அழைத்ததோ விதி!
"சில மாதங்களுக்கு முன்புதான் அவள் தனது சகோதரனையும் அவரது மனைவியையும் MH370 ல் இழந்தாள். இப்போது தனது பெறா மகளையும்
அவளது கணவரையும் MH17ல் இழந்து விட்டாள். இது எல்லோருக்கும் பழைய சம்பவங்களை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது. எங்கள்
தைரியம் எல்லாம் போய்விட்டன" என்று கூறி தனது சகோதரியின் பரிதாப நிலைக்காகக் குமுறிக் குமுறி அழுதது கிரேக் பர்ரோவ்ஸ்.
திருமதி கய்லேன் மேன் வசிப்பது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில். சென்ற மார்ச் மாதம் மறைந்த மலேசியாவின் MH370 விமானத்தில்
அவளது சகோதரன் ரொட் பர்ரோவ்ஸ் ஸும் அவரது மனைவி மேரியும் சீனாவின் பெய்ஜிங் கிற்கு பிரயாணம் செய்யும்போது காணாமல்
போய்விட்டனர்.
அந்த துக்கம் இன்னும் நெஞ்சை விட்டகலா நிலையில் இப்போது பெறாமகள் மரீ ரிஸ்கும் அவளது கணவன் ஆல்பர்ட்டும் நான்கு வார ஐரோப்பா
விடுமுறையைக் கழித்துவிட்டு மெல்போர்ன் நோக்கி திரும்பும் வழியில் MH17 விபத்தில் சிக்கி மாண்டனர்.
"எப்படி ஒரே விமான குழுமத்தில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலிகொடுக்கப்படுகிறார்கள் என்று எங்களால் புரியமுடியவில்லை" என்று அவர்கள்
புலம்புகிறார்கள். பட்ட காலிலேயே படும் என்பது விதியா?
அதேவேளை கய்லேன் குடும்பத்தை எப்படி விதி அழைத்ததோ அதுபோல், மலேசியா விமானத்தில் தான் பிரயாணம் செய்வோம் என்று அடம் பிடிக்கும்
இன்னொரு குடும்பத்தை விதி தடுத்து உயிர் பிச்சை கொடுத்தது.
தடுத்ததோ விதி!
"நாங்கள் மலேசியன் ஏர்லைன்ஸ்ஸின் காதலர்கள் என்று சொன்னாலும் தவறில்லை. வேறு எந்த விமானத்திலும் பயணம் செய்ய விரும்பமாட்டோம்.
அன்று எங்களுக்கு இடம் இல்லை என்று சொன்னதும் பெரிதும் வருந்தினோம்.
அதற்கு மேலாக எங்களை KLM விமானத்தில் பயணிக்கச் சொன்னது எரிச்சலூட்டியது. காரணம் அந்த விமானத்தை எங்களுக்கு அறவே பிடிக்காது.
கடைசியில் அதில்தான் பயணம் செய்தோம். இன்று உயிரோடு கோலாலம்பூர் வந்து இறங்கி விட்டோம்" என்றனர் கையில் தங்கள் குழந்தையை
அணைத்தபடியே ஸ்காட்லாண்டைச் சேர்ந்த சிம் - இஸ்சீ தம்பதிகள்.
"யாரோ ஒருவர் எங்களைக் கண்காணித்தபடியே இருந்து நீங்கள் அந்த விமானத்தில் பயணிக்க கூடாது என்று சொன்னது போல் இருந்தது" என்றாள்
அவள்.
KLM என்றதும் தயங்கிய என்னை, "இல்லை இல்லை MH 370 மாதிரி இதுவும் எங்காவது விழுந்தாலும் விழுந்துடும்" என்று என் மனைவி கேலியாகச்
சொன்னாள். அதை நினைத்தால் இப்போ என்னவோ மாதிரி இருக்கு" என்றார் சிம்.
"மலேசியன் விமானத்தில் இல்லாது KLM விமானத்தில் நாங்கள் பயணம் செய்ய நேர்ந்தமைக்கு பெரிதும் மகிழ்கிறோம்" என்றனர் இருவரும். மனைவி
மலேசியாவின் சீன வழித் தோன்றல்.
இது விதியின் விளையாட்டோ?
Cor Schilder ரும் அவரது துணைவியுமான Neeltje Tol, யும் அடிக்கடி விடுமுறைக்காக போகக்கூடியவர்கள். ஐரோப்பா வின் பல பகுதிகளுக்கும்
சென்றுள்ளதால் இம்முறை ஆசியா செல்வோம் என்று முடிவு பண்ணி இந்தோனேசியாவின் பாலிக்கு செல்வதற்கு மலேசியா விமானத்தில்
பயணமானார்கள். Cor Schilder ஒரு தமாஸ் பேர்வழி.
விமானத்தில் ஏறுவதற்கு முன் விமானத்தை படம் எடுத்து தனது Facebook ல் அந்த படத்தைப் போட்டு "Should it disappear, this is what it
looks like. "இது காணமல் போய்விடுமானால், இதுபோல் தான் இது இருக்கும்" என்று எழுதினார். அவர் நினைத்தபடி அது துண்டு துண்டாகத்
தூளாகிக் காணமல் போய்விட்டது. அவரும் அவர் துணைவியும் உருத்தெரியாது காணாமல் போய்விட்டார்கள்.
Neeltje Tol மலர்கள் விற்கும் கடையை நடத்தினார். தனக்கு வரும் கடிதங்களை பக்கத்து கடைக்காரரை வாங்கி வைக்கும்படி சொல்லியதோடு,
"தபால்காரரே, நாங்கள் விடுமுறையில் செல்கிறோம். கடிதங்களை பக்கத்து கடையில் கொடுக்கவும்" என்று கண்ணாடி ஜன்னலில் எழுதி
வைத்துள்ளார். விடுமுறையில் சென்றுவிட்ட இந்த ஜோடி இனி எப்போது திரும்பும்? எப்போது கடிதங்களை வாங்குவார்கள்? அடுத்த நாளே அவள்
கடை வாசலில் மலர்கொத்துக்கள் குவியத்துவங்கி விட்டன.
AIDS ஐ கொல்ல முயன்றவர் ஏவுகணையால் கொல்லப்பட்டார்!
இந்த விமான விபத்தில் வருந்தக் கூடிய எத்தனையோ செய்திகள் உண்டு. அதில் ஒன்று நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல AIDS ஆராய்சியாளர் Joep
Lange அவர்களின் மரணமாகும். இவர் சர்வதேச AIDS அமைப்பின் முன்னாள் தலைவர்.
மெல்போர்ன் நகரில் சென்ற 20ம் திகதி நடந்த 20வது AIDS மாநாட்டில் கலந்து கொள்ள அவரும் வேறு 6 ஆராய்சியாளர்களும் இந்த விமானத்தில்
பயணம் செய்தனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சர்வதேச AIDS அமைப்பின் தற்போதைய தலைவரான Chris Beyrer கூறும்போது "திரு Lange யின் இறப்பால் HIV/AIDS இயக்கம் உண்மையில் ஒரு
மாமனிதரை இழந்து விட்டது" என்றார்.
AIDS நோயைக் கண்டுபிடித்த பங்காளியும் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளருமான Dr. Francoise Barre Sinoussi கூறும்போது " Joep ஒரு
அருமையான மனிதர். தனது வாழ் நாட்களை AIDS நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கவேண்டும், ஏழை மக்களுக்கு அது இலகுவாகக் கிடைக்க
வேண்டும் என்பதிலேயே அர்பணித்தவர். கொகோகோலா உலகெங்கும் கிடைக்குமென்றால் ஏன் AIDS எதிர்ப்பு மருந்து உலகெங்கும் கிடைக்க முடியாது
என்பது அவரின் வாதம்.
அவரது இறப்பு எங்களுக்கு - மானிடத்திற்கு பெரிய இழப்பு. எனது துயரத்தை வார்த்தைகளினால் சொல்லமுடியாது. நான் மிகவும் உடைந்து
போய்விட்டேன்" என்றார்.
சீக்கிரம் வீடு வருவேன் என்ற பைலட் சீக்கிரமே சென்றுவிட்டார்!
மலேசியா விமானம் MH 17, பகல் 12 மணிக்கு அம்ஸ்டர்டம்மில் இருந்து புறப்பட்டு அதிகாலை 6 மணிக்கு கோலாலம்பூர் வந்தடையும். விமானத்தை
நகர்த்த முன், 25 வருட அனுபவம் மிக்க Capt. Wan Amran Wan Hussain, தன் மனைவி Meriam Yusoff க்கிற்கு அனுப்பிய கடைசி WhatsApp
செய்தி : 'சீக்கிரம் வீடு வந்து விடுவேன்' என்பதாகும். ஆனால் இனி அவர் வரவே மாட்டார் என்ற செய்தியை அறியாது மரியமும் இரண்டு
மகன்களும், யூனுஸ் 10, இர்பான் 8, தூங்கினர்.
காலையில் தொலைகாட்சி நிறுவனம் ஒன்று தகவல் அனுப்பி தொலைக்காட்சியைப் பார்க்கும்படிக் கேட்டது. மரண செய்தி சொல்ல விமான
நிறுவனத்தில் இருந்து ஒருவர் வந்தார். அமைதியாக இருந்த மரியம், 'என் மகன் மாறல் செய்தி அறிந்தேன். தொலைகாட்சியைப் பார்த்தபோது நான்
அதிர்ந்து விட்டேன்' என்று மெல்லிய குரலில் கூறினார்.
மூத்தவனுக்கு செய்தி புரிந்தது. பாப்பா இனி வரமாட்டார் என்று மலாய் மொழியில் கூறிக் கொண்டான். இளையவனுக்கு விபரம் புரியவில்லை.
ஆகவே அவன் சற்று குழப்பமாக இருந்தான். மரியம் வெளித்தோற்றத்திற்கு அமைதியாகத் தோன்றினாலும் அவரது உள்ளம் எப்படி கொதிக்கிறது
என்று யாருக்கும் தெரியாது என்று உறவுப் பெண் ஒருத்திக் கூறினார்.
ஒரு குடும்பமே பலி!
"நாங்கள் புதிய ஹிஜ்ராவைத் துவங்குகிறோம். அல்ஹம்து லில்லாஹ்".
இதுதான் திருமதி Ariza தனது Facebook கில் அம்ஸ்டர்டம் விமான நிலையம் புறப்படு முன்பு கடைசியாக எழுதிய வார்த்தைகள். அத்துடன் தனது
குடும்பத்தாரின் 15 பயண பெட்டிகளின் படத்தையும் இணைத்திருந்தார்.
அப்பெட்டிகள் வாகனத்தில் ஏற்றி விமான நிலையம் செல்வதற்காக வைக்கப் பட்டிருந்தன. அவற்றில் தனது பெயர், தனது கணவன், மூன்று
மகன்கள், மகள் ஆகியோரின் பெயர்களும் முறையே எழுதப்பட்டிருந்தன. அத்துடன் மூன்று இதயங்களின் படத்தையும் வரைந்திருந்தார்.
அவர்கள் அதிகம் பிரயாணம் பண்ணும் குடும்பம். கணவர் Tambi Jiee, கசக்ஸ்தானில் ஷெல் கம்பனியில் இரண்டரை ஆண்டுகள் வேலை பார்த்தார்.
மூன்று குழைந்தைகள் - மகன்கள் Afzal , Afruz மகள் Azmeena ஆகியோர் அங்கேயே படித்தனர்.
மூத்தவன் 19 வயது Afif, கோலாலம்பூரில் உள்ள Taylor University யில் படித்தான். வரும் ஆகஸ்ட்டில் கட்டிடக்கலை பட்டப் படிப்பில்
நுழைவதற்கு தேறி இருந்தான். இப்போது தனது குடும்பத்தார் ஊர் திரும்புமுன் அவர்களுடன் ஐரோப் பாவில் சுற்றுப் பயணம் செய்வதற்காகவே
வந்தான்.
இது 17 வயது இரண்டாவது மகன் Afzal கடைசியாக எழுதிய பிரியாவிடை செய்தி. எல்லோருக்கும் Facebook கில் எழுதும் பழக்கம்
உண்டு.
"இரண்டரை வருடங்களுக்கு முன்பு இங்கு வருவதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. காரணம் எப்போது வேண்டுமானாலும் நான்
ஊருக்குப் போய்வரலாம் என்று நினைத்ததால். ஆனால் நான் இப்போது ஊர் திரும்பவுள்ளேன். துரதிஷ்டவசமாக இனி ஒருபோதும் இங்கு வரமாட்டேன்
என்றே நினைத்து துக்கப்படுகிறேன்."
அவர்கள் வசித்த நகரத்தின் பெயர் Atyrau. அது காஸ்பியன் கடலின் வடக்கு கரையோரம் இருந்தது. அவனுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது.
ஆகவே அவன் வருந்தினான். "எனது நாட்கள் இங்கு மகிழ்ச்சி கரமாகக் கழிய உதவிய அனவைருக்கும் எனது நன்றிகள்" என்று அவன்
முடித்திருந்தான்.
13 வயது Afruz மார்ச்சில் மறைந்த MH 370 விமானத்தால் மிகவும் பாதிக்கப்பட்டான். தனது Facebook கில் அந்த விமானத்தின் கருத்துப் படம்
ஒன்றையே முகப்பாக வைத்துள்ளான். தனது இருகைகளாலும் அந்த விமானத்தை நோக்கி "தயவு செய்து வந்து விடு" என்று எழுதி வைத்துள்ள
அப்ருஸ் இன்று வராத இடத்திற்கே சென்று விட்டான் சுவடு தெரியாது. என்ன கொடுமை!
Afruz க்கு பூனைகளை ரொம்பவும் பிடிக்கும். சிறந்த கால்பந்தாட்ட ரசிகனும் கூட. மன்செஸ்டர் யுனைடெட் அவனுக்கு பிடித்தமான அணி. உலக
கால்பந்து கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்று அவன் சொன்னபடி ஜெர்மனி வென்றது.
இந்த மாத ஆரம்பத்தில் கசக்ஸ்தான் விட்டுப் புறப்படுமுன் அவன் எழுதினான்; ஜனவரி 4, 2012 முதல் ஜூலை 4, 2014 வரை இங்கு கழித்த நாட்கள்
எனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள்.
“Goodbye Atyra, Kazakhstan…. Goodbye friends, nice knowing u guys… Goodbye cats, Hope u’ll get a new kind owner… please don’t
die.”
"குட் பை அடிர , கசக்ஸ்தான்... குட் பை நண்பர்களே, உங்களை அறிந்ததற்கு மகிழ்ச்சி, குட் பை பூனைகளே, உங்களுக்கு அன்பான புதிய
எஜமான் கிடைப்பார் என்று நம்புகிறேன், தயவு செய்து இறந்து விடவேண்டாம்." ஆனால் அவன் இறந்து விட்டானே! Goodbye Afruz.
அவன் சகோதரி Azmeena சமீபத்தில் தனது பக்கத்தில் காசாவில் நடந்த வன்முறைகளின் படங்களையே பதிவு செய்து இருந்தாள். அதற்கு முன்பாக
தந்தையர் தினம் அன்று ஒரு கவிதையை தனது தந்தைக்கு சமர்பித்திருந்தாள்.
"இந்த உலகத்தின் மிகச் சிறந்த தந்தை எனக்கு கிடைத்திருக்கிறார். நான் பெரிய அதிர்ஷ்டசாலி. மகிழ்சிகரமான தந்தையர் தினத்திற்கு எனது
வாழ்த்துக்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்
Tambi Jiee அவர்களே. (இருக்காதா என்ன ஒரே பெண் அல்லவா).
தந்தை Tambi Jiee குடும்ப புகைப்படங்களால் தனது பக்கத்தை நிரப்பி இருந்தார். குறிப்பிடத்தக்க எந்த செய்தியையும் அவர்
வெளியிடவில்லை.
திருமதி Ariza Tambi Jiee யின் மச்சி நொரைனி ஹோல் அந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையம் வந்திருந்தார். கவலை தோய்ந்த
முகத்துடன் இருந்த அவர் 'மலேசியன் விமான நிறுவனத்தார் விரைவில் உடல்களை கண்டெடுப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று கைக்குட்டையால்
கண்களைத் துடைத்துக் கொண்டு கூறினார்.
அவரது மகன் Azfar Aza, "எனது தாயால் இந்த சம்பவத்தை நம்பவே முடியவில்லை. இது இறப்பதற்கு உண்டான வழியே அல்ல"
என்றான்.
"நாங்கள் புதிய ஹிஜ்ராவைத் துவங்குகிறோம்" என்று சொன்ன திருமதி Ariza திரும்பி வராத ஊருக்கு அல்லவா குடும்பத்தோடு ஹிஜ்ரா சென்று
விட்டார்!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ஆறில் சாகலாம் அறியாத வயது. அறுபதில் சாகலாம் அனுபவித்த வயது. பதினாறில் சாகலாமா? உலகை அறியவேண்டிய வயதல்லவா?
[Administrator: கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 1:00pm/23.07.2014] |