புதிய ஊரில் புதிதாக ஒரு வீடு கட்டுகிறோம். புது மனை புகு விழாவிற்கு நமது உற்றார் உறவினர் நண்பர்களை
மட்டுமல்ல, அண்டை அயல் வீட்டுக்காரர் களையும் அழைக்கிறோம். காரணம் அதன் மூலம் அவர்கள் நமக்கு
அறிமுக மாகிறார்கள் - நண்பர்களாகிறார்கள். நமக்கு அவசியம் அவசரம் என்றால் முதலில் வருவது
அயலவர்கள்தான் உறவினர்கள் அல்ல.
சில வேளை நாம் வீடு கட்டும் காலத்தில் அடுத்த வீட்டுக் காரர்களோடு சில மோதல் உரசல் இருந்திருக்கலாம்.
அதை எல்லாம் நாம் பொருட்படுத்துவதில்லை. நல்ல நிகழ்ச்சிக்கு அனைவரும் வரவேண்டும் - பங்கு
பெறவேண்டும் என்பதே நோக்கம். ஆகவே அழைக்கிறோம்.
இருவரை அழைத்து ஒருவரை நாம் வேண்டாதவர் என்று விட்டால், அவரது உணர்வில் நாம் ஊறு
விளைவிப்பதுபோல் இருக்கும். ஆமாம் அவரது புண்ணில் நாம் உப்பு தடவுவது போல. அதுமட்டுமல்லாது
அவருக்கும் நமக்கும் இருக்கும் கசப்பை அது உலகமெல்லாம் பறை சாற்றும்.
நரேந்திர மோடி அவர்கள் மாநில அரசியலிலேயே உழன்றவர். தேசிய அரசியலில் அனுபவம் இல்லை. சர்வதேச
அரசியலில் ஈடுபடும் வாய்ப்போ அவசியமோ வரவில்லை. இப்போது தேசிய அரசியலுக்கு வந்துள்ள அவர்
சர்வதேச அரசியலிலும் தனது பங்கை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.
ஆகவே அண்டை அயல் நாடுகளின் தலைவர்களின் அறிமுகம் - சிநேகிதம் அவருக்கு அவசியம். அப்போதுதான்
பிரச்சினைகள் வரும்போது உடனடியாக அவர்களை அணுகி தீர்வு காண முடியும்.
தனது தேர்தல் பரப்புரையின்போது மோடி பங்களாதேஷ், பாகிஸ்தான், (இலங்கை)
மீது கடுமையாகச் சாடினார். அது ஒருவித பதட்ட உணர்வை வட நாட்டில் தந்ததும் உண்மை. அது தந்த
'கடுமையானவர்' என்ற கருத்தை அவர் மாற்ற முயல்வதும் தவறல்ல.
இலங்கையில் சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடியால் நமக்கு தொல்லை வரும் என்று வெளிப்படையாக
அறிக்கை விட்டபோது, எதிர் கட்சியினர் பார் பார் மோடி கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார் என்று
ஆர்ப்பரித்தனர்.
இதைப்பாருங்கள்; "முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவதை
நான் நம்ப வில்லை. அவர்கள் அரசு தங்களால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்." நரேந்திர மோடி.
என்ன இது? நம்ப முடியவில்லையா? இவர் தானே அப்படி பட்டி தொட்டி எல்லாம் பறந்து பறந்து கூறினார்.
இத்தனை காலமும் நாடு - நாசம் - காங்கிரெஸ் என்று பேசி வந்தவர் தூங்கி எழுந்தவன் போல் இப்போது
பேசுகிறார்.
ஆமாம். நேற்று அவர்கள் உள்ளே இருந்தார்கள். இவர் வெளியில் இருந்து கல் வீசினார். இப்போது இவர் உள்ளே
இருக்கிறார். நேற்று அவர் அரசியல் வாதியாகப் பேசினார். இன்று நிர்வாகியாகப் பேசுகிறார்.
அரசியல் வேறு, அரசு நிர்வாகம் வேறு. இந்த இரண்டையும் குழப்புவோர் அல்லது அரசு நிர்வாகத்தையும்
அரசியலாக்குவோரால் மக்களே பெரிதும் பாதிப்படைவர். இன்றைய தமிழ்நாட்டில் இதனைக் காணலாம்.
எதிர் கட்சியில் இருந்து நார் நாராகக் கிழிப்பவர் கையில் பொறுப்பு போனதும் அவர்கள் நிலை மாறிவிடும்.
காரணம் அரசாணையைக் கையில் வைத்திருப்பவருக்கு சில கடப் பாடுகள் உண்டு.
சில வேளைகளில் தங்களது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு அல்லது அதற்கு எதிராக செயல்
படவேண்டிய நடை முறைகளும் இருக்கும். இங்கு உணர்சிகளுக்கு இடம் இருக்காது. பொதுமக்களுக்கு அது
தெரியாது.
சென்ற வியாழன் இரவு 8.30 மணி அளவில் News X தொலைக்காட்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சே
அவர்களையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களையும் நரேந்திர மோடி அவர்களின் பதவி ஏற்பிற்கு
அழைத்தது பற்றி எதிர்ப்பு இருப்பது பற்றி நேயர் கருத்து கேட்டதில் நானும் என் கருத்தைச் சொன்னேன்.
அதாவது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற பட்டியலில் இலங்கை அதிபர் அழைக்கப்பட்டுள்ளாரே தவிர
தனிப்பட்ட அழைப்பு அல்ல. ஆகவே தவறல்ல என்றேன்.
அத்தோடு இந்நிகழ்ச்சியில் சிறப்பு கருத்தாளராக இருந்த தி.மு.க வைச் சேர்ந்த
சரவணன் என்பவர் - இவர் யார் என்றே எனக்கு தெரியாது - இலங்கை தமிழர்கள் இந்தியாவில் இருந்து
சென்றவர்கள் என்றார்.
நான் அவர் கருத்தை மறுத்து, இலங்கை தமிழர்களில் ஒரு துளி தான் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.
மற்றவர்கள் இம்மண்ணின் ஆதி குடிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறி சரவணன் அவர்கள் இலங்கை
தமிழர்களின் வரலாறு அறியாதவர் என்று இடித்துரைத்தேன். இந்த செய்தி இங்குள்ள பத்திரிகையில் படத்துடன்
வந்திருக்கிறது.
இலங்கை தமிழருக்காக குரல் கொடுக்கும் பலருக்கு இலங்கை தமிழரின் சரியான வரலாறு தெரியாது.
உலகத்திலேயே தமிழ் மொழி பேசும் ஹிந்து பாரம்பரியம் கொண்ட ஓரினம், நாங்கள் இந்தியாவில் இருந்து
வந்தவர்கள் அல்ல என்று சொல்பவர்கள் இலங்கையின் வட கிழக்கில் வாழும் தமிழர்கள் மட்டுமே.
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றாவது தன்னை இந்திய தமிழரின் வாரிசு என்று சொல்லியதுண்டா? இல்லவே
இல்லை. ஆனால் இவர்கள் அவர்களை தொப்புள் கொடி உறவு என்று வர்ணிக்கின்றனர். 1983 இனக்கலவரத்தில்
தமிழர்கள் பாதிக்கப்படும் வரை அவர்கள் இந்தியாயாவைப்பற்றியோ இந்திய தமிழர்களைப் பற்றியோ
கணக்கெடுக்கவில்லை. இழிவாக - மலிவாகவே பேசுவர்.
இது நிற்க, இந்த 'முடிசூட்டு விழாவில்' கலந்து கொள்ள 4000 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்குதாம்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இருப்பவர் மோடி என்ற பெயரை அவர் எடுத்துள்ளார்.
ராஜபக்சே வருகையை எதிர்த்து மே 26 காலை 11 மணி அளவில் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில்
வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது - பத்திரிகை செய்தி
.
வைகோ அவர்கள் மோடி அவர்களையும் ராஜ் நாத் சிங் அவர்களையும் நேரில் சந்தித்து ராஜபக்சே வேண்டாம்
என்று கேட்டும் அவர்கள் ஒப்பவில்லை. அதையும் மீறி வைகோ எதிர்ப்பு ஆர்பாட்டம் டெல்லியில் செய்வது
பா.ஜ.க. வினரை அவமதிப்பதுபோல் ஆகும். மாறாக சென்னையோடு அதனை முடித்திருக்கலாம்.
இது பா. ஜா. க. முகாமில் வைகோ மீது அதிருப்தியைக் கொண்டு வரும். அவரோடு நெடுந்தூரம் பயணிக்கத்
தயங்குவர். ராஜ்யசபா MP, மந்திரி பதவி என்பதெல்லாம் சந்தேகமே. ஈழ கோரிக்கைக்கு வட நாட்டில்
ஆதரவில்லை என்பதை நாம் உணரவேண்டும். நாளை காம்மன்வெல்த் மாநாட்டில் இருவரும் கைகுலுக்கி
போட்டோ எடுப்பர். அப்போது வைகோ என்ன செய்வார்?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’-ன் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி.
பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழரான இவர் ‘தி இந்து’வுக்கு அளித்த
சிறப்புப் பேட்டியில்;
ராஜபக்சேவைத் தவிர்த்திருக்க முடியாதா?
"எப்படி முடியும்? சார்க் நாடுகளை அழைக்கும்போது இலங்கை அல்லது பாகிஸ்தானை மட்டும் வர வேண்டாம்
என்று கூற முடியுமா? இந்தியாவுக்கு எதிரி நாடு கிடையாது என்பது எங்கள் கருத்து. அனைவரிடமும் நேசக்கரம்
நீட்டவே இந்தியா விரும்புகிறது."
இலங்கைப் பிரிவினையை எதிர்க்கிறோம் என்றும் அவர் சொன்னார். அப்படியானால் தமிழீழ - தனிஈழ
ஆதரவாளர்களின் நிலை என்ன? இவர் பேட்டியின் மூலம் பா.ஜ.க. வின் இலங்கை கொள்கை என்னவென்பது
தெளிவாகி விட்டது.
தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் காங்கிரெஸ் ஆட்சியில் ஜல்லி கட்டு காளைகளாக துள்ளித்
திரிந்ததுபோல் இனியும் துள்ள முடியாது. தமிழக முதல்வரும் அடக்கி வாசித்தால் தான் கேட்டது கிடைக்கும்.
நிச்சயமாக தமிழகம் புதிய அரசியல் சூழலை சந்திக்கப்போகிறது.
இதைப் பாருங்கள்;
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, இலங்கை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய, அந்நாட்டு அதிபர்
ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
கணணி வழி செய்தி.
இதற்குரிய வாசகர் கருத்தைப் பாருங்கள்.
THIRUMALAI from Kumar
இது மோடி அரசின் முதல் வெற்றி
Gautham from Chennai
A right foot forward...Time should be made to prove with sincere efforts by one and all particularly the powers that
be in Sri Lanka that it is a great leap forward indeed .
R.M.Manoharan Manoharan from San Ramon
பேச்சு வார்த்தை நடத்தாமலேயே மோடிக்கு கிடைத்த வெற்றி இது. பதவிஏற்பு விழாவுக்கு அழைத்ததன் நிமித்தம்
இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு வளர வித்திடப்பட்டிருக்கிறது. இதன் முதல் பலன் இந்திய மீனவர்களின்
விடுதலை. இப்பொழுதும் தமிழ் கட்சிகள் திருப்தி அடைய மாட்டார்கள். இந்திய மீனவர்கள்தானே விடுதலை
தமிழகமீனவர்கள் என்று கூறவில்லையே என்றே குறை கூறுவ்வார்கள். அவர்கள் ராஜபக்ஷேவை எதிரியாகவே
பார்ப்பதால், இந்தியாவும் அவரை எதிரியாகவே பாவிக்கவேண்டும் என்ற குறிக்கோளும் குறுகிய எண்ணமும்
கொண்டவர்கள். அவர்கள் திருந்தவே மாட்டார்கள். ஆர் எம் மனோகரன்.
இதோ இதையும் படியுங்கள் ;
நவாஸ் டெல்லி பயணம் எதிரொலி: 151 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ளவுள்ள
நிலையில், இந்திய மீனவர்கள் 151 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதன் அடையாளமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே படியுங்கள் தினமணி ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதியை:
"நரேந்திர மோடியின் நல்லெண்ணத்தை, அவரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட பாகிஸ்தான் புரிந்துகொண்டு,
பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி ஏற்பு விழாவுக்கு வர இருக்கும் நிலையில், இலங்கை அதிபர்
ராஜபட்ச பதவி ஏற்பு விழாவுக்கு வருவதற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் வருவது மிகவும்
வருத்தத்திற்குரியது. நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசு, அவர் பிரதமரானவுடன் ராஜாங்க
ரீதியிலான அழைப்பு விடுத்திருப்பதை நமது தமிழகத் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று உலக நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் குரல்
கொடுக்கலாம். ஆனால் அவர் இலங்கை அதிபரல்ல என்று ஆகிவிடுமா? அவருடன் பேசமாட்டோம், அவரை
அழைக்க மாட்டோம் என்று நாம் முடிவெடுத்தால், போருக்குப் பின் வாழத் துடிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள்
ஈழத்தில் உயிருடன் இருக்கிறார்களே, அவர்கள் கதி என்ன? நாளும் பொழுதும் நமது மீனவர்கள் சிறைபிடிக்கப்
படுகிறார்களே, அவர்களைப் பாதுகாப்பது எங்ஙனம்? கோடிக்கணக்கில் இலங்கையின் வடக்குப் பகுதியைப் புனர்
நிர்மாணம் செய்ய இந்தியா வழங்கிய பணம், இலங்கையின் தென் பகுதியை வளப்படுத்துவதாகக்
கூறப்படுகிறதே, அதைக் கண்காணித்துத் தட்டிக் கேட்பது எப்படி?
அதிபர் ராஜபட்சவின் செயல்பாடுகள் ஏற்புடையவை அல்லதான். அதற்குத் தீர்வு இலங்கையுடன் போர்
தொடுப்பதல்ல, அவரை அழைத்துப் பேசுவது, பணிய வைப்பது.
அதிபர் ராஜபட்சவுடன் பேசாமல் இருப்பதாலோ இலங்கையை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாலோ நாம் சாதிக்கப்
போவது என்ன என்பதை தமிழக அரசியல் கட்சிகள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளன. கடைசியாக ஒரு வார்த்தை.
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, பாகிஸ்தானும் இலங்கையும் நமது அண்டை நாடுகள். அந்த நாடுகளுடன்
நட்புறவு பாராட்டி நாம் இயங்கியாக வேண்டும். ஆப்பிரிக்காவுக்கு அப்பால், அல்லது அண்டார்டிக்காவுக்குப்
பக்கத்தில் விலகிப் போ என்று சொல்ல முடியாது."
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தைப் பார்த்துக் கொள்ள துடித்தாயோ
(பாடல் - படம் - நெஞ்சில் ஓர் ஆலயம்)
|