விளையாட்டு வினையானது என்பார்கள். அண்மையில் கொழும்புவில் நடந்த காமன்வெல்த் உச்சி மாநாடு அந்த அமைப்பின் கீழ் நடக்கும்
விளையாட்டுப் போட்டிகள் போல யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்துள்ளது. ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்நாடு சட்டசபை
தீர்மானத்தின் மூலம் முன் வைக்கப்பட்ட எந்தக் கோரிக்கைகளும் நிறைவேறவில்லை.
“இந்த சர்வதேச மாநாடு கொழும்புவில் நடந்தால் விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் நடந்த மனித உரிமைகள் குற்றங்களை
செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ராஜபக்ச அரசுக்கு அங்கீகாரம் அளிப்பது போலாகிவிடும்... ஆகையால் அங்கே மகாநாடு நடக்கக் கூடாது...
இன்னும் சொல்லப்போனால், காமன்வெல்த் அமைப்பில் இருந்தே இலங்கை நீக்கி வைக்கப்பட வேண்டும்... இந்தியா பங்கேற்கக் கூடாது...
போர்க் குற்றங்களைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்...”
இவைதான் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளின் கோரிக்கைகளாக தீர்மானங்கள் மூலமாக வலியுறுத்தப்பட்டன.
மாநாடு இலங்கையில்தான் நடந்தது. அடுத்த உச்சி மாநாடு நடத்த வேண்டிய மொரிஷியஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் - அங்கே வாழும்
இலங்கை தமிழர்களின் அழுத்தம் காரணமாக - போகவில்லை. இந்திய பிரமதர் மன்மோகன் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்
தவித்து, கடைசியில் பங்கேற்க வேண்டும் என்ற தனது முடிவை, 2014இல் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு மாற்றி, தனக்குப்
பகரமாக வெளி விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை மாநாட்டிற்கு அனுப்பியதன் மூலம் இந்தியா பலவீனமான நாடு என்பதை உலகுக்குப்
பறைசாற்றியுள்ளார்.
மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு அனுப்பிய கடிதத்தில், தான் போகாததற்கான காரணத்தைக் கூட மன்மோகன் குறிப்பிடாததால், இலங்கை
அவருக்கு உள்ள அரசியல் அழுத்தங்களைப் புரிந்து கொண்டு இந்த விடயத்தைப் பெரிதாக்கவில்லை.
மாறாக, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் மாநாட்டில் பங்கேற்றது மட்டுமில்லாது, யாழ்ப்பாணம் சென்று, அங்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள
முதல் அமைச்சர் விக்னேஷ்வரன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்த அதே நேரத்தில்,
போர் குற்றம் புரிந்தவர்கள் மீது மேலும் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அடுத்து மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கூட்டத்தில் சர்வதேச விசாரணை கோரப்படும் என்று ராஜபக்சவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதை, இதைத்தான் மன்மோகனும் செய்ய நினைத்தார், ஆனால் அரசியல் காரணங்களால் செய்ய முடியவில்லை என்று - அதுவும் வெளி
மண்ணில், புலம்பி இந்தியாவுக்கு இருந்த கொஞ்சநஞ்சம் மானத்தையும் குர்ஷித் வாங்கி உள்ளார்.
“”””இந்த மிரட்டலுக்கு எல்லாம் மசிய மாட்டோம்... நாங்கள் அமைத்த உண்மை அறிதல் கமிஷன் அவற்றைப் பற்றி விசாரணை செய்து
வருகிறது... அதற்கு காலக்கெடு எல்லாம் வைக்க முடியாது...””” என்று ராஜபக்ச கூறினாலும், இது அவருக்கு ஒரு பின்னடைவுதான்.
மாநாட்டு முடிவில் நிறைவேற்றபட்ட - கொழும்பு பிரகடனத்தில், இலங்கைக்கு எதிராக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இறுதிகட்ட
போரில் புலிகள் அமைப்பின் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராகப் பணிபுரிந்த ஷோபா எனும் இசைப் பிரியா, போர் முடிந்த பின்
இராணுவத்தால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை இங்கிலாந்து தொலைகாட்சியான ‘சேனல் 4’ ஒளிபரப்பியது இலங்கைக்கு
பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
முடிவில் யாருக்கு என்ன கிடைத்தது என்பதைக் கூர்ந்து ஆராய்ந்தால், இலங்கைக்கு எதிரான கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும், அதன்
பின்னணியில் உள்ள அரசியல் காரணங்களால், அது எந்த அளவுக்கு நீர்த்துப் போயிருக்கிறது என்பது புரியும்.
முதலில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் அத்துமீறிய செயல் ஆகும். பாகிஸ்தான் தேசிய சட்டசபையில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்றியபோது இந்திய நாடாளுமன்றம் பதிலுக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றவில்லையா? காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் தேசிய சபை
தீர்மானம் நிறைவேற்றினால் அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுதலாகும். தமிழ்நாடு சட்டசபை இலங்கை தமிழர்களுக்காக குரல்
கொடுத்தால் “அது மட்டும் தொப்புள்கொடி உறவா?” என இலங்கை கேட்காதா?
இலங்கையில் அமைதி ஏற்பட, அங்குள்ள தமிழர்கள் சம உரிமையுடன் வாழ, 1987இல் - அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை
அதிபர் ஜெயவர்த்தனேயும் செய்து கொண்டஒப்பந்தத்தைக் காப்பற்ற, 1200 இந்திய இராணுவ வீரர்கள் உயிர்நீத்திருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தின்
மூலம் ஏற்பட்ட மாகாண சபைகள் இன்றும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த சபைகளுக்குக் கொடுக்கப் பட வேண்டிய அதிகாரங்கள்தான்
இன்னும் வழங்கப்படவில்லை.
போர் முடிந்துவிட்டாலும், தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒப்பந்ததின் கீழ் இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13ஆவது
திருத்ததில் கண்டுள்ள அதிகாரப் பரவலாக்கல்தான் அடிப்படையாக அமையப்போகிறது என்பதை கொழும்பு அறியும். ஆகையால், மற்ற நாடுகள் போல
இல்லாமல், இந்தியாவுக்கு இலங்கையின் விவகாரங்களின் அக்கறை காட்ட தார்மீக உரிமை உள்ளது. பிரச்சனை அதுவல்ல. இந்தியாவுக்கு உள்ள
அக்கறையை இலங்கையே ஏற்றுக்கொள்ளும். அதற்காக இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் இந்தப் பிரச்சனையில் நுழைவதை எப்படி ஏற்றுக்கொள்ள
முடியும்?
தமிழக சட்டசபை இந்திய அரசுக்குத்தான் கோரிக்கை வைத்தது எனலாம். பங்களாதேஷ் இந்தியாவின் கோரிக்கை ஏற்று அங்கே உள்ள ஹூஜி
(Harkat-ul-Jihad-al-Islami-HuJI) என்ற தீவிரவாத இயக்கத்தின் தளங்களை எல்லாம் அழித்து, இருபதுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை
டில்லியிடம் ஒப்படைத்தது. பிரதிபலனாக தீஸ்தா நதி பங்கீடு பற்றி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விழைந்தது. பங்களாதேஷ் தலைநகர் டாக்கா
சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜீயின் எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தம் செய்து கொள்ளாமல்
திரும்பினார்.
எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் செய்து வரும் அத்துமீறல்களையடுத்து, ஜம்மு -கஷ்மீர் சட்டசபை - இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கூறியது. அதேபோன்று பிஜேபி கட்சியும் - பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரமதர் நவாஸ் ஷரீஃபை சந்திக்கக் கூடாது என்று
கூறியது. ஆனால் பிரதமர் கேட்கவில்லை.
இந்தியாவின் வெளி விவகாரக் கொள்கை - மாநிலங்களிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு ஏற்ப மாறினால், எந்த அண்டை நாட்டுடனும் நல்லுறுவைப்
பேணிக் காக்க முடியாது.
சட்டசபை தீர்மானத்தில் கண்டுள்ள கோரிக்கைகள் எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராதவை என்பதைத் தெரிந்திருந்தும், ஒரு விவாதம் கூட
இல்லாமல் அது நிறைவேற்றப்பட என்ன காரணம்? அப்படிச் செய்தால்தான் அது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளைப் பிரதபலிப்பதாக வெளி
உலகம் நம்பும. தமிழனாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, “நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை” என்று கூறினால், நான்
தமிழ் இன துரோகி. இது என்ன ஒரு ஃபாசிஸ போக்கு?
1983இல் நடந்த இனக் கொலைக்கு பிறகு, லட்சக்கணக்கான தமிழர்கள் இந்தியாவிலும் மற்றும் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தபொழுது, மொரார்ஜி
தேசாய் ஒருவர்தான், “நாம் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தீவிரவாதத்தை வளர்த்தால், பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை
எதிர்க்க தார்மீக உரிமை இல்லாமல் போய்விடும்” என்று எச்சரித்தார். அவருக்கு யாரும் அன்று கருப்புக் கொடி காட்டவில்லை. அவர் சொல்லை
இந்திரா கேட்கவில்லை. துரதஷ்டவிதமாக அதன் பலனை அவர் மட்டுமல்லாமல் அவர் மகன் ராஜீவ்காந்தியும் அனுபவித்தார்.
ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991இல் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பிறகு, இலங்கை பிரச்சனை எந்த ஒரு தேர்தலிலும் தமிழ்நாட்டில்
எதிரொலிக்கவில்லை. மீண்டும் தலைதூக்கியது மே 2009இல், இலங்கை - வன்னியில் நடந்த இறுதிகட்ட போரின்போதுதான்.
தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல அப்பொழுது நாடகமாடிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர், இப்பொழுது இந்தப்
பிரச்சனையைக் கையில் எடுப்பது 2014இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டுதான். தமிழர்களைக் காக்க பிரபாகரன் இல்லை.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலனுக்காக இந்தப் பிரச்சனையைத் தீவிரமாகக் கையாள்வது, அங்குள்ள சிங்கள் இனவாதிகளின்
கைகளைத்தான் வலுப்படுத்தும்.
அதனால் இன்னொரு 1983 அங்கு ஏற்படும் என்று பொருள் இல்லை. சிங்களவர்கள் கை சுட்டுக் கொண்டவர்கள். அதனாலதான் இறுதிப் போரின்போது
கூட, யாழ்ப்பாண மக்களுக்கோ அல்லது கிழக்கு, கொழும்பு போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இறுதிப் போர் வன்னி பிரதேசத்தில்தான் நடந்தது. அங்குள்ள தமிழ் மக்கள்தான் - முன்னேறி வந்த இலங்கை ராணுவத்துக்கும், அதை எதிர்த்துப்
போராடிய புலிகளுக்கும் இடையே மாட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கில் இறந்தனர்.
இனப் போர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. கடைசி மூன்று ஆண்டுகளில் நடந்த இறுதி யுத்தத்தில் தான் 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி
பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது ஐ.நா. சபை அமைத்த நிபுணர்களின் மதிப்பீடு. அதே குழு, “மனித உரிமை மீறல்கள் இரண்டு பக்கமும்
நடந்துள்ளது... புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றால், இலங்கை அரசும் மக்கள் நிறைந்த பகுதிகள், மருத்துவமனை
போன்ற இடங்களில் விமானம் மூலம் குண்டு வீசியும் மற்றும் ஷெல் அடித்தும் அப்பாவி பொதுமக்கள் சாவுக்குக் காரணமாகி விட்டது” என்று
கூறியுள்ளது.
பிரபாகரன் தனி ஈழத்துக்காக அந்த மண்ணிலியே அந்த மக்களுடனேயே கடைசி வரை போராடி உயிர் நீத்துவிட்டார். அவர் தீவரவாதியா அல்லது
விடுதலைப் போராளியா என்பதை சரித்திரம் தீர்மானிக்கட்டும். அவர் இயக்கமே அவருடன் அழிந்துவிட்டதால், அவர் செய்த குற்றங்களைப் பற்றிப்
பேசிப் பயன் இல்லை.
ஆனால், போரில் வென்ற களிப்பில் இருக்கும் ராஜபக்ச அரசு இப்பொழுதே தனது எதேச்சாதிகாரப் போக்கால் சிங்களர்களுடைய ஆதரவைக் கொஞ்சம்
கொஞ்சமாக இழந்து வருகிறது. கிழக்கில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களும், பெளத்த மத வெறியர்களுடன் ஏற்பட்டு வரும் மோதல்களால்
அதிருப்தியடைந்துள்ளனர். தமிழர்கள் என்றுமே அவரை ஆதரிக்கவில்லை.
தமிழர்களுக்கு சம உரிமை வழங்கி, ஈழப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டால்தான் அங்கே நிரந்தர அமைதி ஏற்படும்.
அதேபோல், அது போர்க் குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிக்காத வரை, இலங்கை அரசு சர்வதேச அரங்கின் பார்வையிலிருந்து தப்ப முடியாது.
அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள மனித உரிமை மாநாட்டில், இலங்கை மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும்.
அப்பொழுது இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.
----------------------------------------------------------------
சு.முராரி - தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தனது அனுபவத்தைத் துவக்கிய இவர், 1984
ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழின் தமிழக செய்தியாளராக சென்னையில் இருந்து சேவை புரியத்துவங்கினார்.
இக்காலக்கட்டத்தில் இலங்கைக்கு பல பயணங்கள் மேற்கொண்ட இவர், தனது பயணங்களின்போது - தமிழ் மற்றும் சிங்கள தலைவர்கள் பலரை
சந்தித்தார். ஈழப் போராட்டம், தாய்லாந்து நாட்டில் நடந்த விடுதலை புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை,
1987 முதல் 2010ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த அனைத்து தேர்தல்கள் ஆகியவற்றை இவர் நேரடியாக செய்திகளை சேகரித்து
ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் DECCAN HERALD பத்திரிகையில் பணிபுரியும்போது பல சர்வதேச நிகழ்ச்சிகள், சார்க் மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ள இவர்,
கஷ்மீர் மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமாக இருந்த 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில், JKLF அமைப்பின் தலைவர் யாஸீன் மாலிக்கை நேர்காணல்
செய்ய கஷ்மீர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு DECCAN HERALD நாளிதழில் இருந்து இவர் ஓய்வுபெற்றார்.
கடந்த ஆண்டு தனது இலங்கை அனுபவத்தை, "The Prabhakaran Saga: The Rise and Fall of an Eelam Warrior" எனும் தலைப்பில்
புத்தகமாக முராரி எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை Sage Publications நிறுவனம் வெளியிட்டது. பரவலாக வரவேற்பு பெற்ற இப்புத்தகத்தை,
தற்போது முராரி தமிழாக்கம் செய்து வருகிறார்.
|