[இவ்வாக்கம் காயல் புத்தகக் கண்காட்சி 2018 நிகழ்வை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு பதிவு]
”துரோகி” என்ற நூலின் தலைப்பே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கின்றது. அதன் முன்னுரையை வாசிக்கும்போது அது நிகழ்காலத்தின் வரலாறு அதுவும் அமெரிக்க இராணுவ வீரனின் சுயபுராணம் என்பதை அறியும் போது உடனே வாசிக்க வேண்டும் என ஆவல் தோன்றும். பக்கங்களை புரட்ட புரட்ட கீழே வைக்க இயலாத அளவுக்கு ஒரே வாசிப்பில் முடிக்க வேண்டிய புத்தகம் இது.
தனது வாழ்வில் ஏற்படும் சம்பவங்களோடு நம்மையும் அழைத்துச் செல்கிறார் நூலசிரியர். நாமும் அருகில் நின்று காணுவதைப்போன்ற ஒரு உணர்வு. அவனின் சுக துக்கங்கள் நம்மை ஆட்கொள்ளவைக்கின்றன. அப்படியொரு நடை.
சரி நூலுக்குள் வருவோம்!
சராசரி அமெரிக்க இளைஞனான புரூக்ஸ் ”இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவைபுரிய வேண்டும்” என்ற கனவுகளுடன் இராணுவத்தில் சேருகின்றான். இராணுவத்தில் கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சிகளுக்குபின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மன பக்குவம் வருகின்றது அவனுக்கு.
அவன் இராணுவப் பணியில் சேர்ந்த சமயம் அமெரிக்காவை புரட்டிப்போட்ட இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சமயம் அது. எங்கு நோக்கினும் அது பற்றிய செய்திகளே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அச்செய்திகளில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் மிகைத்திருப்பதை உணர்கின்றான் புரூக்ஸ். ஒரு இனம்புரியாத சோகம் அவனது மனதில் படர்கின்றது. தன் மனதில் பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் போது அவனது சக இராணவத்தினரிடமிருந்தே எதிர்ப்புகளும் வசவுகளும் வருவதையும் கண்டு அதிர்வுறுகின்றான். ஒரு கட்டத்தில் மனதில்பட்ட நடுநிலை கருத்துகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றான் புருக்ஸ்.
கூடுதல் பணி நியமனத்திற்காக மேற்கொண்டு பயிற்ச்சிகள் வழங்கும்போதுதான் அங்கு நாட்டுப்பற்றைவிட முஸ்லிம் எதிர்ப்புணர்வே பயிற்ச்சியாகவும் செயல்முறை விளக்கமாகவும் அளிக்கும்போது மனதில் சில நெருடல்கள் ஏற்படுவதை உணர்கின்றான்.
பணி ஆணைக்காக அரசு அலுவகத்தில் ”அவர்களுக்கு தேவையானதை அவசரமாக நாம் செய்துகொடுக்க வேண்டும் ஆனால் அவர்களே மிக நிதானமாகத்தான் செய்து கொடுப்பார்கள்” என்று அமெரிக்க அரசுத்துறை நிர்வாகத்தின் வேகத்தை விளக்கும்போது இந்தியாவை ஞாபகப்படுத்துகின்றார்.
ஒருவழியாக கூடுதல் பயிற்ச்சியெல்லாம் முடிந்தபின் அவர் செல்ல வேண்டியது குவாண்டனேமே சிறைச்சாலைக்கு என்ற பணிநியமன ஆணை கிடைக்கின்றது.
அமெரிக்காவின் குவாண்டனோமோ சிறை பற்றி நாம் செய்திதாள்களில் வாசிக்கும் போது அது அமெரிக்காவின் எங்கோ மூலையில் அமைந்துள்ள ஒரு பயங்கர சித்ரவதை கூடம் என்றே தோன்றியிருக்கும். ஆனால் குவாண்டனோமே சிறை அமெரிக்காவிற்கு சிப்ப சொப்பனமாக விளங்கிய கியூபாவின் தீவில் உள்ளது என்ற ஆச்சரியமிக்க உண்மை என்பது இப்புத்தகத்தின் வழியே அறிய முடிகின்றது.
கியூபா என்பது பச்சை பசேல் என்ற அழகியத்தீவு அதில் குவாண்டனேமே என்பது மட்டும் சுட்டெறிக்கும் மணலும் மணல் சார்ந்த பாலைவனத்தீவு. அந்த தீவில் பூனை அளவில் உள்ள பெருச்சாளி, உடும்பு, பெரிய பல்லி, தட்டு அகலத்தில் சிலந்தி என்ற ஆபத்தான விலங்குகளும், பூச்சிகளும் நிறைந்திருந்தது. இவற்றின் நடுவில்தான் அந்த சிறைக்கொட்டடி அமைந்திருக்கின்றது.
குவாண்டனோமேவிற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, சிறைக்கொட்டடியில் அடைத்திருக்கும் கைதிகளில் பெரும்பாலும் அப்பாவிகள் என்று. அதில் கைதிகள் அனைவரும் முஸ்லிம்கள். அமெரிக்காவின் இரட்டை கோபுர இடிப்பிற்கு காரணமானவர்களை விசாரிப்பதற்காக என்று உருவாக்கப்பட்டதுதான் இந்த சிறை கொட்டடி. இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சில நாடுகளிலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்ட அப்பாவி கைதிகளும் அடக்கம்.
புரூக்ஸிற்கு கொடுக்கப்பட்ட பணி என்பது சிறைக் கைதிகளை கவனிப்பது, விசாரணைக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்வது, கைதிகளிடையே பிரச்னை ஏற்பட்டால் அவர்களை கடுமையாக தாக்குவது, மிக மோசமாக திட்டுவது போன்றவைகள்தான்.
இராணுவ வீரர்களின் உணவுக்கூடங்களில் எப்பொழுதும் தொலைக்காட்சி பெட்டியில் இரத்த வேட்கையை தூண்டும் பாடல்களும், அமெரிக்க பலத்தை பறைசாட்டும் படங்களும், இரத்தம் சொட்டுவது மாதிரி எழுத்துகளின் எழுத்துருக்களும் அமைந்திருக்கும். பழிவாங்கு என்ற சொற்களே ஒளிப்படமாக ஓடிக்கொண்டிருக்கும். இராணுவ வீரர்களின் பழிவாங்கும் எண்ணங்களை அதிகரிக்கச்செய்யும் உத்திகள் இவை.
அங்குள்ள கைதிகளை விசாரணை என்ற பெயரில் கடுமையாக தாக்குவது, தொடர்ந்து தூங்க விடாமல் இடையிடையே விழிக்கவைத்து கொடுமைபடுத்துவது, கைதிகள் எதிர்த்தால் அவர்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடிப்பது, அவர்களின் தாடிகளை சிரைப்பது என சித்திரவதைகளில் பல்வேறு முறைகளை கையாண்டனர்.
கைதிகளிடம் அத்துமீறி நடப்பதை கண்டு புருக்ஸின் மனம் துடிக்கின்றது. அதன் விளைவாக புரூக்ஸ் கைதிகளுடன் மிகவும் நல்ல முறையில் நடந்துகொள்கிறான், அவர்கள் சொல்வதை கேட்கின்றான். இதற்கு கைமாறாக கைதிகளிடமிருந்து கிடைத்தது அல்குர்ஆன். அதனை படிக்கின்றான் மனதில் சலசலப்புகள் ஏற்படுவதை உணர்கின்றான். ”தீய செயல்களின் ஒவ்வொரு கதவையாக அடைத்துக் கொண்டு வரும்போது இறை உதவியின் கதவுகள் ஒவ்வென்றாய் திறக்கின்றன” என்ற அனுபவத்தை பகிர்கின்றான். (அதனை படிக்கும் போது நம் கண்களிலும் கண்ணீர் கசியும்). இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. அதனை தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தான். சிறையின் சூழல் அதற்கு தகுந்தாற்போலில்லை என்ற காரணத்தினால்.
ஒரு கட்டத்தில் இனியும் காலம் தாழ்த்தாது சிறைலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து அதனை அவன் மிகவும் மதிக்கும் கைதியான அஹ்மத் அர்ரஷாதியின் முன்னிலையில் கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறான். சிறையிலேயே அதனை நடைமுறையும் படுத்துகின்றான் புரூக்ஸ்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை இவ்வாறு வர்ணிக்கின்றான் புருக்ஸ் ” இதுவரைநான் காணமற் போயிருந்தேன் . ஆனால் இப்பொழுது நான் எங்கிருக்கின்றேன் என்று எனக்குத் தெரியும். நான் பயணிக்க எனக்கென்று ஒரு தெளிவான பதை கிடைத்திருக்கின்றது”. இதனைக்கொண்டு அவன் புரிப்படைகின்றான்.
ஆனால்......கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதன் மூலமும், அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவும் சக இராணுவீரர்களிடமிருந்து அவனுக்கு கிடைத்த பெயர் ”துரோகி”.
பின்னர் குவாண்டனோமோவிலிருந்து பணி முடிந்து அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்படுகின்றான். அமெரிக்கா வந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும் குவாண்டனோமோ நடக்கும் அநிதங்களால் மனம் வெதும்பி அங்கு நடக்கும் அக்கிரமங்களை உலகுக்கு அறிவிக்க முடிவு செய்கிறான் புருக்ஸ்.
அதனால் ஏற்பட்ட விளைவுகளை நூலின் இறுதி அத்தியாயத்தில் விளக்கியுள்ளார்.
இந்நூலை அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார் காயல் பன்னூலாசிரியர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள். ஒரே வாசிப்பில் முடிக்க வைக்கும் நடை. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். இலக்கியச் சோலையின் 56 வது புத்தகம் இது. விலை 150 ருபாய்.
|