நண்பர் எஸ்.கே.ஸாலிஹின் “அவங்க அப்டித்தான்! நாங்க இப்டித்தான்!!” எனும் தலைப்பிலான கட்டுரை வெறும் எழுத்துக்கள் அல்ல. மாறாக, ஊரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உண்மைகள்!
மழை என்பது இறைவனின் அருட்கொடை. அதைத் தடுக்கவோ - கூட்டவோ - குறைக்கவோ நமக்கு எந்த உரிமையும் இல்லை. அது முடியவும் செய்யாது. ஆனால் அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதற்கு இறைவன் நமக்கு சில ஆற்றல்களையும், அறிவுகளையும் தந்திருக்கிறான். அண்மையில், தமிழகத்தின் சென்னை - கடலூர் போன்ற பகுதிகளிலும், தற்போது நமதூரிலும் பெய்துள்ள இந்த அதிகப்படியான மழை மூலம் சில படிப்பினைகளை அனைவரும் பெற்றேயாக வேண்டும்.
நமதூரின் தற்போதைய மழை நீர்த்தேக்கத்திற்கு ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டிருக்காமல், சரியான பாதையில் திட்டமிட்டு செயல்பட்டால் இதுபோன்ற தீய விளைவுகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
நமதூரின் மண் மழை நீரை உறிஞ்சும் தண்மையைக் கொண்டதே. மழை நீர் வழிந்தோடுவதற்கு நாரஓடை போன்ற முறையான பாதைகளும் இருந்தன. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத - நம் மக்கள் பலரின் சுயநலப் போக்குகள் காரணமாக காலப்போக்கில் அவை கட்டிடங்களாக மாறவே, மழை நீர் மக்கள் குடியிருப்புக்குள் தேங்கியுள்ளது.
நமதூர் மக்கள் பெரும்பொருள் சேர்க்க நாடி, பெரும்பாலும் வெளியூர் - வெளிநாடுகளில் பணிபுரிந்து, அங்கு வியர்வையைச் சிந்தி உழைத்துப் பெற்று சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு - தம் வாழ்நாள் கனவான சொந்த வீட்டையும் பல லட்சங்கள் செலவழித்துக் கட்டி விடுகின்றனர். பின்னர், ஓய்வெடுக்கும் வயதில் வீட்டில் குடியிருக்க வந்தால், புதிதாகக் கட்டிய அந்த வீட்டை அகழ்வாராய்ச்சி செய்து தேடும் அளவில் அது பள்ளத்திற்குள் புதைந்து போய் விடுகிறது. இனி, அந்தப் பிரச்சினைக்காகவே மீண்டும் பல லட்சங்கள் செலவழிக்க நேர்ந்து, வருமானமும் இல்லாத நிலையில் கடனாளியாக்கப்படுகிறான் காயலன். இது யாராலும் மறுக்க முடியாத - அனைவரும் நன்கறிந்த உண்மை.
நமதூரின் மஹ்ழரா, பெரிய பள்ளி போன்ற வரலாற்றுச் சின்னங்களையெல்லாம் மண்ணில் புதையச் செய்து கொஞ்சங்கொஞ்சமாக இழந்து வருகிறோம். மையவாடிகளெல்லாம் மழை நீர் தேங்கும் இடங்களாகவே மாறிப்போய்விட்டன.
சமதள பரப்பைக் கொண்ட நமதூரில் அண்மைக் காலமாக மலை போல மேடுகளும், கிணறு போல பள்ளங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை ஒன்றும் இறைவனின் அற்புதங்கள் அல்ல! மாறாக, மனிதனின் தவறுகளே!! உதாரணமாக, குறுக்கத் தெரு துவக்கத்திலிருந்து ஃபாயிஸீன் சங்கம் செல்லும் சாலையில் சென்றால் மலை மீது ஏறுவதைப் போன்றே காட்சியளிப்பதைப் பார்க்கலாம். முன்பு இது அவ்வாறு இருக்கவில்லை. இது யாருடைய தவறு என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, யாருக்கோ வந்தது என்று இருந்துவிட்டால், இதுபோன்ற திடீர் மலைகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கும்.
நெய்னார் தெருவில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் பற்றி சந்தேகம் எழுந்ததையடுத்து, ஊழல் எதிர்ப்பு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் களமிறங்கி, அந்த சாலைப் பணியை நிறுத்தச் செய்தனர். ஆனால் நாம் செய்ததென்ன? நமக்காக களமிறங்கியவர்களையே குறை கூறி வசை பாடினோம். விளைவு??? ரோடு போட்டாச்சு! ஆனால் அதுவோ சில மாதங்களிலேயே பல்லை இளித்துக் கொண்டிருக்கிறது. புதிய சாலைக்கான எந்த அடையாளமுமின்றி, அங்கு மழை நீர் பெருமளவில் தேங்கி, குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்துள்ளது.
நண்பர் எஸ்.கே.ஸாலிஹ் அனைவரையும் கருத்திற்கொண்டு அவரது ஆதங்கத்தை தன் கட்டுரையில் அழகாகப் பதிவு செய்துவிட்டார். ஆனால், இதே எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியில் சொல்ல முடியாமல் தவிப்போர் ஏராளமாக உள்ளனர். 15 லட்சம், 20 லட்சம் என்று செலவழித்துக் கட்டப்பட்ட வீடுகளெல்லாம் குறைந்த வருடங்களிலேயே புதைந்து போவதைக் கண்டும், எதிர்ப்புகளுக்கும் வசவுகளுக்கும் அஞ்சி அவர்கள் வாய் திறப்பதில்லை.
அதற்காக, இதற்குத் தீர்வு காண்கிறோம் எனும் பெயரில் பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால் என்று அமைத்துவிட்டு, அதிலும் கைக்குக் கிடைப்பதைச் சுருட்டி விட்டு, ஊரை நாற்றக்கேடாக ஆக்கிட யாரும் கனவு கண்டுவிடக் கூடாது. நமதூரைத் தாண்டி பக்கத்து ஊர்களுக்குச் சென்றால், மழை நீர் வடிகால் மூலம் ஏற்படும் நாற்றத்தை யாரும் சொல்லாமலேயே உணர முடியும். எனவே, நமதூரின் ஆதிகால கட்டமைப்பு மாறாமல்தான் தீர்வுகளும் அமைய வேண்டும்.
சரி, இதற்குத் தீர்வுதான் என்ன?
(1) நமதூரில் உள்ள அனைத்து சாலைகளையும் - அவற்றின் ஏற்ற இறக்கங்களையெல்லாம் மொத்தமாகவும், விபரமாகவும் கணக்கெடுக்க வேண்டும்.
(2) புதிய சாலைகளை அமைப்பதை நாம் அனைவரும் இணைந்து ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
(3) மழை நீர் வடிகால் போன்ற திட்டங்களையெல்லாம் தீட்டாமல், Storm Water System போன்ற - வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைச் செயல்படுத்திட முனைய வேண்டும். இயற்கையாகவே மழை நீர் வடிகால்களாய் இருந்த பகுதிகளெல்லாம் தற்போது கட்டிடங்களாகிவிட்டன. எனவே, இனி எவ்வாறு தண்ணீரைக் கடத்துவது என்று சிந்திக்க வேண்டும்.
(4) அனைத்து சாலைகளிலும் பழைய சாலைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு, நகர்மன்ற முன்னாள் தலைவர் வாவு செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் சொன்னது போல - தாழ்வான பகுதியிலிருந்து துவங்கி, உயர்வாக முடியும் வகையில் சாலைகளை அமைக்க வேண்டும். இதனால், வீடுகள் மண்ணுக்குள் புதையாமலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகாமலும் பாதுகாக்க இயலும்.
(5) மழை நீரை உறிஞ்சாத சிமெண்ட் சாலைகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நம் வீட்டில் Overhead Water Tankஇல் எப்படி தண்ணீர் ஒழுகாமல் தேங்கியிருக்குமோ அப்படித்தான் சாலையிலும் இருக்கும். கொசுக்கள் பெருகி சுகாதாரக் கேட்டை உருவாக்கும்.
(6) பேவர் ப்ளாக் சாலையைப் பொருத்த வரை, அதுதான் தேவை என்றால் மட்டுமே அதை அமைப்பது பற்றிப் பரிசீலிக்க வேண்டும். பேவர் ப்ளாக் சாலையை கற்பனைக்கு வந்தவாறெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு அமைக்காமல் - அது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதை, அது தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் நமதூரைச் சேர்ந்த வல்லுநர்கள் பலர் உள்ளனர் - அவர்களிடம் முறையாகக் கருத்துக்களைப் பெற்று செய்ய முன்வரலாம். வல்லுநர்கள் இதுபோன்ற தளங்களில் தாமாக முன்வந்து தமது அனுபவ அறிவைக் கருத்துக்களாகத் தரலாம்.
(7) புதிய சாலைகள் அமைக்கப்படும்போது, அவற்றின் தர நிர்ணயங்கள் முறையாகப் பேணப்படுகிறதா என்பதை பொதுமக்கள் அவசியம் கண்காணிக்க வேண்டும். தற்போது கூறப்படுவதைப் போல - அவ்வாறு கண்காணிப்பது தவறல்ல. மாறாக, கண்காணிக்காமல் இருந்தால் அதுதான் பெரிய தவறாகும்.
யாருக்கோ, எவருக்கோ என்று இருந்துவிட்டால், அடுத்து பெய்யும் மழை காரணமாக புதிய சாலை மூன்றே மாதங்களில் பல்லிளிக்கும்.
(8) சென்னை, கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள மழை வெள்ள நிவாரணக் குழு, ஏதாவது ஒரு பெயரில் - தரமான வல்லுநர்களைக் கொண்ட நிரந்தர அமைப்பாக வேண்டும். அதன் மூலம் இக்கருத்துக்கள் முறையாக வெளிப்படுத்தப்பட்டு, அதனடிப்படையில் நகராட்சி செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இது நமதூரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் மீது கட்டாயக் கடமையாகும்.
தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவது தெரிய வந்தால், அனைத்து பொதுமக்கள் சார்பாகவும் இந்த அமைப்பு முன்னின்று அதைத் தடுக்கத் துணிய வேண்டும்.
நிறைவாக எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில், இதுகுறித்து ஞானமுள்ள நமதூர் வல்லுநர்கள் இக்கட்டுரையின் கீழும், நான் மேற்கோள் காட்டியுள்ள - நண்பர் எஸ்.கே.ஸாலிஹின் கட்டுரையின் கீழும் உடனடியாகக் கருத்துப்பதிவு செய்யுங்கள்! இனியும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டிருக்காதீர்கள்! நல்ல சிந்தனைகள், வருங்கால செயல்திட்டங்களுடன் இத்திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு அனைவரும் இணைந்து கொண்டு செல்ல முன்வாருங்கள்!
மழை வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு அனைத்து ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும், உலக காயலர்களையும் ஒருங்கிணைத்து, விருப்பு - வெறுப்புகளுக்கோ, சுயநலத்திற்கோ சிறிதும் இடம் கொடுக்காமல் செயல்திட்டம் வகுத்து செயல்பட முன்வர வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயம் நமதூருக்கு நல்ல விடிவுகாலம் விரைவிலேயே பிறக்கும்.
தன் கட்டுரையில் நண்பர் எஸ்.கே.ஸாலிஹ் குறிப்பிட்டுள்ளதைப் போல, பழைய சாலைகளைத் தோண்டி அகற்றி, புதிய சாலை போடும் இச்சிந்தனையை, அப்போதைய நகர்மன்றத் தலைவர் வாவு செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்களிடம் எடுத்துச் சென்ற கத்தர் காயல் நல மன்றத்தின் ஓர் அங்கம் என்ற அடிப்படையில், அன்றைய எனது சிந்தனைக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயன்றுள்ளேன்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமதூரை, நம் முன்னோர்கள் தமது பழுத்த அறிவால் எப்படி சிறப்பாக அமைத்துத் தந்தார்களோ, அந்த முறைகளை அப்படியே மீண்டும் அமைத்துத் தருவானாக, ஆமீன். |