அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆச்சரியமாக இருக்கிறது... ஆண்டுகள் 15 சடுதியில் சென்றுவிட்டது காயல்பட்டணம் டாட் காமிற்கு. 16ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
அதற்கு முதலில் வாழ்த்துக்கள், வாழ்க! வளர்க!!
ரசமில்லாத கண்ணாடியில் பார்த்தால், அடுத்தவர் குறைதான் தென்படும். ரசம் பூசிய கண்ணாடியில் பார்த்தால்தான் நம் குறை என்ன என்பது தெரியும்.
பொதுவாக ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் சேவையை - வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்தும்போது, அவர் / அது செய்த நல்ல செயல்களை
எடுத்துச் சொல்லி வாழ்த்துவதுதான் சபை மரபு. ஆனால், இந்த வலைதளத்தின் நிர்வாகிகளைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏன் என்றால், இவர்கள்
தங்களிடம் உள்ள நிறைகள் என்ன என்பதை விட, குறைகளைப் பற்றிய விமர்சனங்களை வரவேற்கிறார்கள். ஒருவர் சரியான பாதையில் செல்வதற்கு
இதுதான் சிறந்த முறை.
ஆண்டுகள் 15 ஆனாலும், நமதூரைப் பொருத்த வரையில், வலைதளங்களை ஒரு வெகுஜன ஊடகமாக அதிகமானோர் பார்ப்பது கடந்த சில
வருடங்களுக்கு முன்பிருந்துதான் என நான் எண்ணுகிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்:
(1) கையடக்க கணினிகளின் வரத்து மற்றும் அலைபேசிகளில் குறைவான செலவில் கிடைக்கும் அதற்கான வசதி.
(2) நகர்மன்றத் தேர்தல்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களுள் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் கடமை - மக்களுக்கு செய்தியைத் தருவது மட்டுமல்ல, மக்களிடம்
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுவும் கூட. அந்த வகையில் வலைதளங்களின் வருகை - குறிப்பாக, காயல்பட்டணம் டாட் காம்,
நகர்மன்றத் தேர்தல் சமயத்திலும், அதற்குப் பிறகும் நகர்மன்ற நடவடிக்கைகளிலும், அரசு சார்ந்த செயல்பாடுகளிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு
போன்ற விஷயங்களிலும் நமதூர் மக்களிடம் ஆர்வத்தையும், விழிப்புணர்வையும், எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மையையும் ஏற்படுத்தியிருப்பது
பாராட்டுக்குரிய செயல்.
ஆனால் துரதிஷ்டவசமாக, நமது நாட்டைப் பொருத்த வரையில் பெரும்பாலான ஊடகங்கள் ஒருசார்பு நிலையில் இருப்பதைத்தான் காண முடிகிறது.
அதற்கு காயல்பட்டணம் டாட் காமும் விதிவிலக்கல்ல என கருதுகிறேன்.
நகர்மன்றத் தேர்தல் சமயத்தில் பூடகமாகவும், தேர்தலுக்குப் பிறகு வெளிப்படையாகவும் - நகர்மன்றத் தலைவர் சார்பு நிலையில் தாங்கள் எழுதி
வருவது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இதை கூடவே கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. அதே நேரத்தில், நாம் ஆதரிப்பவர்களிடம்
காணப்படும் குறைகளையும், எதிர்ப்பவர்களிடம் காணப்படும் நிறைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
நகர்மன்ற நடவடிக்கைகளைப் பொருத்த வரை, ஊர் நலன் கருதி கொண்டு வரப்பட்ட எல்லா தீர்மானங்களும் மன்றக் கூட்டங்களில்
நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசையும், அதன் அதிகாரிகளையும் சார்ந்த விஷயம்.
இங்குதான் தவறு நடக்கிறது. பல அடுக்கு அதிகார நிலை கொண்ட நம் நாட்டில், கீழ்மட்ட நிலையிலுள்ள அதிகாரியை மேல்மட்ட நிலையிலுள்ளவர்
கறாராகத் தட்டிக் கேட்பதில்லை. ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், அணுக வேண்டிய முறையில் அணுகினால்தான் திட்டத்தை
நிறைவேற்ற அனுமதி கிடைக்கும். இந்நிலைதான் காலங்காலமாக இருந்து வருகிறது.
நிலமை இப்படியிருக்க, தீர்மானங்கள் செயல்வடிவம் பெறாமல் இருப்பதற்கு தலைவியுடன் உறுப்பினர்கள் ஒத்துழைக்காமல் இருப்பதுதான் காரணம்
என்பதைப் போன்ற தோற்றத்தை தங்கள் வலைதளம் மக்களிடம் ஏற்படுத்தியது. தலைவியுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் எந்தத் தீர்மானமும்
நிறைவேறியிருக்காதே? இதுபோன்ற செயல் என்னைப் பொருத்த வரை மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
நான் நகர்மன்ற உறுப்பினராக இருந்த வரை, தலைவி சொன்னார் என்பதற்காகவோ அல்லது உறுப்பினர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ -
எதனையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. என் மனதிற்கு சரியெனப் பட்டதை ஆதரித்தேன், தவறெனப் பட்டதை
எதிர்த்தேன்.
குப்பை தட்டும் இடம் தேர்வு செய்வதைப் பொருத்த வரை, நான் உறுப்பினராக இருந்த சமயத்தில், முன்னாள் தலைவர் மரியாதைக்குரிய மர்ஹூம்
எம்.கே.டி. அப்பா அவர்கள் காலத்தில் தெரிவு செய்யப்பட்ட இடம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. அப்போது அது வெளியாகியிருந்தால் நான்
அந்த இடத்தை ஆதரித்திருப்பேன்.
ஆனாலும், இதையும் தாண்டி மக்களுடன் நேரடி தொடர்புள்ள நகர்மன்றக் காரியங்களை நல்ல முறையில் செய்ய முடியும். ஆனால், இதைப் பற்றிய
என்னுடைய கருத்துக்களும், யோசனைகளும் இரு சாராரிடமும் எடுபடவில்லை. (உ-ம்.: மக்கள் குறைதீர் கூட்டம், முறைகேடான குடிநீர்
இணைப்பு, தெருவிளக்கு போன்றவை.)
இனி, தங்களைப் போன்ற ஊடகங்கள்தான் இது சம்பந்தமான விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அதே சமயம், ஊடகங்களும் - கடிவாளம் போடப்பட்ட குதிரையைப் போல செயல்பட வேண்டும்.
காயல்பட்டணம் டாட் காம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
|