இறைவனின் அத்தாட்சிகளில் அதி அற்புதமான படைப்பாக மனிதன் இருக்கிறான். அந்த மனிதனிடத்தில் காணப்படவேண்டிய மனிதநேயப்
பண்புகளில், மன்னிப்பதும், மன்னிக்க கோருவதும், மிக உன்னதப் பண்புகளாக நோக்கப்படுகிறது. உறவுகள் அறுந்திடாமல் அவ்வப்போது ஏற்படும்
உரசல்களைக் களைந்து, உறவுகளை இணைத்து வாழ இந்தப் பண்புகள் மிக அவசியமாக பேணப்படவேண்டும்.
தனது தவறுகளை பிறர் மன்னிக்க வேண்டும் என விரும்பும் ஒருவர், பிறரை பொறுமை கொண்டு மன்னித்திடல் வேண்டுமல்லவா? மாறாக தான்
செய்த தவறுகளை, அநியாயங்களை இலகுவாக மறந்து விடுவதும், பிறரின் தவறுகளை மன்னிக்க மறுப்பதும் குரோதங்கொள்வதும், மனித வாழ்வில்
வாடிக்கையாகிப் போனது.
பொறுமையும், சகிப்புத் தன்மையும், அறுகிவிட்ட இந்த அவசர உலகில் ஒரு சகோதரர் சிறிதளவேனும் வரம்பு மீறி நடந்து விட்டாலே போதும்,
அதனை சகித்துக்கொள்ள முடியாத நாம் அவரை அடியோடு வெறுத்து ஒதுக்கிடுவோம். பன்னெடுங்காலமாக பார்த்து, பழகி, பேணிவந்த நம்
உறவுகளை நொடிப்பொழுதில் அறுத்தெரிந்திடுவோம். மட்டுமல்லாமல் கோபம் கொப்பளிக்க அவரை பழிவாங்கிடவும் காத்திருப்போம் அல்லவா?
மனித வாழ்வில் நிம்மதி நிலவ உறவுகளுக்கிடையே குரோதங்கள் களையப்பட்டு நீதமும், நல்லிணக்கமும் பேணப்படவேண்டும். உரிமைகள்
மறுக்கப்படும் போதும், உணர்வுகள் ஊனமாக்கப்படும் போதும், உறவில் விரிசல்கள் விழத் துவங்கி ஒற்றுமை உருக்குலைந்திடும். பிணங்கிய
உறவுகள் பிரிவதும் - பிரிந்தவர்கள் இணைவதும் வாழ்வில் சகஜமே. ஆனாலும் கூட, பிரிந்தவர்கள் பகைவர்களாக இருக்கவே உலகையே
பிரிந்திடுவதையும் சில நேரங்களில் அவதானிக்கலாம்.
நாம், ஒரு சகோதரனுக்கு அநீதியிழைத்து அதற்காக மனம் வருந்தி அவரிடம் மன்னிப்புகோரி சமரசம் செய்துகொள்ளத நிலையில், அவர் மரணித்து
விட்டால் நமது நிலை எவ்வளவு பரிதாபத்திற்குரியது பாருங்கள்? இவ்வுலகில் மட்டுமல்லாது மறு உலகிலும் தான். நம்மால் பாதிப்பிற்குள்ளான அந்த
சகோதரனின் ஜனாஸாவை எந்தக் கண் கொண்டு நாம் பார்வையிடுவது? எந்த மனம் கொண்டு ஜனாஸாவில் கலந்து கொள்வது? குற்ற உணர்வால்
கூனிக் குறுகிட மாட்டோமா? சமூகத்தின் பார்வையை சந்திக்க திராணியற்று தப்பிக்கவே வழி தேடுவோம்.
சற்றே சிந்திப்போம்! நமக்கு ஏன் இந்த அவல நிலை? காலம் தாழ்த்தியிருக்காமல் அவரை நெருங்கி வருந்தி மன்னிப்புக்கோரி பறித்த
உரிமைகளையும், சுரண்டிய சொத்துகளையும், இறைவனைப் பயந்து, நீதத்துடன் திருப்பிக் கொடுத்து, சமரசம் செய்திருக்க வேண்டுமல்லவா?
இதற்கு மாறாக நம்மில் சிலர் உறவுகளை சரி செய்து கொள்ள திருமண நிகழ்வை, ஹஜ், உம்ராவை காரணமாக்கி காத்திருப்பார்கள். இந்தக் காலப்
பகுதிக்குள் மரணம் நெருங்கிவிட்டால் இவர்களின் நிலை எவ்வளவு மோசமானது? குறிப்பாக புனிதப் பயணங்களுக்கு தயாராகும் போது மட்டுமே
பல்லாண்டு காலம் பகை பாராட்டிய இரத்த உறவுகளும், சொந்த பந்தங்களும் நம் நினைவுக்கு வருவது ஆச்சர்யமே! அவர்களின் வீடு தேடிச் சென்று
சமரசம் செய்து கொள்வதும், சில வேளைகளில் அவமானப்பட்டுத் திரும்புவதும் உண்டு. இன்னும் சிலரின் நடவடிக்கை விநோதமாக காணப்படும்,
முஹல்லா பள்ளிவாயிலின் அறிவிப்பு பலகையை நோக்கினால் இவர்களின் கடிதம், பொது மன்னிப்பைக்கோரி படபடக்கும். இது எந்த வகை சமரசம்
என்பது புலப்படவில்லை.
நீதம் செய்ய மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் மட்டுமல்ல மறு உலகிலும் நெருக்கடியான வாழ்க்கைதான் ! என்பதை நபி மொழி ஒன்று இப்படிச்
சொல்கிறது.
"ஒரு முஸ்லிமின் உரிமையை தன் வலக்கரத்தால் ஒருவன் எடுத்தால் அவனுக்கு அல்லாஹ் நரகத்தை கட்டாயமாக்கிவிட்டான்.அவன் மீது
சொர்க்கத்தை தடை செய்து விட்டான், என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் .இறைத் தூதர் அவர்களே ! அது சாதாரணமாக இருந்தாலுமா ? என்று
ஒருவர் கேட்டார் . ஒரு" அராக்" மரக் குச்சியாக இருந்தாலும் தான் . என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்:137)
இவ்வுலகில் இழைக்கப்பட்ட அநீதிக்கு இங்கேயே நீதி வழங்கி சமரசம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு தீர்க்கப்படாத கணக்குகள் அணுவளவு
அற்பமாய் இருந்தாலும் அது மறுமையில் எவ்வாறு தீர்க்கப்படும் என்பதை -
அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் "ஒருவனிடம் தன் சகோதரனுக்குரிய கண்ணியத்திலோ,அல்லது வேறு ஒரு பொருளிலோ அநீதம் செய்து
இருந்தால் இதற்காக இன்றே, தீனாரும் திர்ஹமும் இல்லாத (அந்த மறுமை ) நாள் வருவதற்கு முன் தன்னை தூய்மையாக்கிக் கொள்ளட்டும் !...
(புஹாரி:2249)
அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்கள்
"என் சமூகத்தில் திவாலாகிப் போனவர் ஒருவராவார் .அவர் மறுமை நாளில் தொழுகை,நோன்பு,ஜகாத் ஆகியவற்றுடன் வருவார் . (அதே நேரத்தில்)
அவர் ஒருவரைத் திட்டியிருப்பார் , ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார் ஒருவரது பொருளை (முறைகேடாகப் ) புசித்திருப்பார். ஒருவரது
இரத்தத்தை சிந்தியிருப்பர். ஒருவரை அடித்திருப்பார். (ஆகவே ) அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும். இன்னும் சில
அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட)
மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார். (அவரே திவாலகிப்
போனவர்) என்று கூறினார்கள் (முஸ்லிம்: 5037)
தனி மனிதனின் உரிமையை, கண்ணியத்தை, பாதுகாப்பதில் இஸ்லாம் மிகுந்த அக்கறை செலுத்துவதை அவதானிக்க முடிகிறது.அநீதமிழைத்தவர்
ஒரு சிறந்த வணக்கசாலியாக இருந்தாலும் கூட தண்டனையிலிருந்து தப்பித்து விட முடியாது. கூடவே அநீதி இழைத்தவரை பாதிப்புக்குள்ளானவர்
மன்னிக்காத வரை இறைவனும் மன்னிப்பதில்லை என்பதையும் சொல்லித்தருகிறது.
பிறரிடம் மன்னிப்பு கோருவது என்பது, சமூகத்தில் ஒரு தனி மனிதனின் கௌரவக் குறைவாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.அவ்வாறல்ல !
இது முற்றிலும் ஒரு பிழையான உளப்பதிவே. உறவுகளில் ஏற்படும் மன மாச்சர்யங்களை உடனுக்குடன் சரி செய்திட இத்தகைய அணுகுமுறையை
வாழ்வில் மிக அவசியமாக நடைமுறைப் படுத்திடவேண்டும். உதாரணமாக குறித்த நேரத்தில் ஒருவரை சந்திக்கவோ ,ஒரு நிகழ்வில் கலந்து
கொள்ளவோ தாமதித்து விட்டால், தவறி விட்டால் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரிடவேண்டும். ஏன் ? நம் வீடுகளிலிருந்தே இந்தப்
பண்பை, பழக்கத்தை துவங்கிட வேண்டும் .சில வேளைகளில் நமது செயற்பாடுகள் நம் மனைவி ,மக்களின் உள்ளங்களை காயப்படுத்திடும்.
அச்சமயம் தயக்கமின்றி மன்னிப்புக்கோர முன்வரவேண்டும் .இதனால் நம் கண்ணியம் குறைந்திடாது மாறாக பிரியமும்,பாசமும் புன்முறுவல்
பூக்கும் .இது போன்ற சின்னச் சின்ன விடயங்கள் என நாம் உதாசீனப்படுத்தும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நம் தவறுக்காக மன்னிக்க கோருவதை
சகஜமாக்கி பக்குவப்படவேண்டும். இதனூடாக அவ்வப்போது ஏற்படும் மனக் கசப்புகளை களைந்து உறவுகளைப் பிரிந்திடாமல்
பேணிடலாம்.
அதே நேரம் ஒருவர்,பாதிக்கப்பட்டவரை அணுகி தன்னை மன்னிக்கக் கோரினால் கோபம் கொண்டு ஏசிப் பேசி விரட்டிடாமல் இரக்கம் கொண்டு
அவரை மன்னித்து சமாதானம் செய்து கொள்ளும் படி இறைவன் நமக்கு கட்டளை இடுகின்றான்.அத்தோடு அவனது நேசத்தை பெற்றுக்கொள்ள இப்படி
வழிசொல்லித் தருகிறது இறைவேதம்.
"அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும், (நல்வழியில்) செலவிடுவார்கள்.மேலும் அவர்கள் கோபத்தை
அடக்கிக் கொள்வார்கள் .மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை அல்லாஹ் நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் 3:134)
யார் பொறுமையை மேற்கொள்ளவும் ,மன்னித்துவிடவும் செய்கிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச் )செயலை
சேர்ந்ததாகும். (அல்குர்ஆன் 42:43)
...எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து அவருடன் சமாதானம் செய்து கொண்டால் அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக)
இருக்கிறது . நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 42:40)
நாமோ இது போன்ற எண்ணற்ற நற்போதனைகளை அடிக்கடி கேட்டு, படித்து ,அறிந்துள்ளவர்களாக இருந்த போதும் இறை வசனங்களை
அலட்சியப்படுத்துபவர்களாகவே செயல்பட்டு வருகிறோம் . இதற்கு மாறாக சிறப்புக்குரிய கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களின் வாழ்வில் காணப்பட்ட
பெருந்தன்மை ,மன்னிக்கும் மாண்பு, இறைவனின் கட்டளைக்கு முற்றிலுமாக கட்டுப்படுதல் போன்ற அதி விசேட பண்புகள் நம் போன்ற
பலஹீனமான இறை விசுவாசிகளுக்கு ஒரு பாடமாக,முன் மாதிரியாக அமைந்துள்ளதைக் காணலாம்.
ஒரு சமயம் அபூபக்கர் (ரலி) அவர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த அன்னாரின் ஏழை உறவினர் ஒருவரின் அவதூறால் பாதிப்புக்குள்ளாகி மனம்
புண்பட்ட நிலையில் "அல்லாஹ்வின் மீது ஆணையாக என் மகள் ஆயிஷா (ரலி) குறித்து மிஸ்தஹ் அவதூறு கூறிய பின்பு ஒரு போதும்
அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்" என்று (சத்தியமிட்டு) கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து "உங்களில் செல்வமும், தயாள குணமும் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ ,ஏழைகளுக்கோ ,அல்லாஹ்வின் பாதையில்
ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ ,(யாதொன்றையும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம் .(அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம்
ஏற்பட்டிருந்தால்) அதை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா ?அல்லாஹ்
மிக்க மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான் . (அல்குர்ஆன் 24:22)
என்கிற இந்த இறை வசனங்கள் அருளப்பட்டதும் ,இறைவனுக்கு அஞ்சியவர்களாக உடனடியாக "அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் எனக்கு
மன்னிப்பு வழங்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு ,அந்த உறவினருக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும்
தொடரலானார்கள் .அவருக்கு (ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன் என்றும் கூறினார்கள்.
சமூக வாழ்வில் இது போன்ற ஒரு சூழலுக்கு நாம் முகங்கொடுக்க நேர்ந்தால் நமது செயற்பாடு எப்படி அமையும் ?அதுவும் நம்மிடம் உதவி பெரும்
ஒருவராக இருந்தால் ..? அதுவரை அவர் நம்மிடம் பெற்று வந்த அத்துனை உதவிகளையும் பட்டியலிட்டு பகிரங்கப் படுத்தி
அவமானப்படுத்தியிருப்போம். கோபம் கொண்டு முகத்திலே விழிக்கக் கூடாது என கூப்பாடு போட்டிருப்போம். இல்லையா ? இதுவே இன்றைய நமது
உறவு முறை பேணும் விதம்.
ஆனால் மென்மையான மனம் கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மன்னிப்பின் மீது ஆசையும் தேட்டமும் கொண்டவர்களாக
தனக்கு ஏற்பட்ட அத்துனை துன்பங்களையும் துயரங்களையும் உதறிவிட்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நாடி அந்த
உறவினரை மன்னித்தார்கள் என்றால், எத்தகைய கட்டுப்பாடு ,பெருந்தன்மை, மன்னிக்கும் மாண்பு பாருங்கள் இது ?
இத்தகைய அழகிய முன்மாதிரியை பின்பற்றி நாமும் பிறரின் தவறுகளை மறந்து மன்னித்து, உறவுகளை மதித்து அரவணைத்து வாழ்வதின்
ஊடாக அல்லாஹ்வின் அருளையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்ள சகல வழிகளிலும் முயற்சிப்போம் !
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ்
கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான்.அல்லாஹ்வுககாக ஒருவர் பணிவு காட்டினால் அவரை உயர்த்தாமல் இருப்பதில்லை. (முஸ்லிம்: 5447)
எந்த ஒரு நேரத்திலும், எந்த ஒரு மனிதனையும் மரணம் நெருங்கிடும் அல்லவா? மனிதனை அவனோடு பிணைக்கப்பட்டுள்ள மரணத்துடன்
இணைத்தே சிந்தியுங்கள். கிடைப்பதற்கரிய பெரும் பேரான அல்லாஹ்வின் மன்னிப்பிலும், சுவர்க்கத்தின் இன்பங்களிலும் ஆசையும், நம்பிக்கையும்
உள்ள எந்த ஒரு இறை விசுவாசியும், உறவுகளைப் பேணி வாழ்வதோடு, தனது தவறுக்காக மன்னிப்புக் கோரிடவும், பிறரின் தவறுகளை
மன்னித்திடவும் இன்ஷா அல்லாஹ் ஒரு போதும் மறுக்கவோ, மறக்கவோ மாட்டார்.
|