அது சென்ற நவம்பர் மாத நடுப்பகுதி. ஜனாதிபதியும், அவரது கட்சியின் பொதுச் செயலாளரான சுகாதார அமைச்சரும் ஒன்றாக இரவு உணவு அருந்தினார்கள். ஜனாதிபதி கூறினார் "இங்கே பார் சிறிசேனா, ஜனாதிபதி தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட எதிர்கட்சியில் சரியான ஆள் இல்லை. நான் இலகுவாக ஜெயிப்பேன்".
நவம்பர் 20ஆம் திகதி ஜனாதிபதி அடுத்த தேர்தலுக்கான ஆவணத்தில் கையெழுத்திட்டு, திகதியை தேர்தல் ஆணையர் அறிவிப்பார் என்று கூறினார். அடுத்தநாள் ஆணையர் ஜனவரி 8ஆம் திகதி தேர்தல் என்று அறிவித்தார். இது எதிர்பார்க்கப்பட்டதுதான். மஹிந்த ராஜபக்சே அவர்களின் அதிர்ஷ்ட எண் 8. பல தேர்தல்கள் இந்த திகதியிலேயே நடந்தன. தேர்தல் பற்றிய பேச்சு அக்டோபர் மாதம் வந்தபோதே நான் தேர்தல் ஜனவரி 8இல் நடக்கும் என்று நண்பர்களிடம் கூறினேன்.
நவம்பர் 21இல் நடந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மஹிந்தவின் சுகாதார அமைச்சர், தானே எதிர்கட்சி வேட்பாளர் என்றும் மஹிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவது தானே என்று அறிவித்தது அனைவரையும் உண்மையா, பொய்யா என்று வியக்க வைத்தது.
இது எப்படி இருந்தது என்றால் கருணாநிதியை எதிர்த்து திருவாரூரில் அன்பழகன் தான் போட்டியிடுவதாக அறிவிப்பது போல், ஜெயலலிதாவை எதிர்த்து சசிகலா ஸ்ரீரங்கத்தில் தான் போட்டியிடுவதாக அறிவிப்பது போல் இருந்தது.
ஒரு கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. இன்னொரு கூட்டம் ஆனந்தத்தில் ஆடிப்பாடியது. உளவுத்துறை எப்படி கோட்டை விட்டது என்று பலரும் குழம்பினர்.
இது பற்றி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறும்போது "ஜனாதிபதி தன்னை எதிர்க்க ஆளில்லை என்று சொல்லும்போது நான் மனதிற்குள் ஐயோ பாவம் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு குடும்ப ஆட்சியின் கொடுமையை - ஊழலை இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்ததும் வெளியேறிவிட்டேன் என்று கூறிய அவர், அமைச்சர் என்ற ரீதியில் எனக்கோ மற்றவர்களுக்கோ எந்த அதிகாரமும் இல்லை. எல்லாம் அந்த அபூர்வ சகோதரர்கள் ( ராஜபக்சே) சொல்படிதான் நடக்க வேண்டும்.
சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் சிகரெட் பெட்டியில் 'புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு தரும்' என்று நான் போட விரும்பியதை சிகெரெட் கம்பனிகாரர்கள் பெட்டியை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து என்னைப் போட விடாமல் செய்து விட்டார்கள்.
வீதிகள் அமைப்பதில் பெரிய மோசடி - ஊழல் நடப்பதாக நான் மத்திய வங்கியின் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதற்கு, அதற்கு பொறுப்பான அமைச்சரான ஜனாதிபதியின் இளைய சகோதரர் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று என்னைக் கண்டித்தார்” என்று போட்டு உடைக்க ஆரம்பித்தார்.
சில வருடங்களுக்கு முன்பே Wall Street Journal என்ற பத்திரிகை இலங்கையின் வீதி அமைப்பின் செலவு சுவிட்சர்லாந்தின் வீதி அமைப்பின் செலவை விட அதிகம் என்று குறிப்பிட்டு இருந்தது.
உண்மையில் ஆரம்பத்தில் ஜனாதிபதி இலகுவில் வெல்வார் என்ற நிலைதான் இருந்தது. காரணம் எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு இருக்கவில்லை. முக்கிய எதிக்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் கூட கருத்து வேறுபாடு இருந்தது. அதுமட்டுமல்ல; சிலர் அக்கட்சி ஜனாதிபதி ராஜபக்சவைத் தோற்கடிக்க விரும்பவில்லை என்றும் கூடக் கூறினார்கள்.
அபிவிருத்தி என்ற பெயரில் பூனை அளவு வருமானத்தை வைத்துக்கொண்டு யானை அளவு கடனை வாங்கி வைத்திருக்கும் அவர் அதனை அடைக்க முடியாது திணறி மக்களிடம் அவப்பெயர் வாங்கும் வரை பொறுப்போம் என்று அவர்களில் சிலர் கணக்கு போட்டதாகவும் சொல்வார்கள்.
அரசியல் ஆய்வாளர்கள் அதிலும் உண்மை உண்டு என்று ஏற்றனர். பாலங்கள் கட்டினோம், வீதிகள் அமைத்தோம், நெடுஞ்சாலைகள் சமைத்தோம் என்று பாரதியார் பாணியில் பேசும் அரசு, “மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்தீர்களா?” என்ற கேள்விக்கு சரியாக பதில் தருவதில்லை. “நாளொரு மேனி ஏறும் பொருட்களின் விலையை ஏன் கட்டுப்படுத்துவதில்லை?” என்ற கேள்வி யார் காதிலும் விழுவதில்லை.
எதிர்கட்சியினரோ எல்லாவற்றுக்கும் பெட்டிதான் காரணம் என்று சொல்லுவது மெல்ல மெல்ல மக்கள் மனதில் இடம் பிடிக்கலாயிற்று. ஆகவே அரசின் செல்வாக்கு தேய்பிறை ஆகிறது என்பதை அரசும் நோட்டம் பிடித்தது. அதனை முற்றிலும் உறுதி செய்வது போல் அமைந்தது செப்டம்பர் 20இல் நடைபெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவு.
தேர்தல் காலத்தில் பல விலை குறைப்புகளை அரசு செய்தது. மின்சாரக் கட்டணம் 25% குறைக்கப்பட்டது. சலுகைகள் பலவற்றை அறிவித்தது. அப்படியெல்லாம் செய்தும் ஆளும் கட்சி தனது வாக்கு வங்கியில் நியாயமான சரிவையும் எதிர்கட்சிகள் பாரிய முன்னேற்றத்தையும் கண்டதை ஜனாதிபதி ஓர் அபாயச் சங்காகப் பார்த்தார்.
உடன் செயல்படாவிட்டால் தனது அரசியல் வாழ்விற்கு - பிதாமகன் பெயருக்கு அது சங்காக அமைந்துவிடும் என்று எண்ணினார். ஆகவே இன்னும் இரண்டு ஆண்டுகள் தன் பதவிக்கு கால அவகாசம் இருந்தும் தேர்தலை உடன் சந்திக்க தயாரானார்.
ஆனால் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. தன் 40 வருட கால நண்பனே தனக்கு நேர் எதிராக வருவார் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ‘ப்ரூடஸ் நீயா?’ என்று கேட்காத குறைதான். இவ்வளவு நேர்த்தியாக ரகசியம் பேணி காரியம் செய்தவர்கள் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறவும் திட்டம் வைத்திருப்பார்கள் என்று மேற்குலக ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆனால் அப்படி இலகுவில் சொல்லிவிட முடியாது. ராஜபக்சே அவர்கள் தேர்தல் உபாயங்களில் வல்லவர். விட்டுக்கொடுக்க மாட்டார். 2005 தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவை விலைக்கு வாங்கி மக்களை வாக்கு சாவடிப் பக்கம் வராதவாறு அவர்களைச் செய்ய வைத்தார். முடிவு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
2009இல் அதே விடுதலைப்புலி தலைவர் இறந்ததும், சூட்டோடு சூடாக ஒரு வருடத்திற்கு முன்பே தேர்தலைச் சந்தித்து அமோக வெற்றி பெற்றார். இன்றும் அதே பாணியில் தனது செல்வாக்கு அடிவானத்திற்கு போகும் முன்பே, இரண்டு வருட ஆட்சியை தியாகம் செய்து தேர்கள் களத்தில் - குளத்தில் குதித்தார். அது சேறும் சகதியுமாக இருப்பதை பின்பு தான் உணர்ந்தார்.
இருந்தாலும் அரசு இயந்திரம் அவர் கையில் இருப்பதால், வெற்றிக்கனியை சாமபேத தண்டம் முறையிலும் பெறுவதில் தவறில்லை என்று நினைப்பவராக அவர் இருப்பதால், எப்படியும் இறுதியில் அவரே வெற்றி பெறுவார் என்று சிலர் சொல்லுகிறார்கள்.
ஆனால் எதிரணியினரோ அவரது தில்லுமுல்லுகள் இந்த முறை செல்லாது என்று வாதிடுகிறார்கள். பல வன்செயல்களுக்கு மத்தியிலும் மக்கள் சாரி சாரியாக தங்கள் கூட்டங்களுக்கு வருவதைக் குறிப்பிட்டு, “மக்கள் எம் பக்கம் சரியத்துவங்கி விட்டார்கள்; தோல்வி ஜனபதியை வாட்டத்துவங்கி விட்டது” என்று பிரச்சாரம் செய்வதை எதிர்ப்பவர் எவரும் இல்லை. காரணம் இந்தத் தேர்தலில் ஜனபதி குழம்பி பேசுவது போல் முன்பு எப்போதுமில்லை.
இன்று, ஒரு ஊர்லே ரெண்டு ராஜா. நாளை தெரியும் அசல் ராஜா யாருன்னு! |