ஒவ்வொரு வருடமும் வழமையாக தொற்றிக் கொள்ளும் பரபரப்பு இந்த வருடமும் மார்ச் மாதம் +2 தேர்வுகள் ஆரம்பமான அன்றே நம் குழந்தைகளை மட்டுமின்றி அவர்தம் பெற்றோர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
ஒரு வருட காலமாக இரவு பகலாக கற்றுக் கொண்ட பாடங்களை ஒரு சில மணித்தியால நேர எல்லைக்குள் தேர்வு மையத்தில் வெளிக் கொணர வேண்டிய நெருக்கடியில் நம் குழந்தைகள் - ஒரு புறம்.
தேர்வுக்கு நல்ல முறையில் முகங் கொடுத்து சிறந்த பெறுபேறுகள் பெற வேண்டுமே என்ற பிரார்த்தனையோடு, குழந்தைகளின் முகங் காண வீட்டு வாசலிலே கவலையோடு காத்திருக்கும் பெற்றோர்கள் - மறுபுறம்.
இது போன்ற நிகழ்வுகள் தேர்வுகள் முடிவுறும் இறுதி நாள் வரை தொடர்கிறது. நாட்கள் ஒவ்வொன்றும் ஊர்ந்து செல்வதைப் போன்ற உணர்வு. சாதாரண பொழுதில் பறந்து சென்று விடும் நாட்கள் தேர்வு காலங்களில் மட்டும் ஆற அமர்ந்து ஓய்வெடுத்து ஊர்ந்து செல்வதை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே உணரக் கூடிய காலமிது.
எழுதிய தேர்வுகளில் சிறப்பு சித்தியடைந்து உயர்கல்வி கற்க வேண்டுமே என்ற கல்விக் கனவுகளுடன் 466 குழந்தைகள். சிறந்த வாழ்க்கை குழந்தைகளுக்கு அமைந்திட வேண்டும் என்ற எதிர்கால கனவுகளுடன் இவர்களது பெற்றோர்கள்.
இவர்களின் இந்த கனவுகள் கரை சேருமா? இதற்கான விடை மே மாத அளவில் வெளியாகும் +2 தேர்வு முடிவுகளில் பிரதிபலிக்கும். இன்ஷா அல்லாஹ் அதனைத் தொடர்ந்து சிறந்த பெறுபேறுகள் பெற்று திறமை சித்தி அடைந்த குழந்தைகளினதும், பெற்றோரினதும் ஆனந்தத்திற்கு அளவிருக்காது. இது மட்டுமா?
கல்விக்கான பெருவிழாவே நடத்தப்பட்டு அதில் பாராட்டு பத்திரங்களும், பணப்பரிசுகளும் வழங்கப்பட்டு மனம் குளிர்விக்கப்பட்ட தங்களின் எதிர்காலக் கல்விப் பயணம் தொடர்ந்திட அங்கீகாரம் கிடைத்துவிட்ட ஆனந்த மழையில் நனைந்திருக்கும் சாதனைக் குழந்தைகள் - ஒரு பக்கம்.
எல்லோரையும் போலவே பைகளில் புத்தகங்களையும், நெஞ்சினிலே கனவுகளையும் சுமந்து சென்ற குழந்தைகளில் ஒரு சாரார், தங்களின் விருப்பத்திற்கு மாறாக சமூக/பொருளாதார/குடும்பச்சூழல் போன்ற காரணிகளின் அழுத்தத்தால் தேர்வில் தோல்வி கண்ட அதிர்ச்சியில் மனம் சிதைந்து போன குழந்தைகள் - மறுபக்கம்.
உயர்கல்விக் கனவுகள் கானல் நீராய் கரைந்து விட்ட இவர்களின் கண்ணீர் குமுறல்கள் நம் சாதனை விழாக்களின் ஆரவாரத்தில் அடங்கிப்போனதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் எத்துணை எத்துணை கனவுகளுடன் கல்விக்கூடம் சென்றிருப்பார்கள். இவர்களின் பெற்றோர்கள் ஆசை ஆசையாய் இவர்களைச் சுற்றி எத்துணை எத்துணை எதிர்ப்பார்ப்புகளை விதைத்திருப்பார்கள்.
பன்னிரண்டு ஆண்டு கால உழைப்பும் தகர்ந்து விட்டதே. இனி அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாது அனாதரவாக விடப்பட்ட இவர்களுக்கு சரியான தீர்வை முன்வைப்பதா? அல்லது இவர்களை இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதா? குடும்பத்தில் ஒருவர் இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் போது கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதில்லையா?
நமதூர் கல்விக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் கலந்து கொண்ட சமீபத்திய கல்விசார் நிகழ்வொன்றில் +2 தேர்வில் தவறிய குழந்தைகளின் எதிர்கால நிலை பற்றிய கலந்துரையாடலின் போது நமதூர் கல்விக் கூடத்தின் தலைமை ஆசிரிய பெருந்தகை ஒருவர் பதிவு செய்த முத்தாய்ப்பான கருத்துக்கள் கூர்ந்து நோக்கக்கூடியது.
"என்னைப் பொறுத்துவரை இது நாள் வரையிலும் +2 இல் தவறிய மாணவர்களை எமது பள்ளியின் 100% தேர்ச்சி சாதனையை எட்ட முடியாமல் தடையாக இருந்தவர்கள் என்ற ரீதியிலேயே நோக்கினேன். அவர்கள் என் கண் முன் வந்தாலே வெறுப்பும், கோபமும் தான் வெளிப்படும்.
இங்கே நாங்கள் சிந்திக்காத கோணத்தில் எங்களை சிந்திக்க தூண்டி இருக்கிறீர்கள். தோல்வியால் துவண்டு விட்ட மாணவர்களை வெறுத்து ஒதுக்கி விடாமல் இரக்கம் காட்டி அரவணைத்து அவர்களின் எதிர்கால சுபிட்சத்துக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இனி செய்திடுவேன்" என்று உறுதிப்படக் கூறினார்.
எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள். ஒரு சிறந்த கல்வி மான். எவ்வித தயக்கமுமின்றி யதார்த்தமான தனது கருத்தை பதிவு செய்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது.
சமூகத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான குழந்தைகள் பல்வேறு சூழலில் வீட்டிலும், வெளியிலும் காயப்படுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
அறிவாற்றல்மிக்க கல்விசார் ஒழுக்கமிக்க ஓர் சமூக அமைப்பை உருவாக்கிட, இறைவனால் வழங்கப்பட்ட ஒப்பற்ற மனித வளத்தையும், பொருளாதார வளத்தையும் இறை திருப்தி நாடி பயனுள்ள வழியிலே முதலீடு செய்து கொண்டிருக்கும் சமூக கரிசனையாலர்களே! உங்களின் கருணையான பார்வையை இவர்கள் பக்கமும் சற்று திருப்புங்கள்.
நாளைய உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம், நம் குழந்தைகள் தோல்வியால் தடுமாறி - திசைமாறிப் போய்விடாமல் சரியான பாதையில் தமது இலக்கை அடைந்திட உதவிடுவது நம் அனைவரின் பொறுப்பாகும்.
பின்னடைவுக்கான காரணிகளை இனங்கக்கண்டு, அதனைக் களைந்து மனதளவிலும், செயலளவிலும் இவர்களை கட்டியெழுப்பி அடுத்த கட்ட நகர்வுக்காக களம் அமைத்து வழி நடத்திட - நமக்கு ஆழமான பார்வையும், அதை ஒட்டிய ஆக்கப்பூர்வமான செயற்திட்டமும் அவசரமாகத் தேவை. |