நிலக்கரி பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆனால் வேகமாகக் குறைந்துகொண்டே வரும் எரிசக்தி ஆதாரம். நிலக்கரி சுரங்கப் பணியால் நிலத்திற்கு
ஏற்படும் பாதிப்பு, பரவலான வாழ்வாதாரப் பாதிப்பு, நிலக்கரி திட்டங்கள் உண்டாக்கும் நச்சு கலந்த மாசு மற்றும் நிலக்கரி எரிப்பதால் பூமியின் பருவ
நிலைக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை உலகளவில் பரவலாக கவலையை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள
நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளை மேலோட்டமாகப் பார்க்கும்போதே இந்தப் பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கப் பணிகள் மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள
பாதிப்புகளைப் புரிந்துகொள்ளலாம்.
நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையம் அருகே வசிப்பவர்களிடம் பேசிப்பார்த்தால், சுற்றுவட்டாரத்தில்
கொட்டப்படும் பிளை ஏஷால் உண்டாகும் பாதிப்புகளை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவில் அளப்பரிய நிலக்கரி இருப்பதாக
சொல்லப்படுகிறது. ஆனால், நாம் நிலக்கரியைப் பயன்படுத்தி வரும் வேகத்தைப் பார்க்கும்போது, வெட்டியெடுத்துப் பயன்படுத்தக் கூடிய நிலக்கரியின்
இருப்பு இன்னும் 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. இருப்பினும் நிலக்கரியையே முதன்மை எரிசக்தி ஆதாரமாகப் பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 33 எம்.எம்.டி. (மில்லியன் மெட்ரிக் டன்) ஆக மட்டுமே இருந்தது. 1873இல் தனியார்
சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டது ஊக்கத்தை ஏற்படுத்தியது. 1973இல் 70 எம்.எம்.டி. ஆக இருந்த நிலக்கரி உற்பத்தி, 2012-13இல் 557
எம்.எம்.டி.யாக உயர்ந்தது. பெரும்பாலும் திறந்த வெளிச் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் அனல் மின் நிலைய நிலக்கரி மின் உற்பத்திக்கான
முதன்மையான ஆதாரமானது. சுதந்திரத்தின்போது, நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி (லிக்னைட்டும் சேர்த்து) 756 மெகா வாட்டாக இருந்ததில் இருந்து
2013 இறுதியில், 1,30,221 மெகா வாட்டாக உயர்ந்தது.
2003க்குப் பிறகு...
2003இல் எரிசக்தித் துறை கொண்டு வந்த புதிய மின்சக்தி சட்டம் தனியார் வர்த்தகர்கள் மின் திட்டங்களுக்கான கதவை அகலமாகத் திறந்தது.
மாநிலங்கள், இந்தத் திட்டங்களை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு, நில கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் பற்றிக்
கவலைப்படாமல் குறைந்த விலையில் பெரிய அளவில் நிலங்களை ஒடுக்கிக் கொடுக்கத் துவங்கின. இது நிலக்கரிக்கான செயற்கைத் தேவையை
உண்டாக்கியது. இதன் விளைவாக நிலக்கரி அமைச்சகம் இஷ்டம் போல தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய
வழிவகுத்தது. பெரும்பாலான நேரங்களில் இந்த ஒதுக்கீடு கேள்விக்குரிய முறையிலேயே இருந்தன. தனியார் நிறுவனங்களின் நெருக்கடி காரணமாக
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் (எம்.ஓ.இ.எஃப்.) சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, துரிதமாக
நிலக்கரி திட்டங்கள் மற்றும் மின் திட்டங்களுக்கு அனுமதி அளித்தது. இந்த திட்டங்களுக்கு தாமதமாக அனுமதி வழங்கப்படுவதாகக் கருதப்பட்டதற்கு
மாறாக இவை நடைபெற்றன. கீழே உள்ள புள்ளிவிவரங்கள் இதை எடுத்துரைக்கும்.
மிகைப்படுத்தப்பட்ட நிலக்கரி தேவை...
2004 முதல் 12 வரை நிலக்கரி அமைச்சகம் தனியார் நிறுவனங்களுக்கு 160 நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கியது. இதே காலத்தில்
எம்.ஓ.இ.எஃப். 181 திட்டங்களுக்கு அனுமதி அளித்தது. (நிலுவையில் இருந்தவை மற்றும் புதியவை 2004க்குப் பிறகு திட்டங்களுக்கான அனுமதி
விகிதம் 90-95 சதவீதமாக இருந்தது. சராசரி அனுமதி காலம் 11 மாதங்கள் முதல் 1.5 ஆண்டாக இருந்தன.
புதிய மின் திட்டங்களைப் பொருத்த வரை புனேவைச் சேர்ந்த தொண்டு அமைப்பான பிரயாஸ் 2011 ஆகஸ்ட்டில் சுற்றுச்சூழல் அனுமதி நிலையை
ஆய்வு செய்தது. (பிரயாஸ்; உருவாகும் அனல் மின் நிலையங்கள் - பாதிப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டியவை). ஏற்கனவே உள்ள 192,193
மெகாவாட் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலான மின் திட்டங்களோடு 508,907 மெகாவாட் அளவிலான திட்டங்கள் அனுமதியளிக்கப்பட்டு
அல்லது அளிக்கப்படும் நிலையில் இருப்பதாக ஆய்வு தெரிவித்தது. அதாவது இந்தத் திட்டங்கள் அடுத்த 4-5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டால்,
பெரும்பாலும் நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களின் திறன் 701,820 மெகாவாட்டாக இருக்கும். இது, திட்டக் கமிஷனால் ஒருங்கிணைந்த
எரிசக்திக் கொள்கை அறிக்கையில் (ஐ.பி.இ.) 2032இல் இருக்கும் என்று கணிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
நச்சு உற்பத்திக்கான திட்டம்
பிரயாஸ் பல சுவாரஸ்யமான ஆனால் கவலை தரும் போக்குகளைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்தத் திட்டங்களில் 73 சதவீதத் திட்டங்கள் தனியாருடையவை. இவற்றில் 10 வர்த்தகக் குழுமங்களுக்கு 160,000 மெகாவாட் உரித்தாக
இருக்கின்றன.
இந்தத் திட்டங்களின் பூகோள அமைவிடம் கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள 626 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் மட்டும்
இந்த மின் திட்டங்களில் பாதிக்கு மேல் அமையவுள்ளன. அவற்றின் திறன் 384,421 மெகாவாட் ஆகும். இவற்றில் 83,425 மெகாவாட் 8 தொழில்
மையங்களில் அமையவுள்ளன. இவை மோசமாக மாசுபடுத்தப்ப்ட பகுதியாகக் கருதப்படுகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்த வரை புதிய நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள் அதிகம் அமைய உள்ள மாவட்டங்களில் தூத்துக்குடி, 16,460 மெகாவாட்,
நாகப்பட்டினம் 14.701 மெகாவாட் மற்றும் கடலூர் 10,140 மெகாவாட் - கீழிருந்து 9,12,15 ஆகிய இடங்களில் உள்ளன. அதாவது நாட்டில் நச்சுப்
பகுதியாக உருவாக உள்ள 30 மாவட்டங்கள் பட்டியலில் தமிழக மாவட்டங்கள் முதல் பாதியில் இருக்கின்றன. நீங்கள் பார்வையிட்ட செய்யூர்
யு.எம்.பி.பி. அவற்றில் ஒன்றாக இருக்கும்.
இறக்குமதி செய்த அல்லது இங்கேயே உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியில் இருந்து வரும் பிளை ஆஷ் ஆர்சனிக், கேடியம், சல்பர் மற்றும் மெர்குரி
ஆகிய கனமான உலோகங்கள் (டவுன் டு எர்த், அக்டோபர் 16-31, 2012) மற்றும் யுரேனியம், தோரியம், பொட்டாஷியம் போன்ற கதிரியக்க
ஐசோடோப்களை (மகாராஷ்டிராவின் சந்தர்புர் சூப்பர் தெர்மல் பவர் ஸ்டேஷனின் பிளை ஆஷில் இருந்து வரும் கதிரியக்க பொருட்கள்
வகைப்படுத்தல், ராஜீவ் மேனன், பி.ராஜா, தீபக் மால்பே, கே.எஸ்.வி.சுப்பிரமணியம் மற்றும் வி.பலராம், கரண்ட் சயின்ஸ், வால் 1 எண் 12.25
ஜூன் 2011) கொண்டுள்ளன.
அப்சர்வர் ஆய்வுப்படி, (யுரேனியம் கழிவால் பாதிக்கப்பட்ட இந்திய தலைமுறை, கெத்தின் சேம்பர்லின், தி அப்சர்வர், ஆகஸ்ட் 30, 2009) பஞ்சாபில்
குறைகளுடன் பிறந்த குழந்தைகள் அதிகரித்தது மற்றும் நிலக்கரி மின் நிலையங்களிலிருந்து இருந்து வரும் மாசுக்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய
வந்துள்ளது. மேலு குறிப்பிட்டுள்ள கட்டுரை, உத்தர பிரதேசத்தின் சிங்ரவுலி பகுதியில் நிலக்கரி சார்ந்த மின் நிலையங்கள் அருகே வசிக்கும்
நபர்களின் இரத்தத்தில், பாதுகாப்பான அளவை விட கூடுதலாக மெர்குரி இருப்பது தெரிய வருகிறது. எம்.ஓ.இ.எஃப். அல்லது வேறு எந்த அரசு
அமைப்பேனும் இந்த கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு, மின் நிலையங்கள் அருகே வசிப்பவர்களின் ஆரோக்கியம் காக்க நடவடிக்கை
எடுக்கவில்லை மற்றும் நிலக்கரி சார்ந்த மின் நிலையங்களை விரிவாக்குவது பற்றி மறு பரிசீலனை செய்யவில்லை என்பது கவலையளிக்கிறது.
நிலக்கரியை மின் நிலையங்களுக்குப் பயன்படுத்துவது அங்குள்ள மக்களை மெல்லக் கொல்லும் நச்சுக்கு இலக்காகுவது என்பதை அரசு புரிந்துகொள்ள
வேண்டும்.
பிளை ஆஷில் இருந்து வெளியாகும் நச்சுக்கள் உணவுகளில் ஊடுருவுகிறது. இதனால் ஆரோக்கியம் பாதிக்கிறது. சுகாதார சீர்கேட்டிற்கான முக்கிய
காரணம் கவனிக்கப்படாமல் இருக்கும்போது, பொது சுகாதாரத்திற்காக அரசு செலவிடும் தொகை பயனற்றதாகிவிடுகிறது.
மெர்க்குரி தொடர்பான யு.என்.இ.பி. உடன்படிக்கை (மினாமதா உடன்படிக்கை) 2013 அக்டோபரில் 96 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற
நாடுகள் போலவே இந்தியாவிலும் மெர்குரி நச்சால் பாதிப்பு இருந்தாலும் இந்தியா இன்னும் இந்த உடன்படிக்கையை ஏற்கவில்லை.
வலுவில்லாத சுற்றுச்சூழல் பாதிப்பு கண்டறியும் முறைகள்...
எம்.ஓ.இ.எஃப்.பின் தற்போதைய சுற்றுச்சூழல் பாதிப்பைக் கண்டறியும் நடைமுறைகள் மெர்குரி மற்றும் பிளை ஆஷில் உள்ள கதிரியக்கப்
பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைக் கருத்தில் கொள்ள தவறுகிறது. இது தொடர்பான ஆய்வறிக்கைகள் அமைச்சகத்திடம் இருந்தும்
பயனில்லை. தொழில் மையங்களினால் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்புகளை, குறிப்பாக நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் எரிசக்தி மாசு
மையங்களால் ஏற்படும் பாதிப்புகளை இந்த நடைமுறைகள் தடுக்கப் போதுமானவை அல்ல. தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்.ஜி.டி.) சில
வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளைப் பிறப்பித்து, இதுகுறித்து கவனிக்குமாறு எம்.ஓ.இ.எஃப்.ஐ எச்சரித்துள்ளது என்றாலும், எந்த பதில்
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
100 சதவீதம் மாசுகளை சரிசெய்யும் தொழில்நுட்பம் இன்று இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கட்டுப்பாட்டு அமைப்புகள், மின்
நிலையங்கள் அருகே உள்ள பகுதிகளில் மாசு அளவு பாதுகாப்பான வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு சுதந்திரமானவையாக இல்லை
என்பது இந்த நிலையை மேலும் மோசமாக்குகிறது.
நிலக்கரியின் இறுதிப் பயன்பாடு மக்களின் வாழ்வில் இத்தகைய பரவலான பாதிப்பை ஏற்படுத்தினால், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் மின் உற்பத்திச்
செயல்பாடுகள் பல குடும்பங்களை இடம்பெயரச் செய்து, விவசாய மற்றும் வனப்பகுதி நிலத்தைப் பாழாக்கி, உள்ளூர் சுற்றுச்சூழலை அழிக்கிறது.
கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளிலுள்ள நிலக்கரி சுரங்கங்கள் மனித பாதிப்பின் மிக மோசமான சித்திரத்தைத் தருகிறது. வழக்கமான அணுகுமுறை
இங்கு பலன் தராது.
நிலக்கரிச் சுரங்கங்கள் நிலையானவையா?
வளர்ச்சி வாதத்தை முன்வைப்பவர்கள், நிலக்கரி சார்ந்த மின் நிலையத் திட்டங்களை விரிவாக்குவதை ஆதரிக்கிறார்கள். இந்தியா நிலக்கரி வளம்
மிக்க நாடுகளில் ஒன்றாக இருப்பதால், மின் உற்பத்திக்காக இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால், நிலக்கரி வளம்
அளவில்லாமல் இருக்கிறது என்பதே தவறானது. அதிக நிலக்கரி இருப்பு நாடுகளில் இந்தியா ஒன்றாக இருப்பது உண்மை என்றாலும் தற்போதைய
பயன்பாட்டு வேகத்தில் இது அதிக காலம் நீடிக்காது.
சி.ஐ.எல்.லின் துணை அமைப்பான நிலக்கரிச் சுரங்கம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்புக் கழகம் (சி.எம்.பி.டி.ஐ.) ஐ.நா. வரையறையின்படி
(யு.என்.எப்.சி.) இந்தியாவில் நிலக்கரியின் இருப்பு 18.2 பில்லியன் மெட்ரிக் டன் என மதிப்பிட்டுள்ளது. யு.என்.எப்.சி. நிலக்கரியை எடுக்க ஆகும்
செலவின் அடிப்படையில் தொழில்நுட்ப வரையறை மற்றும் தொழில்நுட்பப் பொருளாதார வரையறைகளைக் கருத்தில் கொள்கிறது. அடர்ந்த காட்டுப்
பகுதியின் கீழே மற்றும் அரசியல் சாசன ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட பழங்குடியின பகுதிகளின் கீழேயுள்ள எடுக்க முடியாத நிலக்கரியைக் கணக்கில்
கொண்டால் இந்த எண்ணிக்கை மேலும் குறையும்.
இருப்பினும் 18.2 பில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துப் பயன்படுத்த முடியும் என்று வைத்துக்கொண்டாலும் கூட, திட்டக் கமிஷனின்
ஒருங்கிணைந்த எரிசக்திக் கொள்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளபடி 2032 வாக்கில் ஆண்டுக்கு 1200 எம்.எம்.டி. நிலக்கரி தேவைப்பட்டால்,
மின்னுற்பத்திக்கான சராசரி நிலக்கரி தேவையின்படி, இது 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. வரும் ஆண்டுகளில் மேலும் சில நிலக்கரிச்
சுரங்கங்கள் கண்டறியப்படுவதாக வைத்துக்கொண்டாலும் கூட, ஏற்கனவே உள்ள சுரங்கங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில்,
அதனால் மேலும் 5 ஆண்டுகள் அதிகமாகலாம். எனவே, இந்தியாவின் நிலக்கரி இருப்பு 20 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்காது எனும் கசப்பான
உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், தனியார் நிறுவன தூண்டுதலால் அடர்ந்த காடுகளின்
கீழுள்ள பகுதிகளில் கூட வளர்ச்சி எனும் பெயரால் சென்றடைந்துள்ளன. நிலக்கரி எடுக்கும் செலவு மற்றும் உயிரிச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு
பற்றிய அறிவியல்பூர்வமான ஆய்வு எதுவும் இல்லாமலேயே இவை மேற்கொள்ளப்படுகின்றன.
புதிய நிலக்கரி மின் திட்டங்களை நியாயப்படுத்தும் “வளர்ச்சி” வாதம்
தொழில்நுட்ப நோக்கில் நிலக்கரி மற்றும் வாயு அடிப்படையிலான மின் திட்டங்கள் மற்றும் அணு மின் திட்டங்கள் சீரான மின் தேவையைப் பூர்த்தி
செய்யக்கூடியவை. நீர் மின் திட்டங்கள் குறிப்பிட்ட பருவத்தில் தேவையை நிறைவேற்றுபவை. கடந்த ஆண்டுகளில் அனல் மின் நிலையங்களை
அமைப்பது சுலபமாகியிருப்பதாலும், ஒருபக்கச் சார்புள்ள ஒப்பந்தங்கள் மூலம் தனியாருக்கு அதிக லாபம் கிடைப்பதாலும் அனல் மின் நிலையங்கள்
அதிகரித்துள்ளன. நீர் மின் நிலையங்களின் பங்கு 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. இத்தகைய வேறுபாடு மற்றும வினியோக அமைப்பில் போதிய
முதலீடு இல்லாததால் ஏற்படும் தொழில்நுட்ப இழப்புகளால் நுகர்வோருக்கான மின் சக்தியின் விலை கணிசமாக அதிகரித்துவிடுகிறது. மேலும்
நம்முடைய மின் சாதனங்களின் செயல்திறனும் மோசமாக உள்ளது. இத்தகைய செயல்பாட்டுக் குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுத்து
இவற்றை மேம்படுத்த வேண்டும். ஆனால் இந்தியாவில் மின் திட்டமிடல் என்பது தேவை சார்ந்ததாகவே இருக்கிறது. செயல்திறன் மேம்பாட்டிற்கான
முதலீட்டுக்கு பதிலாக புதிய மின் நிலையங்களை அமைப்பதாகவே இந்தியாவின் அணுகுமுறை இருக்கிறது.
திட்டக் கமிஷனின் ஐ.இ.பி. அறிக்கையின் படி, 2032இல் மொத்த மின் உற்பத்தித் தேவை 778,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வினியோகம் மற்றும் பகிர்மானத்தில் செயல்திறனை மேம்படுத்துவது, மறுசுழற்சி ஆற்றலை ஓரளவேனும் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குவது
ஆகியவற்றின் மூலம் இந்தத் தேவையை எதிர்கொள்ள முடியும். புதிய வழிகளுடன் ஏற்கனவே உள்ள நிலக்கரி வாயிலாக இதில் 269,997 மெகாவாட்
அளவையும், வாயு மூலம் 69,815 மெகாவாட்டையும், 63,060 மெகாவாட்டை அணுமின் நிலையம் மூலமும் பெற இயலும் என
மதிப்பிடப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் வாயு 15 ஆண்டுகள் நீடிக்கும் என்பதையும், அணுமின் நிலையம் செலவு மிக்கது மற்றும் பாதுகாப்பில்லாதது
என்பதையும் கருத்தில் கொண்டால், இது நீடிக்கக்கூடியது அல்ல என்று புரியும். இந்த வாய்ப்புகளின் சாத்தியமின்மை ஒருபுறம் இருக்க, நிலக்கரிச்
சுரங்கம் மற்றும் மின் திட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள், பிளை ஆஷ் மூலமான நச்சுக்களால் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பையும்
அரசு அலட்சியப்படுத்த முடியாது.
மரபு சார்ந்த எரிசக்தி ஆதாரங்களைப் பொருத்த வரை, நாம் ஒரு வரம்பை எட்டும் நிலைக்கு வந்துவிட்டோம் எனும் கசப்பான உண்மையை
ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இது ஒரு தவிர்க்க முடியாத - கடினமான யதார்த்தமாகும். இனிமேல் எரிசக்தி திட்டம் வகுப்பவர்கள்
தற்போதுள்ள குறைவான எரிசக்தி ஆதாரங்களை, இப்போது செய்வது போல கபளீகரம் செய்வதற்கு பதிலாக பாதுகாக்கவே முற்பட வேண்டும்.
சரியான திட்டமிடல் என்பது புதிய மெகாவாட்டுக்கு பதிலாக சேமிக்கப்பட்ட மெகாவாட்டாக இருக்க வேண்டும். அதாவது நெகாவாட்டாக இருக்க
வேண்டும். இது அமோரி லோவின்ஸ் என்பவர் உருவாக்கிய சொல்லாடல். (அமோரி லோவின்ஸ் நூல், சாப்ட் எனர்ஜி பாத்ஸ் - 1977). மறுசுழற்சி
சார்ந்த பரவலான வினியோகத்துக்கு மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. தேவை சார்ந்த மின் உற்பத்தியின் காலம் முடிந்துவிட்டது. இதை
எவ்வளவு விரைவாகப் புரிந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.
வளர்ச்சிக்கான வரையறைகள்
1972, 1974ஆம் ஆண்டுகளில் கிளப் ஆஃப் ரோம் மேற்கொண்ட ‘வளர்ச்சிக்கான வரையறை’, ‘திருப்புமுனையில் மனிதகுலம்’ ஆகிய ஆய்வுகள்,
பூமியின் வளங்களை அலட்சியமான முறையில் சுரண்டுவதைத் தொடர்ந்தால் இந்த நூற்றாண்டுக்குள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என உலகத்
தலைவர்களை எச்சரித்தன. புதிய தொழில்நுட்பம் இவற்றைத் தரைமட்டமாக்கும் எனக்கூறி தலைவர்கள் இவற்றைப் புறக்கணித்தனர். நிலக்கரி
எடுப்பதால் உண்டாகும் புவி வெப்பமாதல் எனும் புதிய நிதர்சனத்தை கடந்த 20 ஆண்டுகளில் உலகம் அறிந்துகொண்டுள்ளது. மேலும் ஓசோன்
மண்டலக் குறைவு, கடல் அமிலத்தன்மை கொள்வது, உயிரிச்சூழல் பாதிப்பு, கட்டுப்பாடில்லாத நச்சுப் பெருக்கம், நிலம், நீர், உயிர் காக்கும்
நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சுழற்சி மீதான நெருக்கடி ஆகியவற்றால் வளர்ச்சியின் வரம்பையும் எதிர்கொள்கிறது.
வளத்தை அதிகமாகப் பயன்படுத்தும் தற்போதைய பொருளாதார வளர்ச்சி நீடிக்கக் கூடியதல்ல. நாம் வளர்ச்சியை மறு வரையறை செய்ய வேண்டும்.
அது ஆபத்தில்லாமல் நீடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றால், மக்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------
சர்மா - 1965 ம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் IAS அதிகாரியாக தனது பணியை துவக்கினார்.
1994-95 களில் - தெலுகு தேச கட்சி, எந்த போட்டியும் இல்லாமல் சில தொழில் நிறுவனங்களுக்கு மின்உற்பத்தி திட்டங்களை வழங்கிட முயற்சித்தப்போது அதனை எதிர்த்து, விடுமுறை சென்றார். பின்னர் - தனது பணியினை மத்திய அரசாங்க சேவைக்கு மாற்றிக்கொண்டார்.
நேர்மையாக பணியாற்றியமைக்காக தனது 35 ஆண்டுகால பணியனுபவதில் இவர் 26 முறை மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2010ம் ஆண்டு - நிதி துறை செயலாளராக இருந்தப்போது வாஜ்பாய் அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடினால், ஓர் ஆண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையில் பதவி விலகி, முற்கூட்டிய ஓய்வு பெற்றார். அதன் பிறகு, நாடு முழுவதும் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், குறிப்பாக நிலக்கரியினால் ஏற்படும் மாசு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
|