சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு அவ்வப்போது தமிழ் திரைப்படங்கள் வெளிவருவது உண்டு. அவற்றில் பல - கலை சினிமா வகையை
சார்ந்ததாகவே இருந்துள்ளன. அரிதாக - வெகுஜன ரசிகர்களை சென்றடையும் நோக்கில், சமூக பிரச்சனைகளை மையப்படுத்தியும், சில படங்கள்
வெளிவருகின்றன. அந்த வரிசையில் - நவம்பர் 7 அன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.
ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், கண்டேன் காதலை, சேட்டை போன்ற வியாபார படங்களை இயக்கியுள்ள ஆர்.கண்ணன் -
இப்படத்தினையும் இயக்கியுள்ளார். இது - ஆடல், பாடல் என சராசரி தமிழ் திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட 132 நிமிட நீள
படம்.
படப்பதிவின் போது...
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ முகாம் நடத்த சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். அதில் படத்தின் கதாநாயகியும் ஒருவர்.
முகாமில் கலந்துக்கொண்ட பலரிடம் புற்று நோய், காது கேளாமை, அடிக்கடி கருகலைவு போன்ற குறைகளை அவர்கள் கண்டறிகிறார்கள்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் இணைக்கும் ஒரே அம்சம் அவர்கள் எல்லோரும் செல்வ விநாயகர் ஸ்டீல் (S.V. Steel Factory Private Limited)
நிறுவனத்தில் பணிப்புரிபவர்கள். இந்த நிறுவனம் - காயல்பட்டினம் நகரில் அமைந்துள்ளதாக திரைப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல், படத்தில் அவ்வப்போது - காயல்பட்டினம் பெயர் குறிப்பிடப்பட்டு, புற்று நோய் இங்கு அதிகமாக காணப்படுவதும்
தெரிவிக்கப்படுகிறது.
படத்தின் கதாநாயகி - தனது தோழியை ஊரில் சந்திக்கிறார். தனது தோழியும் அந்த நிறுவனத்தில் பணிப்புரிகிறார் என அறிந்து - அந்த
நிறுவனத்திற்குள் ரகசியமாக சென்று, ஆபத்தான சூழலில் அந்த நிறுவனம் இயங்குவதை அவர் படம் பிடிக்கிறார்.
எடுத்த ஆதாரங்களோடு அந்நிறுவனத்தின் உரிமையாளரை கதாநாயகி சந்திக்கிறார். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி கேட்கிறார். அவற்றை செய்ய பெரிய செலவாகும் என்றும், தன்னால் அதனை செய்ய முடியாது என்றும்
உரிமையாளர் கூறிவிடுகிறார்.
அந்த தொழிற்சாலையில் பணிப்புரியும் தனது தோழி அங்கு ஏற்படும் விபத்தில் மரணிக்கவே, கதாநாயகி - சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல
வழக்கு போட முடிவு செய்து, சென்னைக்கு ரயிலில் புறப்படுகிறார்.
அதே ரயிலில் - படத்தின் கதாநாயகன், தனது நண்பனுடன் பயணம் செய்கிறார். ஓடும் ரயிலில் தொழில் நிறுவனத்தின் அடியாட்கள் கதாநாயகியை
கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து கதாநாயகியை, கதாநாயகன் காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறார்.
அரசு அமைப்புகள் நிறுவனத்திற்கு ஆதரவாக இருப்பதால், வழக்கில் கதாநாயகி தோல்வி அடைகிறார்.
ஏமாற்றம் அடைந்த கதாநாயகன், ஓர் உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்த - மது அருந்திய நிலையில், தொழிற்சாலையின் உரிமையாளரை காரில் கடத்தி செல்கிறார். வண்டி விபத்தை சந்திக்கிறது. கதாநாயகன் மற்றும் அவரது சகாக்கள் அந்த உரிமையாளரை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்து சென்று உயிரை காப்பாற்றுகிறார்கள். இதனால் மன மாற்றம் ஏற்பட்ட உரிமையாளர், தனது நிறுவனத்தை நவீனமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறார்.
இது தான் படத்தின் கதை.
படத்தில் அவ்வப்போது - எவ்வாறு தொழில் நிறுவனங்கள் - லாபத்தை மட்டும் பிராதன நோக்கமாக வைத்துக்கொண்டு, உயிர்களை மதிக்காமல்,
செயல்புரிகின்றன என தெரிவிக்கும் வகையில் வசனங்களும் உண்டு.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலையினை மையமாக படம் கொண்டிருந்தாலும், வெகு ஜனத்தின் வரவேற்பினை பெற காமடி படமாக
படத்தினை வழங்கியுள்ளார் அதன் இயக்குனர் ஆர்.கண்ணன். இப்படத்தின் - கதை, திரைக்கதை மற்றும் வசனத்திற்கும் இவரே பொறுப்பு.
படத்தில் - கதாநாயகி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாக காண்பிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் குறித்த வழக்குகள் - உயர்நீதிமன்றத்தில் அல்லாமல், 2010ம் ஆண்டு முதல், தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் விசாரிக்கப்படுகின்றன. தமிழ் சினிமாவில் சகஜமாக காணப்படும் இது போன்ற குறைகள் இப்படத்திலும் சில உள்ளன.
படத்தின் கதாநாயகன் அழகு பாத்திரத்தில் விமல், கதாநாயகி ப்ரியா பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த், கதாநாயகனின் நண்பன் மைக்காக சூரி, தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வ விநாயகராக நாசர், அவரின் மனைவியாக அனுபமா குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக காயல்பட்டினம் மக்கள் மேற்கொண்டு வரும், DCW தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கமோ இப்படம் என - இப்படத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் மையம், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை, காயல்பட்டினம், புற்று நோய் போன்ற விஷயங்கள் - நினைக்க தூண்டுகின்றன.
புகைப்படங்கள்:
www.Top10Cinema.com
|