பேரறிவாளன் பற்றி முரண் பட்ட அறிக்கை
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இத் தொடரின் பாகம் 3 ன் கடைசி பந்தி
"யாழ்ப்பாணத்தில் முருகன் தான் களத்தில் குதிப்பதற்குண்டான ஆயத்தங்களைச் செய்து வரலானார். சிவராசனோடு அடிக்கடி தொடர்புகொண்டு, நிலவரங்களை அறிந்து வந்த முருகன், இப்போது ஜெயகுமாரன், ரொபர்ட் பயாஸ் ஆகிய இரண்டு இளைஞர்களை சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.
இருவருமே சிவராசனின் உடுப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிப்ரவரி துவக்கத்தில் சென்னை வந்து, போரூரில் உள்ள மைத்துனர் அறிவு என்ற பேரறிவாளனுடன் தங்கினார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ பட்டதாரியான அறிவு 1990 முதல் சென்னையில் வசித்து வந்தார்." என்று முடிந்திருந்தது.
ஆனால் இந்த அறிவு என்ற பேரறிவாளன் இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். வேலூர் மாவட்டம் சோலையார்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர் என்பது உறுதியாகி இருக்கிறது. சென்னை பெரியார் திடல், விடுதலை அலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றியதாகவும் அங்கேயே தங்கியதாகவும் கூறுகிறார்.
விடுதலைப் புலிகளோடு உறவு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டாலும் வெடி குண்டு ஆடையைத் தான் கணனியில் வடிவமைக்க வில்லை என்று கூறுகிறார். அவரது வாக்குமூலப்படி 7.5.1991க்கு முன்பு தான் சிவராசனுக்கு மோட்டார் சைக்கிள், கார் பேட்டரி, 9 வோல்ட் பேட்டரி ஆகியவை வாங்கித் தந்ததையும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் உள்நோக்கம் அறியேன் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் விசரனைன்போது " எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன்."
"அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே, என்று கூறினார். நான் மறுத்தேன்."
இங்கு நாம் பின்பற்றும் உளவுத் துறை அறிக்கையில் பேரறிவாளன் பற்றி தந்துள்ள சில விபரங்கள் தவறானவை என்று எனக்குப் புரிந்தாலும் வேறு சிலவற்றின் உண்மைத் தன்மையை உறுதி படுத்த முடியாத நிலையிலும், அறிக்கையின் படியே நான் செல்கிறேன்.
முருகன் சென்னை வந்தார்
1991 பிப்ரவரி மத்தியில் முருகன் சென்னைக்கு வந்தார். அறிவோடு தொடர்புகொண்டு, அதிக விபரங்கள் கூறாது, தான் ஒரு “விசேஷ பணி”க்காக வந்துள்ளதாகவும், அவரது உதவி தேவையென்றும் கூறி, அவரைத் தன்னோடு இணைத்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து, உடனடியாக ஜெயகுமாரன், பயாஸ் ஆகியோரின் ஜாகையை வேறிடத்திற்கு மாற்றினர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு போலி லைசென்ஸ் ஒன்றையும் அவர்கள் எடுத்தனர். பிப்ரவரி இறுதியில் முத்து ராஜா, முருகனுக்கு நளினியின் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். இப்போது நளினி பெரிய அளவில் ராஜீவ் வெறுப்பாளராக உருவாகி இருந்தார்.
வெடிகுண்டு பொருத்த ஆடை வடிவமைக்கும் பொறுப்பு அறிவுக்கு ஒப்படைக்கப்பட்டது. உள்ளூர் ஆதரவாளர்களாக நளினியின் குடும்பமும், சுபா சுந்தரமும் உருவாக்கப்பட்டு விட்டனர். “மணப்பெண்” மற்றும் உறவினர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களும் ஆயத்தம் செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, முருகன் யாழ்ப்பாணத்தோடு தொடர்புகொண்டு, சிவராசனுக்கு பச்சைக்கொடி காட்டினார்.
சிவராசன் சென்னை வந்தார்
மார்ச் மாதம் முதல் வாரம் சிவராசன் சென்னை வந்தார். போரூரில் உள்ள பயாஸ் வீட்டில் தங்கினார். சென்னையில் “கல்யாண”த்திற்குண்டான ஏற்பாடுகள் அனைத்தையும் விபரமாக விளக்கினர் முத்து ராஜாவும், பேபி சுப்பிரமணியமும். இப்போது முழுப் பொறுப்பும் சிவராசனுக்கு வந்துவிட்டது. திட்டமிட்டபடியே அனைததும் செல்கின்றன. அறிவு என்ற பேரறிவாளன் வரைந்த மனித வெடிகுண்டுக்கான ஆடை வடிவமைப்பைப் பார்த்த சிவராசன் அதனை ஏற்றுக்கொண்டார்.
மார்ச் இறுதியில் சுப்பிரமணியத்தையும், முத்து ராஜாவையும் அவர்கள் - இதற்கு மேல் சென்னையில் இருப்பது பாதுகாப்பில்லை என்று கூறி, யாழ்ப்பாணத்திற்கு திருப்பியனுப்பிவிட்டனர். சிவராசன், நளினி பாக்கியநாதன் குடும்பத்தாரோடு தங்கள் இலக்கு யார் என்ற விபரம் கூறாமல், தனது விசேஷ பணியைப் பற்றி விவாதித்தார். இதற்காக ஒரு பெண் மனித வெடிகுண்டைத் தயார் செய்து உள்ளதாகவும் கூறினார். பாக்கியநாதனிடம் நம்பிக்கைக்குரிய ஒரு புகைப்படக் கலைஞரைத் தெரிவுசெய்யும்படி கேட்டார்.
புகைப்படக் கலைஞர்களான ரவி சங்கரனும், ஹரிபாபுவும் அழைத்து வரப்பட்டனர். விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களான அவர்கள், தாங்கள் ஏதோ ஒரு பயங்கரமான காரியத்திற்கு பயன்படுத்தப் படுகின்றனர் என்று தயங்கினாலும், ஒதுங்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டனர்.
"மணப்பெண்கள்" வருகை
சிவராசன், “மணப்பெண்ணை" அழைத்து வர யாழ்ப்பாணம் சென்று, பிரபாகரனைச் சந்தித்து, சென்னை ஏற்பாடுகளை விளக்கினார். பிரபாகரன் ஒத்திகை பார்த்துதான் காரியம் செய்ய வேண்டும் என்றும் முழு “கல்யாணத்தை" யும் வீடியோ படமாக எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஒரே வாரத்தில் சிவரான் இரண்டு பெண் புலிகளோடு சென்னை திரும்பினார். அடுத்து பெற வேண்டியது பத்மநாபாவைக் கொன்ற அதே வெடிபொருட்கள். அது அவர்களுக்கு கொஞ்சமும் சிரமமாக இருக்கவில்லை. அவர்களது தொடர்பு தமிழகத்தில் பரந்து விரிந்திருந்தது.
வந்துள்ள இரண்டு பெண்களையும் முருகன் நளினியின் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அறிவு, பயாஸ், ஜெயகுமாரன் அவர்களுக்கு - திட்டமிடல் தகவல்கள் தெரியாதவாறு சிவராசன் அவர்களை சற்று தள்ளி வைத்துக்கொண்டார்.
அறிவைத் தனியாக சந்தித்து, வெடிகுண்டு பொருத்தப்பட வேண்டிய ஆடை எப்படி இருக்க வேண்டும் என விளக்கினார். அறிவு என்ற பேரறிவாளன் பெயருக்கேற்றவாறு அழகான ஆடையை வடிவமைப்பு செய்தார். 9 மில்லிமீட்டர் பேட்டரியின் துணையுடன் இயங்குமளவு பயங்கர C4 RDX வெடிபொருட்கள் கொண்டதாக அது இருந்தது.
கனத்த டெனிம் ஜீன்ஸ் துணியில், உள்ளூர் தையல்காரர் ஒருவரால் அந்த ஆடை செய்யப்பட்டுவிட்டது. கவனமாக அதன் பைகளில் அறிவு வெடிபொருட்களைப் பொருத்தினார். இப்போது, ‘நான் ரெடி, நீங்க ரெடியா’ என்ற ரீதியில் எல்லா ஏற்பாடுகளுமே கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டுவிட்டன. பிரபாகரன் கூறியபடி, ஒத்திகை பார்க்க வேண்டும்.
ஒத்திகை
ஏப்ரல் 21ஆம் திகதி முதல் ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற காங்கிரஸ் அ.தி.மு.க கூட்டத்தில் நடந்தது. இதில், ராஜீவ் காந்தியும், ஜெயலலிதாவும் கலந்துகொண்டனர். ரவிசங்கரன் புகைப்படங்கள் எடுக்க, சுபா சுந்தரத்தின் ஆட்கள் வீடியோ படம் பிடித்தனர். ஆனால், “மணப்பெண்” தலைவர்கள் அருகில் செல்ல அதிகமாக முடியவில்லை. ஹரிபாபு இப்போது தங்களுடைய இலக்கு ஓர் அரசியல் தலைவர் என்று புரிந்துகொண்டார்.
டெல்லியில் ஒரு ஏற்பாடு
சென்னையில் நிலைமை இப்படி இருக்க, டெலலியிலும் ஒரு மாற்று ஏற்பாடு உருவாகியிருந்தது. ஏப்ரல் 28ஆம் திகதி அதிரை என்ற இயக்கப் பெயர் கொண்ட சோனியா சென்னைக்கு வந்தாள். சிவராசன் அவளை அழைத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்றார். இலங்கை அரசில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 70 வயது கனகசபாபதி அங்கு ஏற்கனவே இருந்தார். போராளியான அவரது மகன் ஒருவர் முன்பு போரில் இறந்துவிட்டார்.
டெல்லியில் இவர்கள் சந்தித்தது பிரபல தமிழக அரசியலாளர் திரு வைகோ என்ற வை.கோபால்சாமியின் முக்கிய உதவியாளரை. ஒரு வீட்டுத் தரகர் மூலம் தங்களுக்குப் பாதுகாப்பான புலி பதுங்குமிடத்தை, சாந்தினிகேத்தனுக்கு அருகில் தெரிவு செய்தனர்.
அது A233 வடக்கு மேடிபாக் என்ற அரசு ஊழியர்களுக்கான வசிப்பிடம். சட்ட விரோதமாக வேற்று மனிதர்களான இவர்களுக்கு அது வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அது ராஜீவ் காந்தி வசித்த இலக்கம் 10 ஜன்பத் இல்லத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கனகசபாபதி தனது பேத்தி கணணி மற்றும் ஹிந்தி மொழி படிப்பதற்காக டெல்லி வரவுள்ளதாகக் கூறி, தரகருக்கு ரூபாய் 5,000 முன்பணமாகக் கொடுத்தார்.
இரண்டாம் ஒத்திகை
இரண்டாம் ஒத்திகை மே மாதம் 12ஆம் திகதி அரக்கோணத்தில் உள்ள திருவள்ளூரில் நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்களும், திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களும். இங்கு தானு வி.பி.சிங்கின் கால்களைத் தொட்டு வணங்கினாள். அனைத்தையும் சுபா சுந்தரத்தின் ஆட்கள் வீடியோவாக்கினர். இந்த வீடியோ இப்போது காவல்துறையிடம் உள்ளது.
மே 20ஆம் திகதி அவசரமாகக் காலைப் பத்திரிகையோடு நளினி வீடு சென்ற சிவராசன், அடுத்த நாள் ஸ்ரீபெரும்புதூரில் நடக்கும் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கலந்துகொள்வதைக் காட்டினார். விரைந்து
அவர்கள் செயல்படத் துவங்கினர். ரவிசங்கரன், ஹரிபாபுவோடு தொடர்புகொண்டு சந்தன மாலை ஒன்று வாங்கி, அடுத்த நாள் பகல் சிவராசனை நளினியின் வீட்டில் சந்திக்கும்படி கேட்டார்.
ஹரிபாபு, ரவிசங்கரனிடம் தனக்கு ஒரு கெமரா தரும்படி கேட்க, ரவிசங்கரன் தனது கெமராக்களுள் ஒன்றைக் கொடுக்காது, நண்பர் ஒருவனிடம் இரவல் வாங்கி, அதில் ஒரு கொனிக்கா கலர் பிலிம்மையும் போட்டுக் கொடுத்தான்.
மே 20ஆம் திகதி இரவு அமைதியாகவே கழிந்தது. வீடியோவில் ஒரு படம் பார்த்தனர். சுபா வெடிகுண்டு ஆடையை மீண்டும் தானுவிற்கு அணிவித்து, எப்படி பொருந்துகிறது என்று பார்த்தாள். “மணப்பெண்” தானுவின் முகத்தில் எந்த வாட்டமோ - மாற்றமோ இல்லை. சாதாரணமாகவே - சாந்தமாகவே இருந்தாள். கரும்புலிகள் என்றால் சும்மாவா? உயிரைத் துச்சமென மதிப்பவர்கள் அல்லவா!
|