அல்லாஹ்வின் திருப்பெயரால் .....
இன்றைய செய்தியே நாளைய வரலாறு. ஒரு சமூகத்தின் சமகால நிகழ்வுகளின் பதிவுகளே அன்றைய செய்தியாக மக்களை சென்றடைகிறது. செய்திகள் மக்கள் மனங்களில், சிந்தனையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தும் ஒரு பலமான காரணியாக செயல்படுவதைக் காணலாம்.
ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளின் உண்மைத் தன்மை, அதனை வெளியிடும் செய்தி நிறுவனத்தின் தரத்தினைப் பொறுத்தே அமைகிறது. மக்கள் தொடர்பு சாதனங்கள் உண்மையை - பொய்யாகவும், பொய்யை - உண்மையாகவும் எளிதாக உருமாற்றம் செய்திட பலவிதமான வித்தைகளை, வாய்ப்புகளை கொண்டிருந்த போதும் உண்மையை உள்ளபடி உண்மையாக வெளியிட்டு கால காலமாக ஊடக தர்மத்தை பேணிவரும் நிறுவனங்கள், என்றென்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
காலச் சுழற்சியில் தொழில், வர்த்தக தேவை நிமித்தம் பிறந்த மண்ணைப் பிரிந்து செல்ல வேண்டிய தேவை காயலருக்கு உருவான போது, பிரிய மனமின்றி பிரிந்தவர்கள் உள்ளத்தை விட்டு விட்டு, உடலோடு மட்டுமே ஊரையும் உறவையும் பிரிந்தார்கள். கரை கடந்து, கடல் கடந்து வெகு தூரம் சென்ற இவர்கள், பிறந்த ஊரிலிருந்து அந்நியப்பட்டதாய் உணர்ந்தார்கள். தமது ஊரின் அன்றாட அசைவுகளை அறிந்து கொள்ள ஆவலும் ஆசையும் கொண்டார்கள். ஆயினும் வழி தெரியாமல் தவித்தார்கள். இத்தகையவர்களின் ஏக்கம் வீண் போகவில்லை.
பிரிந்த உள்ளங்களையும் - ஊரையும், இணைத்திடும் உறவுப் பாலமாக 1998 ஆம் ஆண்டு காயல்பட்டணம்.காம், இணையத்தில் தடம் பதித்து, தனது பயணத்தைத் துவக்கியது. இதனூடாக காயல் நகரில் இயங்கி வரும் அனைத்து இணைய தள செய்திச் சேவைகளுக்கும் முன்னோடியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.
நாட்களின் தொகுப்பாக ஆண்டுகளும், ஆண்டுகளின் தொகுப்பாக மனித வாழ்வும் அமைந்துள்ளதைக் காணலாம். ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதை விட அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு ஊடகத்தைப் பொறுத்தளவில் அதன் வயது மட்டுமல்லாமல், அது பேணிவரும் தரத்தை அடிப்படையாகக் கொண்டே அதன் செல்வாக்கு மதிப்பிடப்படும்.
அந்த வகையிலே காயல்பட்டணம்.காம், இலத்திரனியல் ஊடகப் பணியில் அதற்குரிய விழுமியங்களைப் பேணி, தனக்குரிய தனித்துவத்துடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது ஒரு எளிதான காரியமன்று. அது கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்த்தால் அது சவால் மிக்கதாகவே இருந்திருக்கும். ஆயினும் இறையருளால் சலிப்பும் சோர்வும் உணரப்படாத ஒரு பயணம் - இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.
காயலின் அன்றாட நிகழ்வுகளை சுவை குன்றாமல் செய்தியாகத் தருவதோடு மட்டுமல்லாமல், சிறந்த எழுத்தாளர்களை சமூகத்திற்கு அறிமுகம் செய்யும் அதே வேளை, வெளிச்சத்திற்கு வராத காயலரின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களினது பயனுள்ள ஆக்கங்களை வெளிக் கொணர்வதின் மூலம், இளம் எழுத்தாளர்களை சமூகத்திற்கு அறிமுகம் செய்து ஊக்கப்படுத்தி வருவது உற்சாகமூட்டுகிறது.
காயல்பட்டணம்.காம் ஒரு ஊடகம் என்ற ரீதியில் செய்திகளையும் தகவல்களையும் தருவதோடு நின்று விடவில்லை. மாறாக அதையும் தாண்டி சமூகத்தின் நலன்களை, தேவைகளை ஆராய்ந்து, இனங்கண்டு, நேர்த்தியான திட்டமிடல் மூலம் அதற்குரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அர்பணிப்புடன் செயலாற்றுவது சமூகத்தின் மீதான அதன் அக்கறையை பறைசாற்றி நிற்கிறது .
நாளுக்கு நாள் பல்வேறு அம்சங்களுடன் காயல்பட்டணம்.காம் இணைய தளம் மாற்றம் கண்டு வரும் இவ் வேளை இன்னும் சில புதினங்களை தன்னோடு இணைத்துக்கொள்ளுவது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். பெற்றோரிடம் கதை சொல்லக் கேட்டும் குழந்தைகளுக்காக நீதிக்கதைகள் பகுதி. (இன்றும் கூட இலங்கை யாழ்ப்பாண நூலகத்தில் வாரத்தில் ஒருநாள் குழந்தைகளுக்காக கதை சொல்ல நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). மகளிருக்கான பிரத்தியோகப் பகுதி. இதன் மூலம் அவர்களை வலுவூட்டி அவர்களின் எழுத்தாற்றலை வெளிக் கொணர்ந்து, சமூக சிந்தனையாளர்களாக உருவாகிட வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
உள்ளூர் செய்திகளோடு உலகெங்கும் அவ்வப்போது நிகழும் மருத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்த புதுமைச் செய்திகளையும் இணைத்துக் கொள்வது சமூகத்தை விழிப் படையச் செய்யும். சிறப்புக்கட்டுரைகள், எழுத்து மேடைஆக்கங்கள், கவிதைகள், மற்றும் அதனைப் பற்றிய முகப்பு பக்கத்தின் முன் அறிவிப்புகள் பிரசுரிக்கப்பட்டு குறைந்தது ஒரு வார கால இடைவெளிக்குப் பின்பே அடுத்து வரும் புதிய வரவுகளை பிரசுரிப்பது சிறந்தது. இதுவே அனைத்து வாசகர்களும் அதனை நிதானமாக வாசித்து பயனடைய வழி சமைக்கும்.
நமதூரின் சகோதர இணைய தள குழுமங்களின் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளைச் செய்தியாக்கும் பொது, அதோடு தொடர்புடைய இணைய தளத்தின் பெயரையும் இணைத்தே பிரசுரித்திட வேண்டும். இந்த பரந்த சிந்தனை அவர்களை மேலும் சமூகப் பணி செய்திட ஊக்கப்படுத்திடும்.
இதன் மூலம் நமது சமூகமே நன்மை அடையும். அதே வேளை குழுமங்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வும் பேணப்படும். மேலும் தனி நபர்கள்- குடும்பங்கள் சார்ந்த பிரச்சனைகளை செய்தியாக்காமல் அறவே தவிர்த்திடல் வேண்டும்.
காயலின் அன்றாட நிகழ்வுகளை சிறந்த முறையில் பதிவு செய்துள்ள காயல்பட்டணம்.காம், சத்தமின்றி ஒரு சிறந்த பொக்கிஷத்தை காயலின் எதிர்கால தலைமுறைக்கு வழங்க இருக்கிறது என்பது ஒரு சந்தோசத்துக்குரிய விடயம் .அது என்னவென்று யோசிக்கிறீர்களா ?
தனது இருப்பை, வரலாற்றை அறிந்திராத ஒரு சமூகம் முகவரி இழந்த ஒரு சமூகமாகவே நோக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் காயல்பட்டணத்தைப் பற்றிய வரலாற்றை தொகுப்பது என்பது ஒரு கடினமான காரியம் .பல்வேறு பட்ட நூல்களையும், தகவல்களையும் ஆதாரமாகத் தேட வேண்டும் .ஆனால் வருங் கால சந்ததியினருக்கு அவ்வாறான சிரமங்கள் ஏதுமின்றி காயலின் வரலாற்றை தொகுப்பதற்கான அத்துனை தகவல்களையும் இன்ஷா அல்லாஹ் ஒரு சேர காயல்பட்டணம் .காம் குறைவின்றித் தந்து விடும் என்றால் அது மிகையாகாது. இந்தப் பணி பல்லாண்டு காலம் தடையின்றித் தொடர்ந்திட வாழ்த்துவதுடன், அதற்காக இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
ஒன்றை ஓங்கிச் சொல்ல முடியும் . கரை கடந்து, கடல்கடந்து வாழும் காயலர்களில் பெரும்பாலானோர் காலை நேரத் தேநீருடன் காயல்பட்டணம்.காம் ஐ யும் சேர்த்தே சுவைக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம்.! என்ன?
நானும் அவர்களில் ஒருவனே..! |