KAYALPATNAM.COM பருவ வயது 15ஐ டிசம்பர் 19ஆம் தேதியன்று பூர்த்தி செய்யும் செய்தி கேட்டு மகிழ்கிறேன். காயல்பட்டினத்திலும் கணினி வழி தகவல் தெரிவிக்கும் ஊடகம் ஒன்று வரும் என்று அன்று நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. இன்று பல உள்ளன. மகிழ்ச்சி. அதிலும்KAYALPATNAM.COM தலைசிறந்து - தலை நிமிர்ந்து நிற்பது காண பெருமகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
நீடூர் நண்பர் அய்யூப், “நம்ம ஊரு செய்தி” என்ற மாத இதழ் ஒன்றைத் துவக்கி, வட்டார செய்திகளையும், குறை நிறைகளையும் பளிச்சிட செய்து அதன் மூலம் நிவாரணம் பெற்றதை என்னிடம் விளக்கி, உள்ளூரிலும் - வெளியூர்களிலும் ஏன் வெளிநாடுகளிலும் இலவசமாகக் கொடுத்தது போல், நாமும் ஓரிதழைத் துவக்கினால் என்ன என்று சிந்தித்து, சிலரிடம் கலந்துரையாடியும் அது கைகூடவில்லை. காரணம் நான் அதிகம் ஊர் போவதில்லை - இருப்பதில்லை. அன்று நான் நினைத்த பணியை இன்று KAYALPATNAM.COM செவ்வனே செய்து வருகிறது என்று கூறலாம்.
மேலும், ஊரோடு தொடர்பு குறைவாக உள்ள என்னை - ஊரெல்லாம் - உலகமெல்லாம் வாழும் காயலர்கள் மத்தியில் பிரபலமாக்கிவிட்டது இந்த காயல் கணினி வழி.
ஹாங்காங்கில் ஒரு நாள் கவ்லூன் பள்ளிவாசல் நோக்கி செல்லும்போது, முதுகைத் தட்டிய ஒருவர் பெயர் சொல்லி ஸலாம் சொன்னார். “உங்கள் கட்டுரைகளை நான் விரும்பிப் படிப்பேன்... காயல்பட்டணம் கணினி வழியில்... ஆனால் எனக்கு ஊர் காயல்பட்டணம் அல்ல!” என்றார். வியந்தேன் நான்.
மேலும் கூறிய அவர், “முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய அவதூறு வந்தபோது, சரியான விபரத்தை எந்த ஊடகத்திலும் நாங்கள் பெறாது தவித்த நேரத்தில், உங்களது கட்டுரையை KAYALPATNAM.COMஇல் வாசித்து தெளிவு பெற்றதோடு, மற்றவர்களுக்கும் விளக்கினேன்... அன்று முதல் இந்த இணையதளத்தை அடிக்கடி பார்க்கிறேன்... உங்கள் கட்டுரைகளையும் படிக்கிறேன்...” என்றார்.
இதுபோன்று பல இடங்களுக்கு நான் தொழில் நிமித்தம் செல்லும்போது, எனக்கு மதிப்பு - மரியாதையை இந்த இணையதளத்தில் வெளிவரும் எனது கட்டுரைகள் காயலர்கள் மத்தியில் வாங்கித் தந்ததை அனுபவித்திருக்கிறேன்.
சமீபத்தில், கத்தர் - தோஹாவில் காயல் சகோதரர்களை சந்தித்தபோது ஒரு சகோதரர், “இங்குள்ள பெண்கள் எல்லாம் உங்கள் வாசகிகள்" என்றார். தூக்கி வாரிப்போட்டது எனக்கு. “பெண்கள் அறியாத - அறிய வேண்டிய உலக நடப்புகளை நீங்கள் எழுதுகிறீர்கள்... ஆகவே அவர்கள் விரும்பிப் படிக்கிறார்கள்... அது பற்றிப் பேசுகிறார்கள்...” என்று மேலும் அவர் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு துபையில் காயல் கண்மணிகளைச் சந்தித்தபோது, நான் நாற்காலியில் அமர்ந்ததுமே - இளவல் ஒருவர், “உங்கள் மலேசிய ஆயிஷா கட்டுரை மனதை ரொம்பவும் தொட்டது...” என்று பகர்ந்தார். ஆம் அவர் கருத்து என் மனதையும் தொட்டது.
கட்டுரையைக் காணோமே என்று குறைபடும் நெஞ்சங்களும் வுண்டு. இவ்வாறு பல வழிகளிலும் என்னைப் பெருமைப்படுத்திய KAYALPATNAM.COMக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இதன் சேவை மென்மேலும் வளர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஆமீன்! |