என் பள்ளிப்பருவத்தில் காயல்பட்டிணம் என்கிற ஊரின் பெயரை முதன்முதலாக, ஒரு இசைக் கலைஞனின் குரல் வழியாகவே அறிந்தேன். காயல் ஏ.ஆர் ஷேக் முகம்மது என்கிற பாடகரின் ”ஈச்சை மரத்து இன்பச்சோலையில் நபிநாதரே’ என்ற பாடலிலும், ’கப்பலுக்கு போன மச்சான்’ என்கிற பாடலிலும், அவரின் இசையிலும் கரைந்து போயிருக்கிறேன்.
இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்து இயங்கும் அவ்வூரில் மதுக்கடைகள் இல்லை. தீய உணர்வுகளை விதைக்கும் திரையரங்கம் இல்லை.தவறுகளின் வாசல்களை திறந்து வைக்கும் விடுதிகள் இல்லை என்று அறிந்து வியந்தேன்.
இஸ்லாமிய சமூகம் இன்றைய சூழலில் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கும் ஒரு அறைக்கூட்டத்தில் தான் முதன் முறையாக கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களால் காயல்பட்டினத்தைச்சார்ந்த சகோதரர் எனக்கு அறிமுகமானார்.
நான் கம்யூனிஸத்தின் காதலன். பெரியாரின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன். ஆனால், சமூக அக்கறை என்கிற புள்ளி தான், இறைநம்பிக்கையும் இஸ்லாமிய ஆன்மீகத்தின் ஈர்ப்பும் மிக்க இருவரையும், நட்பில் இணைத்து வைத்தது.
சென்ற வருடம் ’நீர்ப்பறவை’’ என்கிற திரைப்பட படப்பிடிப்புக்காக இரண்டு மாத காலம் திருச்செந்தூரில் தங்க நேர்ந்தது. கடலோரக் கிராமத்தில், படப்பிடிப்பு நிகழ்ந்த போது, கடல் செந்நிறமாக காட்சியளித்தது. நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குருதிப்பெருக்கோ? என்று கருதும் அளவுக்கு நிறம் மாறிக்கிடந்தது.
அது காயல்பட்டினம் கடற்கரைப்பகுதியில் உள்ள தாரங்கதாரா இரசாயனத் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கழிவுகள் என்று பின்னாளில் அறிந்தேன்.
வளர்ச்சியின் பெயரால் நாம் சந்திக்கும் நவீன வாழ்வின் ஒரு பகுதியாக உள்ள, இந்த இரசாயன தொழிற்சாலையினால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது.மீன்வளம் அழிந்து கொண்டிருக்கிறது. புற்றுநோய் அன்றாட வாழ்வின் ஒரு நிகழ்வாக மாறி விட்டது.
இந்த ரசாயன வன்முறையை இளைய தலைமுறையைச்சேர்ந்த காயல்பட்டினம் இணைய தள நண்பர்கள் போராட்டத்தின் வழியாக எதிர் கொள்கிறார்கள்.
காயல்பட்டினம் இணைய தள நண்பர்கள் எழுத்து மேடை மையம் என்ற சிந்தனை & ஆய்வு அரங்கு அறிமுக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
அந்த அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்களும் நானும் அழைக்கப்பட்டோம்.
மிகவும் தீவிர ஆய்வுத்தன்மையுடன் கூடிய உரையை ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்து சொன்னார். இதெல்லாம் புரியுமா? என்று விழா ஏற்பாடு செய்தவர்கள் நினைத்துக்கொண்டிருந்ததற்காக மாறாக நிறையப் பேர் சீனிவாசனை சூழ்ந்து நின்று பாராட்டினார்கள்.
அதைத் தொடர்ந்து ”கருத்துச்சுதந்திரம் ஒரு முதிர்ந்த சமூகத்தின் உயிர்மூச்சு” என்கிற தலைப்பில் நான் ஒரு மணி நேரம் பேசினேன்.
பொதுப்பிரச்னையில், இஸ்லாமிய சமூகம் பிற சமூகங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய காலத்தின் கட்டாயம் என்பதை வலியுறுத்தினேன்.
ஷரியத் சட்டம் மரண தண்டனையை ஆதரிக்கிறது என்பதை மனதில் கொண்டு, இந்தியச் சூழலில் அத்தகைய தண்டனையை ஆதரிக்கக்கூடாது. ஏனெனில், அச்சட்டம் அப்சல் குருவின் கழுத்தை நெறிக்க மட்டுமே நடைமுறைப்படுத்தப் படும். ஒரு போதும் அததகைய சட்டத்தால்,இங்கு நரேந்திர மோடியை தண்டிக்க இயலாது.
இந்துத்துவம் என்கிற பிற்போக்குத்தன்மையின் பிணத்தைத் தூக்கிச்செல்ல, நான்கு முனைக்கும் தலித்துக்கள், இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், சிறுபான்மையினர் ஒன்றிணைய வேண்டும். ஊடகங்களைப்புறக்கணித்த காரணத்தால், நமக்கு புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கான கருணையைக் கூட நாம் பெறவில்லை.
ஒரு கருத்து அதிகாரத்தில் உள்ள போது மட்டுமே, அது சுதந்திரமாக இயங்க முடிகிறது. அதிகாரத்தை இழந்து விட்ட நிலையில், ஒரு கருத்தின் அடிப்படை நியாயம் கூட மறுக்கப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. அதை தான், இஸ்லாமிய சமூகம், இந்திய சூழலில் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
நுண்கலைகளை கைவிட்ட காரணத்தால், நம்மைப் பற்றிய புரிதலை, பொதுச்சமூகத்திற்கு தெரிவிக்க தவறி விட்டோம்.
இது போன்ற கருத்துக்களை ஏற்றுக்கொண்ட காயல்பட்டினம் மக்களின் வரவேற்பானது முஸ்லிம் சமூகம் குறித்து பலர் கொண்டிருக்கிற பிற்போக்குத்தனங்கள் சார்ந்த கற்பிதங்கள் எல்லாம் பொய்யானவை என்பதை உணர்த்தியது.
|