இரவும், புலர்வும் கிசுகிசுத்து பேசிக்கொள்ளும் அதிகாலைப் பொழுது...
நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு நீந்தத் தெரிந்த நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன...
வளைகுடாப் பிரதேசத்தை குளிர் அடாவடியாகக் கவ்விப்
பிடித்திருக்கும் டிசம்பர் மாதம்...
கனவுகளை விதைக்கவும், வளர்க்கவும், கலைக்கவும்
கற்றுத் தந்திருந்த இந்தப் பாலையில்
நான் காலடி எடுத்து வைத்து ஆண்டுகள் பதினைந்து ஆகிறது.
எழுதவியலா சோகங்களைச் சுமந்து திரிந்த
ஆரம்ப நாட்களை, சற்றேனும் சுகமாக ஆக்கியது காயல்பட்டணம்.காம் என்னும் இந்த செய்தித்தளம்.
காலப்போக்கில்,
இமைக்கின்ற பொழுதளவும் என்
இதயம் நின்று அகலாத,
என் வாசிப்பின் சுவாசத்தோடு ஒன்றிப் பிணைந்து விட்ட
உயிர்த் தோழனாக மாறிவிட்டது இந்த வலைதளம்...
உண்மை, நேர்மை, எளிமையை மையாகக் கொண்டு,
காயலின் கால ஓட்டத்தைப் பதிவு செய்யும்
இந்தத் தளம் காயலின் உயிர்மை...
பதினைந்தாம் ஆண்டினை அழகுற நிறைவு செய்யும்
இந்தத் தளத்திற்கும், இதன் நிர்வாகக் குழு, ஆசிரியர்க் குழு,
எல்லாவற்றுக்கும் மேலாக
பாரெங்கும் பரவி வாழும் இதன் வாசகர்களுக்கு
எனது நன்றியினையும், நல்வாழ்த்துக்களையும்
பதிவு செய்வதில் பேருவகை கொள்கின்றேன்...
பதினைந்து மணிநேர உழைப்பின் களைப்போடு
இல்லம் திரும்பிய ஆரம்ப நாட்களில்
எதிர்காலத்தைக் குறித்த அச்சமும்,
தாய் மண்ணின் நினைவுகளும்
இதயத்தை அழுத்தும் வினோத அனுபவம்...
இணையதள இணைப்பு வசதி என்னிடம் இல்லாத அந்த நாட்களில்,
வாரத்திற்கு மூன்று முறையேனும்,
வசதியைப் பெற்றிருந்த நண்பர்களின் அறைக்குச் சென்று
காயல்பட்டணம்.காமை வாசித்து விடுவது
வழக்கமாகிப் போன ஒன்று...
புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு காயலனுக்கும்
இந்தத் தளம் ஒரு வலி நிவாரணி...
மண் வாசத்திற்கு ஏங்கிய மனதுகளை
தடவித் தந்த மயிலிறகு...
அப்போதைய ஒரே ஆற்றாமை, வாய்ப்புள்ள வாசகர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே எழுதித் தள்ளியதுதான்... அன்றைய மனநிலையில் எனக்குள் முளைத்த ஒரே கேள்வி " இது என்ன தி ஹிந்துவா, இந்தியன் எக்ஸ்பிரசா?"
ஆங்கிலத்தில் எழுத முடியா எனது இயலாமை,
அது விளைத்த ஆற்றாமை என்று எல்லா ஆமைகளுக்கும் தீர்வாய் வந்தது கூகுளின் தமிழ் அச்சு முறை...
அதனை எனக்கு முறைப்படி கற்றுத் தந்த நண்பர்
எஸ்.கே.சாலிஹ் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றியைப்
பதிவு செய்வது பொருத்தம் என்று எண்ணுகிறேன்.
அதன் பின்னர் வாசகர்களின் கருத்துகள் மெல்ல மெல்ல தமிழில் துவங்கி, அதுவே காயல்பட்டணம்.காம்,
காயலர்கள் தங்களது எண்ணப் பூக்களை மலரச் செய்யும்
சர்வதேசப் பூங்காவாக மாறிவிட்டது.
ஆரம்பத்தில் வெறும் செய்திகளை மட்டுமே தந்து கொண்டிருந்த இத்தளம், பிற்காலத்தில் சமூக அரங்கத்தில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியது. அதன் விளைவுதான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக ஏராளமான உண்மைகளை ஊருக்கு எடுத்துரைத்தது.
தவ மறைந்து அல்லவை செய்யும் பல
வேடதாரிகளின் முகத்திரை கிழிந்தது...
கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதர்களைப் போல் அல்லாமல்,
காயலின் கருவிழிகளாக தன்னை மாற்றிக் கொண்டது...
தான் வெளியிடும் ஒவ்வொரு செய்திக்கும் உத்திரவாதம் தந்தது. அசைக்க முடியாத ஆதாரங்கள் பலவற்றை, சமூகத்தின் நன்மையைக் கருதி வெளியிட்டது... சிலவற்றை பகிரங்கப் படுத்தாமல் பத்திரப்படுத்தியது...
இந்தத் தளத்தின் அபார வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களின் நாலாந்தர குற்றச்சாட்டுகளுக்கு மவுனத்தை மட்டுமே பதிலாக்கி மக்களின் மனதை வென்றது.
மறுபுறம் எழுத்துமேடை உருவாக்கப்பட்டு
என்னைப் போன்ற சாமானியர்களின்
படைப்புகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது...
எட்டாக் கனியாக நினைத்திருந்த எழுத்துலகில்
எங்களையும் எட்டிப் பார்க்க வைத்தது...
அது காலத்தால் வளர்ச்சியடைந்து தமிழகத்தின் முன்னணி இலக்கியவாதிகள் அலங்கரிக்கும் ஜனரஞ்சக மேடை ஆகிவிட்டது...
தோழர் ஹிஜாஸ் மைந்தன் போன்றோரது ஒளி ஓவியத்தால் வடிவம் பெற்ற தலை சிறந்த நிழற்படங்களின் அணிவகுப்பு, செய்திகளுக்கு மேலும் அலங்காரம் சேர்க்கிறது...
வெறும் எழுத்துகளால் மாத்திரமன்றி, இந்தத் தளத்தின் நிர்வாகிகள், தங்களது நேரடி உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கல்வி வளர்ச்சி, மருத்துவப் புரட்சி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, ஊழலுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்பு என்று தங்களால் முடிந்த வரை களப்பணி ஆற்றி வருவது, உலகளாவிய காயலர்களின் உள்ளார்ந்த அன்பை பெற்றுத் தந்திருக்கிறது...
வேலை வாய்ப்பு, கலாச்சாரப் பதிவுகள் மற்றும்
வானிலை உட்பட விண்வெளி செய்திகளைத்
தருவதற்காக இந்தக் குழுமத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு தளங்கள் காலப் பெருவெளியில் காணாமல் போய்விட்டது ஏனோ தெரியவில்லை...
அந்த வெற்றிடத்தை இன்று வரை அவர்களால்
நிரப்ப முடியாதது நிதர்சனமான உண்மை...
அந்த இழப்பு ஈடுகட்டப்பட்டு, இந்தக் குழுமம் மாநிலத்திலே முன்மாதிரி வலைதளங்களை உள்ளடக்கியதாக வேண்டும் என்பதே - நல்லவர்களின், நடுநிலையாளர்களின் உள்ளக் கிடக்கையாக இருக்கிறது...
வளையாத வலைதளமே...
உடையாத ஊடகமே!
காயல்பட்டணம் டாட் காமே
காயலின் கருவிழியே!
இது வாழ்த்தும் நேரம்...
இடித்துரைக்கும் படலத்திற்குள்
இன்று நான் நுழைய வில்லை...
காரணம், நீ
ஏமரா மன்னன் அல்ல...
ஏமாறா மன்னன்..! |