என்ன இது? ஜனவரி 30 அன்று தானே இவர் சொன்னார், தமிழக முதல்வரின் பிரதமர் கனவு பலிக்காது என்று. இப்போ என்னாச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஓர் அரசியல் அவதானியின் வேலை அப்ப அப்ப இருக்கும்
சூழலை கணித்து சொல்வதுதான்.
அரசியலில், நடக்கும் என்றால் நடக்காது. நடக்காதென்றால் நடந்து விடும். அரசியல் நிர்பந்தம் சில வேளைகளில் எதிராளியையும் விருந்துக்கு அழைக்கச் சொல்லும் - செய்யும்.
"காங்கிரெஸ் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. பாரதிய ஜனதா வரக்கூடாது. அவர்கள் வந்து விட்டால் 10 ஆண்டுகளுக்கு அவர்கள்தான் ஆட்சியில் இருப்பார்கள். இரண்டு தடவை நரேந்திர மோடி பிரதமராகவும் இருந்து விடுவார். அது நமக்கு
நல்லதல்ல. வீசுவது அரசு அதிருப்தி அலையே தவிர மோடி அலை இல்லை. ஆகவே இரண்டு வருடத்திற்கு பா. ஜ. க அல்லாத, காங்கிரெஸ் பின்னால் நின்று இயக்கும் மூன்றாவது அணி வந்தால் நல்லது" என்று காங்கிரெஸ் நினைக்கிறதாம்.
'யார் பதவியில் இருந்தால் நமெக்கன்ன? மோடி வரக்கூடாது.' அது தான் அவர்களின் இன்றைய சிந்தனை. மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. 110 இடங்களுக்கு மேல் தங்களுக்கு கிடைக்காது என்றும்
அவர்கள் நினைக்கிறார்கள். அதே வேளை பா. ஜ.க. கூட்டணிக்கு தேவைப்படும் 272 ஆசனங்கள் ஒருவேளை அவர்களுக்கும் தேறாத பட்சத்தில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கவே காங்கிரஸ் விரும்புகிறது.
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைவதை காங்கிரஸ் விரும்பவில்லை எனில், மக்களவைத் தேர்தல்
முடிவுகளைப் பொறுத்து, மதச்சார்பற்ற மாற்று அணியை உருவாக்கி - அரசு அமைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காங்கிரஸுக்கு ஏற்படும், என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தால் மாற்று அணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று தெரிவித்த காரத், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்கு, மூன்றாவது அணியில் அதிமுக உள்ளிட்ட மாநிலக்
கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 1996-ல் தேவ கவுடா தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததை நினைவுகூர்ந்த அவர், அத்தகையதொரு நிலைமை மீண்டும் திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்றார்.
அதேவேளையில், மூன்றாவது அணிக்கு யார் தலைமை தாங்குவார் என்பது தேர்தல் முடிவு வெளியானதும் தீர்மானிக்கப்படும் என்று அந்தப் பேட்டியில் காரத் கூறியுள்ளார்.
அப்படியானால் மூன்றாவது அணியின் பிரதம வேட்பாளர் யார் என்ற கேள்வி வருகிறதல்லவா? எப்படியும் 30 ஆசனங்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரை முன் மொழிவதுதான் பொருத்தம் என்று நினைக்கிறது காங்கிரஸ்.
இன்றைய சூழலில் மம்தா எப்படியும் 30 ஆசனங்களைப் பெறுவார் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் அவர் டெல்லிக்கு வரமாட்டார். உத்திர பிரதேசத்தில் மாயாவதியும் இருபதுக்கு மேல் எடுக்கலாம். ஆனால் முலாயம் சிங் அவ்வவு தூரம் வரமாட்டார்
என்று கணிக்கிறார்கள். ஜெயலலிதா 30 ஆசனங்களைப் பிடித்தால், 30 ஆசனங்களைக் கொண்டவர் மட்டுமே பிரதம வேட்பாளராக களம் இறங்கலாம் என அவர் நிபந்தனை போட்டு தன்னை முன்னிறுத்தலாம் என்று எதிர்பார்கிறார்கள்.
மம்தா, கர்நாடகத்தின் தேவகவுடா ஆகியோர் ஜெயாவை ஆதரிக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களும் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திர சேகர் ராவ்வும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
மற்ற மத சார்பற்ற தலைவர்களின் ஆதரவும் கிடைக்கும் என்கிறார்கள்.
ஹிந்து பத்திரிகையைச் சேர்ந்த ராம் அவர்கள், தமிழ்நாட்டில் பா.ஜ. க. அணிக்கு ஒரு ஆசனம் கிடைப்பதும் சந்தேகம் என்று சொல்லியுள்ளார். அப்படியானால் இரண்டு கழகங்களுமே பங்கு போடும்.
ஆகவே தேவை ஏற்பட்டால் தி. மு. க. உம் சந்திர பாபு நாயுடும் கூட வெளியிலிருந்தோ அல்லது உள்ளே இருந்தோ ஜெயாவை ஆதரிக்கலாம்,
இத்திட்டம் மோடியின் கவனத்திற்கும் போய்விட்டது. அதனால் தான் தனக்கு எதிராக சதி நடக்கிறது என்றும், ஜெயலலிதா, மாயாவதி, மம்தா ஆகியோரின் ஆதரவு தனக்கு தேவைப்படாது என்றும் அவர் சொல்லுகிறார்.
தேர்தலின் இறுதி பகுதியில் மோடி அலை சற்று களைத்து விட்டதுபோல் தெரிகிறது. இதற்கு பல காரணிகளைச் சொல்லலாம். ஜல்லி கட்டு காளை போல் துள்ளித் திரிந்தவரை பிரியங்காவின் அடிக்கு அடி, பதிலுக்கு பதில் என்பது சற்றும் எதிர்பாராத
தாக்குதல் தான்.
அதுமட்டுமல்ல இது காலமும் நானே ராஜா என்று ஊடகங்களில் வலம் வந்தவர், பிரியங்காவிற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் அவரை சற்று பின்வாங்க வைத்துவிட்டது. அதுவே 'பிரியங்கா என் மகள் போன்றவள்' என்று அவரைப் படி
இறங்கி ஐஸ் வைக்க செய்தது. அதையும் அந்தப் பெண் 'நான் ராஜிவ்வின் மகள்' என்று முகத்தில் அடித்தாற் போல் சொன்னதால் அவமானமடைந்த பா.ஜ.க வினர், அன்பாக மோடி பேசியதை மதிக்கத் தெரியவில்லை என்று குறை சொன்னார்கள்
நேற்று.
ஆனால் இன்று வெட்கம் தாங்காது மோடி அப்படிப் பேசவில்லை என்று கூறுகிறார்கள். அருண் ஜெட்லி கூறுகிறார், 'ஐயோ பாவம் பிரியங்கா ராகுலைப் பின் தள்ளிவிட்டார்' என்று. இவருக்கு என்ன இதில் வருத்தம்? ஆடு நனைகிறதே என்று ஓநாய்
அழுத கதை போல.
வாக்களித்தபின் தாமரை சின்னத்தைக் காட்டி தொலைக் காட்சிக்கு மோடி கொடுத்த பேட்டி தேர்தல் ஆணையத்தின் விதி முறைக்கு எதிரானது என்று ஆணையம் அவர் மேல் வழக்கு பதிவு செய்துள்ளது எல்லோரையும் அதிர்ச்சி அடையச்
செய்துள்ளது.
அப்படியானால் மோடிக்கு சட்டம் தெரியாதா? அவர் சட்டத்தை மதிப்பவரா இல்லை மிதிப்பவரா என்று பலரும் சிந்திக்கத் தொடக்கி விட்டனர். அவர் ஒரு சர்வாதிகாரி என்று எதிர் கட்சிகள் சொல்லுவது உண்மைதானோ என்றும் பேசுகிறார்கள். வழக்கின்
முடிவு என்னவாகும் என்பதோடு, சாத்திரத்தில் நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் இது ஒரு அபசகுனம் என்றும் குசு குசுக்கின்றனர்.
இது காலமும் ஊடகங்கள் Modi Vs All என்றே வர்ணித்தன. அதாவது மோடியை எதிர்த்து அனைவரும். ஆனால் இந்த கடைசி நேரத்தில் Piriyanka Vs All என்ற ஒரு எதிர்பாராத நிலை பிரியங்கா பொறுப்பில் இருக்கும் ராகுலின் அமேதி
தொகுதியில் உருவாகியுள்ளது.
பா. ஜ. க வேட்பாளர் திருமதி இரானிக்காக மோடி, அத்வானி, சுஷ்மா, ஜெயிட்லி ஆகிய பெரிய தலைகள் அங்கு விஜயம் செய்கிறார்கள். காரணம்? "அமேதிக்கு நான் சிறுமியாக இருந்தபோதும் வந்தேன். இப்போதும் வருகிறேன். நான் முதுமையான
பின்பும் வருவேன்" என்றார் பிரியங்கா. இதனுடைய அர்த்தம் என்ன? பொருத்தமான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்பதாகும்.
ஆகவே பிரியங்காவின் சக்தியை உணர்ந்ததால் அவரை வளர விட்டால் ஆபத்து, வளர விடக்கூடாது என்பதே. ஒருத்திக்கு ஒன்பது பேர் என்று களத்திற்கு வந்துள்ளார்கள். அமேதியில் ராகுலின் வெற்றி உறுதி. தலைகளின் குறி வெற்றி வாக்கு
வித்தியாசத்தைக் குறைக்க வேண்டும் என்பதுதான்.
காவிக் கூட்டத்தின் நோக்கமே இந்த குடும்பத்தின் செல்வாக்கை ஒழித்தால் தான் காங்கிரசை அழிக்க முடியும் என்பது. என்னவாயிற்று மோடி அலை? கொஞ்ச நஞ்ச காசா விளம்பர செலவு? 5000 கோடி அல்லவா.
தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, தெரு விளம்பரம், பொதுக் கூட்டம் நடத்தல், அதற்கு ஆள் சேர்ப்பது இத்தியாதி இத்தியாதி. வண்டலூரில் நடந்த கூட்டத்தைப் பற்றி எழுதிய Times of India நிருபர், கடைசி வரியில், தான் சில கிராமத்தாரிடம்,
மோடியைத் தெரியுமா, குஜராத் தெரியுமா என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள், அது என்னதுங்க, இலவசம் தருவாங்கன்னு கூப்பிட்டாங்க வந்தோம் என்றார்களாம். இதுதான் எல்லா கட்சிகளின் நிலைமையும்.
இது நிற்க, வட நாட்டில் காங்கிரஸின் தலைவிதி முஸ்லிம்களின் கையில் தான் இருக்கிறது. சில பா.ஜ.க. தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சால் சினம் கொண்டுள்ள முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் ஆதரவை இம்முறை காங்கிரஸ் பக்கம்
திருப்பினால் பா.ஜ. க வின் மொத்த 10,000 கோடி ரூபா தேர்தல் பிரச்சாரம் தோற்று விடும் என்றும் காங்கிரஸ் தட்டு தடுமாறி கம்பு ஊண்டி கரை சேர்ந்து விடும் என்கிறார்கள்.
அதேவேளையில் சென்னையில் பாகிஸ்தான் உளவாளி என்று கண்டியைச் சேர்ந்த ஜாகிர் ஹுசைன் கைது செய்யப் பட்டிருப்பதும், அதைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பும் எங்கே எஞ்சியுள்ள 105 வடநாட்டு தொகுதி
ஹிந்து வாக்காளர்களை பா. ஜ. க. பக்கம் தள்ளிவிடுமோ என்ற பயமும் எல்லா கட்சிகாரர்களிடமும் உண்டு.
ஜெயலலிதா பிரதமர் ஆகிறாரா? அம்முவின் ஆற்றலுக்கு அவர் எப்போதோ டெல்லி போயிருக்கலாம். அரசியல் ஆரம்பமும் ராஜ்யசபாவில் தானே. கூடா உறவால் ஊழலில் திளைத்ததால் இந்த அவமானம். சில வழக்குகள் தொங்கிக் கொண்டு இருப்பது
சற்று நெருடலாக இருக்கிறதே.
கடந்த கால வரலாறும் கவலையைத் தருகிறதே. சமீபத்தில் ஒரு ஆங்கில தொலை காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் முன்பை விட அனுபவம் பெற்றிருப்பதாகவும் பக்குவப்பட்டிருப்பதாகவும் ஜெயா கூறினார்.
இத் திட்டத்திற்கு அம்முவின் இசைவும் பெறப்பட்டுள்ளதாகவும் சொல்லுகிறார்கள். அரசியலில், நடக்கும் என்றால் நடக்காது. நடக்காதென்றால் நடந்து விடும். முதலில் அ. தி. மு. க. விற்கு 30 ஆசனங்கள் கிடைக்கவேண்டுமே.
இதற்கிடையில், மூன்றாவது அணியை காங்கிரஸ் ஆதரிக்காது. மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை கைப்பற்றுவோம் என்று ராகுல் கூறி உள்ளார். இது தொண்டர்களின் உற்சாகத்திற்கு தரும் பானம்.
ஜெயலலிதா பிரதமர் ஆவாரா என்பதை 16ம் திகதி வரை பொறுத்துப் பார்ப்போம். அதற்கிடையில்; எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க!
|