பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்பார்ந்த காயல் வாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்!
மைக்ரோ காயல் அமைப்பானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நமதூரைச்சார்ந்த நலிவுற்ற மக்களுக்கு பொருளாதார ரீதியாக மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்கி வருவதை அனைவரும் அறிவீர்கள். பொருத்தமான - செலவு குறைந்த மருத்துவ முறைகளைப்பற்றியும் கூட்டு மருத்துவ முறை பற்றியும் நமதூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றது.
அதன் முதல் படியாகவே கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகக் கட்டுரை ஒன்றை நம் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக மே மாதம் அக்யூ பங்சர் மருத்துவ முறைப் பற்றி கட்டுரை வெளியானது. தற்போது யூனானி மருத்துவம் பற்றி டாக்டர் அமீன் எழுதிய கட்டுரை வெளியிடப்படுகிறது.
யூனான் என்றால் கிரேக்க நாடு என்று பொருள். பெயருக்கு ஏற்ப யூனானி முறை மருத்துவம் கிரேக்க நாட்டில் தோன்றியது. அதன் கோட்பாடு
'ஹிப்பாக்ரடீஸ்' ஆகியோரின் போதனைகளைத் தழுவியதாக இருப்பினும் அதனை தக்கதொரு அறிவியல் அடிப்படை கொடுத்து மாபெரும் மருத்துவ
துறையாய் நிர்மாணித்தவர்கள் அரேபியர்களே. எனவேதான் அது கிரேக்க-அரேபிய மருத்துவ முறை என வழங்கப்படலாயிற்று. அது மட்டுமின்றி அது
அதன் சம காலத்தில் எகிப்து, சிரியா, இராக், பாரசீகம், இந்தியா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் மற்றும் தூரக்கிழக்கு நாடுகளின் பரம்பரை
வைத்திய முறைகளில் சிறந்தவற்றை தன்னுடன் இனைத்துக்கொண்டதால் செழுமையுற்றது.
மேலும் அது மத்திய ஆசியாவின் பல பகுதிகளில் அப்போது பிரபல்யமாய் இருந்த அந்நாட்டு சுதேசிய முறை மருத்துவத்தாலும் பயனுற்றது.
இந்தியாவில் யூனானி மருத்துவம் அராபியர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அது விரைவில் இந்நாட்டில் நன்கு வேரூன்றியதிலிருந்து இன்று
வரை இந்திய திருநாட்டின் எண்ணற்ற மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது.
இந்தியாவில் இன்று புழக்கத்தில் இருந்து வரும் இந்நாளைய யூனானி மருத்துவமுறை, அந்நாளைய கிரேக்க மருத்து முறையிலிருந்து முற்றிலும்
மாறுபட்டது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் குடியேறிய யூனானி மருத்துவர்கள், இங்குள்ள இந்திய மருந்துகளை
ஏற்றுக்கொண்டதோடு மட்டும் திருப்தி அடையவில்லை . புதிய மருந்துகளையும் மருத்துவ முறைக் களஞ்சியத்திற்கு சேர்த்தனர். அதன் பரந்த அறிவு
வளத்தாலும் அனுபவத்தினாலும் யூனானி மருத்துவம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று நாடு முழுவதும் பரவியது அன்றிலிருந்து பல
நூற்றாண்டுகளாக பலனளித்து வருகின்றது.
யூனானி மருத்துவ முறைக்கு வித்திட்டவர் ஹிப்பாக்ரடீஸ் (கி.மு 460-ல் வாழ்ந்தவர் ) என்பவரே ஆவார். நோயுறுதல் ஒரு வித இயற்கை நிகழ்வே
என்பதை நிலை நாட்டிய முதல் மனிதர் அவரே. நோயுறுதலின் போது உடலில் அதற்கேற்ப ஏற்படும் விளைவுகளே நோய் குறிகள் என்றும் உடலின்
இயற்கை சக்திக்கு உதவுவதே மருத்துவரின் முக்கியமான கடமை என்றும் அவர் அறுதியிட்டுக் கூறினார்.
நோயுற்றோரின் உடல் பிணி குறித்த வரலாறுகளை (Medical History) குறித்து வைக்கும் முறையை அறிமுகப்படுத்தியதாக வரலாற்றில் இடம்
பெற்ற முதல் மருத்துவரும் இவர்தான். அவரது புகழ் பெற்ற உடல் திரவக்கோட்பாடும் (Humoral theory) தோஷத் தத்துவமும் மருத்துவ உலகுக்கு
வழங்கப்பட்டதொரு தலையாய கொடையாகும்.
ஹிப்பாக்ரடீஸ், மருத்துவத்தை ஒழுங்குபடுத்தி அதற்கு அறிவியல் தகுதியை கொடுத்தார் என்றால் அதனை உறுதியாகப் பொலிவுற ஆக்கி நிர்மாணித்த
பெருமை கேலனையே சாரும். இவ்விருவரின் உன்னத அறிவியல் அடிப்படை அமைப்பின் மீது தான் அராபியர்கள் யூனானி மருத்துவத்தை கவினுறு
மாளிகையாக அமைத்தனர்.
உடல் திரவக்கோட்பாடு, தோஷத் தத்துவம் (Humoral theory)
இம்மருத்துவ முறை உடல் திரவக்கோட்பாட்டு இயலை ( தோஷத் தத்துவங்களை ) அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தத்துவத்தின்படி உடலில்
நான்கு விதமான தோஷங்கள் உடல் திரவங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அவை முறையே, இரத்தம் கபம், மஞ்சள் பித்தம், கருப்பு பித்தம்
(வாதம்) என்பனவாகும்.
அதன்படியே மனிதர்களின் உடல் கூற்று நிலையை (Temperaments) சுபாவங்களை இரத்த உடலினர் (Sanguine) கல் உடலினர் (Phlegmatic) பித்த
உடலினர் (choleric) வாத உடலினர் (Melanchloic) என்று அழைத்திடலாயினர். உடல் திரவங்களுக்கும் கூறு நிலைகள் சுபாவங்கள்
வரையறுக்கப்பட்டன, இரத்ததின் சுபாவம் உஷ்ணமும் ஈரமும் ஆகும். மஞ்சள் பித்தத்தின் சுபாவம் உஷ்ணமும் வறட்சியும் ஆகும். கருப்புபித்ததின்
(வாதத்தின் ) சுபாவம் குளிர்ச்சியும் வறட்சியும் ஆகும்.
மருந்துகளுக்கும் சுபாவங்கள் கூறுநிலைகள் வரையறுக்கப்பட்டன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட தேர்வு உடல் அமைப்பு (Humoral
Constitution) இருப்பதாயும் அது அவனது ஆரோக்கிய நிலையை குறிப்பதாயும் கூறப்படுகிறது. இவ்வமைப்பில் ஏதேனும் ஒரு மாறுதல்
ஏற்படும்போதும் அவனது உடலில் நோய் ஏற்படும் போதும் அதற்கேற்ப சுயபாதுகாப்பு மற்றும் மாறுதல்கள் செய்துக்கொள்ளக்கூடிய நோய்
எதிர்ப்புத்திறன் (Medcatrix Natural) உள்ளது.
அந்த நோய் எதிர்ப்புத்திறன் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் உடல் கூற்று நிலை வரம்புக்குள் ஏற்படும் கோளாறுகளை சமன்படுத்துகிறது. இது
உடலுக்கு ஊறு ஏற்படும்போதெல்லாம் உடலில் உண்டாகும் தற்காப்பு செயலமைப்புக்கு (Defence Mechanism) இனணயாய் உதவிடுகின்றது.
யூனானி மருத்துவமுறையில் இச்சக்தியின் மீது அதிக நம்பிக்கை வைக்கப்படுகிறது. மருத்துவரின் நோக்கம் இச்சக்தியின் திறனுக்கு உதவி அளித்து
அதனை வளர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அதனை தடுப்பதாகவோ, தள்ளி வைப்பதாகவோ, இருக்கக்கூடாது.
இதன் விளைவு யாதெனில், யூனானி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் உடலிலுள்ள இயற்கையான (Intrinsic) சக்தியினால் அந்நேரத்தில்
தன்னில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை உடலானது வெற்றிகொள்கின்றது.
மேலும் உடலில் ஏற்படப் போகும் கோளாறுகளை எதிர்க்கவல்ல சக்தியினையும் உடல் பெற்று விடுகின்றது. மனித உடலில் இரத்தம் , கபம்
(சிலேத்துமம் ), மஞ்சள் நிறப் பித்தம், கறுப்புநிறப் பித்தம் (வாதம்) ஆகியவை உள்ளனவென்று ஹிப்பாகிரிடீஸ் அறுதியிட்டு கூறுகிறார்.
இவைகள் தாம் மனித உடலைமைப்பை உருவாக்குகின்றன. இவற்றில் ஏற்படும் அமைப்பு மாறுபாடு உடலுக்கு வலியையும், நோயையும்
ஏற்படுத்துகிறது. இவைகள் ஒன்றுக்கொன்று வலிமையிலும் அளவிலும் சமமாகவும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து சரியான விகிதத்தில்
அமைந்திருப்பதே ஆரோக்கிய நிலையாகும். அவற்றில் ஏதேனும் ஒன்று அதிகமானாலோ, குறைந்தாலோ, உடலிலிருந்து பிரிக்கப்பட்டாலோ,
மற்றுவற்றுடன் ஒழுங்குற கலக்காவிட்டாலோ வலியும் தொல்லைகளும் ஏற்படுகிறது.
உடல் திரவங்கள் எனப்படும் தோஷங்கள் செரித்த உணவிலிருந்து உண்டாகின்றன. யூனானி மருத்துவர்கள் உடல் நல்ல நிலையிலும்,
நோயுற்றநிலையிலும்,உணவுக்கும்,செரிமானத்துக்குமே முக்கியத்துவம் அளிக்கின்றனர். மருநதுகளை நிர்ணயிக்கும்போது உணவு விதிகளை
பரிந்துரைத்து ( பத்தியம் ) விலக்கப்பட வேண்டிய பொருட்களையும், அறிவுறுத்துகின்றனர்.
சரியான உணவும், செரிமானமுமே சரியான உடல் விகிதத்தை (சரிவிகித தோஷச்சமநிலை) உருவாக்குவதாயும்,உடலை சுகாதாரமாக வைத்திருக்க
உதவுகின்றது.
அதேபோல் தவறான உணவும் தவறான செரிப்புத் தன்மையும் சரி விகித சமநிலையைக் குறைத்து நோயுண்டாக்குகின்றன. எனவே உடல், திரவ
சமச்சீரற்றத் தன்மையை தக்க மருத்துவ உதவியுடன் நல்ல உணவு மற்றும் செரிப்புத்தன்மையை இணைப்பதன் மூலம் சரிசெய்யலாம்.
யூனானி மருத்துவமுறையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமானது நாடி பார்த்து நோயறியும் தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும்.
தமனிகளில் ஒன்று விட்டு ஒன்று மாறி (Alternative) ஏற்படும் விரிவு சுருக்க இயக்கங்களால் ஏற்படும் ஒருவித இயக்கமே நாடியாகும்.
அவசென்னா என்னும் அறிஞரின் கொள்கைப்படி நாடியில் பத்து வித அம்சங்கள் உள்ளனவென்றும், அவைகளினால் நம் உடலின் நிலையைப்
பகுத்தணரலாமென்றும் தெரிகின்றது.
" நப்ஸ்" ( Nab ) காரூரா ( Quaroora ) போன்ற இம்முறையில் நோயறியும் சோதனைகள் மிகவும் எளிதாக இருப்பதால் யூனானி மருத்துவர்கள்
நுட்பம் வாய்ந்த கருவிகள் தம்மிடம் இல்லையே, அல்லது கிடைக்க வில்லையே என குறைப்பட்டுக் கொள்வதில்லை.
நோய் தடுப்பு முறை:
யூனானி மருத்துவம் உடலின் பல்வேறு தனிமங்கள் திறன்கள் ஆகியவற்றின் சம நிலையை சரிசமப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது வெகு
நாட்களுக்கு முன்பே யூனானி மருத்துவம் மனிதனின் நல்வாழ்வில் சுற்றுப்புற சூழ்நிலை ஏற்படுத்தும் விளைவுகளை உணர்ந்துள்ளது .
நோய் தடுப்புக்குத் தேவையான முன் தேவைகளாக ஆறு விதிகளை விதிக்கின்றது. அவற்றுள் ஒரு பக்கம் சரியான சுற்றுப்புற சூழ்நிலை சமநிலைக்கும்
மற்றொரு பக்கம் உணவு,உடை காற்று முதலியன கெடாமல் வைத்துக் கொள்ளும் தன்மையாகும் .
'அஸ்பாபே ஸரூரியா" எனப்படும் இம்முன் தேவைகள் முறையே (1) காற்று (2) உணவும்,பானமும் (3) உடல் இயக்கமும் ஓய்வும் (4)
மனவியக்கமும் மன ஓய்வும் (5) உறக்கமும் விழிப்பும் (6) வெளியேற்றலும் உள் நிறுத்தி வைத்துலும் ஆகும்.
நோய் நீக்குதல் :
யூனானி மருத்துவம் இயற்கையின் கிடைக்கும் மூலிகை மருந்துகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவில் பல விதமான தட்ப வெப்ப
நிலைகள் நிலவுவதால் பலவிதமான மருந்து மூலிகைகளும்,தாவரங்களும் செழித்து வளர்கின்றன. இவற்றில் சில முன்னேறிய நாடுகளின் அறிவியல்
அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
இந்திய மண்ணின் கீர்த்திப்பெற்ற மைந்தனும்,புகழ் வாய்ந்த யூனானி மருத்துவருமான காலஞ்சென்ற ஹக்கீம் அஜ்மல் கான், சர்ப்பகந்தா
(அஸ்ரோல்) எனும் மூலிகைக்கு உயர் இரத்த அழுத்ததை குறைப்பதில் இருக்கும் தனித்திறனை உலகுக்கு வெளிப்படுத்தினார்.
யூனானி மருத்துவர்கள் தாதுப்பொருட்களையும்,விலங்குப்பொருட்களையும் அதிகமான அளவில் பயன்படுத்தியும் வருகின்றனர்,கிரேக்க,அராபிய
மருத்துவ அறிஞர்கள் பல மருந்து செய் நிலையங்களை (Polypharmacy) ஊக்குவித்ததுடன், பல மருத்துவமுறைகளையும் உருவாக்கினர்.அவை
இன்றும் யூனானி மருத்துவத்தில் புழக்கத்திலிருந்து வருகிறது.
யூனானி மருத்துவத்தில், முக்கியமான வயிறு மற்றும் ஈரல் சம்பந்தமான நோய்களுக்கு பிரத்தியேகமான மருந்து வகைகள் பல உள்ளன .அவைகளில்
" ஜவாரிஷ்-ஜாலினுஸ்" கமீரா அப்ரேஷம் ஹக்கீம் அர்ஷத் வாலா என்ற மருந்து இதய நோய்களைத் தீர்ப்பதில் மிகவும் புகழ்பெற்றது .
இம்மருத்துவ தயாரிப்புகளுக்கு பல மேற்காசியா மற்றும் தென் கிழக்காசியா நாடுகளில் நல்ல ஆதரவு உள்ளது.
யூனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இயற்கை மருந்துகள் உயிரைக் குறிப்பனவாகும். விஷத்தன்மையுள்ள மருந்துகள் முதலில்
பக்குவப்படுத்தப்பட்டு தூய்மையாக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன.
கூட்டு மருத்துவ தயாரிப்புகளை பயன்படுத்தியபோதிலும், அது நோய்களுக்கு தனிப்பட்ட ஒரே மருந்தாக உபயோகப்படுத்துவதையே பொதுவாக
விரும்பி தேர்ந்தெடுக்கப்படுகிறது. சமீபகாலத்திய ஆராய்ச்சி முடிவுகள் கச்சா மருந்துகள் (Crude drugs) வெகு பயனுள்ளனவாயும், தீய
விளைவுகளற்றதாகவும் உள்ளதை நிரூபிக்கின்றன.
மேலும் அதன் பொருட் பண்பு நூல் எனப்படும் மருத்துவ அகராதியானது பரந்ததாகஉள்ளது. யூனானி மருந்துகள் வெகு சுலபமாய் கிடைக்கின்றன.
ஏனெனில் பெரும்பாலானாவை உள்ளுரிலேயே கிடைக்கின்றன.
இம்முறையில் தனி மனித உடற்கூறு நிலைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படுகின்றன. அவை தனி மனித உடற்கூறு நிலைக்கேற்ப ஒத்துச்செல்வதுடன்
நோய் நீங்கி உடல் தேறும் நிகழ்ச்சியைத் துரிதப் படுத்துகின்றன எல்லாவற்றுக்கும் மேலாக பின் விளைவுகளை நீக்குகின்றன.
எமது மருத்துவமனையில் வயிறு , ஈரல் தொடர்பான நோய்களுக்கும் , மூட்டு வலி , பீனிசம் அல்லது நீர்க்கோவை என்றழைக்கப்படும் சைனஸ்
நோய்க்கும் சிறப்பாக மருத்துவம் அளிக்கின்றோம்.
மருத்துவரை தொடர்பு கொள்ள :
நியமத் ரிசர்ச் பௌண்டேசன்,
49 பாரதி சாலை,
சென்னை - 5.
தொலைப்பேசி: 91 - 44 - 2848 3231 / 2848 3281
பாக்ஸ்: 91-44-2844 0763
ஈமெயில்: drsyedmmameen@gmail.com
-------------------------------------------
குறிப்பு :
இந்தக்கட்டுரைத் தொடரில் வரும் கருத்துக்கள் அனைத்தும் அதனை எழுதும் மருத்துவருடையதாகும். குறிப்பிட்ட மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொள்ள விரும்பும் நபர்கள் அதைப்பற்றி தீர விசாரித்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். மைக்ரோ காயல் சார்பில் பொது மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு ஊட்டும் முகமாக மட்டுமே இந்த கட்டுரையை வெளியிடுகின்றோம். |