“குற்றம் செய்யாத எனக்கு ஏன் உம்மா இந்த கோரத் தண்டனை? செய்யாத குற்றத்துக்கு நான் ஏன் உம்மா தண்டனையை பொறுப்பேற்க வேண்டும்? எப்ப உம்மா வருவேன்? என்னை எடுங்கம்மா…”. இதுதான் அவள் கடைசியாக - ஆம் அவள் வாழ்வின் கடைசி வார்த்தைகளாக தனது தாயார் பரீனா உடன் 12.12.2012 அன்று பேசினாள். அவளது மூச்சு இந்தப் பேச்சிற்குப் பின் சரியாக 29 நாட்களின் பின் 09.01.2013 அன்று அடங்கிவிட்டது. இலங்கையில் பிறந்த அவளது உடலும் சவூதி மண்ணில் அடக்கப்பட்டுவிட்டது.
யார் இந்த ரிசானா நபீக்? அவள் செய்த குற்றம் என்ன? ஏன் இந்த சிரச்சேதம் அவளுக்கு?
இறைவன் சிலரை மாடியிலேயே பிறக்க வைக்கிறான் – மாடியிலேயே வாழ வைக்கிறான். வேறு சிலரை மண்ணிலேயே பிறக்க வைக்கிறான். காலமெல்லாம் அந்த மண்ணிலேயே புரளவும் வைக்கிறான். இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவள் இவள். வறுமையிலும் வறுமை என்று சொல்லத்தக்க குடும்பம் அது. அங்குதான் அவள் 1988ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி பிறந்தாள். பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம். எல்லோரும் ஆடிப்பாடி மகிழும் தினம். அத்தினத்தில் பிறந்த அவள் இன்று முழு இலங்கையையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டாள்.
அவளது மரணச் செய்தியை அறிந்த இலங்கை நாடாளுமன்றம் உடனடியாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செய்தது. முன்பின் தெரியாத ஒரு பெண்ணிற்காக நாடாளுமன்றம் தந்த மரியாதை வரலாற்றில் பதிவு செய்யத்தக்கது. ஜனவரி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள சகல மஸ்ஜித்களிலும் அவளுக்காக பிரார்த்தனை - துஆ இறைஞ்சப்பட்டது. இவ்வளவு மரியாதையும் இந்தப் பெண்ணிற்கு எதற்காக?
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கிராம வட்டத்தில் உள்ள ஷாபி நகர் என்ற கிராமத்தில் உள்ள முகம்மது நபீக் – பரீனா தம்பதிதான் இவளது பெற்றோர். வீடு ஓலையால் வேயப்பட்டது. மழைக்கு ஒழுகும்… காற்றுக்கு அசைந்தாடும். தந்தை விறகு வெட்டும் தொழில் செய்து, அரை வயிறு கால் வயிறு என தனது குடும்பத்திற்கு கஞ்சி அளப்பவர். இவர் நோய்வாய்ப்படவே, விறகு வெட்டும் வேலையை விட்டு விட்டு, காட்டிற்குச் சென்று விறகு பொறுக்கி காலம் போக்கினார். வறுமை மேலும் வாட்டியது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் தரகர்கள் தந்தையை அணுகி, “ரிசானாவை வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு அனுப்பினால், தங்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்… குடும்ப கஷ்டமும் குறையும்...” என அரிக்க ஆரம்பித்தனர். தந்தை தாயாரிடம் பேசினார். அவளோ, “அப்பப்பா… நான் அவளை விட மாட்டேன்… உண்டாலும், உடுத்தாலும், உறங்கினாலும் ஒன்றாகவே இருப்போம்… அவளைப் பிரிய முடியாது” என்று அடித்துச் சொல்லிவிட்டாள். தரகர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. தந்தையோ தவித்தார். தாயோ தடுத்தார்.
ரிசானா மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயத்தில் 8ஆம் வகுப்பு வரை கற்றாள். மென்மையான உள்ளம் கொண்டவள். சக மாணவியருடன் அன்பாகவே பழகுவாள். பணிவும், பரிவும் கொண்ட அவள் யாருக்கும் உதவும் நோக்கு கொண்டவள். படிப்பில் சுமார். பாசமாய் பறந்து திரிந்த அவள் சிரச்சேதம் செய்யப்படும் அளவிற்கு எந்தக் குற்றத்தையும் செய்திருக்க மாட்டாள் என்று அவளின் அயலவர்கள் கண்ணீர் மல்க புலம்பினர்.
இது நிற்க, தரகர் - தகப்பன் - தாய் ஆகிய மூவருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை ரிசானா ஓரளவு புரிந்தே இருந்தாள். இறுதியாக அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள். “உம்மா!” “என்ன?”. “புரோக்கர் என்ன சொன்னார்?” “எந்த புரோக்கர்?”
”ஏன் ஒளிக்கிறீங்க உம்மா? அதுதான் அந்த சவூதி புரோக்கர்!”. “உனக்கெதுக்கு அதெல்லாம்?”. “இல்லை உம்மா... அவர் நல்லதுதான் சொல்றார்!”
“உம்…”. “நான் சவூதி போறேன் உம்மா…”. “சரி வராது!”
இப்படி தொடர்ந்த பேச்சு, கடைசியில் தாயாரை சம்மதிக்க வைத்தது. சவூதி செல்ல ரிசானா விரும்பிய காரணம் வேறு. தாயார் சம்மதத்திற்குரிய காரணம் வேறு. குடும்ப வறுமையைப் போக்கலாம் என்பது ரிசானாவின் எதிர்பார்ப்பு. ரிசானாவையும் ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்க வேண்டும். மூத்தவள் அவள். 17 வயது ஆகிவிட்டது. இன்னும் இரண்டு தமக்கைகளும் உள்ளனர். இவர்களுக்கும் வழி செய்ய வேண்டும் என்பது தாயாரின் எதிர்பார்ப்பு. ஆகவே அவள் சம்மதித்தாள். ஆனால் ரிசானாவிற்காக சவூதியில் காலன் காத்திருக்கிறான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
18 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்களை பணிக்கு அனுப்ப முடியாது என்ற சட்டத்தை ஏமாற்ற, ரிசானாவின் பிறப்பு 1988 பிப்ரவரி 04ஆம் திகதி என்பது 1982 பிப்ரவரி 04ஆம் திகதி என்று மாற்றப்பட்டு, அனைத்து பயண ஆவணங்களும் பெறப்பட்டன. இவைதான் தனது மரணச் சீட்டு என்பதை அந்த பேதைப் பெண் அப்போது அறியவில்லை.
2005ஆம் ஆண்டு ஏப்ரல் 01ஆம் திகதி கொழும்பிலிருந்து ரியாத் செல்லும் சவூதி எயார் 781 விமானத்தில் அவள் பயனமானாள் பல கனவுகளுடன். வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே பார்த்துப் பழகிய ரிசானா… தனது மாவட்டத்தைத் தவிர வெளியே சென்றிராத ரிசானா… கொழும்பு நகரம் எப்படி இருக்கும் என்று காதால் மட்டுமே கேட்டறிந்த ரிசானா… தமிழ் தவிர வேறு எம்மொழியிலும் பேசியிராத ரிசானா… எவ்வளவு மன உறுதியுடன் தனது குடும்ப வறுமையைப் போக்க விமானத்தில் பறந்தாள் – ஆம், அவள் பறந்தே போனாள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
கொடிது கொடிது வறுமை கொடிது. அதிலும் கொடிது இளமையில் வறுமை! ஔவைப் பாட்டி இப்படித்தான் சொன்னாள். சவூதியில் இங்கும் அங்குமாக சில வீடுகளில் மாற்றியடிக்கப்பட்டு, பின்பு மே மாதம் 04ஆம் திகதி நிரந்தரப் பணிக்காக ஒரு வீட்டில் அமர்த்தப்பட்டாள். எஜமானர் பெயர் நயிஃப் ஜிஸியான் கலாஃப். அல் ஒதாபி என்பது. அவர் சவூதி அரேபியாவின் நிதி அமைச்சில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். ரியாத் நகரிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாவாதிமி (Dhawadhimi) என்ற ஊரில்தான் அவ்வீடு இருந்தது.
அவளது வேலையானது வீட்டை சுத்தப்படுத்தல், உடுப்பு கழுவுதல், சமையலறையில் உதவுதல் போன்றவை. அல் ஒதாபியின் மனைவியை அவள் ‘மேடம்’ என்று அழைத்தாள். இப்பணிகளோடு குழந்தையைப் பார்க்கவும் அவள் பணிக்கப்பட்டபோது, அவள் தயங்கினாள். குழந்தை வளர்ப்பில் அவளுக்கு பரிச்சயமோ, பயிற்சியோ இல்லை. தன் தாய்க்கு உதவியாக தன் சகோதரிகளை அவள் கவனித்தது உண்டுதான்.
ஆனால் அது வேறு, இது வேறு. இருப்பினும், எப்படியும் குடும்ப வறுமையை ஒழிப்பது என்ற வைராக்கியத்தில் பறந்து வந்த அவள், தனது கனவுகள் நனவாக வேண்டும் என்பதற்காக அதனையும் ஏற்றாள்.
மே மாதம் 22ஆம் திகதி - அதாவது அவள் அந்த வீட்டிற்கு வந்த 18ஆவது நாள் காலை நேரத்தில், நான்கு மாத மழலை மகன் கயெத் பின் நயிஃப் ஒதபியை ரிசானாவின் பொறுப்பில் விட்டுவிட்டு தம்பதிகள் வெளியே சென்றனர். மற்ற குழந்தைகளும் வீட்டிலேயே இருந்தனர். தனது அலுவல்களை முடித்துக்கொண்ட ரிசானா, பகல் 12.30 மணியளவில் அம்மழலைக்கு பாட்டிலில் பால் புகட்ட ஆரம்பித்தாள்.
குடித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென சில வித்தியாசமான சமிக்ஞைகளைக் காட்டியது. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூக்கு - வாய் வழியே பால் வழிந்தது... கண்கள் மூடின... குழந்தை தூங்குவதாக முதலில் நினைத்த அவள், பின்பு குழந்தையைத் தட்டி எழுப்பினாள். ஆனால் குழந்தையோ கண் திறக்கவேயில்லை. பதறிப்போன ரிசானாவிற்கு கை கால்கள் உதறின. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
குழந்தையின் நெற்றி, கழுத்து, கன்னங்கள், நெஞ்சு என்று பல இடங்களில் தேய்த்தாள் – தட்டினாள்... குழந்தையை வலம் இடம் என்று ஆட்டினாள்... ம்…ஹூம்... குழந்தை கண் விழிக்கவேயில்லை. அழத் துவங்கிவிட்டாள் ரிசானா. சத்தம் கேட்டு வந்த மற்ற குழந்தைகள் ரிசானா குழந்தையை அப்படியும், இப்படியும் குலுக்குவதைக் கண்டனர். அவர்கள் மனதில், ரிசானா குழந்தைக்கு ஏதோ தீங்கு செய்கிறாள் என்றே பட்டது.
மணி 01.30 வாக்கில் பெற்றோர் வீடு திரும்பினர். அவர்கள் வந்ததும், வராததுமாக குழந்தைகள் தாயிடம் ஓடிச் சென்று, ரிசானா தங்கள் சகோதரனை என்னவோ செய்தாள் என்று முறையிட, மேடம் அவசரமாக குழந்தையிடம் போகவும், அது பேச்சு மூச்சு இன்றி கிடந்ததைக் கண்ட தாய்க்கு சினம் உச்சிக்கு ஏறியது. வீல் என்று கத்திய அவள், ரிசானாவின் முடியைப் பிடித்து இழுத்து, கண்டவாறு அடி, உதை, குத்து என்று விட்டாள். அதிர்ச்சியடைந்த ஒதபியும் ரிசானாவைப் பந்தாடினார்.
சினம் தீர்ந்த அவர்கள் பொலிசுக்கு தகவல் சொல்லி, விரைந்து வந்த வந்த போலீஸ் தங்கள் பங்கிற்கு ரிசானாவைத் துவைத்து எடுத்து கையில் விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். இப்போது ரிசானா நினைத்தாள்... “என் உம்மா என்னை ஒருபோதும் ஒரு அடிக்கு மேல் அடித்ததில்லை...? பள்ளியிலும் நான் அடி வாங்குவதில்லை... இங்கு மாட்டை அடிப்பது போல என்னை அடித்து விட்டார்களே...” விம்மியவாறு போலீஸ் காரில் சென்றாள்.
ரிசானாவிற்கு இப்போது விளங்கியது. தான் எதையோ நினைத்து வந்தது இப்போது எப்படியோ மாறிக்கொண்டிருக்கிறது என்று. ஆயுளில் காவல் நிலையம் எப்படி இருக்கும் என்று கூட அவள் கண்டதில்லை.இப்போது எல்லாம் ஒரே கலவரமாக இருந்தது.
“யா அல்லாஹ்! ஏழை நான் எந்தத் தவறும் செய்யவில்லை... எனக்கு ஏன் இப்படி அடி உதை?” என்றுதான் அவளால் குமுற முடிந்தது. எதை எதையோ கேட்டார்கள். எதுவும் புரியவில்லை. கையெழுத்து போடும்படி அடித்தனர். போட்டாள். எதற்கு என்று கூட தெரியாது. ஓர் அறையில் இருந்த ரோஜாக் கூட்டத்தோடு அவளும் அடைக்கப்பட்டாள்.
ஓரிரு தினங்கள் கழித்து அவளை அழைத்தனர். ஓர் இந்தியர் அங்கு காவல் அதிகாரிகளோடு இருந்தார். மலையாளியான அவர் அங்கு உண்மையில் ஆடு மேய்ப்பவர். அவருக்குத் தெரிந்த தமிழில் அவர் எதுவோ கேட்டார். இவள் விளங்கியும், விளங்காமலும் எது எதுவோ பதில் சொன்னாள். அவை அங்கு பதிவு செய்யப்பட்டன.
“நான் தவறு செய்துவிட்டேன் என்று சொல். இல்லாவிடில் உன்னை வெளியே விட மாட்டார்கள்” என்று அந்தப் புண்ணியவான் கூறி அவளை கையெழுத்து போடச் சொன்னார். அறபி மொழியில் எழுத்தப்பட்ட அந்தக் குற்றப் பத்திரிக்கையில் எதுவும் புரியாத நிலையில் அவள் தமிழில் கையெழுத்திட்டாள்.
நிற்க, குழந்தையின் தாயின் குற்றச்சாட்டானது, காலையில் தான் வெளியே போகும்போது தனக்கும், ரிசானாவிற்கும் ஏற்பட்ட வாய்த் தகறாரின் காரணமாக ரிசானா குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்று விட்டாள் என்பதே. காவல்துறை அதே வழியிலேயே குற்றப் பத்திரிக்கையை தயாரித்து, ரிசானாவிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கி, வழக்கையும் தாக்கல் செய்தது.
"அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டிய ஒரு தேவை எனக்குக்கிடையாது, நான் பாலூட்டும்போது குழந்தை மூச்சுத்திணறி அதன் காரணமாக இறந்ததே தவிர, நான் பராமரித்துப் பாதுகாத்து வந்த அந்த நான்கு மாதச்சிசுவை கொல்ல வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது" என்று ஓலமிட்ட ரிசானாவின் குரலைக் கேட்க ஒருவருக்கும் மனம் வரவில்லை.
இரண்டொரு தவணைகளுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி நீதிபதி அப்துல்லாஹ் அல்-றொசைமி தலைமையில், மூவரடங்கிய குழு ரிசானாவை கொலைகாரி என முத்திரையிட்டு சிரச்சேதத்திற்கு ஆணையிட்டது. ரிசானா தரப்பினர் விரும்பினால் மேல் முறையீடு செய்யலாம் என்றும் அது அறிவித்தது. அதுவரை அவளுக்கு சரியான சட்ட ஆலோசனை தரப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து அது செய்தியாக வெளி உலகத்திற்குத் தெரிய வந்ததும் உலகம் விழித்தது. பல திசைகளில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. பல தொண்டு நிறுவனங்கள் இவளுக்காக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தி செலவழிக்கவும் முன்வந்தன. ஹாங்காங்கில் உள்ள மனித உரிமை இயக்கம், தன் செலவில் பொறுப்பெடுத்து வழக்காடத் துவங்கியது. சில இலங்க உள்ளூர் பிரமுகர்களும் பொருளுதவி வழங்கினர். செலவு சில லட்சம் ரியால்களைத் தொட்டது.
இந்த இடத்தில் நாம் ஒன்றை ஆராய வேண்டும். மேடம் தனக்கும், ரிசானாவிற்கும் காலையில் வாக்குவாதம் நடந்தது என்று குறிப்பிட்டாள். ரிசானா சவூதிக்கு வந்து 5 வாரங்கள் மட்டுமே ஆகியிருந்தது. வாதாடும் அளவிற்கு அவளுக்கு அறபி மொழி ஆற்றல் வந்துவிட்டதா? இல்லை துணிவுதான் உண்டா? குடிசையில் பிறந்து வளர்ந்து மாடமாளிகையைப் பார்த்து வாய் பிளந்து மயங்கி நிற்கும் பெண் அவள்.
எந்த நீதிமன்றத்திலும் எடுபடாத வாதம் இது. அடுத்து கழுத்தை நெறித்துக் கொன்றாள் என்றால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா? மருத்துவ அறிக்கை உண்டா? இல்லை. பின் எப்படி இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் ஓர் உயிரைப் பலி வாங்க முடியும்?
மேலும், சர்வதேச சட்டத்தின்படி, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அதன் அடிப்படையில் அவளைக் கொல்ல முடியாது என்பது உலகின் வாதம். ஆனால், அந்த நாட்டில் எதுவும் எடுபடவில்லை - எடுபடாது. அவர்களைப் பொருத்த வரையில், மருமகள் உடைத்தால் அது பொன் குடம்தான்.
மேலும், ரிசானாவின் பணி உறுதிப் பத்திரத்தில், வீட்டுப் பணிப்பெண் என்றுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறதே தவிர, குழந்தையைப் பராமரிக்கும் Nanny என்று குறிப்பிடப்படவில்லை. சமையல்காரனைத் தோட்டக்காரனாகப் பாவித்து, செடி கொடிகள் கருகிப் போய்விட்டன என்று கூறி போலீசில் தள்ள முடியாது.
பொதுவாக அறபு நாட்டில் பணிக்கு வருபவர்களை அடிமைகளாகப் பாவிக்கும் பழக்கமே அதிகம். அதற்கும் மேலாக, இவர்கள் அடிமையை கவுரவரப்படுத்திய திருநபியின் போதனையைப் போற்றுபவர்கள் தாங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் குறைச்சல் இல்லை.
பணிக்கு வந்து 18 நாட்கள் மட்டுமே ஆகிவிட்ட, வேலை செய்து எந்த முன்னனுபவமும் இல்லாத பெண்ணிடம் தன் மழலையை விட்டுச் செல்வது எவ்வளவு பொறுப்பற்ற தனம் என்பதை உலகம் விளங்கியும், அறபுலகம் மட்டும் விளங்கவில்லை. காரணம் ஆணவம். இதே வழக்கு மேல் நாட்டில் நடந்திருந்தால், பெற்றோரின் கவனயீனமே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறி, பெற்றோரே தண்டிக்கப்படுவர் - இல்லை கண்டிக்கப்படுவர்.
இக்கட்டுரையை வாசிப்பவர்களில் பெரும்பாலோர் வளைகுடாவில் பணியாற்றுபவர்கள்தான். அவர்களிடமிருந்து இந்த வழக்கு பற்றிய எண்ணங்களை அறிய விரும்புகிறேன். உள்ளே இருக்கும் உங்களுக்கு வெளியில் இருக்கும் எங்களை விட விபரம் அதிகம் தெரியும். சில ஆக்கப்பூர்வமான கருத்துக்களின் சாரம் மனித உரிமை இயக்கத்தின் ஆவணத்தில் பதியப்படலாம்.
ரிசானாவின் கதை எனக்குப் புதிதல்ல. இந்த ஏழு வருட காலத்தில், ஆங்கிலத்தில் சில கட்டுரைகளை இலங்கை தினசரிகளிலும், வெளிநாட்டு இணையதளங்களிலும் நான் எழுதியுள்ளேன். இங்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிப்பது எனது நோக்கமல்ல. ஆனால், ஷரியா சட்டம் என்பது தீர விசாரிக்காது தரப்படுவதில்லை. இஸ்லாமிய கலீஃபாக்களின் ஆட்சி எல்லோராலும் பாராட்டப்படுவதற்குக் காரணம், அவர்கள் ஒருபோதும்
நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று செயலாற்றியதால்தான்.
வழக்கமாக, சவூதியில் மரண தண்டனை தீர்ப்பு அறிவித்தால், மூன்று மாதங்களில் அது நிறைவேற்றப்பட்டு விடும். ஆனால், ரிசானாவின் விடயத்தில் அது 5 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டது. காரணம், உலகத் தலைவர்கள் பலர் ரிசானாவிற்காக வாதாடினார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ், ஐ.நா.வின் செயலாளர், இலங்கையின் ஜனாதிபதி போன்ற பலர் கருணை மனுவை சமர்ப்பித்தனர்.
ஆனால் சவூதி அரசோ - நீதிமன்றமோ இறங்குவது போல் பாவனை காட்டி ஏமாற்றிவிட்டது. அவர்கள் கூற்று, ரிசானா குற்றத்தை ஒப்புக்கொண்டாள்; மேல்முறையீடு காலதாமதமாகிவிட்டது என்பது. எந்த நிலையில் ரிசானா குற்றத்தை ஒப்புக்கொண்டாள்? அவளுக்கு சட்ட அறிவு உண்டா? மொழி அறிவுதான் உண்டா? ஆடு மேய்க்கும் ஓர் இடையன் உயிர்ப்பலி கேட்கும் வழக்கில் மொழிபெயர்ப்பாளனாக முடியுமா? அவருக்கு அந்த அங்கீகாரம் உண்டா? ஒருமுறை வந்த மலையாளி மீண்டும் வரவேயில்லையே, ஏன்? இப்படி பல ஓட்டைகள் இவ்வழக்கில் உள்ளன. அதனால்தான் உலகம் ரிசானாவிற்காகப் பேசியது.
மேலும், சவூதி முறைப்படி, குழந்தையின் வீட்டாருக்கு இழப்பீட்டுப் பணம் கொடுக்க பலர் முன்வந்தும் அவர்கள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. இறைவன் அவர்களுக்கு இறந்த மழலைக்குப் பின்பும் குழந்தையைக் கொடுத்தும் அவர்கள் மனம் மசியவில்லை. கழுத்தை நெறித்துக் கொன்றதற்கான எந்த மருத்துவ அத்தாட்சியும் இல்லை என்பதும் அத்தாய் அறிந்ததுதானே? பின்பு ஏன் இந்தப் பிடிவாதம்? அவர்கள் எஜமானர்கள். இவர்கள் வேலைக்காரர்கள் என்பதாலா?
எத்தனை நுற்றாண்டுகள் இவர்கள் இப்படி Falcon Jetஇல் பறந்தார்கள்? எல்லாம் அரை நூற்றாண்டுக்கு முன்பு வந்த எண்ணெய் தந்த வாழ்வுதான். எண்ணெய் விலை ஏற்றம் உலகின் கழுத்தை நெரிக்கிறது. இவர்கள் கழுத்து வீங்குகிறது. ஹஜ் பயணத்தை வைத்துதான் இவர்கள் பொருளாதாரம் 1300 வருடங்களுக்கு மேல் ஓடியது என்பது உலகமறிந்தது. ஹஜ்ஜுக்கு முந்திய மாதங்களில் முத்தவல்லிகள் தமிழகம், இலங்கை வந்து நினைவூட்டி ஒப்பந்தம் செய்வர். இன்றோ காலம் மாறிவிட்டது.
1949இல் சவூதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது இந்தியா, இலங்கையில் பணம் வசூலித்து அனுப்பினர். இலங்கையில் அதற்கான குழுவின் பொருளாளராக மர்ஹூம் ஹாஜி பி.எஸ்.அப்துல் காதர் அவர்கள் இருந்தார்கள். தென்னிந்தியா - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி பல்லாக் லெப்பையின் தந்தை அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசானா கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டாள். கொன்றது ஷரியா அல்ல நாடோடி அறபியரின் பழிவாங்கும் குணம் என்றே பல இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். காரணம், உலகமெல்லாம் ஒரு விதமான இஸ்லாமிய வெறுப்பை இவளது மரணம் தூண்டிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் சவூதியின் வெளி விவகார அமைச்சு என்றுமில்லாதவாறு, “எங்கள் விஷயத்தில் பிறர் தலையிட வேண்டாம்” என்று அறிவித்தது.
இதுவும் ஆணவம்தான். காரணம், சர்வதேச சட்ட அமைப்பின்படி எந்த அரசும் தனக்குக் கீழ் அதிகாரிகள் - நீதிமன்றம் தரும் மரண தண்டனை நியாயமானதுதான் என மனித உரிமை அமைப்பு ஏற்கும்படி இருக்க வேண்டும் என்பது மரபு. சமீபத்தில் இலங்கை சிறையில் கைதிகள் இராணுவத்தினரிடம் மோதி கொல்லப்பட்டதற்கு சர்வதேசம் கண்டனம் தெரிவித்ததோடு, விளக்கமும் கேட்டது. புழல் சிறையில் பிரச்சினை வந்தால் உலகம் கேட்கும்.
நியாயம் வெற்றி பெறும் - தான் விடுதலையாகி, இலங்கைக்கே திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையோடு இறுதி வரை ரிசானா இருந்தாள். அவள் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவளைச்சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம். மக்தூம் என்பவர், ரிசானாவின் பெற்றோருக்கு அவளைச்சந்தித்தது பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக அனுப்பப்பட்டு, கொலைக் குற்றம் சாற்றப்பட்டு, 9-1-2013 அன்று 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உங்கள் மகள் ரிசானாவை, அவளுக்கு அந்தத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஓரிரு மணி நேரத் திற்கு முன்பு சந்தித்தேன். அவளைச்சந்தித்த போது, அவளிடம் உனக்கு இறுதி ஆசைகள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன்.
அந்த நேரத்தில் கூட அவளுக்கு தண்டனை பற்றி தெரியவில்லை. ஊருக்கு நான் எப்போது செல்வது என்று என்னிடம் கேட்டாள். அப்போது தான் அவள் ஊருக்குச்சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதை நான் தெரிந்து கொண்டேன். மரண தண்டனை விதிக்கப்படு கின்ற அந்த நேரத்தில் கூட தன் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக்குற்றத்தை அவள் அறவே மறுத்தாள்.
இன்றைய தினம் உங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்போகிறார்கள் என்று தடுமாற்றத்துடன் நான் கூறினேன். அவள் பதிலே கூறவில்லை. மௌனமாக இருந்தாள். உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டேன். அப்போதும் 'என்னை மன்னித்து விட்டுவிடச்சொல்லுங்கள்'என்று கெஞ்சியது என் உள்ளத்தை உருக்கி விட்டது" என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.
இது நிற்க, மீண்டும் ரிசானாவின் வீட்டிற்குப் போவோம். “ரிசானா கடும் பயந்த சுபாவம் கொண்டவள்... ஸ்கூலில் யாரும் அடிச்சா கூட அவள் திருப்பி அடிக்க மாட்டா... கை நீட்ட மாட்டா... ஊட்ட வந்துதான் சொல்லுவா... அவ ஒரு அமைதியான புள்ள... அல்லாஹ்தான் அவளைத் தந்தான்... இப்ப அவனே அவளை எடுத்துட்டான்...” இது தந்தை முகம்மது நபீக்கின் புலம்பல் - அழுகை - வேதனை - சோதனை.
ரிசானாவின் தாய்க்கு அவளது மரணச் செய்தி முதன்முதலாக சொல்லப்பட்டபோது துள்ளியெழுந்த அவள் கூறிய வார்த்தைகள், “மகன், என்ட மகள மௌத்தாக்கி விட்டாங்களா...?” என்பதுதான். “ஜெயில்ல போய் நான் அவள சந்திச்சேன்... அவள பிரிஞ்சி வரும்போது, “ஏன் உம்மா என்னை விட்டுட்டுப் போறீங்க...? எப்ப உம்மா என்னை கூட்டிக்கிட்டுப் போவீங்க...?” என்று கேட்டாள்.
கடைசியா டிசம்பர் 12ஆம் தேதி அவ என்னோட பேசினா... “உம்மா எப்ப உம்மா உங்க கையால ஆக்கின சோறை நம்ம குடில்ல இருந்து சாப்பிடுறது? நீங்க, வாப்பா, தம்பி, தங்கச்சிமார் எல்லோரோடயும் ஒன்டா இருந்து சோறு திங்கனும் போல இருக்கும்மா...” என்டு சொன்னா... அந்த ஆசை நிறைவேறாமலேயே என் புள்ள போயிட்டாளே...”
“என்ட புள்ள இன்னும் உயிரோடு இருக்கு என்டு நான் நம்புறேன்... அல்லாஹ் என்ட புள்ளய தருவான்... இந்த மாசம் என்ட புள்ள எனக்கு கோல் எடுக்கும்... அந்த கோல் வராட்டிதான் நான் என்ட புள்ள மௌத்தா போயிட்டுண்டு நம்புவன்... அது வரைக்கும் நம்ப மாட்டேன்...
சவூதிக்காரன் ஏன் எனக்கிட்ட சொல்லாம என்ட புள்ளையை கொண்டான்...? ரிசானாக்கு மரண தண்டனைன்னு போன்ல மெசேஜ் வந்துச்சி... அதையும் நான் நம்பல்லை... ஏன் அவன் அப்படி செஞ்சான் என்டு கேக்குறன்... சவூதிக்காரன் பதில் சொல்லட்டும் என்டுதான் காத்துக்கிட்டு இருக்கிறன்... அதுக்கப்புறம் நான் அவனுக்கு பதில் சொல்லுவன் பாருங்க!
முழு நாடுமே என்ட புள்ளைக்காக துஆ செய்திச்சி... எல்லோருக்கும் நன்றி சொல்றேன்... ஏழரை வருஷமா அவ (மேடம்) என்ட புள்ளய மன்னிக்கல்ல... என்ட புள்ள குற்றம் செஞ்சாத்தானே அவ மன்னிக்கனும்...? அவதான் குற்றமே செய்யலையே...? அவ எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குற்றத்தை செய்ய மாட்டா என்டு நான் சத்தியம் பண்ணுவேன்... அவள் என்ட புள்ளய மன்னிக்காட்டியும் நான் அவளை (மேடம்) மன்னிக்கன்...” (என்ன பெருந்தன்மை!)
“ஏழரை வருசமா கல்லை விழுங்கிட்டு கக்க முடியாதளவு என்ட புள்ளைக்காக ஏங்கியிருக்கேன்... ராத்தா எப்பம்மா வருவா என்டு என்ட புள்ளையல் கேக்குதுகள்... அதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்...? என்ட புள்ள ரிசானாக்கு வந்த நிலை யாருக்கும் வந்துடக் கூடா... குப்பை கொட்டினாலும் பரவாயில்ல...இந்த நாட்டுக்குள்ளேயே ஏதாவது செஞ்சு கொடுங்க ஜனாதிபதி…”
குழம்பிய மனநிலையில் பேசும் ரிசானாவின் தாயிடம், “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா...?” என்று கேட்டால், “உம்... ரிசானா வேண்டும்".
கொடுக்க முடியுமா உங்களால் வாசகர்களே…?
“குற்றம் செய்யாத எனக்கு ஏன் உம்மா இந்த கோரத் தண்டனை?”
குரல் வளை அறுக்கப்பட்டாலும் இந்தக் குரல் காலமெல்லாம் உலகெங்கும் ஒலிக்கும்! ஒலித்துக்கொண்டே இருக்கும்!! |