ராஜீவ் காந்தியைக் கொன்றது எப்படி? ஏன்?
அது மே மாதம் 21ஆம் திகதி 1991ஆம் வருடம், மாலை மங்கிய நேரம். சென்னை பாரிமுனை பஸ் நிலையத்திலிருந்து அந்தக் குழு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி, பல்லவன் பஸ்ஸில் புறப்பட்டது. ஹரிபாபு ஏற்கனவே கையில் பூம்புகாரில் வாங்கப்பட்ட சந்தன மாலையோடு காத்து நின்றார். சுமார் 8 மணியளவில் அங்கு சென்று சேர்ந்தனர் இரு ஆண்களும், மூன்று பெண்களும்.
சிவராசன் ஒரு பத்திரிக்கை நிரூபர் போன்று வெள்ளை குர்தா ஆடை உடுத்தி, தோளில் ஒரு பை, கையில் எழுதுவதற்கு ஒரு நோட்டு என்று தோற்றமளித்தார். தானு பச்சை மஞ்சள் நிறத்தில் ஒரு தொள தொள சல்வார் கமீசில் இருந்தாள். பஸ்ஸில் இருந்தபடியே மெதுவாக தனது உடுப்பைத் தொட்டுப் பார்க்கும்படி புன்முறுவலுடன் நளினியிடம் கூற, தடவிப் பார்த்த நளினி அதிர்ச்சியடைந்தாள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் பஸ்ஸில் எதுவும் பேசவில்லை.
ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியின் மைதானத்திற்குள் இவர்கள் நுழையும்போது அதிகமாக கூட்டமில்லை. மேடையின் அருகில் உட்கார முயன்றனர். பெண் காவலர் அனுஷ்யா குமாரி விபரம் கேட்க, ஹரிபாபு தான் பத்திரிகை புகைப்படக்காரர் என்றும், தானு ராஜீவ்காந்திக்கு மாலை போடுவதைப் படம் பிடிக்க வந்துள்ளதாகவும் கூறினார்.
"ராஜீவ்காந்தி 10 மணியளவில்தான் வருவார்... ஆகவே நீங்கள் சற்று பிந்தி வரலாம்” என்று அனுஷ்யா சொல்ல, மெதுவாக மூன்று பெண்களும் வெளியேறினார்கள். நளினிக்கும், தானுவுக்கும் உதவியாக வந்தது சுபா. சிவராசன் பத்திரிகை நிருபர்கள் பக்கம் சென்றுவிட்டார். இவர்களுக்கிடையே தொடர்பு இல்லை.
சற்று நேரம் சென்றதும், அங்கிருந்த காங்கிரஸ் பெண் ஏற்பாட்டாளர் லதா கண்ணனிடம் தாங்கள் ராஜீவ் காந்திக்கு மாலையிட வந்துள்ளதாகக் கூறி, ஏற்பாடு செய்து தரும்படி நளினி கேட்டார். அவர் அனுஷ்யாவிடம் சொல்ல, கையில் மாலையை வைத்திருந்த தானுவை ஓரிடத்தில் உட்காரச் சொன்னார் அவர். அவள் அமர்ந்தாள். மற்ற இரு பெண்களும் மவுனமாக சற்று தொலைவில் சென்று பாதுகாப்பாக அமர்ந்தனர்.
ஏற்கனவே இந்தக் குழு அப்பிரதேச காங்கிரஸ் அரசியலாளரான திருமதி மரகதம் சந்திரசேகருடன், சாந்தன் மாறலாக ஒரு ‘காங்கிரஸ் உறவை’ உண்டாக்கியிருந்தது. சாந்தன் தனியாக வந்து, காங்கிரஸ் ஆதரவாளர்களோடு கலந்து நின்றார். சிரித்த முகத்தோடு அவர் ராஜீவ் காந்தியை வரவேற்பதைப் புகைப்படத்தில் காணலாம்.
இலங்கை இனப்பிரச்சினையில் ராஜீவ் காந்தி உண்டாக்கிய ‘இலங்கை - இந்தியா உடன்படிக்கை 1987’ஐ பிரபாகரன் ஏற்கவில்லை. இலங்கைப் போராளிகள் தமிழ்நாட்டை யுத்த பூமியாக்குவதை வட இந்திய அரசியல் தலைவர்கள் தடுக்க விரும்பினர். இந்த துப்பாக்கி கலாச்சாரம் நாளை தமிழகத்தை ஒரு சீக்கியர்களின் காலிஸ்தான் போல, தனிநாடு கோரிக்கைக்கு வழியமைத்து - இந்தியாவை மீண்டும் துண்டாடி விடும் என்று அஞ்சினர்.
ஆகவே - இந்த இளம் தலைவர், நிலைமை கட்டு மீறிப் போகுமுன் ஒரு சுமூக நிலையை உண்டாக்கிவிட வேண்டும் என்று விரும்பினார். அதற்காக போராட்டக் குழுவினர்களுக்கு நிறைய பண உதவிகளையும், வேறு சலுகைகளையும் தருவதாக வாக்களித்தார்.
‘என் வழி தனி வழி’
ஆனால், பிரபாகரன் மட்டும் ராஜீவ் காந்தி உண்டாக்கிய ‘இலங்கை - இந்தியா உடன்படிக்கை 1987’ஐ ஏற்கவில்லை. ‘என் வழி தனி வழி’ - தமிழ் ஈழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டேன் என்றார். அதாவது, ‘அடைந்தால் மகாதேவி - இல்லையேல் மரணதேவி’ என்று வீரப்பா பாணியில் மகாதேவி பட வசனம் பேசி செயல்பட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் அதையே நிரூபித்தார்.
அவரை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒப்பந்தத்தை ஆதரிக்காவிட்டாலும், எதிர்க்க வேண்டாம் என்று அவருக்குக் கூறப்பட்டது. அதற்காக அவருக்கு பெரிய அளவில் பணமும், இயக்கத்தின் தற்காப்பு இராணுவ பலத்திற்காக ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன.
ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தி தான் அணியும் கவச ஆடை - நெஞ்சில் குண்டு துளையாதபடியானது - அதையும் பிரபாகரனுக்குக் கொடுத்தார். கொடுத்ததையெல்லாம் பிரபாகரன் வாங்கிக் கொண்டார். கொடுத்ததெல்லாம் கொடுத்தான். யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான், இல்லை ஊருக்ககாக கொடுத்தான். ஆம் தமிழ் மக்களுக்காகக் கொடுத்தான். அன்று அவனுக்காகத் துடித்த தமிழகம் இன்று அவனைக் கொன்றவர்களுக்காகத் துடிப்பது ஏன்?
பத்மநாபா கொலையால், தமிழக - இந்திய அரசியலில் உண்டான கொந்தளிப்பை - விடுதலைப் புலிகளின் மீதான எதிர்ப்பை பிரபாகரன் அவதானித்தே வந்தார். ஆனால் சில நாடகளில் இது அடங்கிவிடும்... நமக்கு ஆதரவான சூழல் மீண்டும் உருவாகும் என்பது அவரது எண்ணம். தனது அடுத்த இலக்கை நோக்கி எப்படிச் செல்வது என்பதில் அவர் திட்டம் வகுக்கலானார்.
1990 அக்டோபர் மாதவாக்கில், மத்தியில் இருந்த வி.பி.சிங் அரசு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து ஆடிக்கொண்டு இருந்து ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற நிலைக்கு வந்தது. இந்த ஆட்சி முடிவுற்றால் என்னென்ன நடக்கும் என்று யூகித்த புலி இரை தேடி மெதுவாக குகையை விட்டு வெளியே வந்தது. இந்தப் புலி வேட்டைக்கு - அதாவது புலியை வேட்டையாடுவது அல்ல, புலி வேட்டையாடுவதற்கு "தமிழ்நாட்டில் கல்யாணம்” என்று பெயர் சூட்டப்பட்டது.
1990 டிசம்பரில், தற்கொலைப் படையான - கரும் பெண் புலி கூட்டத்திலிருந்து மூன்று பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர். தானு, சுபா, அதிரை ஆகியோரே அவர்கள். தானு என்ற காயத்ரி கறுப்பாக - கண்ணாடி அணிந்த - கவர்ச்சியில்லாத - குள்ளமான பெண். தமிழ்நாட்டின் சாதாரணமான நடுத்தர குடும்பத்து இளம்பெண் போன்ற தோற்றம் கொண்டவள் அவள்.
தானுவின முயற்சி தோல்வியடைந்தால், அவளுக்குப் பகரமாக செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டவள் சுபா என்ற ஷாலினி. சகல விதத்திலும் தானுவை விட பார்வையில் கூடியவள். பின்பு சிவராசனோடு பெங்களூரில் தற்கொலை செய்தவள் இவள்.
அடுத்தவள் 18 வயது அதிரை. இவள் மெலிந்த தோற்றம், சற்று வெள்ளைத் தோல்காரி. பார்ப்பதற்கு வடநாட்டுப் பெண் போன்று இருப்பாள். ஆகவே, தமிழ்நாட்டில் “கல்யாணம்” தோல்வியடைந்தால், டெல்லியில் கல்யாணம் செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட “மணப்பெண்” அவள். ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக வந்த அவளது இயற்பெயர் சோனியா. என்ன பொருத்தம்? விந்தையான உலகம்.
கல்யாணத்தை மங்களகரமாக நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு சிவராசனுக்குக் கொடுக்கப்பட்டது. யாரும் பிடிபடாதவாறு பத்மநாபா கொலையை வெற்றிகரமாக முடித்ததால், அவரது தகுதி இப்போது கூடியிருந்தது. அது மட்டுமல்ல. சிவராசன் சரளமாக ஆங்கிலத்தோடு தமிழ்நாட்டு உச்சரிப்பில் தமிழும், தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடமும் கொஞ்சம் பேசக்கூடியவர். ஹிந்தியும் ஓரளவு தெரியும். உயரம் 5 அடி 4 அங்குலம் மட்டுமே.
1987இல் யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தோடு நடந்த ஒரு மோதலில் இடது கண்ணை இழந்ததால், கண்ணாடிக் கண் பொருத்தப்பட்டிருக்கும் அவர் 'ஒற்றைக் கண் சிவராசன்' என்றே அழைக்கப்பட்டார். பத்மநாபா கொலை போல எந்தத் தடயமும் விடுதலைப் புலிகள் பக்கம் வராதவாறு காரியத்தை முடிக்க வேண்டும் என்பது சிவராசனுக்கான - புலித்தலைவரின் கட்டளை.
"கல்யாண குழு"
தமிழ்நாட்டு “கல்யாண”த்திற்கென 4 பேர் கொண்ட குழுவை புலித்தலைவர் அமைத்தார். இதற்காக, சென்னையில் வசித்த பேபி சுப்பிரமணியமும், முத்து ராஜாவும் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டனர். வெடிபொருட்களைக் கையாள்வதில் விற்பன்னரான முருகனும் அதில் சேர்க்கப்பட்டார். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சில கடமைகள் கொடுக்கப்பட்டன.
பேபி சுப்பிரமணியத்திற்கு, வரக்கூடிய “மணப்பெண்ணும்” உறவினர்களும், “கல்யாண”த்திற்கு முன்பும், பின்பும் தங்கக் கூடிய ஜாகை வசதி செய்து தரும் பொறுப்பு தரப்பட்டது. முத்து ராஜாவிற்கு முறையாக யாழ்ப்பாணத்தோடு செய்தி பரிமாற்றம் செய்வதற்காக தொலை தொடர்பு வசதிகள் மற்றும் முக்கிய - அவசர செய்திகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக ‘புறாக்களை’ உருவாக்கவும், பயிற்றுவிக்கவும் பொறுப்பளிக்கப்பட்டது.
வெடிபொருள் மன்னனான முருகனுக்கு, பேபி சுப்பிரமணியனும், முத்து ராஜாவும் தங்கள் பணியைச் செவ்வனே செய்து முடித்து யாழ்ப்பாணம் திரும்பியதும், அதனைத் தன்வசம் பொறுப்பெடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டது.
அதே வேளை, இப்போது திமுக அரசு கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வந்ததானது, விடுதலைப் புலிகளுக்கு சற்று பின்னடைவைத் தந்துள்ளதால், மிகவும் கவனமாக செயல்படும்படி குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது. சிவராசனுக்கு, அனைவருக்கும் வேண்டிய பணத்தை பட்டுவாடா செய்யும் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அதற்காக 5 கிலோ தங்கம் கொண்டு வரப்பட்டு, 19.6 லட்சம் ரூபாய்க்கு அது விற்கப்பட்டது.
சுபா புகைப்பட நிலையம்
சென்னையில் முதன்முதலாக இவர்களின் வலையில் விழுந்தது நளினியின் சகோதரன் பாக்கியநாதன்.
இவர் திராவிடர் கழக அனுதாபி. சுபா சுந்தரம் நடத்திய சுபா புகைப்பட நிலையத்திற்கு திராவிடர் கழக இளைஞர்களும், சில பகுத்தறிவாளர்களும் வந்து போவது வழக்கம். இதை ஒரு விடுதலைப் புலிகளின் குகை என்றும் சொல்லலாம். பிரபாகரனும், சுந்தரத்திற்கு தொலைபேசியில் பேசி முத்துராஜாவிற்கு உதவும்படி கேட்டார்.
அரசியல் சஞ்சிகை ஒன்றைத் துவக்கி நடத்த வேண்டும் என்பது பாக்கியநாதனின் நெடுநாள் அவா. ஆனால், அவர் குடும்பமோ கடனில் தத்தளித்தது. பாக்கியநாதன் நளினி பணிபுரியும் அலுவலகத்திற்குத் தேவையான ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சொற்ப வருமானத்தைத் தேடிக்கொள்வார். தாயார் கல்யாணி மருத்துவமனை தாதியாகப் பணிபுரிந்தார். இவர்கள் வசித்த இடம் மருத்துவமனை தந்தது.
திடீரென மருத்துவமனை இடத்தைக் காலி பண்ணித் தருமாறு கேட்டபோது, குடும்பம் தடுமாறியது. சென்னையில் வேறு இடம் எடுக்க போதிய பணம் இல்லை. செய்வதறியாது திகைத்த நிலையில் இருந்தபோது, பேபி சுப்பிரமணியம் மெதுவாக பாக்கியநாதனை நெருங்கி, தனது பதிப்பகத்தை இயந்திரங்களுடன் விற்க விரும்புவதாகக் கூறினார்.
பாக்கியநாதனோ தன்னிடம் பணமில்லை என்றும், தவணை முறையில் தந்தால் தான் எடுப்பதாகவும் கூறினார். சுப்பிரமணியமும், “அதற்கென்ன? மாதம் 5000 வீதம் கொடுங்கள்” என்று கூறி, தனது பதிப்பகத்தை மலிவு விலைக்கு - ஆடித் தள்ளுபடி போல கொடுத்து, குடும்பத்தாரும் அங்கு வசிக்க வசதி செய்து கொடுத்தார். இதன் மூலம், பேபி சுப்பிரமணியம் அந்த முழு குடும்பத்தையும் தன் வசம் ஈர்த்துக்கொண்டார் - இழுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.
பாக்கியநாதனுடைய வேலைகளுக்கு உதவுமாறு நளினியை பேபி சுப்பிரமணியம் தூண்டி விட, அது அவர் எதிர்பார்த்த பலனை விரைவாகவே தந்தது. அங்கு பதிப்பித்த பிரசுரங்கள் பல - இந்திய அமைதிப்படையால் விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பல விளைவுகளுக்கு ராஜீவ் காந்தியே காரணம் - பொறுப்பு என்று கூறின. அவற்றையெல்லாம் நளினி படித்தாள்.
கொஞ்சங்கொஞ்சமாக நளினியின் மூளை விடுதலைப் புலிகளின் சிந்தனையோடு ஒத்துப் போகத் துவங்கியது. அவள் ஒரு புத்தகம் தயாரித்தாள். அதன் பெயர், ‘இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள்’ என்பது. அதில், இந்திய ஊடகங்களில் வந்த - அமைதிப்படைக்கு எதிரான பத்திரிக்கை விமர்சனங்கள், படங்கள், கருத்துப் படங்கள் என பல தொகுக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலி தலைவர் எந்த உரையும் அதற்குத் தரவில்லை. ஆனால், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற மூன்று வரி ஆசிச் செய்தியை மட்டும் தந்திருந்தார்.
அடுத்து, புலிகளிடம் சிக்கியது புகைப்படம் எடுக்கும் இரண்டு இளைஞர்கள் - ரவிசங்கரனும், ஹரிபாபுவும். ஹரிபாபுவின் வேலைத்திறன் சுந்தரத்திற்குப் போதாது என்று அவரை நீக்கி விடவே, ஹரிபாபு இப்போது விக்னேஷ்வர் வீடியோ என்ற நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால், அவர் விடுதலைப் புலிகளுக்கு மிகவும் கடமைப்பட்டவராக இருந்தார். காரணம், ஹரிபாபுவிற்கு அவர்கள் நிறைய வேலை கொடுத்தார்கள். வேலைக்கு அதிகமான ஊதியமும் கொடுத்தார்கள். அது ஹரிபாபுவிற்கு நன்கு புரியும்.
யாழ்ப்பாணத்திலிருந்து, புகைப்படக் கலை படிப்பதற்காக பாலன் என்ற இளைஞன் வருவதாகவும், அவரைத் தன்னுடன் தங்க வைத்து கற்றுக்கொடுக்கும் படியும், சகல செலவுகளுக்கும் பாலன் பணம் தருவார் எனவும் முத்து ராஜா சொல்ல, ஹரிபாபுவும் சம்மதித்தார்.
இப்பொது பாலன் கற்றதை விட, பாலன் ஹரிபாபுவிற்கு கற்பித்ததே அதிகம். அதாவது, ராஜீவ் காந்தியால் தங்கள் மண்ணிற்கும், தங்கள் இயக்கத்திற்கும் பாரிய இழப்புகள் ஏற்பட்டன என்றும், அவர் மீண்டும் இந்தியாவின் பிரதமரானால், தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம் என்றும் அடிக்கடி பாலன் கூறி வர, ஹரிபாபு விரைவில் தீவிர ராஜீவ் எதிர்ப்பாளராக மாறிவிட்டார். ஆகவே, சென்னையில் இவர்கள் திட்டமிட்டபடி காரியங்கள் திருப்திகரமாக நகர்ந்து கொண்டிருந்தன - நடந்து கொண்டிருந்தன.
யாழ்ப்பாணத்தில் முருகன் தான் களத்தில் குதிப்பதற்குண்டான ஆயத்தங்களைச் செய்து வரலானார். சிவராசனோடு அடிக்கடி தொடர்புகொண்டு, நிலவரங்களை அறிந்து வந்த முருகன், இப்போது ஜெயகுமாரன், ரொபர்ட் பயாஸ் ஆகிய இரண்டு இளைஞர்களை சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். இருவருமே சிவராசனின் உடுப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிப்ரவரி துவக்கத்தில் சென்னை வந்து, போரூரில் உள்ள மைத்துனர் அறிவு என்ற பேரறிவாளனுடன் தங்கினார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ பட்டதாரியான அறிவு 1990 முதல் சென்னையில் வசித்து வந்தார்.
(அடுத்து : ஸ்ரீபெரும்புதூரில் நடந்த 'துன்ப நிகழ்வு') |