அஸ்ஸலாமு அலைக்கும,
காயலின் முதலாம் மற்றும் முன்னோடி இணையதளமான நமது காயல்பட்டணம்.காம், தனது 15ம் ஆண்டை நிறைவு செய்யும் இந்த வேளையில், அதன் நீண்ட நாளைய வாசகன் என்ற முறையிலும், இதன் நலம் விரும்பி என்ற முறையிலும், மிகுந்த மகிழ்ச்சியினை தெரிவித்து கொண்டு, இவ்விணையதளம் மேலும் பல்லாண்டு பலவாண்டு சீரிய பாதையில், நேர்த்தியான கொள்கையுடன், நடுநிலை தவறாமல் உண்மையை உரக்க சொல்லும் துணிவுடனும், வெற்றி நடைபோட Kayalpatnam.com குடும்பத்தின் ஒருவனாய் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்.
இதன் நாள்தோறும் செய்திகளையும், படைப்புகளையும் ஆக்கங்களையும் தினந்தோறும் சுவைத்து ஊக்கமளித்து வருபவன் என்ற வகையில், உங்களின் நிறைவான பணிகள் ஆயிரம் இருந்தாலும் நிறைகளை மக்களிடத்திலும், குறைகளை எங்களிடத்திலும் சுட்டிகாட்டுங்கள் என்ற கார்பரேட் வாசகங்களின் வாசகன் என்ற அடிப்படையில் உங்கள் நிறைகள் பலவற்றை நண்பர்கள் இடத்தில் எடுத்து சொல்லி வருபவன்.
காகித செய்திகளை அறிந்து காலத்தில் அதை கம்ப்யூட்டர் செய்தியாக்கி தந்த முதல் காயல் இணையதளம் நம் kayalpatnam.com என்ற பெருமை முதல் இணையத்தில் அன்றாட செய்திகள், கட்டுரை, தலையங்கம், சிறப்புக்கட்டுரைகள் என்று பல புதுமைகளை புகுத்தி, அது எவ்வாறு வாசகர்களை சென்றடைகிறது என வாசகர்களின் எண்ணங்களை அறிய வாசகர் கருத்து பகுதியையும் கொண்டு வந்த பெருமை இந்த இணையதளத்திற்கு உண்டு.
செய்திகளை விருப்பு விருப்பின்றி வெளியிடும் நேர்த்தி, அதே வேளையில் வாசகர்களின் வார்தைகளும் வரம்புமீறி விடாமல் வாய்பூட்டு போடும் முறையும், சிறந்த ஒரு தரமிக்க பத்திரிக்கை என பறைசாட்டுகிறது . இப்படி நிறைகள் பலவற்றை சொல்லி கொண்டே போனாலும், அந்த நிறைகளை பெருமையுடன் வெளியே சொல்லி உங்கள் உயர்வித்தாலும், நிறைகள் பல இருக்கும் இடத்தில் குறைகள் சிலவும் இருக்கத்தான் செய்யும் என்ற இயல்புக்கு இணங்க, அது போன்றதொரு சில குறைகளை உரியவர்கலாகிய உங்கள் இடத்திலே எடுத்துரைக்கிறோம். சிலமுறை வாசகர் கருத்து பகுதி மூலமே மனக்குறைகளை வெளியிட்டாலும் இந்த நல்ல தருணங்களை பயன்படுத்தி அதை உங்கள் முன்னே நேரிடையாக வைக்கிறோம்.
இன்று வாசகர்கள் அன்றாடம் ஆர்வத்துடன் பார்க்கும் பகுதியாக இணைய தளத்தில் அறியபடுவது செய்திகள் தான். செய்திகளின் தன்மை அதை வெளியிடும் நயம், நடுநிலை போன்றவை வாசகர்களை கவரும் வேளையில் நீங்கள் செய்தியின் தரம் குறித்தும் அதிகம் அக்கறை எடுக்க வேண்டும்.
தற்போது வெளியிடப்படும் சில தரம் குறைந்த செய்திகள் உங்கள் இணையதளத்தின் பெருமையை உணர்த்துவதாக இல்லை. அந்த செய்திகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. உதாரணமாக, ஏதோ வீட்டில் தனிப்பட்ட பிரச்சனைகள் கூட உங்கள் இணையதளத்திலும் செய்தியாக வருகிறது. யார் பக்கம் நியாயம் / அநியாயம் என்று யாருக்கும் தெரியா விட்டாலும் கொடுக்கும் செய்தியை பார்க்கும் நமக்கு ஏதோ தவறான எண்ணத்தை அடுத்தவர் மேல் கொள்ள இந்த செய்திகள் வழி வைக்கிறது. யார் வீட்டில் இன்று முடுக்கு சண்டை இல்லை, யார் குடும்பத்தில் சொத்து சண்டை இல்லை. இது போன்ற தனிநபர் சார்ந்த செய்திகளை ஒரு சுவாரசியத்திற்காக போட்டு அடுத்தவர்கள் பிரச்சனையை செய்தியாக்கி தரம் குறைக்க வேண்டுமா (இது ஒரு உதாரணதிற்காக தான். இதை ஒரு அளவுகோலாககொண்டு சொந்த பிரச்சனைகள் தனிநபர் சார்ந்த பிரச்சனைகள் எல்லாம் செய்தியாக வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு).
அது போல் நகரமன்ற தலைவி பற்றிய செய்திகள் வரும் பொழுது ஏதோ எழுத்திலும் நடையிலும் உங்களை அறியாமல் ஒரு சார்பு தன்மை வெளிபடுகிறது. இதுவும் ஆராயப்பட வேண்டியதே!! நகரமன்ற / ஊர்நலன் போன்ற செய்திகளை வெளியிடும் போது, மற்றவர்கள் மேல் எவ்வளவு தவறுகள் உள்ளது என வாசகர் அறிய முடிகிறதோ, அதே போல சில தவறுகள் தலைவியின் செயல்பாட்டிலும், பிரச்சனைகளை கையாளும் விதத்திலும் இருப்பதை வாசகர்களாகிய நாங்கள் உணரும் வேளையில், உங்கள் செய்தி தரும் பாணி அதை உணர்த்துவதாக தெரியவில்லை . (இது எனக்குரிய சந்தேகமா இல்லை, எல்லோருக்கும் பொதுவானதா என்று தெரிய வில்லை). இந்த குறை களையப்பட்டால் (குறை உண்மையாக இருப்பின்), சிலரின் அடிப்படை இல்லா தலைவி ஆதரவு குற்றச்சாட்டுகள் குறையவும், நடுநிலை தன்மை பேணப்படவும் கண்டிப்பாக முடியும்.
மேலும் செய்திகள் குறித்தும் , வாசகர்களின் கருத்துகள் குறித்தும் மற்ற வாசகர்கள் RATING செய்யும் விதமாக (LIKE, DISLIKE, அல்லது 1234 என கணிக்கும் வகையில்) வசதி செய்தால் நன்றாக இருக்கும். இது கருத்து எழுத முடியாத, நேரம் இல்லா வாசகர்களின் உடனடி கருத்தை அறிய வாய்ப்பாக அமையும்.
நேரம் இல்லாத காரணத்தால் இன்னும் சில கருத்துகளை யோசித்து எழுத முடியவில்லை இன்ஷாஅல்ல்லாஹ் வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக வாசகர் கருத்துக்கள் மூலம் அறிய தருகிறேன்.
இந்த நல்ல தருணத்தில் 15 ம் ஆண்டை நிறைவு செய்யும் நம் kayalpatnam.com இணையதளம் இன்னும் பல வெற்றிகள் கண்டு காயல் வாசகர்களுக்கு இன்று போல் என்றும் ஒரு பயனுள்ள்ள, பொழுதுபோக்கு நிறைந்த முன்னோடி தளமாக திகழ வாழ்த்தி துஆ செய்கிறோம். |