வழமை போல் அன்றும் நேரம் தவறாமல்
வைகறைப் பொழுதின் வணக்க வேளையை
அதிர்ந்து சொன்னது அலை பேசிக்குள்
அடங்கிப் போன அலறிக் கடிகாரம்
பஜ்ரு தொழ பள்ளி செல்ல வேண்டுமே.. ?
எழுந்து விட எத்தனித்த என் காதுகளில்
இரவு இன்னும் மீதம் இருக்கு
இன்பமாய் தூங்கென சைத்தான் ஊதினான்
மரண ஒத்திகையில் தன்னையே மறந்திருக்கும்
ஒவ்வொரு மனிதனின் பிடரியிலும்
படைத்தவனை மறந்திடவே பகைவன் போட்ட
மூன்று முடிச்சுகள் எழ விடவில்லை இறுக்கிப் போட்டது
முகவரி தொலைத்த மனித னொருவன்
தெருத் தெருவாய் அலைந்து திரிவதைப் போல்
இலக்கின்றி விலக்கின்றி இணைய தளமெங்கும்
இரவெல்லாம் தட்டழிதல் என் இயல்பாய் போனது
முன்னிரவில் தொடங்கிடும் என் முக நூலின்
பயனற்ற "லைக்" தேடும் மோகம்
பின்னிரவிலும் தொடர வந்த களைப்பு
இன்னும் கொஞ்சம் கண் அயரக் கெஞ்சியது
தினம் தினம் முக நூலில் பக்கம் பக்கமாய்
பல மணி நேரம் வீணடிக்கும் எனக்கு
இறை நூலில் தினம் ஒரு பக்க மேனும்
படித்திட புரிந்திட எங்கே ஆசையிருக்கு?
நேரம் மெள்ள மெள்ளக் கரைந்தோட
முஹல்லா பள்ளி முஅத்தின் சாஹிபின்
வறுமையில் இணைந்திட்ட முதுமையை
வலிந்து சொன்ன கீரல் குரல்
"தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்"
"வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள் "என
படைத்தவனைப் பணிந்திடவே படைப்புகளை
பள்ளி நோக்கி ஓடி வரச் சொன்னது
மீண்டும் தூக்கம் கெடுக்கத் துணிந்த என்
கை பேசியின் தொல்லை தாளாமல்
கோபம் கொப்பளிக்க குரல் வளை நசித்து
நிம்மதியாய் நித்திரை தொடர்ந்தேன்
விடுவதாய் இல்லை பள்ளியின் பிலால் சாஹிப்
"தூக்கத்தை விட தொழுகையே சிறந்தது" என்றவரின்
பாங் கோசை காற்றினிலே கலந்து வந்து
காதுகளைத் துளைத்திட தூக்கம் கலைந்தது
மனம் என்னோடு போராடத் துவங்கியது
ரமலானில் தவறாத பஜ்ருத் தொழுகை ?
பிள்ளைகளின் பரீட்சை நாள் பஜ்ருத் தொழுகை ?
பணி நாள் பயண நாள் பஜ்ருத் தொழுகை ?
இவ் வகை வணக்க வழிபாடுகள் இறை நேசத்திலா ?
அல்லாது அற்ப உலகின் தேட்டத்திலா ?
தேவைகளை இறைவனிடம் கேட்டுப் பெற ஐ வேளை ?
கேட்டது கிடைத்து விட நன்றியாக நாலு வேளை ?
நினைவுக்கு வந்தது இறைவனின் வேத வரிகள்
"மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி கெட்டவர்களே " !
எங்கள் இரட்சகனே ! எம்மை மன்னித்து விடுவாயாக !
இனியும் தூங்க முடியுமா ? துயில் துறந்து எழுந்தேன்
வீதியில் இறங்கிய வேளை சிட்டென சைக்கிளில் கடந்தான்
பத்து வயதே யான அந்த மக்தப் மாணவன்
இவனிடம் வைகறைத் துயிலும் குளிரும் மழையும் கூட
தோற்றுப் போனது வெற்றி எனும் பஜ்ருத் தொழுகையால்
மாறாக ஐங்காலத் தொழுகையோடு ஜும்ஆவை இழப்பது ஒரு
பொருட்டல்ல பொருட் கல்வி ஒன்றே போதுமென
சுவர்கத் திறவை `தொலைத்து நிற்கும் பரிதாபமாணவன்
இவண் எங்கே ? சுவனமே லட்சியமாணவன் அவன் எங்கே ?
நகர்ந்தேன் வீதியெல்லாம் விளக்கொளியில் குளித்திருக்க
இல்லங்கள் இன்னும் இருளில் வீழ்ந்து கிடந்தது
இறை நினைவிலிருந்தும் அருளிலிருந்தும் வெகு தூரம்
விலகிக் கிடந்தது ஒரு சில அருள் இல்லங்கள் தவிர
மீண்டும் அதே குரல் தொழுகையின் துவக்கம் சொன்னது
கது காம திஸ் ஸலாஹ்.. கது காம திஸ் ஸலாஹ்..
எட்டு வரிசை கொண்ட அந்த அழகிய இறை இல்லம்
ஏழு இறை நேசர்களின் அணி வகுப்பால் நிறைந்திருக்க
இணைந்த கொண்ட நானும் இறை அடிமையாய்
நெற்றியை நிலத்தில் வைத்தேன்
படைத்தவனைப் புகழ்ந்தவனாக ..அல்லாஹு அக்பர் !
உடல் சிலிர்த்தது ..உள்ளம் மகிழ்ந்தது ...அல் ஹம்து லில்லாஹ் !
ரப்பே ரஹ்மானே ! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்
உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்
எங்களை மன்னித்து அருள் புரிவாயாக !
எல்லா நிலையிலும் எல்லாப் புகழும் உன் ஒருவனுக்கே.. !
1. Re:...இருள் இன்னும் VILAKAVILLAI posted by:mackie noohuthambi (kayalpaattinam) on 29 December 2014 IP: 180.*.*.* India | Comment Reference Number: 38650
"முகவரிகள் தொலைந்ததனால்
முகிலினங்கள் அலைகின்றன.."
என்ற கவிப் பேரரசு வைரமுத்துவின் பாடலுக்கு இணையாக
"முகவரிகள் இழந்த மனிதன்
தெரு தெருவாய் அலைகிறான்"
என்று வாசகம் என்னை வைரமுத்துவிடம் உங்களை அழைத்து சென்று, காயல்பட்டினத்திலும் ஒரு வைர வியாபாரி உங்கள் கவிதைக்கு நிகராக எழுதமுடியும் என்று உங்களை அடையாளம் காட்ட மனம் விரும்புகிறது.
திருவாசகத்துக்கு மறுவாசகம் பாடிய புலவர்கள் வாழ்ந்த ஊர் காயல்பட்டினம் என்று அவருக்கு சொல்ல தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
கடிகாரம் வைத்து படுப்பதும் விழிப்பதும் நபிகள் நாயகம் காலத்தில் வழக்கமில்லை. ஆனால் அப்படி நிம்மதியாக படுக்கவும் தஹஜ்ஜத் வேளையில் விழிக்கவும் நபிகள் நாயகம் நமக்கு ஒரு துஆவை கற்று தந்ததாக உலமாக்கள் என்னிடம் கூறி எனக்கும் அதை கற்றுத்தந்தார்கள்.
படுக்கும்போது "INNALLAAHA VA MALAAYIKATHAHOO YUSALLOONA ALANNABIYYI YAA AYYUHALLATHEENA AAMANOO SALLOO ALAIHI VA SALLIMOO THASLEEMA" என்ற ஆயத்தை ஓதி நபிகள் நாயகம் மீது சலவாத்து சொல்லி படுத்தால் நன்கு தூக்கம் வரும்.
INNALLATHEENA AAMANOO VA AMILUS SAALIHAATHI KAANATH LAHUM JANNAATHUL FIRDOUSI NUZULAA...என்ற ஆயத்தை ஓதிக் கொண்டு படுத்தால் நீங்கள் விழிக்க வேண்டும் என்று நினைக்கும் சரியான நேரத்தில் உங்களை ஒரு அசரீரியான குரல் அழைத்து உங்களை எழுப்பி விடும். இது நான் அனுபவத்தில் காணும் உண்மை.
இதற்கு ஒரு நிபந்தனை. உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை வேண்டும். அந்த நேரத்தையும் நீங்கள் சரியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மீண்டும் தூங்கினால் இந்த சூட்சுமம் சரி வராது. அது உங்கள் செயல்பாட்டின் கோளாறாக கணக்கிடப்படும்.
கவிதை என்பதற்குள் கவி, கதை, விதை என்ற மூன்று விஷயங்கள் அடங்கும். இந்த மூன்றுமே உங்கள் கவிதையில் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.
2. பீப்பாய், பீப்பாயாக... posted by:S.K.Salih (Kayalpatnam) on 02 January 2015 IP: 180.*.*.* India | Comment Reference Number: 38697
ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பொலியைக் காதில் வாங்கிய பின்னரும் உறங்கிக் கொண்டிருப்பவனது காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான் என்று நபிமொழி உள்ளது.
அதை அளந்தெடுக்க முனைந்தால், நாள்தோறும் நமதூரில் பல பீப்பாய்கள் தேறும்! நான் மத்ரஸா நடத்திய காலத்தில் என் மாணவர்களுக்கு இதைச் சொன்னபோது அவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.
உண்மைதான்! நம்மில் பலருக்கு விடியற்காலையில் குற்றாலம் செல்ல திட்டமிட்டிருந்தால், முந்திய இரவில் இரண்டு மணிக்குப் பிறகு உறக்கமே வருவதில்லை.
உலகாதாயம் கருதி அதிகாலையில் எதைச் செய்ய திட்டமிட்டாலும் - முந்திய இரவில் ஒழுங்கான உறக்கமே வராது!
ஆனால், அல்லாஹ்வை வணங்குவதற்காக எழ வேண்டும் என முந்திய இரவிலேயே மனதில் எண்ணம் கொள்ளும்போது,
“ஹூம்... காலைலேர்ந்து வேலை பார்த்தாச்சு! மதியமும் தூங்கலை... வேறென்ன செய்ய...? ஒரு எட்டரை மணிக்கு எழும்பலாம்...” என இரவே முடிவு செய்துவிடுகிறது - ஷைத்தானின் சிறுநீர் தேடும் மனது!
உங்கள் கட்டுரை கண்டு வெட்கப்பட்டு - இதுவரை முறைப்படி நிறைவேற்றத் தவறிய ஃபஜ்ர் தொழுகையை ஓரிருவராவது இனி சரியாக நிறைவேற்றினாலே - அது இக்கட்டுரைக்குக் கிடைக்கும் மகத்தான வெற்றிதான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross