நம் இதயத்தோடு ஒன்றர கலந்துவிட்ட காயல்பட்டணம்.காம் 15 ஆண்டுகள் நிறைவு என்பதை திறந்த மனதோடு திறந்து பார்க்கிறேன். முறையான புரிதலோடும், அன்பென்ற கருணையோடும் அணுகி, அது நமக்கு பல பாடங்களையும், அர்த்தங்களையும் மெளனமாக சொல்லிக்கொண்டே தன் தனி வழியில் வனப்போடு மிடுக்கோடு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
உடைந்த கண்ணாடி ஒருபோதும் முழு பிம்பம் காட்டாது. உடைபட்ட நம் மனமும் நிஜ பிம்பம் காட்டாது. அதுபோல் இது உறுதியான உடையா உண்மையான கண்ணாடி. அது தன் பிம்பத்தையும், தன்னைக் காணும் வாசகர்கள் பிம்பத்தையும் இதுவரை கோணல் இல்லாமல் நேராகக் காட்டியது இதன் மகத்துவம். காலமென்னும் கடலிலே கூழாங்கற்களாய் தங்கி ஓடுகின்ற வாழ்க்கையிது. நாம் யார் சொல்லியும் கேட்பதில்லை.யாருக்கும் நிற்பதில்லை, மதிப்பதில்லை. ஆனால், காயல்பட்டணம்.காம் விழித்தது. தன்னை மக்களால் பட்டை தீட்டிக்கொண்டது. இலகுவாய் கரை சேர்ந்தது,
இதில் தனி நபர் கோலோய்ச்சும் கொட்டுமேளம் இல்லா நிலை கண்டு மெச்சுகிறேன். நல்ல சொற்கொண்டு கற்கண்டு போல் தரும் வாசகர்களின் வசந்த வரிகளை தன் தறியில் இட்டு நெய்து, பட்டாகத் தந்த தனிச்சிறப்புக்கு உரியது காயல்பட்டணம்.காம்.
காயலின் வறியோர் பொருளாதாரம் மோசமாக, இனி அரசாங்கத்தை நம்ப முடியாது என நினைத்து, காயலின் உள்ளூர் மக்களும், பணக்கார முதலாளிகளும், வெளிநாட்டு காயல் வேங்கைகளும் ஒன்று சேர்ந்து காயலின் கல்வி வறட்சி ஏற்றம் பெற ஒற்றுமையாலும், கடுமையான உழைப்பாலும் "இக்ரா" உருவாக உன் உந்துதலால் கல்வி பாலைவனத்தையும் சோலை ஆக்கினர். இன்று பெண்டிரும் கடன் வாங்கிய அறிவு கரை எப்போதும் சேர்க்காது தன் அறிவை தானாக உருவாக்க விடியல் பெற்றது உன்னால் அன்றோ?
காலத்திற்கேற்ப, விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப உன் நடையில் மெருகேற்று, நாம் எப்போதெல்லாம் துன்பப்படுகிறோமோ அப்போதெல்லாம் நமக்கான ஆறுதல் ஏதோ ஒரு வடிவில் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஏற்கும் மன நிலைமையையும், பகுத்தாயும் திறனையும் மீண்டும் வளர்த்துக் கொள்.
இன்றைய நவீன யுகத்தில் அலட்சியப்படுத்துதல் என்பது நாகரீகமாகிவிட்டது. எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு வாழ்க்கையை அரித்துக் கொண்டிருக்கிறது. யாராவது அறிவுரை சொல்லிவிட்டால் போதும்; உடனே அலட்சியத்துடன் மட்டம் தட்டுவது மேலோங்கி நிற்கிறது.
மக்களிடையே, மஸ்ஜித்களிடையே, மன்றங்களிடையே ஒற்றுமையைக் காட்டித் தந்த, கட்டிக் காத்த முன்னோர்களின் அடிச்சுவட்டைத் தொடராது, ஒற்றுமையை அகராதியில் தேடும் நிலை கண்டு நெஞ்சு வெடிக்கும் நிலை கண்டு, உண்மையிலேயே உள்ளம் வெந்தனல் வேதனை.
ஊருக்காய் பிறந்திட்ட காயல்பட்டணம்.காம் இணையதளமே! என்ன விலை கொடுத்தாவது இந்நிலை இன்னலை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க உறுதி எடு! உனக்கு தோள் கொடுக்க உற்ற தோழர்களாக உன் வழியில் தொடர துணிந்து விட்டோம். மனித இதயத்தைக் கோடரியால் வெட்டும் மனிதர்களை மாற்ற வேண்டும்.
சிறந்த புரிதலைத் தந்து, மண்ணுக்கும், மனித நேயத்திற்கும் பாலமாக அமைய காயல் மண்ணைத் துளைத்துப் பொங்கி எழுந்த காயல்பட்டணம்.காம் இணையதளமே!
விண்ணைமுட்ட இன்னும் புதுப்பொலிவோடு பொங்கி எழு!
சத்திய இஸ்லாத்தைப் பற்றிய பரஸ்பரப் புரிதலுக்கும், முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்திற்கும் வழிவகு!
முட்டி நின்ற சகோதரனை முத்தமிடு! கசந்து போன நினைவுகளைக் கசக்கி விடு!
இஸ்லாத்தைப் பற்றிய ஆய்வுத் தேடலை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி, பொய்களையும் - போலிகளையும் தகர்த்தெறிந்து விட்டு, செய்திகளின் உண்மைத் தன்மையை சிதறாமல் சிந்தனையோடு வரும் ஆண்டுகளில் நீ தவறாமல் தர வேண்டும்.
குப்பையும், கூலமுமாய் ஒழுங்கில்லா வடிவியலுடன் எழுத்துகளைக் கொட்டிவிட்ட இச்சிறுவனின் வார்த்தைகள் வதைத்து இருந்தால் வடம் பிடித்து இழுக்காமல் பொருத்தருள்க!
காயல்பட்டணம்.காம் இணையதளம் இன்னும் பல இதயங்களை இறையருளால் இணைக்க இரு கரம் ஏந்துகிறேன். வாழ்த்துக்கள்!!
|