கேள்வி: பெண்களின் கைப்பையிலும் கூடையிலும் வெடி குண்டுகளை வைத்து இத்தனை அப்பாவி பொதுமக்களைக் கொல்வது ஒரு கோழைத்தனமான
செயல் என்று நீர் நினைக்கவில்லையா?
பதில்: நேபாம் குண்டுகளை அப்பாவி கிராமத்தவர்கள் மீது போட்டு பல்லாயிரக் கணக்கானோரைக் கொல்வது அதை விடக் கேவலமான கோழைத்தனம்
என்று நீங்கள் நினைக்கவில்லையா? ஆமாம், குண்டு பொழியும் உங்களுடைய சண்டை விமானங்கள் எங்களிடம் இருந்தால் எங்கள் வேலை
இலகுவாக இருக்கும். உங்கள் விமானங்களை எங்களுக்குத் தாருங்கள், எங்கள் கைப்பைகளையும் கூடைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த உரையாடல் 1967ல் வெளியான The Battle of Algiers - அல்ஜீரியாவின் போர் என்ற திரைப்படத்தில் வருகிறது. இது பிரான்சின்
காலனித்துவத்தை எதிர்த்த அல்ஜீரிய மக்களின் சுதந்திர போராட்டத்தைப் பற்றியது (1954-1962). கையில் விலங்கிடப்பட்டு கைதியாக்கி பக்க சார்பான
பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் முன்னால் போராட்ட வீரர் Ben M’Hidi நிறுத்தப்பட்டு கட்டபொம்மன் - ஜாக்சன் துரை பாணியில் நடந்த விசாரணை
அது.
பிரான்ஸ், விமான தாக்குதல்களை நடத்தியும் கிராமப் பகுதியில் நேபாம் குண்டுகளை வீசியும் போராளிகளை எதிர்த்தபோது அவர்களோ
பிரெஞ்சுகாரர்கள் புழங்கும் பொது இடங்களிலும், தேநீர் கடைகளிலும், வழித்தடங்களிலும் கைக்குண்டுகளை வெடிக்கச்செய்தார்கள். இதில் எங்கே
இருக்கிறது இராணுவ சம நிலை?
இருப்பினும் இறுதியில் அவர்கள் வென்றார்கள். சுதந்திரம் கிடைத்தது - ஐரோப்பிய கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து. ஆயுத பலத்தால் நாடு
பிடித்த எந்த ஐரோப்பியனும் அதனை இலகுவில் விட்டுப் போகவில்லை. விரும்பவில்லை.
ஐரோப்பியர்களிடம் இருந்த பீரங்கி பலமும் மொகலாயர்களிடமும் இந்திய சிற்றரசர் களிடமும் இருந்த ஒற்றுமை இல்லாத தன்மையும் தான் அவர்கள்
இந்தியாவை 400 வருடங்கள் ஆள உதவினதே தவிர அவர்களின் அறிவு பலம் அல்ல.
இன்று பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரலியர்களுக்கும் நடக்கும் சமரின் நிலையும் இது போன்றது தான். அறபுலகில் ஒற்றுமை இல்லை. இருந்திருந்தால்
தனது சகோதரன் நாயிலும் கீழாக அடிபடுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
ஹமாஸ் தீவிரவாதத்தை - பயங்கரவாதத்தை தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்று வலது சாரி அறபு நாடுகள் சினப்பதும் அவர்கள்
தனிமைப் படுத்தப்பட்டுள்ளதிற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
ஹமாஸ் ஏவும் கஸ்ஸம் ராக்கெட் சொந்த தயாரிப்பாகும். ஏவப்பட்ட 3,000 ராக்கெட்டிற்கு பலியானது ஒரு இஸ்ரேலியரும் ஒரு தாய்லாந்து
பணியாளருமே. அமெரிக்காவில் சென்ற ஆண்டு சுதந்திர தினமான ஜூலை 4 கொண்டாட்டத்தின் போது ஏவப்பட்ட ராக்கெட்டின் போது தற்செயலாக
இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு.
இதே நேரத்தில் இஸ்ரேலின் இராணுவ வல்லமை என்ன? பாலஸ்தீனர்களின் இராணுவ பலம் என்ன?
" நீங்கள் காசாவின் தெருவில் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயல்பவராக இருந்தால் ஒழிய அல்லது இஸ்ரேலின் வான் தாக்குதலில்
இருந்து தற்காக்க வீதியில் தூங்குபவராக இருந்தால் ஒழிய அவர்களின் இராணுவ ஆளுமையை அறிய மாட்டீர்கள். 1989, 2000, 2009 இன் போது
அம்மக்களுக்கு உதவி - தொண்டு ஆற்றியபோது எனக்கு இந்த அனுபவம் நிறைய கிடைத்தது" என்று கூறும் Dr. James E. Jennings,
அமெரிக்காவின் அமைதிக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர்.
"தெருவில் சும்மா ஓடித்திரியும் சிறுவர்கள் முதுகில் சுடப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். 2009, 2012 காலப் பகுதியில் ரபாஹ் வில் கணணி மூலம்
ஆளில்லா விமான வழி தாக்குதல், F-15 விமானம் குண்டு மழை பொழிந்து பெருத்த சேதம் உண்டாக்குவது போன்றவற்றில் அவர்களின் இராணுவ
மேன்மையைக் கண்டு வியந்திருக்கிறேன். வான் தாக்குதல்கள் பெரும்பாலும் இளைஞர்களை இலக்கு வைத்தே நடந்தாலும் சாதாரண பொது மக்களும்
அதற்க்கு பலியாகிறார்கள்" என்றார் அவர்.
இஸ்ரேல் தனது ஆயுதங்களை அமெரிக்கா விடமிருந்தே FMF - Foreign Ministry Finance சலுகையில் இலவசமாக வாங்குகிறது. 2009முதல்
2018 வரையான 10 ஆண்டு கால உடன்படிக்கையின் படி 30 பில்லியன் (ஆயிரம்) டாலர் அளவு இராணுவ தளபாடங்களை இஸ்ரேல்
பெறமுடியும்.1948 முதல் 100 பில்லியன் டாலர் பெறுமதி இராணுவ உதவியைப் பெற்றிருக்கலாம்.
இந்த FMF முறைப்படி அமெரிக்கா சுமார் 72 நாடுகளுக்கு, இந்தியா தவிற, சிறிய அளவில் இலங்கை உட்பட, இலவச ஆயுதங்கள் கொடுக்கிறது.
அமெரிக்க தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய பணமும் கொடுக்கிறது.
இந்த 72 நாடுகள் பெறுவதில் 55% விகிதம் இஸ்ரேலே பெறுகிறது. அது இஸ்ரேலின் இராணுவ செலவில் 23-25% விகிதமாகும். இஸ்ரேல் தனது
முப்படைகளிலும் வான் படையை விண்ணை முட்டும் அளவு உச்சத்தில் வைத்துள்ளது. அமெரிக்கா தரும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பல
இஸ்ரேலின் "விசேச" தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகை கருத்துப் படம் ஒன்று வெளியிட்டது. அதன்படி நடுவீதியில் சிறுவன் ஒருவன் கையில் கல் ஒன்றை
வைத்துக் கொண்டு நிற்கிறான். அவனைக் குறிவைத்து எதிரே இராணுவ தாங்கி ஒன்று நிற்கிறது.
இதன் பொருள் ; சர்வ வல்லமை பொருந்திய இராணுவத்தை எதிர்த்து கையில் கல்லோடு நிற்கும் சாதாரண சிறுவன் ஒரு குண்டில் உருக்குலைந்து
போய்விடுவான். இஸ்ரேலிய துருப்புகளுக்கு எதிராகக் கல் வீசினால் மரண தண்டனை கிடைக்கும் என அவர்களின் சட்டம் சொல்லுகிறது. எண்ணே
கருணை!
ஆகவே இஸ்ரலியர்களைப் பொருத்தவரையில் இந்தப் போர் மீன் தொட்டியில் இருக்கும் மீனைச் சுடுவது போன்றதுதான். இவ்வாறு சமநிலையற்ற ஒரு
போராட்டத்தை நசுக்குவதற்கு அளவுக்கதிகமான ஆயுதங்களைப் பாவித்து சேதம் விளைவிப்பதை, உலகப் பெரியவரும் அவரது நண்பர்களும்
"இஸ்ரேலுக்கு தன்னைக் காத்துக் கொள்ளும் உரிமை உண்டு" என்று கூறுகிறார்கள். அப்படியானால் மற்றவர்களுக்கு இப் பூமியில் வாழும் உரிமை
இல்லையா?
இதைப் பாருங்கள். 21 வயது Yakiri Rubí Rubio ஓர் இளம் பெண். அவள் வசிப்பது மெக்ஸிகோவின் ஒரு சிறிய நகரத்தில்.
கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் திகதி தனது நண்பி ஒருத்தியைப் பார்பதற்காக அவள் வீதியில் சென்றபோது, 90 கிலோ எடை, 37 வயது Miguel Ángel
Anaya, வும் அவன் சகோதரன் Luis Omar Anaya வும் கத்திமுனையில் அவளைக் கடத்தி ஒரு விடுதிக்கு இழுத்துச் சென்று அவள் மானத்தைப்
பறிப்பதற்கு முயன்றபோது, போராடிய Rubio அவனது கத்தியாலேயே அவனது வயிற்றுலும் கழுத்திலும் குத்தினாள்.
இரத்தம் வழிய Miguel வெளியே ஓடினான். அது வழக்காயிற்று. மானத்தைக் காக்கப் போராடினேன் என்ற அவள் வாதத்தை நீதிபதி ஏற்றாலும்
'அளவுக்கதிகமான பலம் உபயோகிக்கப் பட்டதால் அது கொலை முயற்சி' என்றார். அப்படியானால் அவளுக்கு 40 முதல் 60 ஆண்டு தண்டனை
கிடைக்கலாம்.
நமது பகுதி நாடுகளில் கூட இது போன்ற சட்டங்கள் தான் உள்ளன. பெண் தன்னைத் தற்காக்கும் முயற்சியில் ஆண் இறந்தால் அவள் மீது கொலைக்
குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அவள் ஆணால் கொல்லப்பட்டால் அவள் போற்றப்படுகிறாள். அவளுக்காக ஆர்ப்பாட்டமும் நடக்கிறது. என்ன
விந்தை!
காசாவில் கையில் கல் வைத்திருக்கும் சிறுவனை இராணுவ தாங்கியால் அழிப்பது, அளவுக்கு அதிகமான பலம் பாவித்ததாக ஆகாதா? சிறுவனிடம்
இருந்து தன்னைக் காக்க இராணுவ தாங்கி தான் வழியா? இதைத்தான் மலையைக் கில்லி எலி பிடிப்பது என்பார்கள். இது போர் குற்றம் இல்லையா?
இன்று போய் நாளை வா என்று இராவணனுக்கு சொல்லியதின் பொருள் தான் என்ன?
அடுத்து, அது மே மாதம் 15ம் திகதி நகப் தினம். பாலஸ்தீனர்களைப் பொருத்தவரையில் 1948ல் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து
வெளியேற்றப்பட்டதை நினைவு கூறும் துக்க தினம் - ஆட்சேப தினம். ஆகவே இங்கும் அங்குமாக இளைஞர்களின் ஆர்பாட்டங்கள் நடக்கவே
செய்தன. கல் வீச்சுகளும் இருந்தன.
மேற்கு கரையின் ஒபர் சிறைச் சாலைக்கு எதிராக நடந்து சென்ற எந்த ஆர்பாட்டத்திலும் ஈடுபடாத - கையில் கல் இல்லாத 17 வயது Nadeem Nawara
திடீரென கீழே விழுந்தான். டப் டப் என துப்பாக்கி சப்தமும் கேட்டது.
அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவனைத் தூக்கி மருத்தவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவன் இறந்து விட்டான்.
சிறைச்சாலையின் மரத்தடியில் கையில் துப்பாக்கி தாங்கிய இரண்டு இராணுவ வீரர்கள் இங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சரியாக 75 நிமிடங்களுக்குப் பிறகு அதே இடத்தில் எதிர் திசையில் தெருவைக் கடந்து சென்ற 16 வயது Mohammad Salameh நெஞ்சில் சுடப்பட்டு இறந்தான். இந்த சம்பவங்கள் அங்கு பெரும் பரப்பை உண்டு பண்ணியது. இஸ்ரேலிய அரசு மறுத்து வளவள கொல கொல என்று அறிக்கை விட்டது.
ஆனால் லண்டன் Guardian பத்திரிகை எதிர் கட்டிடத்தின் CCTV பதிவை வெளியிட்டு அந்த இரு இளைஞர்கள் வழிப்போக்கர்கள். அவர்களால்
துருப்புகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆகவே இது கொலை எனக் கூறியது. 15 வயது Mohamed al-Azi வேறொரு துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டான். அமெரிக்க வெளி உறவு செயலாளர் ஜான் கெர்ரி இந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்தார்.
இது இப்படி இருக்கையில் ஜூலை 10 திகதி இரவு முதல் ஹெப்ரோன் பகுதியில் இருந்து மூன்று யூத இளைஞர்கள் Shaar (16) , Frenkel (16)
Yifrach (19) வயது, ஹமாஸ் பயங்கர வாதிகளால் கடத்தப் பட்டார்கள் என்ற குற்றம் சாட்டின் பேரில் வளர்ந்த பகைமை இன்று போராக
உருவெடுத்து பாலஸ்தீனம் அழிகிறது. பாலஸ்தீனர் கொல்லப்படுகிறார்கள். கடத்தியது ஹமாஸ் அல்ல அதனைச் சேர்ந்த ஒரு ஒட்டுக்குழு என்று
இஸ்ரேல் பின்பு ஒப்புக்கொண்டாலும் தாக்குதலை நிறுத்தவில்லை.
இஸ்ரேலை எதிர்த்து நியூயார்க் நகரில் பல ஆர்பாட்டங்கள் கடந்த சில தினங்களாக நடந்தன. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது யூத சங்கங்கள்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடத்தியவை. Neturei Karat International: Jews Against Zionism’, Jewish Voice for Peace ஆகியன
அட்டைகளை தூக்கிக் கொண்டு ஆக்ரோசமாக நின்றன. அமெரிக்க யூதர்களின் தயாரிப்புகளை பகிஸ்கறியுங்கள் என்றனர்.
சவுதி மன்னர் அப்துல்லா வெள்ளிக்கிழமை (1/08) வெளியிட்ட
அறிக்கையில் சர்வதேச சமுகம் இந்தப் போரை முடிவிற்கு கொண்டு வராமல் மௌனமாக இருப்பது மன்னிக்கமுடியாதது என்றும், பாலஸ்தீன
சகோதரர்கள் இப்படி இரத்தம் சிந்துவது வருத்தம் தருகிறது என்றும், மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் மற்றவர்களைக் கொல்வதும் அதனை
ஊடகங்களில் பிரசுரிப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும் கண்டித்துள்ளார்.
ஆனால் இஸ்ரேலைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அப்துல்லா இதுவரை 300 மில்லியன் ரியால்களை பாலஸ்தீனத்திற்கு
கொடுத்துள்ளார்.
தொட்டால் சுடுவேன் எனும் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்த சில மணித் தியாலங்களில் தனது இரனணுவ வீரன்
ஒருவனை ஹமாஸ் கடத்தி போர் நிறுத்தத்தை மீறிவிட்டது என்று கூறி தனது பேயாட்டத்தை துவங்கி காசாவை நாசம் பண்ணியது.
இப்போது அவன் போரில் இறந்து விட்டான் என்று கூறி காசாவை விட்டு வெளியேறி உள்ளது. இதுவரை 1700 பாலஸ்தீனர் இறந்துள்ளனர். ஆகவே
ஹமாஸ் சும்மா இருக்குமா? காசா தாக்குதல் முடியும் அறிகுறி இல்லை!
|