‘தெஹல்கா’ என்கிற இந்த வார்த்தையின் மூலமே முதன் முதலில் ‘இணையதளம்’ என்பதை நான் கேள்வியுற்றேன். ‘காயல்பட்டினம்.காம்’ என்பதன் மூலமே முதன் முதலில் இணையதளத்தை கண்ணுற்றேன். அதுவும் கடந்த ஈராண்டுகளாகத்தான்...
16 வயதினிலே, கன்னி பருவத்திலே அடியெடுத்து வைக்கும் கண்ணியம் மிகுந்த இந்த இணையதளத்தில் எழுதிடும் ஆசை எனக்கு இருந்து வந்தது. ஆனால் அந்த இணையதளத்தைப் பற்றியே எழுதிடும் வாய்ப்பு இதன்மூலம் வந்தமைந்தது...
இணையதளங்களின் புனித ஸ்தலமாக விளங்கும் காயல்பட்டினத்தின் ‘முதன்மை இணையதளம்’ இதுதான் என்று இதன் பார்வையாளர்களின் எண்ணிக்கைப் பதிவே விளக்கிவிடுகிறது. செய்திகள் பூத்த சில நிமிடங்களிலேயே அவற்றை நுகர்வோர் நூறு, இருநூறு என்றாகிவிடுகின்றனர்.
இறைவனை ‘மெய்ப்பொருள்’ என்பேன் நான்... உண்மை வேறு இறைவன் வேறு அல்ல. ஆகவே உண்மையை பேசும்போதும், எழுதும்போதும் அஞ்சுவதற்கு அவசியமற்றுப் போகிறது. ‘எல்லாம் அவன் செயல்’ ஆகிவிடுகிறது... அந்த வகையில்தான் காயல்பட்டினம் இணையதளமும் துணிவு காண்கிறது எனலாம்.
எந்த சூழலிலும் தவறிழைக்காத மனிதர் எவரேனும் உண்டோ..? திட்டமிடாத, அறியாத தவறாயினும் தவறாது வந்து வரிசை கட்டிக் கொள்ளும் அன்றோ..? அதனால் எவரையும் தாங்கிப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் இந்த இணையதளத்திற்கு இல்லை என்றே கருதுகிறேன்...
மற்றபடி காயல்பட்டினத்திற்கு அருமையான ஆளும் கட்சியாகவும், திறமையான எதிர் கட்சியாகவும் ஒருசேர கடமையாற்றி வரும் காயல்பட்டினம் இணையதளத்தின் பாங்கு போற்றுதலுக்கு உகந்ததே...
‘தவிக்க வச்சிட்டீங்களே பய புள்ளைங்களா..?’ என்கிற தலைப்பை பார்த்து, அதற்கான செய்தியை கிஞ்சித்தும் யூகிக்கவே இயலாது. ஆனால் முதல் மழை தந்த திரள் மேகங்களைக் குறித்த அந்த செய்தியை படித்ததும் அந்த தலைப்பு நம்மைப் பார்த்து ‘கெக்கே பிக்கே’ என்று சிரிக்கும். நம்மையும் புன்னகை பூக்க வைக்கும்.
‘நீங்க மட்டும் எங்க ஊருக்கு வருவீங்க... உங்க ஊருக்கு நாங்க வரக்கூடாதா..?’ வழிதெரியாது , வகை தெரியாது. நகருக்குள் அகதிகளாய் அல்லது அதிதிகளாய் வந்துவிட்ட குரங்குகளை- அரவணைக்காவிட்டாலும் பரவாயில்லை; அடித்து விரட்டாமல் இருக்க வேண்டுமே என்கிற ஆதங்கத்துடன் கூடிய எவ்வளவு அருமையான தலைப்பு பாருங்கள்..! இந்தப் பாணியிலான பல ‘புன்முறுவல்’ செய்திகளை தொகுத்து, ஒரு தனி ‘சொடுக்’கில் இடம்பெறச் செய்யலாம்.
இணையதளங்கள் பொதுவாக ‘சோக்காளி’களாகவே இருக்கின்ற சூழ்நிலையில் ‘போராளி’யாகத் திகழ்கிறது இந்த இணையதளம்...
‘டிச.18-ந்தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி’ என்ற வகையில், கடந்த ஒரு வருடமாக நாள் தவறாமல் படப்பிடிப்பு நடத்தி வரும் இந்த இணையதளத்தின் ‘வைராக்கியம்’ வைராக்கியத்திற்கான உதாரணமாகவே மாறிவிட்டது. ஒரு பறவை தனது முட்டையை அடைகாப்பதைப் போல தனது ஊர் சார்ந்த கடல் பகுதியின் நலனில் காட்டும் தொடர் அக்கறை கடலினும் பெரிது என்பேன்...
காயல்பட்டினத்தின் சமயம் சார்ந்த அரபு, உருது மொழிகளை கடந்தும்- வியாபாரம் சார்ந்த ஹிந்தி, மலையாளம் ஆகியவற்றை கடந்தும் - கல்வி ரீதியிலான ஆங்கில மொழியைக் கடந்தும் இஸ்லாமிய மக்களின் பேச்சு வழக்கில் தமிழ், வளம் கொழிப்பதைக் கண்டு ‘வழமை’யாக வியப்பவன் நான்... அதிலும் காயல்பட்டினம் இணையதளம் பிடிவாதமாக ‘தூய தமிழ் நோன்பு’ பிடித்து வருவதைக் கண்டு உண்மையிலேயே எனக்கு மிரட்சிதான்...
இயல்பாகவே இஸ்லாமிய சூழலில் இயங்கிவரும் இந்த இணையதளம், அந்த அளவில் வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறது. அதையும் கடந்து தன்னை விரிவு படுத்திக்கொள்ளும் ஆசை துளிர்ப்பதையும் அவ்வப்போது சில செய்திகளின் வாயிலாக உணர முடிகிறது. ஆனால் அந்த முயற்சியில் திணறலும் தெரிகிறது...
எங்கிருந்து வருவோரையும் வரவேற்க, காயல்பட்டினத்தில் ‘மகாத்மா காந்தி ஆர்ச்’ இருப்பதைப்போல– என்னைப் போன்றோரை வரவேற்க காயல்பட்டினம் இணையதளத்திலும் ஒரு ‘ஆர்ச்’ நிறுவப்படவேண்டும் என்பது எனது ஆசை...
நான் முன்பு ‘கதிரவன்’ நாளிதழிலும் தற்போது ‘மாலை முரசு’ நாளிதழிலும் செய்தியாளராகத் தொடர்கிறேன். முன்பு அலைந்து திரிந்து செய்திகளை சேகரிக்க நானும் சக நிருபர்களும் ஆறுமுகநேரியில் இருந்து அன்றாடம் காயல்பட்டினத்தை நாடி வருவோம்...
இப்போது, ‘ஒங்களுக்குத் தேவையானதை எடுத்துக்குங்க..’ என்று காயல்பட்டினத்தை சார்ந்த அத்தனை இணையதளங்களும் செய்திகளை ‘பொட்டலம் கட்டி’ எங்கள் கணினியில் தந்துவிடுகின்றன... இதற்கான நன்றியையும் இந்த கட்டுரைக்குள் பொதிந்து தருவதில் பெருமை கொள்கிறேன்.
இந்த வாய்ப்பை அருளிய எல்லாமுமான ஏக இறைவனுக்கு நன்றியை காணிக்கையாக்கி நிறைவு செய்கிறேன்... |