அடுத்த ஐந்து ஆண்டுகட்கு பாரதத்தை ஆளப்போவது யார்...? என்ற இறுதித்தேர்வின் முடிவை இந்திய மக்கள்
எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அத்தேர்வு அதன் இறுதி கட்டத்தை தாண்டுவதற்குள் பாரதத்தை திக்குமுக்காட
வைத்துவிட்டது. இத்தேர்வில் புதிய பாடங்களிலிருந்து பல வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவ்வினாக்களுக்கு
உரிய பதிலை தேர்வெழுதியோர் அளித்தார்களாவென்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
பாரதத்தை ஆண்ட இரு பெரும் அரசியல் வியாபாரிகளுக்கு (...?) மாற்றாக தொட்டும் தொடாமலும், பட்டும்
படாமலும் மூன்றாம் அணி என்ற ஒன்று தேர்வு தளத்தில் பிரவேசித்திருந்தாலும்; தேர்வுக்கான பாடத்தை அந்த
மூவருக்கும் நான் நடத்தபோகிறேன் என்ற ரீதியில் துடப்பத்தை கையிலெடுத்து பாரதத்தாயை வருடிவிட /
பாரதத்தாயின் மடியில் படிந்துள்ள அரசியல் கரைகளை அகற்றிவிட எனக்கூறி மத்திய பாரதத்தில்
கிளம்பியுள்ளது ஒரு இளைஞர் அணி.
அவ்வணியின் தோற்றம் மாற்றாருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும்; நாட்டின் நிதர்சனத்தை நிகழ்காலமாக்கும்
நிகழ்வுகள் அவ்வணிக்கு ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால்; இறந்தகால ஆட்சியாளர்கள்; அவர்கள் காலத்தில்
அரங்கேற்றிய அவலங்களை அகத்தில் எண்ணி வருந்தாமலில்லை. ஆகவே; நம் எதிர்கால பாரதத்தை
வழிநடத்தப்போவது யார்...? பார் போற்றும் பாரதத்தை படைக்கப்போவது யார்...? என்பதற்கான தேர்வில்,
தரப்பட்ட வினாக்களை நிதானமாக படித்து சரியான விடையை நாம் வாக்காக பதிந்திருந்தால் நம் மனதில் ஓடும்
பாரதத்தை உருவாக்குவது நமக்கு கடினமாக இருக்காது. மாறாக; விடையை தவறாக எழுதியிருந்தால் சற்று
சிரமத்துடந்தான் நம் தலைமையை தேட வேண்டியது வரும்.
இந்திய இஸ்லாமியர்களை பொறுத்தவரை சுதந்திர பாரதத்தை சுவாசித்த நாளிலிருந்து இன்று வரை அவர்கள் வாக்கு வங்கிகளாகவே அரசியல் வர்க்கத்தால் அலசப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின் ஏற்பட்ட கபளீகரத்தால் அச்சமேந்தி அகிம்சையை கையிலெடுத்த இஸ்லாமிய தலைவர்கள் பிற அரசியல் கட்சிகளை சார்ந்தே நிற்க வேண்டியதாயிற்று. முஸ்லீம் லீக் என்ற அரசியல் அமைப்பு அன்றிருந்தாலும் தனியாக நின்று அரசியல் களங்களை காண வலுவில்லாமல் இருந்தது. அன்று; மக்களவை, மாநிலங்களவைக்கு இஸ்லாமிய சொந்தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நம் நலனுக்காக குரல் எழுப்பி சில கோரிக்கைகளை வென்றெடுத்தாலும் அவர்கள் சாதித்தது என்னவோ பூஜ்யமாகவே தற்போது காட்சிபடுகிறது. மிகச்சிலதைத் தவிர.
சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களெல்லாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு மூன்றாந்தர
குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று இன்றுவரை அச்ச உணர்வோடு வாழும் ஒரு சமுதாயம்
இந்தியாவில் இருக்கிறதென்றால் அது இஸ்லாமிய சமுதாயமாகத்தான் இருக்கும்.
அவ்வப்போது அங்கிங்கென்று சில எழுச்சிமிக்க இஸ்லாமிய தலைவர்கள் தோன்றி சமூகத்தை ஒன்று திரட்டி
பல வீரியமிக்க போராட்டங்களை நடத்தினாலும் அத்தலைவர்கள் கட்டியெழுப்ப நினைத்த கட்டிடத்தின்
அடித்தளம் மிகவும் பலகீனமாக இருந்ததால் அவர்கள் சாதிக்க நினைத்தது கைகூடாமல் போனது என்றே
சொல்லவேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதர் மட்டுமே காட்டிதந்த பலமிக்க இஸ்லாமிய அடித்தளத்தில்
அவர்கள் அக்கட்டிடத்தை எழுப்பி நம் சமூகத்திற்கென்று ஒரு அப்பழுக்கற்ற தன்னலமில்லா உயரிய
தலைமையை நிறுவி, அத்தலைமையின் கீழ் அப்போராட்டக்களங்களை கண்டிருந்தால் இன்று நாம் நிறையவே
சாத்தித்து இருப்போம். மட்டுமல்லாமல்; பாரத அரசியலில் நம் சமூகத்திற்கென்று உரிய பிரதிநிதித்துவமும்
கிடைத்திருக்கும். நம்மை எதிர்க்கும் ஃபாசிசமும் பயம் கண்டிருக்கும்.
பாரதத்தில் பரவியிருந்த பாசிச காவி விழுதுகளை அன்றே நாம் முறையாக அறுத்தெறிந்திருந்தால் இன்று
இவ்வாறு வேரூன்றியிருக்க மாட்டார்கள். நம் சமூகத்தை அழிப்பதையே ஒற்றைக்கொள்கையாக கொண்டிருக்கும்
இவர்கள் நாற்காலியில் அமர்வதற்கு எத்தகைய விலையும் கொடுக்க தயங்க மாட்டார்கள். அதன் ஒரு
பகுதி தான் தற்போது நாம் கண்டுவரும் குண்டு வெடிப்புக்களும், கலவரங்களும்.
அவர்கள் ஆட்சியில் அமர
ஏதுவாக கருத்துக்களை பரப்பி மக்களை மடையர்களாக்க ஊடகங்கள் வாயிலும் காசள்ளி போட்டு விட்டார்கள்.
பணத்தால் விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்கள் வழியாக தேர்வு முடிவு குறித்து பலகருத்துக்கள் பகிரப்பட்டாலும்
அனைத்துமே கணிப்புதான் என்ற ரீதியில் பார்க்கப்பட வேண்டும். உண்மையான தேர்வின் முடிவுகள்
கணிப்புக்களின் அடிப்படையில் பெறப்படுவது அன்று. மக்களின் உள்மன ஓட்டத்தின் வெளிப்பாடாக அவர்கள்
அளித்த வாக்குதான் தேர்வின் முடிவை பிரதிபலிக்கும். அம்முடிவுகள் எப்படியிருந்தாலும் இஸ்லாமியர்களாகிய
நாம் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
“...தாமாக எந்த கட்சி வந்து எம்மோடு இணைந்தாலும் நாங்கள் அணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்...”
என்று வெங்காய நாயுடு அறிக்கை விடுகிறார்.
“...மூன்றாம் அணியுடன் இணைந்து ஆட்சி செய்ய நாங்கள் தயார்...” என்று சல்மான் குர்ஷித் அறிக்கை
விடுகிறார்.
காங்கிரசோ, பா.ஜ.க.வோ தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
பாசிச மதவாத பா.ஜ.க. ஆட்சியில் அமர்வதை தடுக்க எந்த கட்சி முயற்சித்தாலும் அதை நாம் பலமாக
பாராட்டுவோம். அதே சமயம்; அதே ஆக்டோபஸ் பா.ஜ.க. ஆட்சி அமைக்க எந்த கட்சி ஆதரவு அளித்தாலும்
அக்கட்சியை நம் மண்ணில் இல்லாமல் ஆக்குவோம். அது மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி, தேசிய
கட்சிகளாக இருந்தாலும் சரி.
நம் மாநிலத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ப.ஜ.க. ஆட்சி அமைக்க
முட்டுக்கொடுப்பார்களானால் - எழுதி வைத்துக்கொள்ளுங்கள் - உங்கள் அரசியல் வாழ்வின் அஸ்தமனத்தை. இந்த சமுதாயம் ஒரு கட்சியை ஆதரித்தால் வெறி கொண்டு ஆதரிக்கும். எதிர்த்தால் அதே வெறி கொண்டு எதிர்க்கும். நம் சமுதாயத்தின் ஜீவமரண போராட்டத்துக்கான இத்தேர்வு களத்தில் நம் சமுதாயத்தை உதாசீனப்படுத்திவிட்டு
எவன் அரசியல் சுகம் அனுபவிக்க நினைத்தாலும் அவனை உறங்க விடாமல் உளற விட்டு அரசியல்
அனாதையாக்கி அலைய விட்டு அழிவை பரிசாக்குவோம்.
பாரத அரசியல் சாசனத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு உன்னத சமுதாயம்
அலட்சியப்படுத்தப்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதற்கு நமது ஒற்றுமையின்மையும் ஒரு
காரணமெனலாம். அன்று முதல் இன்று வரை பாரதம் தழுவிய ஒன்றுபட்ட அரசியல் புரிந்துணர்வு நம்
சமுதாயத்தலைவர்களிடம் இல்லாமல் போனது துரதிஷ்டமே. உலகிற்கே அரசியலை கற்றுக்கொடுத்த நாம்
நமக்குள் சமர் செய்துகொள்வது வெட்கமாக உள்ளது. இதன் விளைவு நம் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்ற
உணர்வு கூட இல்லாமல் இருக்கிறோம். அரசியல் அவையின் அகம் சென்று கர்ஜித்தால்தான் நம்
சமூகத்திற்கான தேவைகள் கிடைக்கப்பெறும் என்று ஒரு சாராரும், அவையின் புறம் நின்று அறப்போராட்டங்கள்
மூலமும் நம் சமூகத்தின் தேவைகளை அடையலாம் என்று இன்னொரு சாராரும் குரலுயர்த்துவதை நம்மால்
காணமுடிகிறது. முதல் சாராரைவிட இரண்டாம் சாராரின் குரலுக்குத்தான் அதிக அழுத்தம் இருப்பதாக இதுவரை
நடந்த நிகழ்வுகள் உறுதிபடுத்துகின்றன. இவ்விரு சாராரும் நம் சமுதாயம் தன்னிறைவு பெறுவதற்கு மார்க்க
வரம்புகளை மீறாமல் காரியங்களை சாதித்தால் இருவருமே பாராட்டுகுறியவர்கள்தான்.
ஆகவே; கடந்தகால கசப்புகளை மறந்து, வரும் காலங்களில் இவ்விரு சாராரும் அமர்ந்து நம் சமுதாயத்தின்
பிரச்சினைகள், தேவைகள் பற்றி மனம் திறந்து பேசி தேசிய அளவிலான ஒரு புரிந்துணர்வை நம் மத்தியில்
ஏற்படுத்தி நாம் சுட்டும் தலைதான் பிரதம நாற்காலியில் அமரும் என்ற ஒரு கனத்த தாக்கத்தை பாரத அரசியல்
களத்தில் ஏற்படுத்தி நம் சமுதாயத்தின் வாக்கு பலத்தை நிரூபித்தால் நம் சந்ததிகள் நமக்காக பிரார்த்திக்கும்.
அல்லாமல்; நான்தான் என்ற மமதையில் இறுமாப்புடன் விட்டுக்கொடுக்காமல் இம்மையை மட்டுமே விரும்பி,
மறுமையை மறந்து, நம் சமரை தொடர்ந்தால் நம் சமுதாயத் தலைவர்களை வரலாறும் மன்னிக்காது
இறைவனும் மன்னிக்க மாட்டான்.
இதுவரை நடந்தவை ஷைத்தானிய செயல்கள் என்றெண்ணி அல்லாஹ்விற்காகவும், நம் சந்ததிகளின்
நல்வாழ்விற்காகவும் அவைகளை தூரெறிந்து “நாளை நமதே” என்ற நற்சிந்தனையுடன் புதிய பாரதத்தை
உருவாக்க களமிறங்குவோம்...! அதற்காக இன்றே ஆயத்தமாவோம்...!
அந்த தூய பணியை நம் தமிழ் மண்ணிலிருந்து தொடங்கலாமே.....!
|