ஊடகத்துறையில் மெல்லத் தவழ்ந்து, பின் எழுந்து நின்று, நடை பயின்று, இன்று பதினைந்து வயதை அடைந்த ஒரு துடிப்பு மிக்க இளைஞனாக உலக அரங்கில் வலம் வந்து கொண்டிருக்கும் எங்கள் செல்லக் குழந்தையான காயல்பட்டணம் டாட் காமிற்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்...!
என்பத்து ஐந்து காலகட்டங்களில் நான் நமதூரில் வெளிவந்த அல்ஹிதாயா, நற்சிந்தனை போன்ற இஸ்லாமிய மாத இதழ்களில் கவிதை, கட்டுரை, துணுக்குகள் என கால் பதித்திருந்த காலம். எழுத்தார்வமும், வாசிப்பு பழக்கமும் என்னை ஏதோ ஓர் உலகிற்கு அழைத்துச் செல்வதை உணர்ந்தேன்.
நட்பு வட்டாரங்கள் மெல்ல வியாபித்து நல்ல நண்பர்களையும் பெற்றேன். தொன்னூறு இறுதியில் நான் சவூதிக்குச் சென்றேன். வேலைப்பளு, நேரமின்மை காரணமாக எழுதும் வாய்ப்பு கிட்டவில்லை. மனதிலிருந்த ஆர்வமும், ஆவலும் மெல்ல ஓய்ந்து போயிற்று. பேனாவை திறப்பது என்பது வீட்டுக்கு கடிதம் எழுத மட்டும்தான் எனும் நிலை ஏற்பட்டது. வாசிக்கும் பழக்கமும் அடியோடு அகன்றது. ஆடியோ கேஸட்டுகளில் மார்க்க சொற்பொழிவுகள், அரசியல்வாதிகளின் மேடைப் பேசுக்கள், பாடல்கள், நாடகங்கள், மிமிக்கிரி, நகைச்சுவைகள், பட்டி மன்றங்கள் என கேள்வி ஞானத்தில் மூழ்கித் திளைத்திருந்த காலம் அது.
அன்று செல்போன்கள் இல்லை. கம்ப்யூட்டர் என்பது சொற்ப நபர்கள் அல்லது படித்து வேலையில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். எனவே இணையதளம் குறித்த எந்த அறிவும் அப்போது எனக்கில்லை என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. கால சுழற்சியின் வேக ஓட்டத்தில் நாளுக்கு நாள் பல்வேறு உபகரணங்களும், கைபேசிகளும், மடிக்கணினிகளும் தலைதூக்க காயல்பட்டனம் டாட் காமின் பிறப்பும் உருவாயிற்று.
ஆரம்ப காலத்தில் - அதாவது டாட்காம் தோன்றி எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் - நான் சொந்தமாக மடிக்கணனி வாங்கியதாக நினைவு. நமதூர் தளம், அதுவும் அதில் வரும் உள்ளூர் பற்றிய அடிப்படைத் தகவல்கள், குழந்தைகள் பிறப்பு, புகைப்படங்கள், திருமணச் செய்தி, மரணச் செய்தி, உள்ளூரில் உள்ள தொலைபேசி இணைப்பு எண்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்களின் விபரங்கள், இப்படி ஊர் பற்றிய தகவல்களை வெளிநாடுகளில் வசிக்கும் என் போன்றோர் அறிந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தது. வெளிநாட்டிலுள்ளோரை ஒருங்கிணைத்து அவர்களின் விபரம் மற்றும் கைபேசி எண்களை அறிந்துகொள்ள கம்யூனிட்டி எனும் ஓர் பகுதி இருந்தது. அதன் மூலம் ஏராளமான நண்பர்களும், உறவினர்களும் ஒருவரை ஒருவர் எளிதாக தொடர்புகொள்ள வசதியாக இருந்தது.
இந்தத் தளம் 1998இல் உதயமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று இது நமதூரின் பிரதான தளமாக விளங்கி வருகின்றது. 2000 செப்டம்பரில் ஆங்கிலத்தில் செய்திகள் வெளியிடத் துவங்கி, ஓரிரு மாதங்களில் பாமினி எனும் தமிழ் எழுத்துரு மூலம் அனைத்து செய்திகளையும் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்து, வாசகர்களின் நீண்ட நாள் விருப்பத்தைப் பூர்த்தியாக்கியது.
அன்று நம்தூரில் உள்ள இரண்டு பிரதான ஜும்ஆ பள்ளிகளின் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளை இந்த தளத்தில் வெளியிட்டு உலக காயலர்களின் கவனத்தை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்கது. காயல்பட்டினத்தின் தகவல்களை அறிந்துகொள்ள முதன்முதலாக துவங்கப்பட்ட ஒரே இணையதளம் என்ற பெருமை இத்தளத்தையே சாரும். வெளிநாடுகளில் வசிப்போர் உள்ளூர் நடப்புகளை அறிந்துகொள்ள இது மிக முக்கிய பங்கு வகிப்பதால் நாளுக்கு நாள் தனது வாசகர் வட்டத்தை விரிவுபடுத்தி இன்று கோலோச்சி நிற்பது பெருமைக்குரியதே!
முதன்முறையாக செப்டம்பர் 2010இல் தமது வெளிவரும் செய்திகளுக்கு வாசகர் கருத்து பகுதியை அறிமுகம் செய்தனர். இப்பகுதி வந்த பின்பு ஏராளமான வாசகர் கருத்துக்கள் பறிமாற்றத்தோடு, பல்வேறு சர்ச்சைகளும், தீர்வுகளும் வாசகர் மூலம் வெளிக்கொணரப்பட்டு, செய்திகளைப் படிப்போரை விட வாசகர் கருத்துக்களைப் படிப்போர் எண்ணிக்கை அதிகமாயிற்று. அந்த வகையில் காயல்பட்டணம் டாட்காமில் அதிகமாக கருத்துப் பதிவோரில் நானும் ஓர் அங்கமானேன். தமிழில் கருத்துப் பதியும் வசதி வந்த பின்னர் இன்னும் ஏராளமானோர் ஆர்வத்தோடு தமது எண்ணவோட்டங்களை எழுத்து மூலம் பகிர்துகொள்ள முன்வந்தனர். இந்த தளத்தில் இதுவரை நான் பதிந்த கருத்துக்களின் எண்ணிக்கை 902 ஆகும். அதில் நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் 49 ஆகும்.
வாசகர் எண்ணங்களை கருத்துப்பேழையில் ஏற்றுக்கொள்வது ஒரு புறமிருப்பினும், சில வில்லங்கமான அல்லது தனிநபரை தாக்கி முகம் சுளிக்க வைக்கும் கருத்துக்களை ஏற்க மறுப்பதோடு அதற்குரிய காரணத்தையும் வெளிப்படையாக அறியத் தரும் இத்தளத்தின் செயல்பாடு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தனக்கு சாதகமான செய்திகளை வரவேற்பதும், அதற்கு ஆஹா ஓஹோவென புகழாரம் சூட்டுவதும், பிறர் மனம் புண்படும்படியான கருத்துக்களை வெளியிட்டு வீண் விவாதங்களில் மக்களை குழப்புவதுமே இன்றைய ஊடகங்களின் வாடிக்கையாக உள்ளது. தமது பதிவுகள் அதிகம் வாசிக்கப்பட வேண்டும் எனும் குறுகிய எண்ணத்தில் மட்டுமே குறியாக இருப்போர், அதனால் வரும் பின்விளைவுகளைப் பெரிதாக எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த விஷயத்தில் டாட்காம் தனக்கென ஒரு வரைமுறையை வகுத்து வைத்துள்ளது. தனக்கு வரும் இது போன்ற வில்லங்கமான விரும்பத்தகாத கருத்துக்களை - ‘தனி நபர் விமர்சனம்’, ‘செய்திக்குத் தொடர்பில்லை’ என - வரையறுக்கப்பட்ட பல காரணங்களைக் கூறி தவிர்ப்பதோடு, வீண் விளைவுகளின் வீரியத்தை முளையிலேயே கிள்ளியெறிந்து விடுவது பாராட்டுக்குரியது.
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ஆன்லைன் மீடியா உலகில் கால்பதித்த டாட்காம் தரமான செய்திகளையும், நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களையும் வழங்கி வருவதால், சில நாளிதழ்கள் கூட இத்தளத்தில் வெளிவரும் செய்திகளை அப்படியே பதிவிறக்கம் செய்து தங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு வருகின்றன. வாசகர் மனதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தனது வடிவமைப்பை இதுவரை ஐந்து முறை மாற்றி மிக எளிதாக செய்திகளைப் படிப்பத்தற்கு வழிவகை செய்து வந்துள்ளது. வெறும் கருத்துக்களை மட்டுமே பதிந்து வந்த நான் இத்தளத்தின் எழுத்துமேடை பகுதியில் என்னை இணைத்துக்கொண்டு, இதுவரை பல்வேறு தலைப்புகளில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். இனியும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதும் வாய்ப்பை வல்ல நாயன் தந்தருள்வானாக.
காயல்பட்டணம் டாட் காமின் செயல்பாடுகளும் அதன் பரந்த நோக்கமும் என்னை வெகுவாக கவர்ந்ததால் கடந்த ஆண்டு முதல் நான் அதன் செய்தியாளர்களுள் ஒருவனாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். புகைப்படம் எடுப்பதில் அதீத ஆர்வமுள்ள எனக்கு, எனது திறமைகளை வெளியுலகிற்கு உணர்த்த ஓர் அரிய வாய்ப்பை இத்தளம் வழங்கியுள்ளதை பெருமையாகக் கருதுகின்றேன்.
செய்திக்காக நான் பல இடங்களுக்குச் செல்லும்போது புகைப்படம் எடுக்க நேர்ந்தால், ”நீங்க காயல்பட்டணம் டாட் காம் ஆளா?” என்று உவகையோடு பலரும் என்னிடம் கைகுலுக்குவதும் வரவேற்பதும் வாடிக்கையான ஒன்று. சில வேளைகளில் நான் பொது இடங்களில் புகைப்படம் எடுக்கும்போது சிறுவர்கள் கூட ஓடி வந்து, “காக்கா நெட்லெ போடுவீங்களா?” என போஸ் கொடுப்பதும், மருத்துவ முகாம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் சில தாய்மார்கள், ”தம்பி எங்க புள்ளையெ ஃபோட்டோ எடுத்து நெட்டுலெ போடுங்க அவங்க வாப்பா வெளிநாட்லெ இருக்கிறாங்க பார்ப்பாங்க” என உரிமையோடு கேட்பதும் எனக்கு பழகிப்போன ஒன்று. சில வேளைகளில், “என்னப்பா அந்த செய்தி இன்னும் உங்க டாட்காம்லெ வரல்லையே? எப்ப போடுவீங்க?” என ஆவலுடன் பலரும் கேட்பது வழக்கம்.
ஆக மொத்தத்தில் இந்த தளத்தில் செய்திகள் வருவதை பலரும் விரும்புவதை என்பதை என்னால் உணர முடிந்தது.
காலச்சக்கரத்தின் சுழற்சிக்கேற்ப இன்றைய நவீன உலகில் ஆண்ட்ராய்டு, ஐபேடு போன்ற எண்ணற்ற உபகரணங்களின் வாயிலாக தமது விரல் இடுக்குகளில் கனப்பொழுதில் உலகச் செய்திகள் யாவற்றையும் தட்டிப்பார்த்துவிடலாம். ஆனால் செய்திகளில் தமது கருத்துக்களையும் புகுத்தி அதையே செய்திகளாக வெளியிட்டு வருவது இணையதளங்களின் வாடிக்கையாக இருக்க, செய்தியை செய்தியாகத் தருவதில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது காயல்பட்டணம் டாட் காம் என்பதில் வேற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தற்போது மருத்துவம், ஊடகப்பார்வை, இலக்கியம், சட்டம், என பல்வேறு பகுதிகளைக் கொண்டு பல்சுவைக் கட்டுரைகளையும் மக்கள் பார்வைக்கு வைத்திருப்பது கரும்பு தின்ன கூலி வேண்டுமா? என எண்ணத்தோன்றுகிறது. பல்வேறு தகவல்களையும் கட்டுரைகளையும் வழங்கி வரும் இந்த தளத்தில் குழந்தைகளுக்கான பகுதியும் பெண்களுக்கான பகுதியும் இல்லை என்பதே எனது ஆதங்கம்.
தற்போது கணனி செல்போன் ஆகியவை மூலம் வீட்டிலிருக்கும் பெண்டிர்களும், சிறுவர் சிறுமியர்களும் இணையதளத்தைப் பயன்படுத்தி வருவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். அவர்களுக்கும் பயன்படும் வகையில் இன்னும் சில பகுதிகளை உருவாக்க வேண்டும். இத்தளத்தின் மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள எத்தனையோ தகவல் முத்துக்கள் இருந்த போதிலும் இது போன்ற இன்னும் சில மணிகள் பதிக்கப்பட்டால் அது மின்னி ஒளிவீசி வாசகர்தம் அறிவுக் கண்ணைத் திறக்க ஏதுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
இத்தளத்தின் பல சாதனைகளில் முதன்மையாக நான் கருதுவது, நமதூர் நகர்மன்றத்தின் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் வீடியோ பதிவுகளை வெளியிட்டதுதான். அப்போது சில நகர் மன்ற உறுப்பினர்களின் வெறுப்புக்குள்ளாகி எதிர்ப்பு அலைகள் மேலோங்க மீடியாவின் குரல்வளை நெரிக்கப்பட்டு உள்ளே வரக்கூடாது என தடுக்கப்பட்ட போது தயங்காமல் துணிவோடு நின்று நீதித்துறையை நாடி, மக்கள் மன்றத்தை மக்கள் காண வழி செய்ய வேண்டும் எனும் மகத்தான தீர்ப்பை பெற்றுத் தந்த வெற்றியையே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
செய்திகளின் தரம் குன்றாமல் உண்மையை உண்மையாக உலகிற்கு உணர்த்த வேண்டும். நீதியையும், நியாயத்தையும் விலை கொடுத்து வாங்காமல் நீதமான முறையில் மக்கள் குறைகளையும் தேவைகளையும் முன்வைத்து உன்னதமான முறையில் ஊடகங்கள் நேர்மை தவறாத வண்ணம் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே அந்த ஊடகம் மக்கள் மனதை வென்றெடுக்கும் மகத்தான பாக்கியத்தைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
காயலின் பெருமைதனை உலகிற்கு உணர்த்த பாடுபடும் நல்லுள்ளம் கொண்ட காயல்பட்டணம் டாட் காம் இனி நூற்றாண்டு விழா காணும் என்பதில் ஐயமில்லை. இன்ஷா அல்லாஹ்!
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...!
|