கண்ணியத்திற்குரிய பாசமிக்க ஆசிரியத் தந்தை ஷைக் அப்துல்லாஹ் ஆலிம் (பேஷ் இமாம்) அவர்களின் வஃபாத் செய்தியானது நமக்கெல்லாம் தாங்க முடியாத அதிர்ச்சியும் மிகுந்த பேரிழப்புமாகும். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
நமதூரின் அனைத்துப் பகுதி மாணவர்களுக்கும் இஸ்லாமிய ஆரம்பக் கல்வியைக் கடந்த 46 வருடங்களாகப் புகட்டி வருவதோடு, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் பல திறமைகளை வெளிக்கொணர்ந்து, மிளிரச் செய்து, தாய்ச்சபை மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் சேய் சபையாக இயங்கி வரும் - ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம் துவங்கிட காரண கர்த்தா இவர்களாவார்கள்.
அருள் மறையாம் திருக்குர்ஆனைப் பிழையின்றி ஓதக் கற்றுக்கொடுப்பதில் தனக்கென தனி வழியைக் கொண்டிருந்தவர்கள். அலிஃப், பா முதல் அருள் மறை குர்ஆனின் இறுதி வரை அன்னவர்களிடமே நானும் ஓதி முடித்தேன். என் போன்ற சக நண்பர்கள் அவர்களிடம் கால் மடித்து குர்ஆன் ஓதியது மட்டுமல்லாது, மார்க்க அடிப்படைக் கல்வி, தக்க ஷுரூத், அதபு மாலை, அஹ்காமுஷ் ஷாஃபிஇய்யா, தொழுகைக்காக உளூ செய்யும் முறை, தொழும் முறை என - மார்க்கம் சார்ந்த அனைத்து அடிப்படைகளையும், சின்னங்சிறு பருவத்தில் பசுமரத்தாணி போல் மனதில் பதிய வைத்தவர்கள்.
ஒழுக்க நெறிமுறைகளைத் தன்னலமின்றி போதித்த மகான் அவர்களிடம் பயின்ற மாணவர்கள் பலர் இன்று தலைசிறந்த ஆலிம்களாக, ஹாஃபிழ்களாகத் திகழ்ந்து வருகின்றனர். நான் ஹாஃபிழாக, ஆலிமாக ஆவதற்கும் அஸ்திவாரம் அமைத்துத் தந்தது இந்த மகான் அவர்கள்தான்! இன்று எல்லோராலும் அறியப்பட்ட - கிழக்குப் பகுதியின் எண்ணற்ற ஆலிம்களும், ஹாஃபிழ்களும், நல்லொழுக்கம் நிறையப் பெற்ற சகோதரர்களும் - இந்த மஹானின் அன்பு மாணவர்கள்.
இவர்களிடம் கால் மடித்துப் பாடம் கற்றோர் இன்று எந்த நிலையில், எங்கு இருந்தாலும் - ஊர் வந்தால் ஒரு முறையேனும் அவர்களை நேரில் சந்தித்து, துஆவைப் பெற்று வருவார்கள். அந்த வரிசையில், அவர்களைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் கிடைத்தது. என் சகோதரி மகன் (மருமகன்) எஸ்.கே.ஸாலிஹ் அவர்களை அழைத்துக்கொண்டு நான் சென்று வந்தேன்.
அவர்களின் பள்ளி மாணவனாக நான் இருந்தபோதே - அல்குர்ஆனில் “சூரத்து பனீ இஸ்ராஈல்“ அத்தியாயத்தில், “ஸுன்னத்த மன் கத் அர்ஸல்னா“ என்று துவங்கும் வசனங்களை தேனினுமினிய அவர்களது குரலால் அழகுற ஓதிக் காட்டி, “இதனை நன்றாகப் பயிற்சி செய்து வா! நீ வருங்காலத்தில் ஒரு ‘காரீயாக’ வரவேண்டும்!!” என உரிமையுடன் தொடர்ந்து சொல்லி, எனக்கு தஜ்வீதையும், கிராஅத்தையும் முறையாகப் பயிற்சியளித்தவர்கள்.
(மக்தப்) குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் அக்காலத்திலேயே “நவீனத்தையும், புரட்சியையும்” ஏற்படுத்தியவர்கள்.
மர்ஹூம் செய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்களின் சுலைமானியா கார்பரேஷனிலிருந்து ட்யூப் லைட் அட்டைப் பெட்டியை எடுத்து வந்து, அதனைப் பெரிய நீண்ட போர்டாக ஆக்கி, அதில் பலகை சாயம், கலம் (எழுதுகோல்) கொண்டு, கல்வியின் சிறப்பு, அரபி பைத், ஹதீஸ்கள், அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை அழகு அரபி, அருமைத் தமிழ் ஆகிய மொழிகளில் எழுதி, பள்ளியில் தொங்க விட்டு, மதரசா முடியும் தருவாயில் அதனை மாணர்கள் முறைவைத்துப் படிக்கச் செய்வார்கள்.
புதிய வீடுகளுக்கு முகப்பிலும், வீட்டு உள்பகுதில் சுவரிலும் பதிப்பதற்காக “ஹாதா மின் ஃபழ்லி ரப்பீ”, “அஸ்ஸலாமு அலைக்கும்”, போன்ற வாசகங்களையும், இதர துஆ, ஸலவாத்துகளையும் அட்டையில் அரபி “காலிகிராபிக்” முறைப்படி, எழுத்து வடிவில் எழுதி, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கிப் பொதுசேவை செய்தவர்கள்தான் இந்த மஹான்.
ஒடுக்கத்துப் புதன் வரும்போது பீங்கானில் எழுதியும்,கரைத்து குடிப்பதற்கும்,தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பனை ஓலையில் எழுதி ஒவ்வொரு மாணவர்களின் வீட்டுக்கும் அனுப்புவார்கள். இவர்களது கைவண்ணத்தில் மிளிரும் அரபி எழுத்துக்கள், தரமிக்க ஒரு
கலைஞனின் ஓவியம் போன்று இருக்கும். குருவித்துறைப் பள்ளியில் உள்ள பல கிதாபுகளில் இன்றும் அவர்களின் கைவண்ணம் ஒளிர்வதைக் காணலாம்.
இவர்களது கைவண்ணத்தில் மிளிரும் அரபி எழுத்துக்கள், தரமிக்க ஒரு கலைஞனின் ஓவியம் போன்று இருக்கும். குருவித்துறைப் பள்ளியில் உள்ள பல கிதாபுகளில் இன்றும் அவர்களின் கைவண்ணம் ஒளிர்வதைக் காணலாம்.
40 வருட காலம் எமது முஹல்லா குருவித்துறைப் பள்ளியில் இமாமாகப் பணியாற்றினார்கள் என்பது இறையில்லத்தில் செய்த மாபெரும் மார்க்கச் சேவையாகும். இவ்வாறாக, அன்னாரின் சன்மார்க்க தீன் சேவைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
95 வயது என்று நிறைவான வாழ்வை வாழ்ந்து, நூற்றாண்டின் விளிம்பில் நின்றுகொண்டு, அண்மையில் நம்மை விட்டும் பிரிந்து சென்றிருக்கிறார்கள். குருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், பெரிய முத்துவாப்பா தைக்கா இருக்கும் காலமெல்லாம் பேஷ் இமாம் அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். என்னதான் 95 வயது வரை வாழ்ந்து மறைந்தாலும், ஒரு குடும்பத்தலைவரை, திறமை மிக்க நல்லாசிரியரை இழந்து விடுவது என்பது மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
நிகழ்காலத்தில் நம் கண்ணாரக் கண்ட இறைநேசர் இவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது!
காலமெல்லாம் பள்ளிவாசலே தரிப்பிடம் என்றிருந்த அவர்கள், தன் வயோதிகம் - இயலாமை காரணமாக எங்கள் குருவித்துறைப் பள்ளியின் இமாமத் பொறுப்பை விட்டும் விடைபெற்றுக் கொண்டார்கள் என்றாலும், “பேஷ் இமாம் என்றால், அந்தப் பெயர் நானிருக்கும் வரை எனக்குத்தான்!” என்று உரிமையுடன் கூறுவார்கள்.
எல்லாம்வல்ல அல்லாஹ் அன்னவர்கள் தம் வாழ்வில் அறிந்தோ - அறியாமலோ செய்த பாவப் பிழைகளைத் தனதருளால் மன்னித்து, மண்ணறையைப் பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனபதியில் - அண்ணலம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) ஏனைய நபிமார்கள் - ஸித்தீக்கீன்கள் - ஷுஹதாக்கள் - ஸாலிஹீன்களுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக.!
எங்கள் உஸ்தாது அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் யாவருக்கும் அல்லாஹ் மேலான ஸபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
பின்குறிப்பு: மேற்படி வாசகங்களை, எனது உஸ்தாத் பெருந்தகை அவர்களின் வஃபாத் செய்தியின் கீழ் வாசகர் கருத்தாகவே பதிவிட முயற்சித்தேன். ஆனால், இத்தளத்தின் அளவு எல்லைக்குள் அது இல்லாத காரணத்தால், இதைச் சிறப்புக் கட்டுரையாக்கிடும் எனது விருப்பத்தை ஏற்று வெளியிட்டமைக்காக, காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நிர்வாகத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜஸாக்குமுல்லாஹு கைரா!
இப்படிக்கு,
அன்னாரின் மாணவன்:
எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ
|