பதினைந்து ஆண்டுகட்கு முன் துள்ளி குதித்தோடிய குருதி கொண்ட துடிப்பிளைஞர்களால் நகர் செய்திகளை தருவதெற்கென்றே வான்தளத்தில் கால்பதித்த செய்தி ஊடகம் காயல்பட்டணம்.காம்.
தனக்கென்றொரு தடமமைத்து, தடைகளை தகர்த்தெறிந்து, தவறுகளை தட்டிக்கேட்டு, தலைநிமிர்ந்து வலைதளத்தில் வலம் வரும் நீ பலரது பாராட்டையும் பெற்றுள்ளாய், சிலரது சீண்டலையும் செமித்துள்ளாய்.
...வரும் செய்திகளின் தரமறிந்து அதன் முன் பின் தேவைகளை அதிலினைத்து வாசகன் மனதில் செய்தியின் முழுத்தோற்றத்தையும் காண்பித்து, அதற்கேற்ப சித்திரத்தை தேடிப்பிடித்து காட்சியாக்குவது...
...ஒரு செய்தியை படிக்கும் வாசகன் அதுசார் ஆழ்நிகழ்வை மறந்தாலும் நீ நினைவூட்டி அதன் தொடர்பு அறுபடாமல் செய்தியைத் தருவது...
...பல அரசுசார் தேவைகளை நாம் எளிதில் கேட்டுப்பெறுவதெப்படி? என்று வாசகனுக்கு பாடம் நடத்தியது...
...STATE TOPPERS என நாமம் கூறி நகர்வலம் வந்து மாபெரும் கல்வி விழிப்புணர்வை நகரில் ஏற்படுத்தி பாராட்டைப் பெற்றது...
...களமிறங்கி செய்திகளை நகலெடுத்து, தோதாக படமெடுத்து, தேவையினலைபடுத்தி சூடாக தளமேற்றி இமைப்பொழுதில் உலகறியச்செய்வது... இவைகளுன்பலம் - பிடித்தது.
...எழுத்தனின் ஆக்கங்களை அப்படியே பிரசுரித்து அதில் காணும் தவறை வாசகன் சுட்டும் போது அதை திருத்த மறுப்பது...
...கருத்துரைக்கும் வாசகன் புதிதெனில் ஆளறியவில்லை என அவன் கருத்தை ஒதுக்குவது...
...ஆக்கத்திற்கு நேர் எதிர்மறையான அதே சமயம் தகுந்த ஆதாரத்துடன் கத்தும் வாசகன் சத்தமும் விவாதம் தவிர்ப்பு என்ற ரீதியில் மௌனமாவது...
...நம் கருத்து ஏன் பதிவில்லை என வாசகனின் முனகல் உன் காதில் விழுந்தும் நீ பதிலை தவிர்ப்பது... இவைகளுன்பலகீனம் - பிடிக்காதது.
...செய்திகள், ஆக்கங்களை தருவது மட்டும் ஒரு ஊடகத்தின் பொறுப்பல்ல. அதன் மீதும் பாயும் சந்தேகங்கள், தவறுகளை களைவதும் உன் பொறுப்பே...
...செய்திகளை தரும்போது இரு பாதையை தேர்ந்தெடுக்காதே, ஒரு பாதையில் உறுதியாக நின்று செய்திகளை தாட்சன்யமின்றி கொடு...
...இஸ்லாமிய விழுமியங்களுக்கப்பாற்பட்ட செய்தியை தவிர். ஏனெனில் நீ மறுமை வெற்றியை மனதில் ஏந்தி பயணிப்பவன். இறையும், அவன் நபியும் மட்டுமே தந்த அங்கியை அணிந்து அழகிய செய்திகளை தா. மாச்சர்யமான செய்திகளை மாய்...
..மக்கட்கு பயண்தரக்கூடிய, நற்பண்பூட்டக்கூடிய ஆக்கங்களை கொடு. அது கட்டுரையாகட்டும் / காவியமாகட்டும். படித்தோம், பயனுற்றோம் எனும் நினைப்பை வாசகன் மனதில் விதை...
...சுட்டும் தவறை உடன் திருத்தும் பண்பை பெற்றுக்கொள். கொட்டுபட்டு குனியாமல் கொட்டும்முன் குனிந்துகொள்...
...கிடைக்கப்பெறும் ஆக்கம் / கருத்தை ஒருமுறைக்கு பலமுறை படித்து தவறிருப்பின் திருத்திக்கொள். தரமிருப்பின் தளமேற்று. தரமற்றிருப்பின் வாசகனுக்கு தெரிவித்துவிடு...
...பதியுமுன் செய்தியின் உண்மைத்தன்மை உரசி, பொய், புறம் வீசி, தளத்தில் கைவீசி வலம் வா... இவைகளுன்தேவை - எதிர்பார்ப்பது.
செய்திகளின் நம்பகத்தன்மையில்தான் நீ வாழ்கிறாய். இல்லையேல் நம்பகமின்மையால் நீ வீழ்வாய்.
நீ ஒரு லட்சியத்தை நோக்கி நகர்கிறாய். அந்நகர்வு இடைமறிக்கப்படலாம் / திருப்பிவிடப்படலாம் / காயப்படுத்தப்படலாம். கலங்காதே செல் உன் லட்சியம் வாழும் வரை.
நீ ஒரு பெட்டிப்பாம்பல்ல ஊதி ஆட்டுவிக்க. நீ ஒரு சாரைப்பாம்பு சீறிப்பாய்.
பதினைந்தாண்டுகாலம் நகரின் நாற்புற நகர்வுகளை நாள்தோறும் தந்த நீ மெச்சத்தக்கவனே. எனினும் படைப்பினம் என்ற ரீதியில் உன் படைப்பில் சிற்பிழைகள் குலைதள்ளும் அதனால் நீ நிலைகொள்ளாதே.
தவறேற்படுவது மனித இயல்பு. அதை திருத்திக்கொள்வது மனிதச் சிறப்பு.
பொறுமை, அடக்கம், அமைதி, தெளிவு, உண்மை போன்ற நற்பண்பை உட்கொண்டு உன் பணியில் வெற்றிநடைபோடு. இறையுதவி என்றும் உனக்குண்டு.
வரும் காலங்களில் நவீன ஊடகத்துறையின் சவால்களை தைரியமாக எதிர்கொண்டு இன்னும் சிறப்பாக தளத்தை மெருகூட்டி வீரியமாக செய்திகளை தா.
தளச்செய்தியில் தனக்கென்று தனியிடத்தை தக்கவைத்த தன்பணி தழைக்கட்டும்.
காயல்பட்டணம்.காம்... உனக்கு என் வாழ்த்துக்கள்...! 15 வயது நிறைவுற்ற நீ நீடூழி வாழியவே...!
|