அமைப்பு ஒன்று நிறுவி
சேவை பல புரிந்திடவே
நினைப்பு வந்து குடிகொண்டது
எங்கள் இளைய வயதின் இதயத்திலே!
கறை படியா உள்ளத்திற்கு
குறை யில்லா சொந்தக்காரர்
கண்ணியத்தின் தென்றலாய்த் திகழ்ந்த
நாணயவான் இஸ்மாயில் ஸாஹிப் பெயரில்
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு
உதயமானது சமூக சேவை அமைப்பாய்!
ஒவ்வொரு விடியலிலும்
சேவையின் சிந்தனைப் பூக்கள்
எம் இதயங்களில் மலர்ந்திருக்கும்!
ஆதவன் தன் வருகையை
அகிலத்தின் பதிவேட்டில்
பதிவு செய்யும் முன்பே
எங்களின் துயில் நீக்கி
தூயோனாம் இறையோனைத் தொழுதுவிட்டு
சேவையின் பாதையில்
பயணிக்கும் எமதுள்ளம்!
அஞ்சல் அட்டை மூலம்
அனைவருக்கும் அழைப்பு விடுத்து
மாதமொரு முறை கூட்டம் - அதில்
மாந்தர் கருத்தை அறிவதே நாட்டம்!
பெரியோர் உயர் ஆலோசனைக்கு
பெரிதும் முன்னுரிமை!
குறைகளை அறிந்திட
தன் அகல வாயை
எந்நேரமும் திறந்தே வைத்திருக்கும்
புகார் பெட்டிகள்!
நாள்தோறும் பல நாளிதழ்கள்
தம் வருகையைத் தவறாமல்
பதிவு செய்யும் எமதமைப்பில்!
அறிவைக் கூர்தீட்டும் விதமாய்
விரிந்தே மலர்ந்தது நூலகம்!
கரும்பலகையின் பொது வாசகம்
பல தகவல்களைத் தாங்கி நிற்கும்!
நபிமொழி வாசகங்கள்
நன்றே நாளும் சூழ்ந்திருக்கும்!
ஊர்ப் பிரச்சினை எதுவாயினும்
காலம், நேரம் பாராது
களப்பணியில் இறங்கியது
எமதமைப்பின் இளைஞர் படை!
குப்பைகளுக்கு அன்றாடம்
குட்பை சொல்லி அனுப்பியதால்
அறவே ஒழிந்தது அசுத்தம்
எங்கும் ஒளிர்ந்தது பரிசுத்தம்!
சாலையில் குவிந்திருக்கும் மணலை
அப்புறப்படுத்தும் துரிதப் பணி
எப்புறமும் ஏற்றமாய் நடந்தது!
வீதியிலே புதைந்திருந்து
தொல்லை பல நல்கிய
முள்ளையும் கல்லையும்
அகற்றிடும் பொழுது – சூழும்
எல்லையில்லா மகிழ்ச்சியை
சொல்லால் வர்ணிக்க இயலாது!
மழலையின் உயிர் காக்கும்
போலியோ தடுப்பு சொட்டு மருந்து
சிறப்பு முகாம் நடத்துவது
எம் மாண்புப் பணிகளுள் ஒன்று!
தெரு விளக்குகள் எரியாமல்
குறும்பு செய்யும் பொழுது
குறுகிய நேரத்தில் செப்பணிடும் பணி
மின்னல் வேகத்தில் நடந்தேறும்!
தடையின்றி பள்ளி செல்ல
சீருடையின்றித் தவிப்போர்க்கு
தரமான புத்தாடை அளிப்பதும்
கல்வி கற்று உயர்ந்திட
புத்தகங்கள் பல வழங்கியதும்
நன்மை சம்பாத்தியத்தில்
எம்மை நெஞ்சம் மகிழச் செய்தவை!
எங்கள் நாவளர்ச்சிப் பாசறையில்
தங்களை ஈடுபடுத்திக் கொண்டு
வாழ்வில் நல் வளர்ச்சி
அடைந்துயர்ந்தோர் பல பேர்!
தொல் பொருள் ஆராய்ச்சியில்
எங்களின் பெரும்
உன்னத ஈடுபாடு கண்டு
வியக்காதோர் எவருமில்லை!
அடக்கத்தலத்தின் பாதை சீரமைப்பும்
மின் விளக்கு அமைத்தலும்
எம் சேவையை என்றைக்கும்
வெளிச்சம் போட்டுக் காட்டும்!
நிதி பற்றாக்குறை எம்மை
வாட்டி வதைத்த போதிலும்
நீதிக்காக எங்கள் குரல்
ஓங்கியே ஒலித்தது!
சுமைகள் பல எங்களை
அவ்வப்போது தாக்கியபோதிலும் – எம்
இமைகள் அதைப் பொருட்படுத்தாது
சேவையின்பால் கவனம் பதித்திருக்கும்!
உங்கள் உயர் சேவை
என்றைக்கும் எமக்குத் தேவையென
அகவை வேறுபாடுகள் இன்றி
எங்கள் உன்னத சேவைக்கு
நல்லோர் நாளும் சூட்டினர் மகுடம்!
எண்ணிலடங்கா பல சேவைகளை
கவியெனும் மலர் கொண்டு
மாலையாய்த் தொகுக்க முனைந்தாலும்
எழுத்தில் முடியாது என்பதை
கருத்தில் கொண்டே
சுருக்கிக் கொண்டது என் தூரிகை!
பிரிந்து நாங்கள் போனாலும்
விரிந்து தன்பணி யாற்றுகிறது
இன்றைய இளைய சமுதாயம்!
படரும் கொடி போல
தொடரும் எம் சேவையால்
புகழோங்கித் திகழும்
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு
எத்திசையும் நறுமணம் வீசிட
தொல்லையில்லா நல்வாழ்வுக்கு
எல்லையில்லா தன்னருளைச் சொரிய
வல்லிறையருளை வேண்டிடுவோம்!
1. சேவை மனது.......... posted by:musthak ahamed (kuwait) on 21 December 2014 IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 38526
இளம் வயது சேவையை சொல்வதில் மிகவும் ஆர்வமாய் இருக்கிறார். தொடர்ந்து நடந்து வந்த பாதையையே நினைத்து வியந்து பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பருக்கு,
கொஞ்சம் நிகழ் காலத்திற்கும் வாருங்கள். சமூக, அரசியல், போன்றவற்றில் உங்கள் பார்வை விரியட்டும். எதையும் எளிதாக சொல்லிவிடக்கூடிய
ஆற்றல் பெற்ற உங்களால் இதுவும் முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross