மாண்பு மிகு பிரதமர் அவர்களே,
"இந்தியா பாம்பு வித்தைக்காகவும், சித்து வேலைக்களுக்காகவும் அடையாளம் காணப்பட்ட நிலைமையும் இருந்தது. தற்போது இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக உருவெடுத்துள்ளது. ஐ.டி துறை இளைஞர்களால் இது சாத்தியமாயிற்று. இந்தியாவை ரெயில்வே இணைக்கிறது என்று கூறப்படுவது உண்டு. ஆனால் தற்போது இந்திய தேசத்தை இணைப்பது ஐ.டி துறையாக உள்ளது."
கடந்த சில வருடங்களாக நீங்கள் '60 ஆண்டு காங்கிரெஸ் ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்றீர்கள். நாட்டை சீரழித்து விட்டார்கள்' என்று மேடை தோறும் முழங்கினீர்கள். அது தேர்தல் பிரச்சாரத்தோடு முடியவில்லை. சென்ற வாரம் கூட கூறினீர்கள். ஆனால் இன்று வித்தியாசமாகப் பேசுகிறீர்கள்.
'தற்போது இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக உருவெடுத்துள்ளது' என்று பெருமைப்படும் நீங்கள் அதற்கு உங்கள் கட்சியின் அர்ப்பணிப்பு என்ன என்று ஏன் கூறவில்லை? அப்படியானால் இந்த பெருமைக்கு யார் பொறுப்பு?
உங்கள் கட்சி பொறுப்பில்லை என்றால் யாரோ ஒருவன் அதற்கு பொறுப்பாக இருப்பான்தானே. அவனைத்தான் கடந்த சில ஆண்டுகளாக நாட்டை சீரழித்து விட்டான் என்று அகராதியில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் கொண்டு அர்ச்சனை செய்தீர்கள்.
சீரழித்து என்றால் என்ன அர்த்தம்? சீரும் சிறப்புமாக அன்று இருந்தது, இன்று அழிந்து விட்டது என்று பொருள். 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கணணி துறை இருந்ததா? 60 ஆண்டிற்கு முன்பு அப்படி உங்கள் ஊரில் சீரும் சிறப்புமாக இருந்த எது இன்று இல்லாமல் போய்விட்டது?
அன்று இல்லாத எதுவும் இன்று உங்கள் ஊரில் புதிதாக இல்லையா? எங்கள் ஊரில் நிறைய நிறைய உண்டு. பட்டியல் போட்டு மாளாது. இருப்பினும் சிலவற்றை சொல்கிறேன்.
அன்று சைக்கிள் வைத்திருந்தவர்கள் சிலரே. இன்று சைக்கிளில் செல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் கடந்த நூற்றாண்டு மனிதர்கள். இன்று ஒரு தெருவில் எத்தனை பைக்குகள் நிற்கின்றன தெரியுமா? எந்த பைக்கும் வீட்டின் உள்ளே செல்லாது. எங்கள் வீடுகளின் அமைப்பு அப்படி.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஆளுக்கொரு பைக் இருக்கிறது. இரவில் சில சிறிய தெருக்களில் கார் போக இடமில்லை. இரு புறமும் பைக் பட்டாளமே இருக்கிறது. அப்படியானால் தெருவில் கிடக்கும் பணம் எவ்வளவு எனப் பார்த்தீர்களா?
இவ்வளவு பணமும் மக்கள் சம்பாதித்ததுதானே. 60 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களிடம் இப்படி பணம் இல்லையே. இந்த வாய்ப்பை தந்தது எந்த அரசு?
அதுமட்டுமா? 60 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் ஐந்து விரல் அளவிற்குத் தான் கார்கள் இருந்தன. இன்று ஒரு தெருவில் எத்தனை கார்கள் இரவில் தூங்குகின்றன என்று தெரியுமா? இதில் பெரும்பாலானவை சொகுசு கார்களே.
இந்நிலை எங்கள் ஊரில் மட்டுமல்ல, முழு இந்தியாவிலும் இரவில் தெருவில் தூங்கும் கார்களைப் பார்க்கலாம். அப்படியானால் எத்தனை கோடி X கோடி பணத்தை மக்கள் தெருவில் போட்டுவிட்டு நிம்மதியாக வீட்டில் தூங்குகிறார்கள்.
இன்று ஒரு காரை ஒரு நொடிப் பொழுதில் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அம்பாசடெர் காருக்கு முன் பணம் கட்டி எத்தனை ஆண்டுகள் காத்திருந்த நாட்கள், பைக்கில் பறக்கும் இளவல்களுக்கு தெரியாது. அறிந்திருந்தால் உங்கள் மோடி ராகத்திற்கு மயங்கி ஆடி இருக்க மாட்டார்கள். உங்கள் கூட்டணிக்கு 336 ஆசனம் கிடைத்திருக்காது.
அந்த அம்பாசடெர் கார் இன்று சந்தையில் இருந்து ஒய்வு பெற்று விட்டதும் நீங்கள் அறிந்ததுதானே.
Rolls Royce கார் 50 அளவில் இந்தியாவில் ஒடுகிறதாகச் சொல்லுகிறார்கள். ஒரு கார் பல கோடியில் முடியும். உலகக் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இன்று எத்தனை இந்தியர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். டாட்டா, பிர்லா வைத்தவிர எந்த சீமான்களை நேற்றைய இந்தியாவிற்கு தெரியும்?
இன்று 40 வயதில் முதல் தலைமுறை குபேரனானவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே. அவர்கள் பெற்ற கல்வியும் வாய்ப்பும் தானே அதற்கு காரணம். அவைகளைத் தந்தது எந்த அரசு?
ஐ. டி. துறையைப் பற்றிப் பேசுகிறீர்கள். இந்த ஐ.ஐ.டி கல்லூரியை டெல்லியில் முதலில் துவக்கியவர் பண்டித ஜவஹர்லால் நெஹ்ரு அல்லவா. அவருடைய பேரன் ராஜீவின் விண்ணப்பத்தை கல்லூரி முதல்வர் மதிப்பெண் போதாதென்று மறுதளித்ததையும் ஏற்றுக் கொண்ட பிரதமர் அல்லவா அவர்.
நாடெங்கும் இந்த ஐ.ஐ.டி கல்லூரிகள் பரவியதால் இன்று வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்காவில் எத்தனை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை இந்தியர்கள் ஏற்று நடத்துகிறார்கள் - புதிய நிறுவனங்களை சொந்தமாக உருவாக்கியுள்ளார்கள்.
ஓ... அமெரிக்கா!
• அமெரிக்காவில் உள்ள 38 சதவீதம் டாக்டர்கள் இந்தியர்கள்.
• அமெரிக்காவில் உள்ள 12 சதவீதம் விஞ்ஞானிகள் இந்தியர்கள்.
• நாசாவில் பணிபுரியும் விஞ்ஞானிகளில் 36 சதவீதம் பேர் இந்தியர்கள்.
• மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களில் 34 சதவீதம் இந்தியர்கள்.
• ஐபிஎம் நிறுவனத்தின் ஊழியர்களில் 28 சதவீதம் இந்தியர்கள்.
• இன்டல் நிறுவனத்தின் ஊழியர்களில் 17 சதவீதம் பேர் இந்தியர்கள்.
மாண்பு மிகு பிரதமர் அவர்களே,
அடுக்கிக் கொண்டே போகலாம். 60 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு நிலை இருந்ததா? இல்லை. அமெரிக்காவில் நுழையவே இந்தியர்களுக்கு கட்டுப்பாடு இருந்தது. இந்தியர்கள் தங்கள் அறிவாலும் உழைப்பாலும் அந்த அலிபாபாவின் குகையைத் திறந்தனர். இன்று அனுபவிக்கின்றனர்.
சிறந்த கல்வியைக் கொடுத்து இந்த தகுதியை அவர்களுக்கு தந்தது எந்த அரசு? உங்கள் அரசா? நீங்கள் அப்படி உரிமை கொண்டாடவில்லை. அப்படியானால் எந்த அரசு?
காய்க்கிற மரம்தான் கல்லடி படும். உங்களுக்கு கல் வீசத்தான் தெரியும். வசைபாடத்தான் முடியும்.
உலகில் விற்பனையாகும் மிகவும் விலை உயர்ந்த கைக் கடிகாரங்களில் (Rolex, Patek Philippe போன்றவை) 15% இந்தியாவில் விற்பனையாவதாக ஒரு கணிப்பு கூறுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சுதந்திரத்தை மட்டும் அல்ல வறுமையையும் சேர்த்தே வாங்கியுள்ளோம் என்று நெஹ்ரு சொன்னார்.
நாட்டிலே பஞ்சம் இருந்தது. உணவுப்பஞ்சம், காகிதப்பஞ்சம் என்று பல. ரேஷன் முறை அமுலுக்கு வந்தது. அரசு இலாக்காக்கள் ஒரு முறை பாவித்த கடித உரையை (envelope) கிழித்து புரட்டி மீண்டும் உருவாக்கி பாவிப்பார்கள்.
இவைகள் எல்லாம் இன்று iPad டில் அரட்டை அடிப்பவர்க்கோ, WhatsApp ல் வாழ்த்து சொல்பவர்க்கோ, இல்லை SMS ல் சிநேகிதி / சிநேகிதர்களோடு சினிங்கிக் கொண்டிருப்பவர்களுக்கோ தெரியாது. தெரிந்திருந்தால் குஜராத்தின் வளர்ச்சி என்ற உங்களின் போலி கோசத்திற்கு மயங்கி இருக்கமாட்டார்கள்.
பஞ்சத்தில் பிறந்த - புரண்ட நாட்டில் இன்று முற்றிலுமாக வறுமை ஒழிந்திடவில்லை என்பது உண்மை. இருப்பினும் மஞ்சத்தில் புரளும் பதினைந்து விகித கூட்டம் ஒன்று உருவாகி இருப்பதைப் பார்த்தீர்களா? 60 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருந்தார்களா? இவர்களை உருவாக்கியது யார்?
30 ஆண்டுகளுக்கு முன்பாக உங்கள் நண்பர் அதானியிடம் இருந்தது பழைய Lambretta ஸ்கூட்டர் தானே. இன்று எத்தனை ஜெட் விமானங்கள் அவரிடம் உள்ளன. எப்படி வந்தது? ஆகவே இந்த 60 வருட பல்லவியை விடுவது நலம்.
நீங்கள் ஏப்ரல் மாதம் வரை சொன்னதை மறந்து விட்டீர்கள். சொல்லாததை இப்போது சொல்லுகிறீர்கள். சமஸ்கிருதம், 370 என்று பல புதியன பிறக்கின்றன. வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்பதே என் தாரக மந்திரம் என்றீர்கள். அதற்கான வழி எது என இதுவரைக் கூறாத நீங்கள் இப்போது வாய் திறந்துள்ளீர்கள்.
"தற்போது உலக நாடுகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் வந்து வெளிநாடுகள் பொருட்களை உற்பத்தி செய்யட்டும். அவற்றை எங்கு வேண்டுமென்றாலும் விற்றுக் கொள்ளட்டும். நமக்கு திறன் உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். அது நமது கனவு. இந்தியா பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக இல்லாமல் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும். நமது தயாரிப்புக்கள் குறைபாடுகள் இல்லாததாக இருக்க வேண்டும்."
உங்களிடம் இந்த வார்த்தையை அந்த இளைஞர்கள் எதிர்பார்க்கவில்லை. 'சொன்னாலும் வெக்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா' என்ற நிலையில் தான் இப்படி சொல்லி இருக்கிறீர்கள். சீனாவிற்கு மாற்றாக நாங்களும் இருக்கிறோம் என்று முதலீட்டாளர்களுக்கு நினைவு படுத்துகிறீர்கள். அது அவர்களுக்குத் தெரியும்.
வெளிநாட்டார் வந்தால் தான் வேலை வாய்ப்பு உருவாகும் இல்லாவிட்டால் இல்லை என்றும் சொல்லாமல் சொல்கிறீர்கள். சீனர்களைவிட திறமையான கடமை உணர்வு கொண்ட தொழிலாளர் உலகத்திலேயே இல்லை. இந்தியர்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. வேலைக்காரன் என்று பாரதியார் பாடிய ஒரு பாட்டே சான்று. மேலும் இரு(று)க்கும் தொழிலாளர் சட்டங்கள் முதலீட்டாளர்களை ஊக்குவிக்காது.
1998 ம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் ஹாங்காங் வந்தபோது, இந்திய வர்த்தக கழகம் கொடுத்த பகலுணவு வரவேற்ப்பிற்கு நண்பர்- சகோதரர் எஸ்.எம். உஜைரின் அழைப்பில் நானும் போனேன். அங்கு பிரதானமாகப் பேசப்பட்டது சீனாவைப்போல் தொழில் வளத்தில் ஏன் இந்தியாவால் முன்னேற முடியவில்லை என்பதுதான்.
அமைச்சர் தந்த பதில் "சீனாவின் அரசியல் கொள்கைகளை தீர்மானிப்பது 25 பேர் மட்டுமே கொண்ட Politburo என்ற உயர் மட்ட குழுவே (தற்போது 7). இந்தியாவின் நாடாளு மன்றத்தின் 545 உறுப்பினர்களையும் திருப்தி படுத்த வேண்டும். எத்தனை விவாதங்கள், எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டும். தாமதம் அதிகம். முதலீட்டாளர்கள் பொறுப்பதில்லை - அதை விரும்புவதில்லை. ஆகவே சீனாபோல் நம்மால் துரிதமாக செயல்பட முடியாது."
அதனால்தான் சீனா உட்பட்ட தூர கிழக்கு நாடுகளை புலிகள் என்றும் இந்தியாவை யானை என்றும் குறிப்பிடுகிறார்கள். யானைக்கு பலம் அதிகம் இருக்கலாம். ஆனால் வேகம் குறைவு. இது Fast Food காலம். எங்கும் எதிலும் Speed தான்.
அதுமட்டுமல்ல "நமது தயாரிப்புக்கள் குறைபாடுகள் இல்லாததாக இருக்க வேண்டும்" என்றும் சொல்லுகிறீர்கள். அம்பாசடெர் கார் செத்ததிற்கு என்ன காரணம்? லைசென்ஸ் ராஜ் காலத்தில் மூடிய சந்தையில் ஜாம்பவனாகத் திகழ்ந்தவர்கள் திறந்த சந்தைக்கு ஏற்ப பொருட்களின் தரத்தை உயர்த்தவில்லை.
பஜாஜ் ஆட்டோ வைப்பாருங்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தான் இன்றும் இருக்கிறது. எந்த அபிவிருத்தியும் இல்லை. வெளிநாடுகளில் காலத்திற்கு காலம் பொருளில் மாற்றம் செய்வார்களே.
உங்கள் அபார வெற்றிக்கு காரணம் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற தூண்டில். இப்போது இல்லாத ஊருக்கு பொய்யான வழியைக் காட்டுகிறீர்கள். இளவல்கள் பொறுக்க மாட்டார்கள்.
ராசா ராசா மன்மத ராசா போச்சா போச்சா வெறும் பேச்சா?
|