நம் காயல் மண்ணின் மாண்பையும், மதிப்பையும், பெருமைகளையும் உயர்த்திப் பிடித்து, உலகோர்க்கு சாட்சி சொல்லும் சரித்திரச்சான்றுகள் பல உண்டு. இன்று, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காயல்பட்டினம்.காம் என்ற மக்கள் செய்தித்தொடர்பு வலைத்தளம் அமைப்பும் அந்தப் பெருமையைப் பகிர்ந்து கொள்ள முழுத்தகுதியும் பெற்ற நிறுவனமாகத் திகழ்கிறது.
விஞ்ஞானத்தின் விந்தையான விளைவுகளை விவேகமான வழியில் திசைதிருப்பி, வீட்டு நடப்பையும், நாட்டு நடப்பையும், வேகமாகவும் விவரமாகவும் அழகுத் தமிழ் நடையில் அள்ளித்தருவது - அந்நிய நாடுகளே கதி என்று பரவிக்கிடக்கும் பலருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்பது மறுக்க முடியாத உண்மை. செய்திகளுக்காக மட்டும் தொடங்கப்பட்ட இந்த வலைதளம், சிறுகச் சிறுக முன்னோக்கிச் சென்று இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம், சமூக நலம், சமுதாய விழிப்புணர்வு... என்று தன் இலக்குகளை விரிவுபடுத்திக் கொண்டது இக்குறுகிய பதினைந்து ஆண்டுகளில்.
இதனால், இந்நாள் வரை குடத்தில் இட்ட விளக்குகளாய்த் திகழ்ந்த, திறமைவாய்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் பலரும் குன்றில் ஏற்றி வைத்த தீபங்களாய் ஒளி வீசி வரும் சிறப்பினைப் பெற்றுத்தந்தது இந்த வலைதளமே.
செய்திகளையும் , தகவல்களையும் சுட்டிக்காட்டி, அதனடியில் எழுதப்படும் விமர்சனங்கள் உண்மையில் ஒரு "கல்யாணக் களரி" விருந்துதான் (சில வேளைகளில் கறி வேகாமலும், சோறு குழைந்தும் போவது உண்டு; சமைப்பவர், மேற்பார்வை பார்த்தவரின் தவறு என்று தள்ளுவோம்.) கருத்துக்கு இதமான எழுத்துக்களை வாசித்து மகிழும் நேரம், கண்ணுக்கு அழகான புகைப்பட விளக்கங்களைக் கட்டாயமாகப் புகழ்ந்தே தீர வேண்டும்.
வாழ்வாங்கு வாழ்க.
ஒரு சிறிய விண்ணப்பம்...
(1) அனுதினமும் மாறி வரும் வெளி நாட்டுப் பணங்களின் விலை மதிப்புகள் (EXCHANGE RATES)
(2) ரயில் , விமான நேரங்கள் (உள்ளூர்)
(3) மரண அறிவிப்புகளுக்குத் தனி கட்டம் கட்டி (தற்போது உள்ளது போலவே) எழுதுவதோடு, அந்தந்த மாதங்களில் நம்மை விட்டுப்பிரிந்தவர்களின் சிறிய குறிப்பு ஒன்றினை வருட இறுதியில் ஒரு மொத்தமான, முழுமையான அறிக்கையாகத் தந்தால், நீத்தாரின் நினைவுகள் நீங்காமல் இருக்குமல்லவா?
தகவல் தொடர்பு என்பது கட்டைச் சுவற்றில் ஒற்றைக் காலில் நடப்பது போன்றது. எசகு பிசகாக எப்போது வேண்டுமானாலும் அடிபடலாம். நியாயங்களின் பக்கமே நின்று கொண்டால், காயங்களைப் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை.
இன்று போல் என்றென்றும் பொலிவோடும், புகழோடும் நிலைத்து நிற்கும் வலைத்தளமாக இயங்கி, நல்லோர் எல்லோரின் பாராட்டுகளையும் பெற்று விளங்க வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன். |