நவம்பர் 28 அன்று, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இயக்கமான - தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு - அண்மையில் கிரிக்கெட் விளையாட்டுகளில்
இருந்து ஓய்வுபெற்ற இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தான் ஊடகங்கள் புகழக்கூடாது என எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின.
அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் என்பவரை மேற்கோள்காட்டி துவக்கமாக இணையதளங்களிலும், பின்னர்
தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களிலும் இச்செய்தி உலகெங்கும் வெளியானது.
பி.பி.சி. இணையதளம் வெளியிட்ட செய்தி
http://www.bbc.co.uk/news/world-asia-25135586
என்.டி.டி.வி. இணையதளம் வெளியிட்ட செய்தி
http://sports.ndtv.com/cricket/sachin/news/217551-stop-praising-sachin-tendulkar-taliban-warns-pakistani-
media
சிட்னி மார்னிங் ஹெரால்ட் இணையதளம் வெளியிட்ட செய்தி
http://www.smh.com.au/world/sachin-tendulkar-taliban-warns-media-to-stop-praising-little-master-20131129
-2ygzg.html
தொலைக்காட்சிகளும் இது குறித்த செய்திகளை வெளியிட்டன. தொலைக்காட்சி செய்திகளில் - சாஹிதுல்லா சாஹித் பேசிய வாசகங்கள் என
வீடியோ காட்சிகளும் வெளியாகியிருந்தது.
இந்தியாவின் ZEE NEWS தொலைக்காட்சி செய்தி
http://www.youtube.com/watch?v=x4L7KVDBAx4
இந்தியாவின் NEWS 24 தொலைக்காட்சி செய்தி
http://www.youtube.com/watch?v=JPQub6jRBsU
சாஹிதுல்லா சாஹித் பேசிய வாசகங்கள் என YOUTUBE இல் வெளியான சுமார் 1 நிமிட அசைப்படம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊடகச் செய்திகளில் இடம்பெற்ற தகவல்கள் என்ன?
இச்செய்தியை வெளியிட்ட தி இந்து தமிழ் நாளிதழின் (நவம்பர் 29, 2013)
வாசகங்களை காண்போம்:
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 'தெஹ்ரிக் இ தாலிபன்' தீவிரவாதிகள் அமைப்பு, பாக். ஊடகங்களுக்கு எச்சரிக்கை வீடியோ பதிவு ஒன்றினை
அனுப்பியுள்ளது.
அந்த வீடியோவில் தாலிபன் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் பேசும் போது: கடந்த 3 வாரங்களாக பாகிஸ்தானின் அச்சு மற்றும் காட்சி
ஊடகங்களை கண்காணித்து வருகிறோம். சச்சின் டெண்டுல்கர் குறித்து பக்கம் பக்கமாக கட்டுரைகளும், தொலைக்காட்சிகளில் சிறப்பு செய்திகளும்
தினமும் வந்து கொண்டு இருக்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை இப்படிக் கொண்டாடுவது பாகிஸ்தானுக்கு இழுக்கு. சச்சின் சிறந்த
கிரிக்கெட் வீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரை இப்படிக் கொண்டாட வேண்டாம். அவர் ஒரு இந்தியர் என்பதை பாகிஸ்தான் மறந்துவிட
வேண்டாம்.
அதே வேளையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் தோற்றதற்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், அணி வீரர்களையும் பாகிஸ்தான்
ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளது. சொந்த நாட்டு வீரர்களை இப்படி விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அந்த வீடியோவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியை தொடர்ந்து - தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு குறித்து பல விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.
பரபரப்பான செய்திகளை மையமாக வைத்து விளம்பர பலகைகள் வைக்கும் அமுல் நிறுவனத்தின்
பலகை
ஊடகங்கள் வெளியிட்டவாறு தான் அச்சம்பவம் நடந்ததா? இப்போது பார்க்கலாம்.
தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹிதின் அன்றைய தின பேட்டி VIMEO வீடியோ பகிர்வு இணையதளத்தில் - 16
நிமிடங்கள், 40 வினாடிகள் நீளத்தில் - வெளியாகிவுள்ளது.
http://vimeo.com/80132898
இந்த வீடியோ பதிவில் துவக்கமாக - அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர், பாகிஸ்தான் அரசாங்கத்துடனான அமைதி பேச்சு வார்தைக்குறித்தும்,
நவம்பர் 1 அன்று அமெரிக்க படையின் டிரோன் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட அவ்வமைப்பின் தலைவர் ஹகிமுல்லாஹ் மசூத் மரணத்தால்
பேச்சுவார்த்தை வாய்ப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறித்தும், அவ்வமைப்பின் புதிய தலைவர் முல்லாஹ் பஸ்லுல்லாஹ் - தொடர்ந்து
பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து முடிவெடுப்பார் என்றும் கூறுகிறார். இது - 6:26 நிமிடம் வரை நீடிக்கிறது.
அதனை தொடர்ந்து, சமீபத்தில் பாகிஸ்தானில் சர்ச்சையை கிளப்பிய, அந்நாட்டின் ஜமாத்தே இஸ்லாமி கட்சியின் தலைவர் முனவர் ஹுசைனின்
பேச்சு குறித்து - தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் கருத்துக்கள் கூறுகிறார்.
அமெரிக்க படையின் டிரோன் விமான தாக்குதலில் ஹகிமுல்லாஹ் மசூத் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, முனவர் ஹுசைன் -
செய்தியாளர்களிடம், மசூதை - ஷஹீத் என வர்ணித்திருந்தார். மேலும் - அமெரிக்காவுக்கு துணைப்புரிந்து மரணிக்கும் பாகிஸ்தான் ராணவ
வீரர்களை ஷஹீத் எனக்கூற முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ
பதிவில் - முனவர் ஹுசைனின் பேச்சை பாராட்டி பேசிய தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித்,
தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பினரும் இஸ்லாத்திற்காக உயிர் தியாகம் செய்வதாகவும், அவர்களை ஷஹீத் எனக்கூறுவது சரி என்றும் பேசுகிறார்.
இது - 9:14 நிமிடம் வரை நீடிக்கிறது.
இவ்வீடியோவின் 9:14 நிமிடங்களில் இருந்து 11:30 நிமிடங்கள் வரை - சச்சின் குறித்த கருத்துக்கள், பிற விசயங்களுடன் இணைந்து,
இடம்பெறுகின்றன.
அதில் - சாஹிதுல்லா சாஹித், இஸ்லாத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் தாலிபான்கள் கொல்லப்பட்டாலும் அவர்களை சஹீத் என சொல்லக்கூடாது
எனக்கூறுவது, எப்படி இருக்கிறது என்றால் - அண்மையில் ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - நல்ல விளையாட்டு வீரர்
என்றாலும், அவர் இந்தியர் என்பதால் அவரை புகழக்கூடாது என்றும், ஆனால் - பாகிஸ்தான் நாட்டு விளையாட்டு வீரர் மிஸ்பாவுள் ஹக் சரியாக
விளையாடாவிட்டாலும் - அவர் பாகிஸ்தான் விளையாட்டு வீரர் என்பதால் புகழப்பட வேண்டும் எனக்கூறுவது போல் உள்ளது என்றும் கூறுகிறார்.
பெரும்பாலான ஊடகங்களில் வெளியான செய்திக்கு எதிர்மாற்றமாக இவ்வீடியோவில் சாஹிதுல்லா சாஹித் பேசுகிறார்.
சச்சினை ஆதரித்து செய்தி வெளியிடக்கூடாது என செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் பாகிஸ்தான் ஊடகங்களை மிரட்டியதாக Press Trust
of India போன்ற செய்தி நிறுவனங்கள் ("Stop praising Sachin Tendulkar: Taliban to Pakistan media") முதலில் செய்தி அனுப்பின. ஒரு
சில மணி நேரங்களில் அச்செய்தி - உலகின் பிரதான ஊடகங்களில் வெளியாயிற்று.
அச்செய்தியினை மாற்றி Taliban invoke Sachin Tendulkar to defend 'martyr' tag for militants ("தீவிரவாதிகளுக்கு சஹீத் என்ற பெயர்
வழங்குவதை நியாயப்படுத்த தாலிபான் சச்சின் பெயர் பயன்படுத்துகிறது") என்ற தலைப்பில் - Press Trust of India பின்னர் செய்தியை
அனுப்பியது. இது ஊடகங்களால் - பெரும் அளவில் கண்டுக்கொள்ளப்படவில்லை - ஒரு சில ஊடகங்களை தவிர.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் விளக்கத்துடன் வெளியான செய்தி
--------------------------------------------------------------------------
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் ஊடகப்பார்வை என்ற தலைப்பில் கட்டுரைகள் அவ்வப்போது
வெளிவர உள்ளன. இதில் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் போன்ற மரபார்ந்த ஊடகங்கள், இணையதளங்கள், முகநூல் போன்ற நவீன்
ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகள், அவைகள் குறித்த ஆய்வு கட்டுரைகள் இடம்பெறும். |