டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்திய திருநாட்டின் அரசியல் சாசனம் (Constitution) -
சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியினர் ஆகிய பெருவாரியான மக்கள் கண்ணின் இமை போல பாதுகாக்கபட வேண்டும் என பல்வேறு
சட்டங்கள் மூலம் வழிவகை செய்தது. அச்சட்டங்கள் ஜவர்ஹர்லால் நேரு பிரதமராக இருந்தது வரை பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால், அதற்குப்
பின் வந்த அரசுகளால் சிறுபான்மையினருக்கும், தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியது. குறிப்பாக கீழ்க்காணும்
சம்பவங்களை சொல்லலாம்.
1984ஆம் ஆண்டு புது டெல்லியில் சீக்கியர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட சம்பவம்; 1989ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு நடந்த பகல்பூர்
கொடுமை; 1992ஆம் ஆண்டில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு மும்பை போன்ற நகரங்களில் நடந்த கொலைகள்; குஜராத்தில், 2002இல் நடந்த
பொய்யான கோத்ரா ரயில் விபத்து சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் மனித வேட்டை; பழங்குடி மக்களுக்காக நோய் தீர்க்க குடும்பத்துடன்
பணியாற்ற வந்த பாதிரியார் டாக்டர் ஸ்டைன்ஸ், தன் மகனுடன் ஒடிசாவில் எரிக்கப்பட்ட சம்பவம்; இன்று வரை தலித் இன மக்கள்,
தென்னாப்பிரிக்க நிறவெறிக் கொள்கை போல, பல இடங்களில் காலில் செருப்பு அணியக் கூடாது என்ற நிலை, அவர்களைத் தனிமைப் படுத்தும்
சுவர்கள், கலப்புத் திருமணம் செய்யத் தடை என்ற போர்வையில் தர்மபுரி நாயக்கன் கோட்டை காலனி தாக்கப்பட்டு, ஒரு ஊரையே துவம்சம்
பண்ணும் சம்பவங்கள் போன்றவை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு உலகளவில் மதிப்பு கெடுகிறது என்று மத்தியில் ஆளும் ஆட்சியர்களிடம் ஒரு குற்ற
உணர்வு பல ஆண்டுகளாக இருந்தது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் போல், புது சம்பவங்கள் திரும்பவும் நடக்காமல் இருக்க, மத
வன்முறைத் தடுப்பு (PREVENTION OF COMMUNAL AND TARGETED VIOLENCE (ACCESS TO JUSTICE AND REPARATIONS) BILL, 2011) வரைவு
சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆளும் கூட்டணி கொண்டுவந்துள்ளது.
இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்க உருவாக்கப்பட்டது தேசிய ஆலோசனை குழு (NATIONAL ADVISORY COUNCIL). 2004 இல்
உருவாக்கப்பட்ட இந்த குழு, பல முக்கிய சட்டங்களையும், திட்டங்களையும் வடிவமைத்து அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. சோனியா காந்தியை
தலைவராக கொண்ட இந்த குழுவில், பல வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது பரிசீலனையில் இருக்கும் மத வன்முறைத் தடுப்பு
வரைவுச் சட்டத்தை தயாரிக்க, NAC - துணைக்குழு (WORKING GROUP) மற்றும் ஆலோசனை குழு நியமித்து செயல்புரிந்தது.
வரைவு சட்டத்தை வடிவமைத்தவர்கள் குழுவில் ஹர்ஸ் மந்தர் (சர்ச்சைக்குட்பட்ட அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கும்
சமூக ஆர்வலர்), அனு ஆகா (தொழில் அதிபர் / சமூக ஆர்வலர்), டீஸ்தா செதல்வாட் (குஜராத்தில் நடந்த இனப் படுகொலைகளை வெளியில்
கொண்டுவர பெரும் பங்காற்றியவர்), ஃபரா நக்வி (எழுத்தாளர் / சமூக ஆர்வலர்) போன்றோர் இருந்தனர்.
இவ்வரைவு சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
1) தேசிய மற்றும் மாநில அளவில் - இச்சட்டத்தை அமல்படுத்த புதிய அமைப்புகள் (NATIONAL / STATE AUTHORITY FOR COMMUNAL HARMONY,
JUSTICE AND REPARATION) உருவாக்கப்படும்
2) தலைவர், துணைத் தலைவர் உட்பட 7 பேர் கொண்ட இவ்வமைப்புகளில், குறைந்தது 4 பேர் - இந்த சட்டம், பிரிவு (Group) என அடையாளம்
கண்டுள்ள (மொழி/மத) சிறுபான்மையினர், தலித், பழங்குடி இனம் சார்ந்தோர் இருக்கவேண்டும்
3) அவ்வமைப்புகளிடம் வழங்கப்படும் புகார் வாக்குமூலங்கள் எல்லா நீதிமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
4) இராணுவத்திற்கோ, காவல்துறைக்கோ அல்லது எந்த துறைக்கோ - நேரடியாக அமல் செய்கின்ற உத்திரவை - அந்த அமைப்புகள்
பிறப்பிக்கலாம்.
5) வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக இந்தக் குழுக்கள் நிவாரணம் வழங்கலாம்.
இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களும், மற்ற சில மாநிலங்களும் எதிர்க்கின்றன. இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் வெளிப்படையாக கூறும் காரணங்களும், சொல்லாமல் - நம்மால் புரிந்துக்கொள்ளக்கூடிய காரணங்களும்
என்னவென்றால்:
1) சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவது மாநில அரசின் கடமை. அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது.
2) மத்திய அரசு - 2014ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் சிறுபான்மையினர், தலித், பழங்குடியினர் ஓட்டுக்களைப் பெறும் கண்ணோட்டத்தில் இச்சட்டம் கொண்டு வந்துள்ளது.
3) கோத்ரா சம்பவத்திற்குப் பின்பு நடந்த மனித வேட்டையை கண்ணை மூடிக் கொண்டு, கண்டும் காணாது போல இருங்கள் என்று எந்த அரசும்
அதிகாரிகளுக்கு இனி உத்தரவிட முடியாது. ஏனென்றால் அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில குழுக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். அதையும்
மீறி எந்த அதிகாரியாவது நடந்தால் அவர் ஆயுள் தண்டனை பெரும் அளவிற்கு தள்ளப்படுவார்.
4) இந்த வரைவுச் சட்டம், மகாராஷ்டிராவில் காணப்படும் "மகாராஷ்டிரா மகாராஷ்டிரா மக்களுக்கே" என்ற மொழி வெறிக் கோஷங்களை எழுப்ப,
சிவசேனா போன்ற அமைப்புகளை ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும்.
ஆனால் நடுநிலையாளர்களோ - ஆட்சியாளர்களும், மத வெறியர்களும் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு மனித வேட்டையாடக் கூடாது என்றும்,
நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் காப்பற்றப் பட வேண்டும் என்று கூறி, இந்த வரைவுச் சட்டம் நாட்டிற்கு நல்லது என்கின்றனர்.
அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் சில உதாரணங்கள்:
1) 1984ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது அரசு இயந்திரம் இயக்கக் கூடிய கிரியா ஊக்கி என்ற கட்டளைகளை பிறப்பிக்க
யாரும் முன் வரவில்லை.
2) 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவம், ஒரு கிலோ மீட்டர் தொலைவில்
இருந்தாலும், அதனை இயக்காமல் மவுனம் காத்த பிரதமரைக் கொண்ட மத்திய அரசை நாம் பெற்றதால் புராதன சின்னம் இடிக்கப்பட்டது.
3) 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்குப் பிறகு நடந்த நரபலி நிகழ்வுகளை அறிந்து கண்ணீர் விடத்தான் முன்னாள் ஜனாதிபதி
கே.ஆர்.நாராயணனால் முடிந்ததாக அவரே பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார்.
4) அதற்கு பின்னரும் பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் - குஜராத்தில் இனக் கலவரத்தில்
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கி உள்ள அகதி முகாம்களைப் பாவையிட வேண்டும் என்று அப்போதைய பாரதிய ஜனதா ஆண்ட மத்திய அரசிடம்
கேட்டதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாகவும், தன் பதவி போன பின்பு எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
5) முஸ்லிம்களின் ஓட்டை பெருவாரியாகப் பெற்று ஆட்சியமைக்கப்பட்ட உத்திரபிரதேச மாநில முசாபர் நகரில், கிட்டத்தட்ட 50 முஸ்லிம்கள்
கொல்லப்பட்டும், ஏராளமானோர் ஹுசைனா பாக்கில் அகதிகளாக தஞ்சம் புகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இப்படி போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக வருவதற்குக் காரணம், குற்றவாளிகள் நீதிமன்றத்தின்பால் நிறுத்தப்படும் போது, நீதி தேவதையின்
கண்கள் நிரந்தரமாகக் கட்டப்பட்டு, குற்றவாளிகள் வெளிவருவதுதான் என்று சிறுபான்மை மக்களும், தலித்துகளும், பழங்குடியினரும் நம்புகின்றனர். |