“ஹலோ குட்மோர்னிங், கிங்க் எட்வர்ட் ஆஸ்பத்திரி”. அது டிசம்பர் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி லண்டன் நேரம்.
“ஓ ஹலோ எனது பேத்தி கேட் உடன் நான் பேச முடியுமா தயவு செய்து”?
“ஓ தாராளமாக, சற்று பொறுங்கள் மேடம்”
தொலைபேசி இயக்குநர் வராத அந்த அதிகாலைப் பொழுதில் அதனைக் கவனித்துக்கொண்டிருந்த அப்பெண் நினைத்தாள் பேசுவது மேன்மை தங்கிய மகாராணிதான் என்று. ஆகவே உடனடியாக அந்த தொலைபேசி அழைப்பை இளவரசி தங்கி இருந்த அறைக்கு மாற்றி அங்கு இருந்த தாதியிடம் அழைப்பது யார் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இளவரசியின் உடல் நிலைக்குப் பொறுப்பாக இருந்த தாதி மகாராணி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் விளக்கமாகத் தெளிவாகப் பதில் தந்தாள்.
கிங்க்எட்வர்ட் ஆஸ்பத்திரியானது லண்டனின் மிகவும் பிரபல்யமான மருத்துவமனை. உலக தரத்திலான மருத்துவர்கள் அங்கு பணியாற்றுகின்றார்கள். மேலும் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் 1899ஆம் வருடம் முதல் அங்கு தான் மருத்துவ தேவைகளுக்காக வருவர். இம்மருத்துவமனையின் தலைவியாக எலிசபெத் மகாராணி அவர்களே உள்ளார்.
இங்குள்ள மருத்துவ தாதிகள் நாட்டிலேயே மிக்க சிறந்தவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். பெரும்பாலானோர் முழுநேரப் பணிப்பாளர்களே, பகுதிநேரப் பணியாளர்கள் இங்கு மிககக் குறைவு. மேலும் இத்தனை நோயாளிகளுக்கு ஒரு தாதி, என்ற நிர்ணயத்தை விட கூடுதலானவர்கள் இங்கு உண்டு.
இளவரசர் வில்லியமின் மனைவியும் மறைந்த இளவரசி டயானாவின் மருமகளுமான இளவரசி கேட், எட்டு வாரம் கர்ப்பமாக உள்ளார். அதிகமான வாந்தியாலும் தலைசுற்றுதலாலும் அவதிப்பட்ட அவரை கணவர் வில்லியம் 2ஆம் திகதி மருத்துவமனையில் சேர்த்தார். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு மெல்லமெல்ல தேறி வந்துகொண்டிருந்தார் அவர்.
இளவரசரும், இளவரசியும் இந்த குழந்தை உண்டான செய்தியை தற்போது இரகசியமாக வைத்து கிறிஸ்மஸ் காலத்தில் மக்களுக்கு அறிவிப்போம் என எண்ணி இருந்தனர். ஆனால் அதிகமான மசக்கைக்கு ஆள்பட்ட கேட் இளவரசி மருத்துவமனை செல்ல வேண்டி வந்ததால் அச்செய்தியை வேறு வழியின்றி அறிவிக்க வேண்டியதாயிற்று. இது உலகை பரபரப்புக்கு உள்ளாக்கியது அறிந்ததே.
இது நிற்க, ஒரு சில மணித்தியாலங்களில் உலகின் வேறு பகுதியில் இருந்து அதாவது இன்னொரு கண்டத்தில் இருந்து, அதாவது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 2Day FM என்ற வானொலியில் மகாராணியும் மருத்துவமனை தாதியும், இளவரசியின் உடல்நிலை பற்றி - கர்ப்பம் பற்றி பேசிய வார்த்தைகள் ஒலிப்பதிவின் மூலம் வானொலியில் அப்படியே ஒலிபரப்பாகியது. உலகம அசந்தது.
மருத்துவமனைக்கு பேசியது மகாராணி அல்ல. அவரது குரல் போலவும் இளவரசர் சார்ள்சின் குரல் போலவும் பேசி தகவல்களை கேட்டு அறிந்தவர்கள் சிட்னியின் 2Day FM வானொலியின் ஒலிபரப்பாளர்களாகிய மெல்கிரேக் என்ற பெண்ணும் மைக்கல் கிறிஸ்டியன் என்ற ஆணுமாவார்.
இவர்கள் தாங்கள் செய்ததை ஒரு சாதனையாகப் பேசினர். மகாராணிபோல் பேசுவது அப்பப்பா எவ்வளவு கஷ்டம் என்று மெல் பிதற்றினார். மேலும் இவ்வானொலி இந்த உரையாடலை பலமுறை ஒலிபரப்பியதோடு உலக அளவில் இதனை விளம்பரமும் செய்தது. ஆனால், உலகம் இதனை ஏற்கவில்லை. தவறு என்றே கூறியது.
அடுத்து , வெள்ளிக்கிழமை 7ஆம் திகதி இலண்டன் நகரின் ஸ்கொட்லண்ட்யார்ட் காவல் நிலையத்திற்கு காலை 9.25 மணியளவில் வந்த தகவலில் கிங்க்எட்வர்ட் மருத்துவமனையின் தாதியரின் வசிப்பிடத்தில் பெண் ஒருவர் மயங்கிக் கிடக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அவரது உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதும் அவர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்தனர்.
யார் இவர்? “ஹலோ, குட்மோர்னிங், கிங்க் எட்வர்ட் மருத்துவமனை” என்று செவ்வாய்க்கிழமை காலை கூறிய அதே பெண்மணிதான் அவர் என்று அறியப்பட்டது.
ஜெசிந்தா சல்தன்ஹா என்பது அவர் பெயர். வயது 46. ஜீனல் என்ற 16 வயது மகனுக்கும் லிசா என்ற 14 வயது மகளுக்கும் தாயானவர். இந்தியாவின் மங்களூர், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மத்திய கிழக்கில் தாதியாகப் பணியாற்றிய அவரும் அவரது கணவர் பெனடடிக் பர்போசா, (49 வயது,)வும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இலண்டனுக்கு குடிவந்தனர். ஜெசிந்தா இந்த மருத்துவமனையில் சுமார் 4 வருடங்கள் வேலைப் பார்க்கிறார். மிகவும் திறமையான தாதி என்று பெயர் எடுத்த இவர் அனைவராலும் விரும்பப்பட்டவர்.
தனது குடும்பம் இலண்டனில் இருந்து 130 மைல் தூரத்தில் உள்ள பிலிஸ்டல் நகரில் வசிக்க இவர் தாதியரின் வசிப்பிடத்தில் தங்கி பணியாற்றியதோடு, விடுமுறை தினங்களில் வீடு செல்வார். மகாராணியின் உரையாடல் உலகெல்லாம் வலம்வர தானே காரணமென்று நினைத்த ஜெசிந்தா மிகவும் மனம் உடைந்து இருந்தார்.
ஆகவே அவரது இந்த முடிவு குடும்பத்தவரை அப்படியே உலுக்கியது. கணவர் திகைத்தார். குழந்தைகள் கண்ணீர் வற்றும்வரை அழுதனர், புரண்டனர். என்ன சோதனை இது என்று இந்தியாவில் உள்ள குடும்பத்தவர் குமுறினர் கொதித்தனர்.
மங்களூரில் உள்ள ஜெசிந்தாவின் மாமி கூறியதாவது;
"ஜெசித்தா மிகவும் நல்ல பெண். ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தவறாது போன் பேசுவாள். எல்லோரிடமும் அன்பாக இருப்பாள்.
சென்ற கிறிஸ்மஸின்போது அவர்கள் நால்வரும் இங்கு வந்து சந்தோசமாகக் கொண்டாடினார்கள். ஆனால், இந்த வருடம், இயேசுவே ஏன் இந்த சோதனை" என்று அவர் தேம்பி தேம்பி அழுதார்.
குடும்பத்தவர் ஜெசிந்தாவின் உடல் தங்களது கிராமத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் சகல மரியாதைகளும் இங்கு முறையாகச் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதோடு ஜெசிந்தாவின் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் உண்டு என்றும் மீண்டும் அவரது உடல் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஜெசிந்தா தொலைபேசி உரையாடலால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்கொலை செய்யுமளவு போகமாட்டார் என்பது அவர்கள் கூற்று.
ஜெசிந்தாவன் மரணம் சக மருத்துவ தாதிகளை மிகவும் பாதித்தது. அவர் வசித்த அறையின் முன்னால் மலர் வளையம் வைத்து அனைவரும் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர். கிங்க் எட்வர்ட் மருத்துவமனையின் தலைவர் கிளென் ஆர்தர் பிரபு அவர்கள் அந்தத் தொலைபேசி அழைப்பை வன்மையாகக் கண்டித்தார். முட்டாள்தனமானது, அறிவிலிகளின் செயல் என்று சாடினார். அத்தோடு ஆஸ்திரேலிய வானொலி நிறுவனத்திற்கு காரமான கண்டனக் கடிதம் ஒன்றையும் அனுப்பினார்.
வானொலி நிறுவனத்தினர் முதலில் மழுப்பலாகவே பேசினர். ஆனால், அந்த இரண்டு ஒலிபரப்பாளர்களையும் ஓய்வில் அனுப்பினர். மக்கள் அவர்களை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டதற்கு மறுத்துவிட்டனர். இப்படி விபரீத முடிவு வரும் என்று யாரும் அறிந்து அத்தகைய காரியத்தை செய்யவில்லை. ஆகவே தாங்கள் தவறு இழைத்துவிட்டதாகச் சொல்வது தவறு என்றனர்.
ஆனால், ஆஸ்திரேலியாவிலும் உலகின் வேறு பாகங்களிலிருந்தும் வந்த கண்டனத்தைத் தாங்க முடியாத நிலையில் வானொலி இறுதியாக மன்னிப்புக் கேட்டது. மெல்லும் சிறிஸ்டினும் தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளித்ததோடு மன்னிப்புக் கேட்டனர். மெல் கேவிக் கேவி அழுததைக் காணக்கூடியதாயிருந்தது. எங்கள் விளையாட்டு வினையாகிவிட்டது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
ஜெசிந்தாவின் அயலவர்களைப் பொறுத்தவரையில் அவர் ஓர் அருமையான பெண்மணி. அன்புள்ளம் கொண்டவர். மேரி கட்டுவல் என்ற 56 வயது பெண்மணி கூறும்போது;
“அவர் மிகவும் கண்ணியமானவர். என்னை எப்போது கண்டாலும் வணக்கம் சொல்லிப் பேசுவாள். அவரது குழந்தைகளால் இப்பகுதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மகன் அதிகமாகக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். இப்பகுதியில் வசிக்கும் நடக்க இயலாத ஒரு முதியவரை ஜெசிந்தா வீடு வரும்போது எப்போதும் கடைத்தெருவரை அழைத்து சென்று இலவசமாக நடைப்பயிற்சி கொடுப்பார். அவரது இறப்பு எங்களுக்குக்கெல்லாம் பேரிழப்பு” என்றார்.
இளவரசரும் இளவரசியும் ஜெசிந்தாவின் மரணச் செய்தியால் மிகவும் வருத்தமடைந்தனர். எங்களால் ஒரு குடும்பம் தலைவியை இழந்து தவிக்கிறதே என்று அவர்கள் வருத்தமான செய்தியைத் தந்தனர். மேலும் தொலைபேசி உரையாடலைப்பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை என்றும் அதுபற்றி மருத்துவமனைக்கு எந்த முறைப்பாடும் செய்யவும் இல்லை என்றனர்.
ஜெசிந்தாவின் மரணம் உலகைக் குலுக்கிவிட்டது என்பது உண்மை. அதேநேரத்தில் ஜெசிந்தாவின் கடமை உணர்வைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை. எங்கோ பிறந்து எங்கோ தொழில்பார்த்து தனது வாழ்வை திடீரென முடித்துக்கொண்ட ஜெசிந்தாவை உலகத்தில் இன்று அறியாதவர்களே இல்லை. அவர் ஒரு தியாகச் செம்மலாக மாறிவிட்டார்.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஜுலியா கில்லர்ட் அவர்களும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டதோடு இது மிகவும் துரதிஷ்டமான மரணம் என்று வெதும்பினார்.
ஜெசிந்தாவின் மாமியார் மேலும கூறும்போது, தனது மகன் தன்னை தொலைபேசியில் அழைத்து பேச வராது விம்மி விம்மி அழுததாகவும் அதனைப் புரியாது தானும் கலவரமடைந்து, என்ன என்ன என்று கேட்டபோது ஜெசிந்தா ஜெசிந்தா என்று மட்டும் சொல்லி அழுதபின்பு, போய்விட்டாள் என்றான். எனக்கு இடி விழுந்ததுபோல் இருந்தது. கடவுளே என்று நான் கத்திவிட்டேன் என்றார்.
இக்குடும்பத்தின் துயரம் இலகுவில் துடைக்க முடியாததுதான். இப்படி ஒரு மரணம் இவருக்கு வரும் என்று யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். மரணவாயிலுக்கு சென்றவர்களுக்கும் அச்சமில்லாது சேவை செய்து பணியாற்றி நற்பெயர் பெற்ற ஜெசிந்தா சாகும்போது அருகில் இவரைக் காப்பாற்ற யாரும் இல்லை. என்ன விந்தை!
இறுதியாக ஆஸ்திரேலியா வானொலி 5 லட்சம் ஆஸ்திரேலியா டொலர்களை குடும்பத்தவர்களுக்குத் தருவதாக வாக்களித்திருக்கிறது. எத்தனை கோடி கொடுத்தாலும் மாண்டவர் மீண்டும் வருவாரோ? இல்லை. ஜெசிந்தா, இறைவன் உம்மை ஆசிர்வதிப்பாராக!
Administrator: Edited |