எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
காயல்பட்டணம்.காம் தனது அகவை 15 நிறைவு செய்து இனிய 16 ல் நுழைய இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
நெடுங்காலமாக மேலை நாடுகளில் 'உள்ளூர் செய்திகள்' 'VILLAGE NEWS' என்ற பெயர்களில் செய்தித் தாள்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் வாரத்திற் கொருமுறை, மாதத்திற் கொருமுறை என்ற முறைமையில் தான் வெளி வருகின்றன.
ஊர்- உலகச் செய்திகளை பொதுவாக அனைவரும் அவசியம் தெரிந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை. அதனால் பெரும்பா லான மக்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனாலும், தன் ஊரைப் பற்றியும், தன் ஊராரைப் பற்றியும், தன் உறவினர், நண்பர்களைப் பற்றியும் அறிய விரும்பாத எவரும் உலகில் இல்லை என்பதை மட்டும் அடித்துச் சொல்லலாம்.
ஏதோ ஒரு வேலையில் அல்லது கவனத்தில் நாம் ஆழ்ந்து மூழ்கியிருந்தாலும் நம் ஊர் பெயரைக் கேட்டதும் நம் மூளையில் ஓர் அதிர்வு ஏற்பட்டு அதன் பக்கம் திரும்பிய அனுபவம் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும்.
உலகின் பல பாகங்களில் விரிந்து கிடக்கும் நமக்கு நம்மூர் செய்திகள் மற்றும் நம்மூர் காரர்கள் வாழும் வெளியூர் இருப்பிடங்களில் நடை பெரும் நம் மக்களின் நிகழ்வுகளை அழகுத் தமிழில், அழகிய நிழற் படங்களுடன் பார்க்கும் போது ஏற்படும் பரவசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
அந்த அனுபவத்தை நமக்கு முதன் முதலாகத் தந்த பெருமை காயல்பட்டணம்.காமிற்கே உரித்தாகும்.
பல இணைய தளங்கள் தோன்றிவிட்ட இன்றைய காலத்திலும் 15 ஆண்டுகளைக் கடந்து பல்லாயிர வருகையாளர்களை மிகுதியாகக் கொண்டு முதன்மாயாகத் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.
வெறும் செய்திகளைத் தரும் தளமாக மட்டுமில்லாமல் KAYAL FIRST TRUST என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நம் காயல் நகர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல நல்ல திட்டங்களையும் முன்னெடுத்து செய்து வருவதும், (உதாரணமாக, ' சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மை மாணாக்கர்), அரசு அலுவலகங்களில் நடை பெரும் அவல நிலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது, அரசு வேலை வாய்ப்புகளில் நாம் பங்கெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வரும் உங்கள் வெளியீடுகள் ஆகியன அற்புதமானவைகள்.
மக்கள் எப்படியெல்லாம் பல துறைகளில் ஏமாற்றப் படுகிறார்கள்- எப்படி விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்ற பல தகவல்களை அடிக்கடி செய்திகள் மற்றும் கட்டுரை வாயிலாக தருவதும் காயல்பட்டணம்.காம் மக்களுக்காக செய்யும் மாபெரும் தொண்டு என்று மனமாரப் பாராட்டுகிறேன்.
அரசு அலுவலகத் துறைச் சார்ந்த செய்திகள், நுணுக்கங்களைத் தருதலில் காயல்பட்டனம்.காம் ஒரு புரட்சி செய்து வருகின்றது. வளருட்டும் உங்களின் சீரிய பணிகள்.
காயல் நகராட்சித் தேர்தலின் போது ஒரு பக்க சார்பாக நடந்ததைத் தவிர வேறு குறைபாட்டை நான் காயல்பட்டணம்.காமில் காண முடியவில்லை. அதையும் சீர்திருத்தப் பாருங்கள்.
அல்லாஹுத் தாலா உங்கள் அனைவருக்கும் நிறைவான உடல் நலத்தையும், உங்கள் தொழிலில் பரக்கத்தையும், உங்கள் சேவைகளில் மனத் தூய்மையையும், உங்களின் நற்பணிகளை அவன் பொருந்திக் கொள்ளவும் துவா செய்கிறேன். |