அஸ்ஸலாமு அலைக்கும் 25 வருடத்திற்கு முன் நடந்த ஓர் அழகிய நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக கூட பிறந்த சகோதரர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாயல் இருக்கும். ஆனால் ஒரே மாதிரியான குணம், நிறம், பழக்க வழக்கம் இருப்பதில்லை. அதேபோல்தான் என் வீட்டில் நாங்கள் மூன்று சகோதரர்கள்.. மூவருக்கும் வெவ்வேறு விதமான தனித்தன்மைகள்...
என்னுடைய மூத்த சகோதர் இந்த உலக விஷயங்களில் அதிக தாக்கம் இல்லாதவர்.. காயல்பட்டினத்திலே குர்ஆன் மனனம் முடித்து விட்டு லால்பேட்டை அரபிக் கல்லூரியில் ஆலீம் படிப்பை தொடர்ந்தார்.. கல்லூரி விடுமுறையில் சகோதரர் காயல்பட்டினம் வந்திருந்தார்.. மீண்டும் லால்பேட்டை செல்ல இருந்த சகோதரரிடம் என் தாயார் சில அறிவுரைகளைச் சொன்னார். அத்தோடு, “பள்ளி விடுமுறையில் இருக்கும் உன் தம்பியையும் (நான்தான்!) ஒரு வாரப் பேச்சுக்கு அழைத்துச் செல்!” என்று சொன்னார்...
ஏற்றுக்கொண்ட சகோதரரை கையில் சில நூறுகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.. காயல்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி சென்றோம். அங்கிருந்து இரவில் திருவள்ளுவர் பஸ்ஸில் ஏறி காலையில் தஞ்சாவூர் போய் சேர்ந்தோம்.
தஞ்சாவூரில் இறங்கி தேநீர் அருந்தலாம் என் சகோதரர் பாக்கட்டில் கைவிட பத்து பைசா கூட இல்லை... பர்ஸ் தவறிவிட்டது... திக்குச் திசை தெரியாமல் நின்றபோது அருகில் நின்றவரிடம் பள்ளிவாசல் முகவரி கேட்டுப் போய்ச் சேர்ந்தோம்.
நடக்கும் தூரத்திலேயே பள்ளி அமைந்திருந்தது.. பள்ளியில் ஓய்வு எடுத்தோம்.. காலை 11 மணி அளவில் முஅத்தின் வந்து விவரம் கேட்டார்.
“சரி இருங்கள்! நிர்வாகிகள் வரட்டும்!!” என்றார்.
கடுமையான பசியில் இருந்தாலும் கேட்க மனம் இடம் கொடுக்கவில்லை... ஒவ்வொருவராக வர ஜமாஅத் தொடங்கியது. ஜமாஅத் முடிந்தவுடன் திக்ருகளும் முடிந்தது. இமாம் துஆ ஓத ஆரம்பிக்க இருந்தபோது என் சகோதரர் சற்றும் எதிர்பாராமல் இமாம் அருகில் நின்று மக்களைப் பார்த்து, அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஆரம்பித்து நடந்ததை சொல்லி உதவுமாறு கேட்டு கொண்டார்.
சிரிப்பும், அதிர்ச்சியும் ஆன நான் குனிந்த தலை நிமிராமல் இருந்தேன்.. இன்றும் அந்த பசுமையான நிகழ்வை நினைவுபடுத்தி சிரித்ததுண்டு.
அந்தக் காலத்திலேயே அப்பள்ளியில் பைத்துல்மால் அமைப்பு இருந்தது. அதன் உதவி மூலம் கும்பகோணம், காட்டு மன்னார்குடி வழியாக லால்பேட்டையில் இறங்கினோம். எங்கும் சிவப்புக் கம்பளம் விரித்தது போல அழகிய செம்மண் தரைகள்.
சகோதரிடம், “என்னங்க பஸ் ஸ்டாப் மட்டும்தான் இருந்தது... ஊரைக் காணவில்லை?” என்றேன். சகோதரர் “ஊர் உள்ளே இருக்கிறது, வா!” என்றழைக்க, லால்பேட்டை மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரிக்குப் போய்ச் சேர்ந்தோம்.
மத்ரஸா வெளியே ரொட்டிக் கடையில் லால்பேட்டை அமைப்பில் இருந்த புரோட்டாவை சால்னா துணையுடன் சாப்பிட்டோம். மத்ரஸாவின் நாஜிர் கண்ணியத்துக்குறிய ஜக்கரியா மவ்லவியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமானி ஹஸ்ரத் மகன் முஹம்மத் ஹாஃபிழ் தந்த விருந்து மறக்க முடியாதது.
மத்ரஸாவின் நிகழ்வுகளை அவதானித்தேன். காலை சுபுஹு தொழுகை முடிந்ததும் தேனீர் மற்றும் காலை சாப்பாட்டுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. முன்னூறுக்கும் மேற்பட்ட நம்பர்கள் ஒட்டிய டிபன் கேரியர்கள் கொண்ட வண்டியைக் கண்டேன்.
ஒவ்வொரு நாளும் ஒரு மாணவனுக்கு மதியம், இரவு என இரண்டு வீட்டில் சாப்பாடு வழங்கும் நிகழ்வைக் கண்டு அதிர்ந்து போனேன். தமிழகத்தில் எங்கும் காண முடியாத பெரிய நன்மைகளைக் கொள்ளையடிக்கும் பரக்கத்தான ஊராக இருக்கிறது. என் சகோதரருக்கு வந்த டிபனில், புளியாணத்தில் அவிச்ச முட்டையை கண்டேன்.
ஒரேயொரு நாள் யாருக்காவது சாப்பாடு கொடுப்பதென்பதே சிரமம். ஆனால் ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைக்கு கொடுப்பது போல் வெளியூரைச் சார்ந்த மாணவர்களுக்கு இரு வேளை உணவளிப்பதை வாழ்த்த வார்த்தையில்லை.
மொத்தத்தில் இறை அருளும் இயற்கை சுழழும் நிறைந்த அந்த வெத்தலை கொடிக்கால் நிறைந்த ஊரில் சில நாட்கள் தங்கும் பாக்கியத்தைப் பெற்றதை எண்ணி மிகவும் மகிழ்கிறேன். அந்தப் பசுமையான நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்த சந்தோசத்தில் முடிக்கிறேன்.
|