மோடி & ஜெ சொல்வதுபோல் இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டதா? அப்படித்தான் கூறுகிறார்கள் அந்த குஜராத்காரரும், நேற்று வரை அவரது நண்பியாக இருந்த கர்நாடக அம்மணியும். நான் இப்படி சொல்லவதைப் பின்னவர் எதிர்க்கலாம். ஆனால் கோமளவல்லியின் தாய் வேதவல்லியின் மொழி என்ன?
கன்னடம்தானே. அப்படியானால் இவர் தாய் மொழி - தாயின் மொழி கன்னடம் தானே.
60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டது என குஜராத் & கோ உம், 10 ஆண்டுகளில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என காவிரி தந்த செல்வியாரின் குழுவும் ஒப்பாரி வைப்பது
கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளது.
அஹ்மதாபாத்தில் பிறந்த கௌதம் அதானி நிறுவனத்தின் ஹெலிகப்டேரில் ஒரு நாளைக்கு மூன்று மாநிலம் பறக்கும் வெண்தாடிக்காரர் எண்ணிப்பார்க்க வேண்டும், இன்று, வருடம் 35,000 கோடி
புரட்டும் அதானியின் சொத்து 26 ஆண்டுகளுக்கு முன்பு என்ன என்று.
ஹெலிகாப்டர்கள், குட்டி விமானங்கள் BMW - கார்கள் என்று ஒரு பட்டாளத்தையே வைத்திருக்கும் அவர் அன்று ஆங்கிலம் சரளமாக வராததால் பல் வைத்திய நண்பன் மகேந்திராவை பின்னால்
வைத்து சுற்றியது லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் தானே.
1996ல் ஆரம்பிக்கப்பட்ட அதானி பவர் லிமிடெட் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வைத்து தான் இவர் குஜராத்தில் மின் தட்டு இல்லை எனப் பேசுகிறார். அது இந்தியாவின் மிகப்பெரிய தெர்மல் +
சோலார் சக்தி நிறுவனம். 'எனது முன்னேற்ற திட்டத்தினால் குஜாராத்தின் தண்ணீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை "பல்வேறு வழிகளில்" தீர்க்கப்பட்டுள்ளது'. புரிகிறதா? நான் சொல்வதெல்லாம்
உண்மை. நிலக்கரியே தெர்மலுக்கு ஆதனம். அதனால்தான் கரியைப்பேசி கரி பூசிக் கொள்கிறார்.
ஒரு சதுர மீட்டர் ஒரு ரூபாய்க்கு அவர் அதானிக்கு தொழில் பேட்டை அமைக்கக் கொடுத்ததை டாக்டர் தமிழிசை, ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்காகக் கொடுத்தது என்கிறார். அப்படி ஏதும்
கிடைத்ததா? இல்லை. குஜராத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகம் என்பது அனைவர்க்கும் தெரியும்.
எல்லா மாநிலங்களும் ஒரு சதுர மீட்டர் ஒரு ரூபாய்க்கு கொடுத்தால் சீனாவில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இங்கே வந்து விடுவார்களே. பிரதமர் ஆனா பின்னும் இப்படித்தான் செய்வாரா?
முடியாது. குஜராத் வேறு டெல்லி வேறு என்பதை மோடியும் மக்களும் உணர்வார்கள் ஒருவேளை அவர் பிரதமரானால்.
எண்ணில்லா சிகப்பு நாடாக்கள் இருக்கும் ஒரு நாட்டில், ஆட்சியாளர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இப்படி அசுர வேகத்தில் ஒருவர் உயர முடியுமா? அதானி குஜராத் பா.ஜா.கா வின் செல்லப்பிள்ளை.
மோடி பிரதமர் ஆவார் என்று அதானி குழுமத்தின் பங்குகள் இரட்டிப்பாகிறதாம். அப்படியானால் இதுவே ஊழல் தானே.
60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டிருந்தால் இப்படி ஒரு அதானியோ அம்பானியோ உருவாகி இருக்க முடியுமா?
வாசகர்களே, நீங்கள் பிறந்த காலத்தில் உங்கள் தெருவில் எத்தனை சைக்கிள்கள் இருந்தன, இன்று எத்தனை மோட்டார் பைக்குகள், கார்கள் இருக்கின்றன? "சைக்கிளின் நாடு" என்று அன்று சீனா
அழைக்கப்பட்டது. இன்று இந்தியாவை "மோட்டார் பைக்கின் நாடு" என்று அழைக்கலாம்.
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் என்றான் பாரதி. வீட்டுக்கொரு பைக் கிராமத்திலும் ஆளுக்கொரு பைக் நகரத்திலும் உண்டு. பொருளாதாரம் சீரழிந்ததின் வெளிப்பாடு இதுதானா?
அன்று ஸ்டேஷனில் இருந்து வீடு வரும் வரை மாட்டு வண்டி எத்தனை பள்ளத்தில் நொடியில் விழுந்து தலையை உடைக்கும். இன்று சென்னையில் இருந்து காரில் 8 மணித்தியாலத்தில் காயல்
பட்டணம் வருகிறார்கள். நாடு முன்னேறவில்லையா? மக்களின் பொருளாதாரம் வளரவில்லையா?
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் பல கோடிக்கு வருமானம் காட்டுகிறார். ஒரு முன்னாள் துறைமுகத் தொழிலாளி, வேட்பாளர் நேர்காணலின்போது 1 C காரில் இருக்கிறது என்றாராம்.
அதாவது 1 கோடி. இவரது தந்தை எத்தனை 100 ரூபாய் தாளைப் பார்த்திருப்பார்? பொருளாதாரம்
சீரழிந்ததால்தான் இவர்கள் கோடியில் புரள்கிரார்களா?
1990 களில் அண்ணிய செலவாணி வெறும் 3 பில்லியன் டாலர்களே இருந்த நிலையில், இருவார தேவை பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்ய தங்கத்தை கப்பலில் லண்டனுக்கு அனுப்பி
அடகுவைத்து அவைகளை வாங்கவேண்டிய நிலையில் இருந்த இந்தியாவை இன்று 306 பில்லியன் டாலர் அண்ணிய செலவாணி இருப்புள்ள நாடாக மாற்றியதுதான் பொருளாதாரச்
சீரழிவா?
அமெரிக்கா ஐரோப்பா போன்ற பணக்கார நாடுகளே வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் முடங்கிப்போக வேண்டிய நிலையில் உள்ளபோது, ஒரு காலத்தில் கடன்கார நாடு, வட்டி கூட
கட்டமுடியாத நாடு என்று புறக்கணிக்க பட்ட நாடு, இன்று அந்நிய கடனை நம்பாமல், இந்த உலக பொருளாதார புயல் சூழ்நிலையிலும் நிமிர்ந்து நிற்பதுதான் பொருளாதாரச் சீரழிவா?
இந்தியாவின் 2014 ஏற்றுமதி 325 பில்லியன் டாலர் ஆகும் என்று வர்த்தக செயலர் ராஜீவ் கெர் நேற்று கூறியுள்ளார். 'இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறும்' என்று former Chairman of
the US Federal Reserve Ben Bernanke யும் கூறியுள்ளார். வேறு என்ன வேண்டும்?
என் தந்தை சொல்லுவார், அவர்கள் காலத்தில் தங்கம் பவுன் 10 ரூபாய்க்கு விற்கும், வீசை அதாவது 15 கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கும், உளுந்து 100 கிலோ மூட்டை 90 ரூபாய்க்கு விற்கும் ,
ஆனால் அதை வாங்க மக்களிடம் பணம் இருக்காது ...அரிசி உற்பத்தி செய்யும் கிராம மக்கள் அரிசி சோறு சாப்பிட பணம் இருக்காது, கம்பு, கேழ்வரகு கஞ்சி தான் தினம் சாப்பாடு. அதுவும் மூணு
வேளை சாப்பிடமுடியாது என்றும் 100 ரூபாய் நோட்டுகளை கிராமத்தில் பார்க்க முடியாது என்றும் சொல்லுவார்.
முன்பு ஏழைகள் வீட்டில் டிவி இருக்காது. குடிசையில் உள்ள சிறுவர்கள் வசதியானவர்களின் வீட்டு ஜன்னல் வழியாக தான் நிகழ்சிகளை பார்ப்பார்கள். ஆனால் இன்று குடிசையிலும் ஒரு கலர் டிவி
உள்ளது. மத்தியதர மக்களின் வீடுகளில் கூட ரூமுக்கு ஒரு டிவி உள்ளது. Smart Tv களின் இறக்குமதியை சொல்லவும் வேண்டுமோ?
துபாயில் கடலை மூடி ஒரு ஊரையே உருவாக்கி அதில் உலகிலேயே மிக உயரமான கட்டடத்தையும் கட்டி உள்ளார்கள், நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகையால் பணம் வரும் என்று. ஆனால்
நீங்கள் ஒரு நூறு மீட்டர் மண் திட்டை உடைத்து சேது சமுத்திரம் திட்டம் போட கூப்பாடு போட்டு 800 கோடி செலவழித்த திட்டத்தை முடக்கி வைக்கிறீர்கள். 3000 மைல் தூரத்தில் இருந்து ராமர்
வந்தாராம். பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து.
850 கோடி துறைமுகம் மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் முந்தை அரசு துவக்கியது என்பதற்காக மூன்று ஆண்டாக முடக்கி வைக்க பட்டுள்ளது. அதை மீண்டும் துவக்கினால் அது மண் விலை,
கூலி உயர்வு காரணமாக 1500 கோடி ஆகும். திட்டங்களை தாமதப் படுத்தும் அரசு மக்களுக்கு பிற்காலத்தில் அதை நிறைவேற்றும் போது அதன் செலவு அதிகமாகி மக்களின் பணம் விரையமாகிறது
என்பதுதான் உண்மை.
5,000 ரூபாயாக இருந்த ஆசிரியர் சம்பளம் இப்போது 50,000 ஆகவேண்டும், ஆனால் அப்போது அரிசி கிலோ பத்து ரூபாய்க்கு விற்றது இப்போது 30 ரூபாய் ஆகினால் விலைவாசி விண்ணை தொட்டு
விட்டது என்று நீங்கள் கூப்பாடு போடுவீர்கள். 10000 ரூபாய் சம்பளம் கனவாக இருந்தது. இப்போது ஐந்து லட்சம் சம்பளம் கூட நினைவாகி உள்ளது.
ஆபிசில் வேலை பார்க்கும் பெண்கள் இப்போதுதான் அவர்கள் ஊதியம் ஓரளவு உயர்த்து இருசக்கர வாகனத்தில் வரும் அளவு முன்னேறி உள்ளார்கள். அதே போல விவசாய கூலியாட்கள் கூலியும்
உயர்ந்துள்ளது. அதனால் உணவு பொருட்களின் விளையும் கூடி உள்ளது.
வெங்காயம் உற்பத்தி குறைவால் கிலோ 100 ரூபாய் விற்றபோது மத்திய அரசின் நிர்வாக குறை எனக் கூறியவர்கள் இன்று மொத்தவிலை கிலோ 10 ரூபாய்க்கு விற்கும் போது ஏன் இது மத்திய
அரசின் நிர்வாக திறன் என்று கூற வில்லை.
பாம்பாட்டியும் பிச்சைகாரனும்தான் இந்தியா என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். இன்று அது மரியாதைக்குரிய ஒரு நாடாக மாறவில்லையா? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.
2004ல் வாஜ்பாய் அரசு போகும்போது பங்கு சந்தை எண் 5500. இன்று 22,277. இந்த 10 வருட ஏற்றம் நாசமாய்ப் போன காங்கிரஸின் 10 வருட ஆட்சியில்தானே வந்தது. ஊழல், லஞ்சம் அருவருப்பான
வார்த்தைகள். எது இல்லையோ அதில் தான் மோகம் வரும். வறுமையில் வாடிய நாட்டில் வளம் கைக்கு கிடைத்தால் மனிதன் பேராசையில் திருடனாகிறான்.
அரசியல்வாதி மட்டுமா திருடுகிறான்? நம்மில் எத்தனை பேர் செய்யாத செலவிற்கு ஆபிசில் கணக்கு காட்டுகிறார்கள்? ஊழல் லஞ்சத்தை நாம் மனதால் வெறுக்கவேண்டும். ஊழல் எதிர்ப்பு
போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
உண்மை இல்லாமல் தாய் நாட்டைப் பழிப்பது தாயைப் பழிப்பது போன்றது. உலகமெல்லாம் இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த பொருளாதார வல்லரசுகள் என்று சொல்லும்போது இவர்கள் நாட்டிலே
பஞ்சமும் பசியும் தலைவிரித் தாடுவதுபோல் பேசுவது வெளிநாட்டு ஊடகங்களில் வரும்போது முதலீட்டாளர்கள் என்ன நினைப்பார்கள்?
கிரீஸ் ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில், 'பசிக்கிறது பணமில்லை உணவில்லை வேலையில்லை' என்று நடந்த ஆர்பாட்டங்கள் போன்று இங்கு ஏதும் நடந்ததா? இல்லையே. விலை
உயர்ந்திருந்தாலும் மக்களிடம் வாங்கும் சக்தி இருக்கிறதே. விலை குறைவாக உள்ளது மட்டும் வளர்ச்சியில்லை அதனை எல்லா மக்களும் வாங்கும் திறனை கூட்டுவதுதான் வளர்ச்சி. இது வளர்ச்சி
இல்லையா?
கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தொழில் தொடக்கம் என்ற மத்திய அரசின் சாதனைகளை ஒரு பொருளாதார நிபுணராக அலசிப் பாருங்கள் அதன் உண்மை
உங்களுக்குத் தெரியும். |