காஸா நகர வீதிகளில்
உருகி ஓடுவது
உதிரமா விழிநீரா?
மருங்குகளில் கருகிக் கிடப்பது
மனித உடல்களா? மனித நேயமா?
பிய்ந்துப் போவதற்கு என்ன
பழைய பாய்களா இவை?
பிஞ்சுப் பூக்களும்
தைக்க முடியாத தளிர்களும்...
கல்விக் கூடங்களில் கூட
கனரக ஆயதங்களின்
கண்மூடித் தாக்குதல்...
இரவும் பகலும் மழையெனப் பெய்யும்
இரசாயனக் குண்டுகள்...
அப்பாவிகளைக் கொன்று குவித்தால்
அது அரசு நடவடிக்கை...
தற்காப்புக்கு இன்னொரு பெயர்
தீவிரவாதம்...பயங்கரவாதம்...
பொய்நா படைத்த ஐநா சபைகள்
பதுங்கி விட்டன
பிணம் தின்னிக் கழுகுகளின்
இறக்கைகளின் இடுக்கில்...
நீலிக் கண்ணீர் வடிக்கும்
போலி சமாதான வாதிகள்...
இவர்களை விட ஹிட்லர் பெட்டர்...
சாய்கின்ற உடல்கள் யாவும்
சரித்திரம் சமைக்கின்ற உரமாய் மாறும்...
காலத்தின் கட்டளையால் மரமாய் எழுந்து
கயவர் தம் சிரமதனை சாய்க்கும் சாய்க்கும்...
இது ஒரு சுழற்சியின் தொடர்ச்சி...
மனிதம் சுமக்கும் மனித வர்க்கமே...
கண்ணீரையும், கண்டனத்தையும்
வடிப்பதைத் தவிர வேறென்ன முடியும்?
இரு கரமேந்தி இறைவனைத் தொழுவோம்...
பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல...
பாரெங்கும் பரவிக் கிடக்கும்
ஆதிக்க சக்திகளின் இடுப்பு ஒடிந்திட...
இன வெறி ஒழிந்து இன்னல் நீங்கிட...
அமைதியின் மடியில் அகிலம் தூங்கிட...
பொறுமையாளர்களுடன்
இறைவன் இருக்கிறான்...
நம்பிக்கை வைப்போம்
நல்லதே நடக்கும்... நானிலம் சிறக்கும்...
1. செவியேற்பவனே...! posted by:M.N.L.Mohamed Rafeeq (Singapore.) on 18 July 2014 IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 36005
அநியாயக்கரர்கள் அக்கிரமக்காரர்களின் சப்தநாடிகள் ஒடுங்கி வேரோடு சாயும் நிலை ஓர் நாள் வரும். வானளவிய அதிகாரத்தைக் கொடுத்து அவர்களின் அக்கிரமம் வரம்பு மீறும் போது அவர்களை தலைகீழாகப் புரட்டி அழித்த சம்பவங்களுக்குத் திருமறை வசனங்கள் சாட்சி!
செவியேற்பவனே...! இரத்தம் சிந்தும் இந்த மண்ணில் நீ அமைதியை ஏற்படுத்தி அம்மக்களுக்கு அருள்புரிவாயாக! விடுதலையின் வெளிச்சத்தை அவர்களுக்கு அளித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்படி செய்வாயாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross