காயல்பட்டணம் டாட் காம் வலைதளம் துவங்கி பதினைந்து வருடங்கள் உருண்டோடி விட்டன என்பதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பிக்கபட்ட இந்த வளைதளம், இன்று ஒரு சமூக தளமாக பரிணமித்திருப்பதும், இன்றும் இளமையுடன் இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
பரிணாம வளர்ச்சி அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாத விஷயங்கள் மரித்துப் போகும். இது சமூகத்திற்குப் பொருந்தும்; மொழிக்குப் பொருந்தும்; தேசத்திற்குப் பொருந்தும்; வர்த்தக நிறுவனங்களுக்குப் பொருந்தும். இதில் ஒவ்வொன்றுக்கும் ஆதாரங்களுடன் நிறையவே பேசலாம். இது காயல்பட்டினம் வலைதளத்திற்கும் பொருந்தும் என்பதை இந்த வலைதள நிர்வாகம் சரியாக புரிந்துகொண்டுள்ளது என நான் உணர்கிறேன். வெளிப்படையாக கருத்து கேட்கும் பண்பே இதற்கு உதாரணம்.
நம் சமுதாயமும் இப்படிப்பட்ட பரிணாம மாற்றங்களுக்கு உட்பட்டே இருக்கிறது. இந்த மாற்றங்களை ஆரோக்கியமாக அலசும், கருத்து பரிமாறும் ஒரு மேடையாக இந்த வலைதளம் இருக்கிறது. நாம் கிணற்றுத் தவளை போல மாற்றங்களின் வேட்கையை உணராமல் இருக்க முடியாது. அப்படி கிணற்றுத் தவளையாக இருந்த சமூகங்கள் என்ன ஆயிற்று என்பது வரலாற்றுப் புத்தகத்தில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் ஆயுட்காலத்திலேயே பார்க்கும், உணரும் வாய்ப்புகள் கிடைத்து விட்டன.
நம் அருகில் உள்ள கிராமங்களுக்கும், காயல்பட்டினத்திற்கும் உள்ள நிகழ்கால வித்தியாசம் - இப்படி ஒரு சுதந்திர கருத்து பரிமாற்றத் தளமே என்றால் மிகையாகாது. சிந்திக்க வைக்க பல விஷயங்கள் இங்கே பேசப்படுகின்றன. பலதரப்பட்ட கருத்து அணுகுமுறைகளைக் காண முடிகிரது.
இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. சிந்தனை சுதந்திரம் மூலமே ஒரு சமூகம் தன்னை பட்டை தீட்டிக்கொள்ள முடியும். சிந்தனை நிலைபாடுகளை சீர்திருத்த முடியும். இல்லையெனில் கிணற்றுத்தவளை கதைதான்.
காயல்பட்டினம் வலைதளம் - எவ்வித அழுத்தங்களுக்கு உட்பட்டாலும் - கருத்து மேடை சுதந்திரத்தில் கை வைக்கக் கூடாது. இது என்னுடய வேண்டுகோள்.
காயல்பட்டினம் வலைதளத்தை வெறும் வலைதளம் மட்டுமே என கூறினால் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும். இந்த வலைதளத்தின் சமூக தாக்கம் வலைதளத்தைத் தாண்டியும் காண முடிகிறது. இது பத்தோடு பதினொன்றாக செய்யும் வேலை இல்லை. இதற்கென பயணப்படும் திசை இருக்கிறது.
இந்த பதினைந்து வருட சமூகப்பணிக்கு என்னுடைய நன்றி. இந்த வலைதளம் மூலம் பல நல்ல விசயங்களையும், மாற்று சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. சிரமங்களையும், சவால்களையும் தைரியமாக சந்தித்து - பல உண்மைகளை வெளிப்படையாகப் பேசியவர்களுக்கு
நன்றி.
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு என்ன செய்யலாம்?
என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்??
இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில் எனக்கு தெரியவில்லை. ஆனால் - மிக முக்கியம் - செய்யும் பணியை இன்னும் செய்துகொண்டே இருங்கள். மாற்றங்களை காலம் முடிவு செய்யும்.
இருந்தபோதிலும், என் எண்ணப்படி, இந்த சில மாற்றங்கள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
* இன்னும் சமூகத்தில் பெண்கள் அடையாளம் இல்லாதவர்களாக இருக்கிறார்களோ என்ற ஐயப்பாடு உள்ளது. மற்ற சமூகங்களில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு - பெண்கள் ஆண்களை விட சிந்தனையில் குறைந்தவர்கள் இல்லை - நம்மோடு பணியாற்றும் பெண்களின் தலைமைத்துவ திறன்களை அறிந்துள்ள நாம் - இன்னும் நம் பெண்களை சம தளத்தில் வைத்துப் பார்க்க எதற்கு யோசிக்கின்றோம் என்பது புதிர். நகர்மன்றத்திற்கு மூன்று பெண்களை இந்த நகரம் தலைவர்களாக பெற்றிருந்தாலும், பெண்களுக்கு வீட்டை விட்டால் வேறு என்ன பொறுப்பு தரப்பட்டுள்ளது?
இந்த நிலையை காயல்பட்டினம் வலைதளம் மாற்ற வேன்டும். அவர்களுக்கு என தனிப்பகுதி தேவை இல்லை. அவர்களுடைய பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுடைய சிந்தனைகள் சம தள ஆண்களுக்கு சென்றடைய வேண்டும்.
* வழிகாட்டுதல் இல்லாமல், பெரியவர்களின் பங்களிப்பு சரியாக இல்லாமல் நிறைய இளைஞர்கள் ஊரில் உள்ளனர். வருடம் போகப் போக இந்த எண்ணிக்கை கூடுகிறது. என்ன செய்யலாம்? வீணடிக்கப்படும் இந்த இளமைக் கூட்டத்தை எப்படி சரியான பாதையில் முடுக்கி விடுவது? இதற்கான விஷயத்தை வெறும் வலைதளம் மட்டுமே செய்து விட முடியாது என்பதை உணர்கிறேன். ஆனாலும் வலைதளமும் இதற்கான முக்கிய கருவி. இந்த இளையவர்களைக் குறி வைத்து சில நல்ல விஷயங்களை உருவாக்க வேன்டும்.
* ஊரின் அரசியல் நிலமை சீர்திருத்தப்பட வேண்டுமாயின், தொழில்முறை அரசியல்வாதிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வரவேண்டியது அவசியம். ஜனநாயகத்தில் எவ்வளவோ நல்ல விஷயஙகள் இருந்தாலும், தொழில்முறை அரசியல் என்பது சாபக்கேடு. இவர்கள் பிழைப்பு நடத்த வேண்டும் என்றால் அரசியலில்தான் சுரண்ட முடியும். இன்றைய காலத்தில் இந்த தொழில்முறை அரசியல்வாதிகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு துவங்கிவிட்டது. வரும் காலத்தில் இந்த தொழில்முறை அரசியல்வாதிகள் வராமல் இருக்க செய்ய வேண்டிய கடமைகள் இந்த வலைதளத்திற்கு உள்ளது. ஏன், நம் அனைவருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது.
மனிதனாகப் பிறந்த அனைவரும் அரசியலுக்குள் வர வேண்டும். அரிசி, எண்ணெய் விலையில் இருந்து, பள்ளிக் கூட சீட்டில் இருந்து, பேசும் மொழியில் இருந்து - கவுரவமான வாழ்விற்கான எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் அது வியாபாரம் ஆகி இருக்கிறது. அனைவரிடமும் அரசியலைக் கொண்டு சேர்க்கும் பணி இந்த வளைதளத்திற்கு இருக்கிறது.
* ஆரோக்கியமான சிந்தனை முறைகளை அறிமுகப்படுத்தும் விதமாக சமூக விஷயங்களில் களப்பணியாற்றுபவர்களின் கலந்துரையாடல் பகுதியை கொண்டு வாருங்கள்.
மேலும், சில சிறிய மேம்பாடுகளும் இந்த வலைதளதிற்கு தேவைப்படுகிறது.
* பிரைவசி சம்பந்தப்பட்டது - கருத்து பரிமாறும் இடத்தில் சரியான பெயர்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்ற விசயம் சரியே. ஆனாலும் மின்னஞ்சல் முகவரி எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியது இல்லை. வலைதளத்தில் பதிவு முறையை அறிமுகபடுத்தி, அதன் மூலம் ஒரு முறை ஒருவரின் Identityயை உறுதி செய்து கொள்ளலாம். இது கருத்தின் உரிமையாளரை உறுதி செய்யும் நேரத்தை சேமிக்கும். பதிவு முறையை Open Identity என்ற முறையில் அமைத்தால் பதிவு செய்பவருக்கு எளிதாய் இருக்கும்.
மேலும், Privacy என்பது சட்டம் சம்பந்தப்பட்ட விஷயம். எது ஒருவருடைய ப்ரைவசி என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். இந்தியாவில் இந்த சட்டங்கள் சரியாக இல்லாவிட்டாலும், பல நாடுகளில் இது கடுமை ஆக்கப்பட்ட விஷயம். மின்னஞ்சல் முகவரியும் சில நாடுகளில் (உதாரணம் ஜெர்மனி / மற்றும் ஐக்கிய ஐரோப்பிய ப்ரைவசி ரெகுலேஷன் மற்றும் சேஃப் ஹார்பர் விதிமுறைகளுக்குள் வரும்) இம்மாதிரியான சட்ட விதிகளுக்குள் வரும். ஒன்று, இந்த வலைதளத்தில் எம்மாதிரியான ப்ரைவசி விஷயங்கள் சேகரிக்கப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படுகின்றன என்பதை disclaimer மூலம் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவது; மற்றொன்று ஒருவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தனிநபர் விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பது. தனி நபர் விஷயங்கள் பற்றிய சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர வேண்டும். வலைதளங்கள் சில நேரம் சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றன.
* பல பழைய விஷயங்களை மீண்டும் கொண்டு வாருங்கள்! உதாரணமாக பிறந்த நாள் வாழ்த்து; திருமண செய்திகள் என பல... வெளியூரில் இருப்பவர்கள் இதை ஆமோதிப்பார்கள் என எண்ணுகிறேன்.
* இன்னும் யுனிகோட் எழுத்துருவிற்கு மாறவில்லையோ என எண்ணுகிறேன். ஆன்ட்ராய்ட் போன்றவற்றில் சரியாக எழுத்துரு வருவதில்லை. நான் வீட்டில் கூகுல் டிவியில் வலைதளங்களைப் பார்ப்பவன். அனேகம்பேரிடம் ஆன்ட்ராய்ட் கைபேசி அல்லது டாப்லட் இருக்கக்கூடும். வருங்கால வாசகர்கள் இதன் மூலமாகத்தான் வலையை வலம் வருவார்கள்.
தளத்தில் இருக்கும் குறைகளைக் கூற சம்பளம் தேவை இல்லை. எளிதாக உட்கார்ந்த இடத்திலிருந்து செலவு இன்றி கிடைக்கும் விஷயம் விமரிசனங்கள். ஆனால் அதையும் தாண்டி ஒரு கருவை பதினைந்து வருடங்கள் சுமப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல! அந்தத் துணிவும், தெளிவும் பாராட்டிற்குரியது.
எல்லோரும் கருத்தைக் கூறி விடலாம். ஆனால் செயலில் சிலரே இருப்பர். பதினைந்தாம் வயதின் துடிப்பு இந்த வலைதளத்தில் உற்சாகத்தைக் கொண்டு வர வாழ்த்துக்கள்!!! |