எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நம்முடைய Kayal on the Web (kayalpatnam.com) என்ற இணையதளம் ஆரம்பித்து 15 வருடங்களை கடந்து விட்டது என்பதை அறிந்து சந்தோசம், ஆச்சரியம், பூரிப்பு ஆகியவைகள் ஒரு சேர மனதில் உண்டாகின்றது.
முதலில் இந்த இணையதளத்திற்கு என்னுடைய தனிப்பட்ட நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் சாளை ஜியாவுத்தீன் என்ற மனிதரை பரவலாக நம் மக்களிடம் அறிமுகப் படுத்தியது இந்த வலைதளம் தான்.
எந்த அளவு என்றால் சில நாட்கள் கருத்து பதியவில்லை என்றால் உடனே மெயில் அனுப்பி நலமாக இருக்கின்றீர்களா? என்று விசாரித்தும், முக்கிய செய்திகளுக்கு கருத்து எழுதவில்லை என்றால், இந்த செய்திக்கு உங்களின் நிலைபாடு என்ன என்றும், நான் பதித்த கருத்தை அட்மின் அவர்கள் கத்திரி போட்டால், காக்கா, என்ன எழுதினீங்க? எதற்கு கத்தரி போட்டார்கள்? என்றும், சில கருத்துக்கு உரிமையுடன் கண்டித்தும் மெயில் அனுப்பும் நல்ல அன்பு உள்ளங்களை நான் பெற்றதற்க்கும் காரணம் இந்த வலைதளம் தான்.
நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைத்ததும் இந்த வலைதளம் மூலம் தான்.
காலையில் கணணியை திறந்ததும், நம் மக்கள் முதலில் திறப்பது இந்த வலைதளத்தை தான். ஊரில் காற்று அடித்து மரம் சாய்ந்தது முதல், மழை பொலிந்து ஊர் குளுமையாக இருப்பதை தொடர்ந்து, நகராட்சி வரை நடைபெறும் அனைத்து செய்தியையும் அறிய முடித்து, ஊரிலே இருப்பது போன்ற மன நிலையை தருகின்றது என்றால் அது மிகை அல்ல.
சில சமயங்களில் செய்திகளை தாமதமாக தருகின்றார்கள் என்ற மனக்குறை உண்டு. ஆனால் அந்த தாமதச் செய்தியை கண்டதும், செய்தியின் தரம், அதற்க்கு கொடுக்கும் தலைப்பு, புகைப்படங்களை துல்லியமாக பதித்தல் ஆகியவற்றை கண்டதும் அந்த மனக்குறை நீங்கி விடுகின்றது.
பல சமயங்களில் இந்த வலை தளத்தை நடத்துபவர்கள், செய்தியாளர்கள் ஆகியோரின் கடமை உணர்வையும், சமூக அக்கறையும் என்னை ஆச்சரியப் படுத்த வைக்கும்.
ஒரு சிறு உதாரணத்திற்கு " இன்றைய கடலின் காட்சிகள்" என்ற செய்திக்காக சகோதரர் S.K. சாலிஹ் எடுத்துக்கொள்ளும் அக்கறை அலாதி. நாளை உலகம் முடியப்போகின்றது என்றாலும், இன்று கடலை புகைப்படம் எடுத்து செய்தியாக ஆக்காமல் விடமாட்டார். விபரம் சொன்னால், நாளை தானே உலகம் முடியப்போகின்றது, இன்று ஒரு நாள் இருக்கின்றது அல்லவா என்பார். வெளி ஊர் சென்றாலும், பலருக்கு போன் போட்டு, தயவு செய்து இன்றைய கடலை ஒரு சில புகைப்படம் எடுத்து வையுங்க என்று அன்பு கட்டளை இடுவார்.
இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு ஆத்மாத்தமான ஈடுபாட்டுடன் இவர்களின் வேலைகள்/சேவைகள் தொடர்கின்றது.
சில வேண்டுகோள்கள்:-
* இந்த வலைதளத்தில் அதிகம் அதிகமாக இஸ்லாமிய கட்டுரைகள் வெளிவர ஆர்வப்படுகின்றேன்.
* கட்டுரைப் போட்டிகள் போன்ற ஆக்கபூர்வமான பரிசு போட்டிகளை எதிர்பார்க்கின்றேன்.
• ஒவ்வொரு செய்திகளிலும் மற்றும் கருத்து பதிவிலும், இந்த செய்தி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாசகர்கள் ரேட்டிங் பண்ணவும், கருத்து பதிவில் எத்தனை வாசகர்களுக்கு இந்த கருத்து பிடித்து உள்ளது, பிடிக்கவில்லை என்ற லைக் / அன்லைக் பட்டன் வைத்து, வாசகர்கள் அனைவர்களையும் ஓரளவாவது வலைதளத்தில் அவர்களின் பங்களிப்பை அளிக்க ஊக்குவிக்கலாம்.
குறைகள்.. குறைகள்.. ஆங்…ங்ங்…,,, குறைகள் இல்லாத மனிதனும் இல்லை, நிறுவனமும் இல்லை. படைத்தவன் ஒருவனே குறைகள் இல்லாதவன்.
இந்த வலைத்தளம் மேலும் மேலும் வளர்ந்தது, மக்களுக்கு நன்மைகள் செய்து தொடர பிராத்தித்து வாழ்த்துகின்றேன். |