பாரம்பரியம்.... அந்தந்த பகுதியில் உள்ள கலாச்சாரங்களை பிறதிபளிப்பது. அறிவியல் மாற்றங்கள் என்று எத்தனை வந்தாலும் பாரம்பரியம் என்ற பழக்கவழக்கங்கள் மட்டும் என்றென்றும் மாறாதது. இந்த வகையில் நமதூரிலும் ஒருசில பாரம்பரியங்கள் இன்றளவிலும் உள்ளது . உதாரணத்திற்கு சஹன் சாப்பாடு, கல்யாண சீர் (பூச்செப்பு) போன்றவை.
இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் என்னவென்பதை பார்ப்போம்...
சஹன் சாப்பாடு நமதூரிலும், இலங்கை, அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவலாக உள்ளது. பிற நாடுகளில் இருந்துதான் நமதூருக்கும் இந்த கலாச்சாரம் பரவியது என்கிறார்கள். பொதுவாக நமதூரில் கல்யாண விருந்தில்தான் சஹன் சாப்பாடு இருக்கும். வீட்டில் அப்படி இல்லை.
சஹன் சாப்பாட்டினால் என்ன பயன்?
நமதூரில் உள்ள பெரியவர்களும், பழமைவாதிகளும் சொல்கிறார்கள் - சஹன் சாப்பாட்டில் சமத்துவமும், சகோதரத்துவமும் உள்ளதாம்! ஏழை - பணக்காரன் பாகுபாடின்றி ஒரே சஹனில் அமர்கிறார்களாம். உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா...? ஒருவேளை இருந்திருக்கலாம் முன்னொரு காலத்தில்! ஆனால் தற்போது அப்படியில்லை என்று உறுதியாகக் கூறலாம்.
எப்படி?
பாரம்பரியம் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் கல்யாணப் பந்தலுக்கு வந்து, அங்கு யாரை முதலில் பார்கிறார்களோ அவரோடு சேர்ந்து சஹனில் அமர வேண்டும். ஆனால் அப்படி நடக்கிறதா என்றால் இல்லை. தனக்குத் தெரிந்த நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ அல்லது தனது அந்தஸ்திற்கு சமமானவர்களுடனோதான் அமர்கின்றனர். அறிமுகம் இல்லாதவருடனோ, தகுதியில் குறைந்தவருடனோ அல்லது ஏழைகளுடனோ அமர மாட்டார்கள்.
ஏதோ முக்கியமான ஃபோன் பேசுவது போல் வெளியில் நின்று நேரத்தைக் கடத்தி, தகுதியானவர் வந்ததும் அவருடன் அமர்வர் .அல்லது திருமண வீட்டாரிடம் தனக்கு தரையில் அமர முடியாது, மூட்டு வலி, இடுப்பு வலி என்று பொய்யான காரணத்தைச் சொல்லி டேபிள் - சேரில் தனி தாளத்தில் சாப்பிட அமர்வர். இதுவா சகோதரத்துவம்?
ஒருமுறை விருந்தொன்றில் எனது தெருவாசி ஒருவருடன் அமர நேரிட்டது. இதற்கு முன்பு அவருடன் பழகியதில்லை. மிகவும் அருவருப்பாக சாப்பிட்டார். இது போன்றவர்களுடன் அமர்வதால் சகோதரத்துவம் வளருமா?
நோய் பரப்பும் காரணி:
முன்பு நமதூரில் மக்கள்தொகை குறைவு. அனைவருக்கும் சத்தான உணவு கிடைத்தது. ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் தற்போதைய நிலையோ தலைகீழாக உள்ளது. பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு குறை. ஒருவேளை தொற்று நோயாகக் கூட இருக்கலாம். நம்மிடம் உள்ள குறை அவருக்கும், அவரிடம் உள்ளது நமக்கும் தெரிய வந்தால் ஒன்றாக அமர மனம் வருமா? அல்லது தெரியாமல் உட்கார்ந்து விட்டு வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் கஷ்டம் யாருக்கு?
தனி நபர் சாப்பாடு ஏன்?
சுத்தம்.... இதுதான் பிரதான காரணியாக இருந்தாலும் தற்போதைய உண்மையான காரணியை ஆராய்வோம். முன்பு ஒரு சஹனில் மூன்று பேர் அமர்வர். இரண்டு சிட்டி கறி. ஆனால் தற்போது இரண்டு நபருக்கு இரண்டு சிட்டி கறி. ஆக, ஆளுக்கு ஒரு சிட்டி கறி. இதற்கு ஏன் இரண்டு பேர் சேர்ந்து அமர வேண்டும்? தனியாகவே அமரலாமே?? செலவு ஒன்றுதானே???
சாப்பிடும் இடம்:
நமதூர் பாரம்பரியப்படி பனை ஓலையில் நெய்த பாயில்தான் அமர்கிறோம். முதல் பந்திக்கு எல்லாமே புதுப் பாய்களாக இருக்கும். அடுத்தடுத்த பந்திகளுக்கும் அதே பாய்தான். பாயை மாற்ற மாட்டார்கள். முதல் காரணம் ஒவ்வொரு பந்திக்கும் புதுப் பாயைப் போட்டால் செலவு அதிகம். அடுத்த காரணம், தற்போதைய சூழ்நிலையில் பனை மரங்கள் அழிந்து வருவதால் பனை ஓலை பொருட்களுக்கு தட்டுப்பாடு. விலையும் அதிகம். மேலும் உபயோகப்படுத்திய பாயில் அமர்வதால் வேட்டியில் அழிக்க முடியாத எண்ணெய்க் கறைகள். இதற்கு டேபிள் சேர் போட்டு தனித்தனியாக பரிமாறுவதே சிறந்தது.
மேலும், நமதூரில் தற்போது பெரும்பாலான விருந்துகளில் வெளியூர் விருந்தாளிகளுக்கென்று தனிப் பந்தல் போட்டு டேபிள் சேர் போட்டிருப்பார்கள். ஆனால் அதில் அமர்வது யாரென்று பார்த்தால், உள்ளூர்காரர்களில் அந்தஸ்தானவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள்தான். இவர்கள் பொதுப் பந்தலில் தரையில் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். திருமண வீட்டார்களும் இது போன்றவர்கள் தனிப் பந்தலுக்கு வரும்போது ஒன்றும் சொல்ல முடியாத தர்மசங்கடமான நிலை. ஆக, சஹன் சாப்பாடு என்பது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து விடும். இதனால் எந்த நன்மையும் இல்லை.
அன்பர்களே! சமத்துவம், சகோதரத்துவம் என்பது ஒரே பிளேட்டில் தெரிந்தவரோடு அமர்ந்து சாப்பிடுவதில் இல்லை. தனித்தனியாக, தன் மதம் சாராதவருடனோ அல்லது தனக்கு நிகரானவர் அல்லாதவரோடோ அருகருகே அமர்ந்து சாப்பிடுவதில்தான் உள்ளது.
|