“எங்களிடம் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட நோயாளி இறந்துவிட்டார் என்பதை நாங்கள் மிகவும் மன வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்... அவரது உறவினர்களும், இந்திய தூதரக அதிகாரிகளும் அவரது இறுதி வேளையில் அருகில் இருந்தார்கள்... மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியின் டாக்டர்களும், தாதிகளும், ஏனைய ஊழியர்கள் அனைவரும் இந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்...”
இவ்வாறு சிங்கப்பூரின் இம்மருத்துவமனையின் முக்கிய அதிகாரியான கெல்வின் லோ ஓர் அறிக்கையில் கூறினார். இந்த ஆஸ்பத்திரியானது மிகவும் பிரபல்யமான ஒன்று. நடிகர் ரஜனிகாந்த் சிகிச்சை பெற்றதும் இங்குதான்.
அது டிசம்பர் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 08.00 தாண்டிவிட்டது. ஓர் இளம் ஜோடி ஆட்டோ ரிக்சாவில் இருந்து வந்து டெல்லியின் முனிர்கா பஸ் நிலையத்தில் இறங்கினர். Select Citywalk Mall என்று சொல்லப்படும் நவீன கட்டிடத் தொகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்து அவர்கள் தங்கள் இருப்பிடம் போவதற்காக பஸ்சிற்காக வந்தனர்.
அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும், அவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்குச் செல்வதற்கு எந்த பஸ்சும் வரவில்லை. அப்போது அங்கு வந்து நின்றது குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ஒன்று. அவர்கள் தங்களுடையது Charted பஸ் என்றும், இவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்கே தாங்களும் செல்வதாகவும் கூறியதும் அந்த ஜோடி சம்மதித்தது. கட்டணம் 10 ரூபாய்.
அந்த பஸ்ஸில் ஏற்கனவே ஆறு நபர்கள் இருந்தனர். அவர்களை சக பிரயாணிகள் என்று இவர்கள் நினைத்தனர். ஆனால் உண்மை அதுவல்ல! இருந்தவர்கள் அனைவரும் நண்பர்கள். ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த பஸ்சின் ஓட்டுநர் 33 வயது ராம்சிங்க் என்பவர். அது ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பஸ். ஒரு பாடசாலை அதனை ஒப்பந்தத்திற்கு எடுத்து, மாணவ-மாணவியரை ஏற்றிச் செல்வதற்கு பாவித்தது. ராம்சிங் கடந்த 10 மாதங்களாக அந்த பஸ்சை ஓட்டுகிறார்.
இளம் ஜோடி உள்ளே ஏறியதும் பஸ் புறப்பட்டது. அங்கிருந்தவர்களில் ராஜு என்ற பெயருடையவர் அந்தப் பெண்ணைப் பார்த்து கேலியாக - கொச்சைப்படுத்திப் பேசினார். இது அவர்கள் எதிர்பார்க்காதது. ராம்சிங்கும், மற்ற நண்பர்களும் அந்த 23 வயது பெண்ணிடம், “இந்த இரவில் ஆண் நண்பருடன் எங்கே சென்று வருகிறாய்?” என்று ஒருவித அர்த்தத்தோடு கேள்வி கேட்டு சற்று அதிகமான சுதந்திரத்தை நாவில் எடுத்தனர்.
அந்த 28 வயது இளைஞன் இந்தப் பேச்சுக்களை சகிக்க முடியாது அவர்களை எதிர்த்துப் பேசினான். வாய்த் தகராறு முற்றியது. ராம்சிங்கின் நண்பர்கள் இந்த ஜோடி ஒழுக்கமற்றது என்ற ரீதியிலேயே பேசினர். ராஜு கோபத்தில் அங்கிருந்த இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து, தன்னால் இயன்ற மட்டும் ஆத்திரமாக அந்த கணனி பொறியியலாளனைத் தாக்கினான். தலையில் மாறி மாறி அடித்தான்.
மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் அப்பெண் தனது நண்பன் அடி படுவதைத் தடுக்க முயன்றாள். ராம்சிங் அவளைத் தடுத்தான்... அவளை அடித்தான்... அவள் அவன் கையைக் கடித்தாள்... சினம் உச்சிக்கு ஏறிய ராம்சிங், அதே இரும்புக் கம்பியால் அவளை அடித்ததில் அவள் தடுமாறிக் கீழே விழுந்தாள். சற்றும் தளராத ராம்சிங் தனது சப்பாத்துக் காலால் அவளது பெண் உறுப்பில் பலம் கொண்ட மட்டும் மிதித்தான். அவள் மயங்கிவிட்டாள்!
மயங்கிய அவளை அவன் பஸ்ஸில் இருந்த ஒரு சிறு அறைக்குள் இழுத்துச் சென்று உறவு கொண்டான்..
இப்போது பஸ் ஓடிக்கொண்டிருந்தது. அதனை இயக்கியது ராம்சிங்கின் இளைய சகோதரன் முகேஷ். பின்பு அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகத் தீண்டினர். அந்த இளைஞன் நினைவற்று ஓரிடத்தில் கிடந்தான்.
குளிரூட்டப்பட்ட இந்த பஸ் கருப்புக் கண்ணாடி காகிதம் ஒட்டப்பட்டதோடு, திரைச் சீலையும் போடப்பட்டிருந்தது. அனைத்தும் மாணவர்களின் வசதிக்காக. கருப்புக் காகிதம் டெல்லியில் தடை செய்யப்பட்டது என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.
ராம்சிங் பெரிய குடிகாரன் - கோபக்காரன். அவனது குடும்பத்தவர்கள் பலர் அவனை விட்டு ஒதுங்கியே இருப்பர். முன்பு ஓர் வீதி விபத்தில் கை ஒடிந்த அவன், கைக்கு இரும்புக் கம்பிகள் போட்டு சத்திர சிகிச்சை செய்யப்பட்டான்.
அந்த ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு ஓய்வு தினம். அதனால் அவனும், நண்பர்களும் சேர்ந்து Joy Ride போக விரும்பி பஸ்சை எடுத்து வீதிக்கு வந்தனர். அவர்களிடம் முதலில் சிக்கியது ஒரு தச்சுத் தொழிலாளி. அவரிடமிருந்த ரூபாய் 8,000 பறிக்கப்பட்டது. ஓரிடத்தில் அவரைத் தள்ளிவிட்ட பிறகே இந்த பஸ் முனிர்கா பஸ் நிலையம் வந்தது. அங்கு சிக்கியவர்கள் இந்த இளம் ஜோடி.
பஸ் ஓடிய பகுதியில் சில வீதி தடை சோதனை நிலையங்கள் இருந்தன. காவல்துறையினரும் ஓடும் பஸ்சை பார்த்தவாறே தங்கள் கடமையைச் செய்தனர். ஓரிடத்திலும் இந்த பஸ்சை யாரும் நிறுத்தவில்லை. உள்ளே நடக்கும் அநியாயம் என்னவென்று தெரியாதே காவலர்கள் நின்றார்கள். பின்பு அந்தக் காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மஹிபால்பூர் மேம்பாலம் என்பது அப்பகுதியில் மிகவும் பிரபல்யமானது. அந்தப் பாலத்தில் ஏறி வட்டமிட்டு இரண்டு முறை திரும்பியது பஸ். இப்போது இவர்களின் காமப்பசி தீர்ந்துவிட்டது. பொதிகளைத் தள்ளி விட வேண்டும் என்று இடம் பார்த்தனர். அதற்கு மஹிபால்பூர் பாலத்தை ஒட்டிய பகுதியே சிறந்தது என அவர்கள் நினைத்தனர்.
ஆகவே, முதல் பயணத்தின்போது இடத்தைத் தெரிவு செய்தனர். இரண்டாவது பயணத்தின்போது அந்த ஜோடியை எந்த ஆடையும் இல்லாத நிலையில் குப்பைத் தொட்டியில் வீசுவது போல் வீசிவிட்டு சென்றனர். இரவு 10.15 மணியளவில் அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறை வாகனம் இவர்களைக் கண்டெடுத்து, டெல்லியில் சப்தர்ஜெஸ் மருத்துவமனையில் சேர்த்தது.
மருத்துவக் குழு உடனடியாக இவர்களைப் பொறுப்பெடுத்தது. பெண் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இக்குழுவிற்குப் பொறுப்பாக இருந்த 50 வயது மருத்துவ நிபுணர் B.D. அதானி அவர்கள் கூறுகையில், “எனது அனுபவத்தில் இதுபோன்று ஒரு பெண் இவ்வளவு குரூரமாக கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதை நான் கண்டதே இல்லை” என்றார்.
மேலும், “இப்பெண் உயிர் பிழைப்பது அரிது! அப்படியே பிழைத்தாலும் இவரால் உணவு உட்கொள்ளவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது! காரணம், இவருடைய குடல் பகுதிகள் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது... நாங்களும் சத்திர சிகிச்சை மூலம் சில உறுப்புகளை அகற்ற வேண்டி ஆயிற்று!” என்றார்.
இரண்டு நாட்களின் பின் மயக்கம் தெளிந்த பெண், தண்ணீர் வேண்டும் என்று சைகையால் கேட்டார். பேச முடியவில்லை. தொண்டையில் குழாய் பொருத்தி இருந்தனர். சில சொட்டு தண்ணீர் நாவில் தடவப்பட்டது. தனது பெற்றோரைப் பார்த்த அவர் ஒரு காகிதத்தில், “நான் வாழ விரும்புகிறேன்” என்று எழுதினார். அதோடு, “அவர்களைப் பிடித்து விட்டார்களா?” என்றும் எழுதிக் கேட்டார். பெற்றோர் குமுறிக் குமுறி அழுதனர். வாழ விரும்பிய பெண் போய்விட்டார்.
பத்து நாட்கள் டெல்லி மருத்துவமனையில் அப்பெண் உயிருக்காகப் போராடினார். நிலைமை மோசமாகிப் போவதை அறிந்த அரசும், மருத்துவர்களும் அவரை சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.
இந்த மருத்துவக் கல்லூரி மாணவியின் பெயரோ, புகைப்படமோ வெளியிடப்படவில்லை. டெராடூன் மருத்துவமனை கல்லூரியில் பயின்றார் அவர். “அவர் ஒரு சிறந்த மாணவி... படிப்பில் அதிகம் அக்கறை கொண்டவர்...” என்று கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் கூறினார்.
இவரது தந்தை டெல்லி விமான நிலையத்தில் வேலை பார்க்கும் சாதாரண ஊழியர். சிறு வயது முதலே மருத்துவக் கனவில் மிதந்த மகளுக்காக ஊரில் இருந்த சிறு நிலத்தை விற்றார். டெல்லியில் உள்ள அந்த சின்ன வீட்டையும் அடகு வைத்தார் அவர்.
அண்டை அயலவர்கள் அனைவருக்கும் இவள் ஒரு சிறந்த மகள். “இவளைப் பார்! எவ்வளவு அக்கறையாகப் படிக்கிறாள்... எவ்வளவு பொறுப்பாக நடக்கிறாள்” என்றே தங்கள் குழந்தைகளிடம் சொல்லிக் காட்டுவர்.
இவளோடு இணைந்து வந்த இளைஞனுக்கும், அவளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. 2013 பிப்ரவரி வாக்கில் திருமணம் செய்யலாம் என இருவரும் எதிர்பார்த்திருந்தனர். அக்கனவு நிறைவேறவில்லை.
சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அவர் சரியாக இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை - டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை 03.30 மணியளவில் ஏர் இந்தியா AIC 380A விசேஷ விமானத்தில் பிணமாக டெல்லி வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும், திருமதி சோனியா காந்தி அவர்களும் உறவினர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
விமான நிலையத்தில் இருந்து அவரது உடல் பலத்த பாதுகாப்போடு அவரது இல்லம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சமயக் கிரியைகள் செய்யப்பட்டதும் உடனடியாக எரியூட்டுவதற்காக துவாரகா பகுதி 24இல் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அஞ்சிய காவல்துறை அதிகாரிகள், அதிகாலை 06.30 மணிக்கே இறுதிக் கிரியைகளைச் செய்ய துரிதப்படுத்தினர். ஆனால் ஹிந்து சமய ஆசாரங்களின் படி சூரிய உதயத்திற்கு முன் ஈமக் கிரியைகள் செய்வது பொருத்தமில்லை என்று மயான பொறுப்பாளர்கள் கூறவே, நேரம் 07.30க்கு மாற்றம் செய்யப்பட்டது.
சரியாக 07.30 மணிக்கு, உணர்ச்சி கொப்பளிக்க, விம்மி விம்மி வந்த அழுகையைக் கட்டுப்படுத்த சக்தியற்றவராய் அப்பெண்ணின் தந்தை சிதைக்கு எரியூட்டினார். அவளது சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய அரசு பிரதிநிதிகளும், டெல்லி முதலமைச்சர் ஷீலா தக்சித் அவர்களும் அங்கிருந்தனர்.
பொதுமக்கள் வர அனுமதிக்கப்படவில்லை. ஊடகத்தாருக்கும் இடமில்லை. அதாவது, மீடியா வேண்டாம் என்று அங்கு தடுக்கப்பட்டது. அந்த மீடியாதான் இச்செய்தியை உலகெலாம் கொண்டு சென்று, விமானத்தில் பறந்தே இருக்காத விமான நிலைய ஊழியரை சிங்கப்பூர் வரை இழுத்துச் சென்றது.
பிரபல நடிகர் அமிதாப் பச்சான் அவர்கள் இப்பெண்ணிற்காக இரங்கல் கவிதை ஒன்றை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். அஜ்மீர் தர்காவில் சகல மதத்தினர்களும் சேர்ந்து இப்பெண்ணிற்காக விசேஷ பிரார்த்தனை செய்தனர். இதனை நடத்தியவர் காதி நசீன் செய்யது இபுறாகீம் ஃபக்கார் அவர்கள்.
எந்த மதமும் இதுபோன்ற பெண்களுக்கான கொடுஞ்செயலைச் சகிக்காது என்று கூறிய அவர், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார். காவல்துறை தற்போது அந்த ஆறு நபர்களையும் கொலைக் குற்றச்சாட்டில் பதிவு செய்து, ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.
உத்திரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் தனது கிராமத்தில் வசிக்கும் இப்பெண்ணின் 80 வயது பாட்டி, “அவர்கள் நல்ல வாழ்க்கையைத் தேடி டெல்லி போனார்கள்... பார்த்தீர்களா...? கடைசியில் நடந்தது என்ன...?” என்று கூறி மிகவும் வருத்தப்பட்டார். அடிக்கடி பாட்டியைப் பார்க்க அவர் வருவாராம்.
இப்பெண்ணின் குடும்பம் உண்மையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளது. தாங்கள் அடிக்கடி வெறும் ரொட்டியை உப்புக் கட்டியோடு சாப்பிடுவோம் என்று தந்தை கூறினார். அவர்களுடைய மொத்த முதலீடுமே இந்தப் பெண்ணின் கல்விதான்.
இவர் படித்து, மருத்துவராகி வெளிவந்தால் தங்களின் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்பியிருந்தனர். அதனையே அப்பெண்ணும் அடிக்கடி தனது அயலவர்களிடமும் கூறி வந்துள்ளார் - “நான் படித்து பட்டம் பெற்று, தன் குடும்பத்தை வறுமைச் சூழலில் இருந்து காப்பேன்” என்று. இன்று அவர் போய்விட்டார்.
மருத்துவக் கல்லூரி இவரது கட்டணத்தைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளது. அரசு இக்குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக அறிவித்துள்ளது.
இறுதியாக, இப்பெண்ணின் தந்தை, “நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை... ஆனால் என் மகளுக்கு நடந்தது போல் இன்னொரு பெண்ணுக்கு நடக்கவே கூடாது என்பதே எனது விருப்பம்!” என்றார்.
இந்தியா அவர் விருப்பத்தை நிறைவேற்றுமா...?
நான் நம்பவில்லை.
|