அருளாளனும், அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ...
மிகஎளிமையானஆரம்பம், ஊரில் நடக்கும் பிறப்பு இறப்பு தகவல்கள் தெரியக் கூட மாதங்கள் ஆகும், சில வேலைகளில் விடுமுறையில் ஊர் வரும்போதுதான் தெரிந்துகொள்ளும் நிலமையில் இருந்த வெளியூர்களிலும், வெளிநாட்டிலும் வாழும் காயலர்களின் நீண்ட கால ஏக்கத்துக்குப் பரிசாக காட்சி தந்த காயலில் முதல் வளைதளம் இன்று காயலின் நிகழ்வுகளைத் தருவதுடன் நில்லாமல், எதிர்காலத்தை நிர்ணயிக்க உதவும் ஒரு விணையூக்கியாக (Catalyst) பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
செய்திகளை மட்டுமே வெளியிடும் சராசரியான பணியில், ஒரு சிறப்பம்சமாக இடையிடையே வெளியான தலையங்கம், அதனைத் தொடர்ந்து வந்த கருத்துப்பதிவு வசதி ஏற்படுத்தியது பெரும் மாற்றம்.
வாசித்தவை குறித்த வாசகரின் விமர்சனங்கள், கருத்துக்கள், நிலைபாடுகள் வெளிவர, அவை விரைவில் விவாதங்களாகவும் சில விதண்டாவாதங்களாகவும், பல கண்ணியமான கருத்துப் பரிமாற்றங்களும் அவற்றுள் சில காழ்ப்புணர்ச்சிகளும் வெளிப்பட்டதும், அதனால் இந்த வசதி நிறுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மேலோங்கிய நிலையில், அநாமதேயங்களின் கலப்படம் இல்லாமலும், கருத்தாளர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடுகளால் வரும் சர்சைகளையும், சாமாளிக்க கையாண்ட ‘விவாதம் தவிர்க்கும் வித்தை’ உண்மையில் பாராட்டுக்குரியது.
எழுத்து மேடை... அதுவரை நண்பர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே அறிமுகமான நம்மில் உள்ள சமூச சிந்தனையாளர்கள், அற்புதமான எழுத்தாற்றல் பெற்ற சகோதரர்கள் என பலரையும் அறிமுகம் செய்தது. வாய்ப்புக்கள் அளித்த வலைதளத்துக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், அக்கறையுடன், சிரமமெடுத்து தங்கள் கருத்துக்களையும், வயதை மறக்கச் செய்த காயலின் யதார்த்தங்களையும், அற்புதமான கட்டுரைகளையும் வரைந்த படைப்பாளிகள் அனைவரும் நன்றிகளுக்கு உரித்தானவர்கள்.
ஊடகம் என்பது எல்லா விஷயத்திலும் நடுநிலையோடுதான் இருக்க வேண்டும் என்ற பரவலான நம்பிக்கைக்கு முரணானது என் நிலைபாடு.
சில விஷயங்களில் சார்பு நிலையை எடுப்பது என்பதுதான் சரியான வழிமுறையும் கூட.
இறையச்சத்தை ஏற்படுத்துவதிலும், நல்லதை வலியுறுத்துவதிலும், உரிமையை நிலைநிறுத்துவதிலும், உண்மையை வெளிப்படுத்துவதிலும், ஊரின் மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது போன்ற அம்சங்களில் சார்பு உடையதாக இருத்தல் அவசியம். இதில் சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் இடையில் வரும் நடுநிலை அழிவுக்கு வழிவகுக்கும். அதே சார்பு நிலைபாடுகள் தனிமனிதர்களையும், ஒரு குறிப்பிட்ட கூட்டத்தையும் சரி காண்பதற்காக செய்யப்படும்போது நேர்மையின் சார்புகள் மங்கி விடுவது இயற்கை. மனிதர்களுள் எவருக்குமே எது சரி, எது தவறு என்ற சுய நிர்ணய நிலைபாடுகள் இருக்கும் நிலையில், அப்படி ஒரு நிலை இல்லாதது போல தங்களின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் காட்சி தருவது போலியானது என்பது எனது கருத்து.
காயல்பட்டனம்.காம், பல தருணங்களில் தனது நேர்மையின் சார்பையும், எது சரி என்பதில் தனது சார்பையும் தெளிவுபடுத்தித்தான் இருக்கிறது என்றாலும், சில வேளைகளின் இந்த சார்பு தனிமனித சார்பாகவும் வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை விட போலியான ஒருசார்பற்ற நிலமையை காட்டிக்கொள்ள எத்தனிப்பது வருத்தமே.
உள்ளதை உள்ளபடி நம்புவதும், செயல்படுவதும்தான் இஸ்லாத்தில் அடிப்படை என்பதை உணர்வுகளில் கொண்டு, அவசியமில்லாத மழுப்பல்களுக்கும், புகழ்ச்சிக்கும் இடமளிக்காமல் வருங்காலங்களில் தொடரவும், தெளிவான சிந்தனைகளுடன், நன்மைக்கும் இறையச்சத்துக்கும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவும், தீமைக்கும் வரம்பு மீறலுக்கும் துணை போகாமல் இருக்கவும் வலியுறுத்தும் அருள்மறையின் அறிவுரை ஏற்று, இன்னும் பல்லாண்டு காலம் காயல்பட்டணம்.காம் சிறப்பாகத் தொடர வல்லமை மிக்க இறைவனை வேண்டுகிறேன்.
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 5:55 pm / 22.12.2013] |