பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
15 வருடங்களுக்கு முன்னாள், யாருமே நினைத்துப் பார்த்திராத - தூர நோக்குடன் கூடிய ஒரு பார்வையின் பலனே காயல்பட்டணம்.காம்.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, சில காயல் இளைஞர்கள் தோற்றுவித்த ஓர் அருமைத் திட்டம் - காயல்பட்டணம்.காம்.
ஒரு ஊருக்கென்று கணினி வழி செய்தி ஊடகம் என்று முதன்முதலில் உருவானது என்று சொன்னால் அது காயல்பட்டணம்.காம் இணையதளம்தான் என்றே நான் நினைக்கிறேன்.
இந்த 15 வருட காலத்தில் பல சாதனைகள்:
>>> காயல்பட்டினம் உள்ளூர் செய்திகளை சுடச்சுட தந்து, அனைவருக்கும் - குறிப்பாக வெளிநாடு வாழ் காயலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது இந்த காயல்பட்டணம்.காம்...
>>> ஊர் மக்களுக்குக் கூட கிடைத்திராத உள்ளூர் செய்திகளை, கடல் கடந்து வாழும் எங்களைப் போன்ற காயலர்கள் உடனுக்குடன் அறிந்திட இந்த காயல்பட்டணம்.காம் ஒரு பேருதவி...
>>> செய்திகளுக்குக் கருத்துப்பதிவு என்பது, பல காயலர்களுக்கு தங்களது எழுத்தாற்றலை வெளிப்படுத்தவும், மெருகேற்றவும் களம் அமைத்துக் கொடுத்த ஓர் அரிய சிந்தனை...
>>> இந்த காயல்பட்டணம்.காம் மூலம் - பல எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், மொழிப்புலமை மிக்கவர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள், புகைப்படக் கலைஞர்கள் என ஒரு பெரும் பட்டாளமே அடையாளம் காணப்பட்டிருக்கிறது...
>>> சமூக அக்கறை, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம், மக்கள் நலன், அக்கிரமத்திற்கும் - அடக்குமுறைக்கும் எதிராக துணிச்சலான போராட்டம், இக்கருத்தையொட்டிய தங்களது தலையங்கங்கள், போராட்டங்கள் பெரும் புரட்சிகளை செய்திருக்கிறது.
இப்படி பாராட்டிக் கொண்டேயிருக்கலாம். ஆனால், அவை இந்த காயல்பட்டணம் டாட் காமுக்கு எந்த பலனையும் அளிக்கப்போவதில்லை.
என்னுடைய பார்வையில் - குறைகள் என்று சொல்வதை விட, தவிர்க்கப்பட வேண்டியவை, இன்னும் இதை மேம்படுத்துவதற்கான சில ஆலோசனைகளையே நான் கூற விரும்புகிறேன்.
காயல்பட்டணம் டாட் காமுக்கென்று பரந்து விரிந்த பெருவட்டம் இருக்கிறது. இதற்கென்று விரிவான வாசகர் வட்டம் இருப்பினும், சில காயல் சகோதரர்கள் இதனுடன் கருத்து வேற்றுமையில் இருக்கின்றனர். செய்திகளை வெளியிடுவதில் நடுநிலையின்மை, கருத்துக்களை வெளியிடுவதில் பாரபட்சம், ஒரு பிரிவினர் சார்புத் தன்மை போன்ற விஷயங்கள் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.
இவற்றை அவர்களது மனதிலிருந்து மாற்றுவதற்கு தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு எனது ஓர் ஆலோசனை: 15ஆம் ஆண்டு விழா என்ற அடிப்படையில் ஊரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, மாற்றுக் கருத்துடையோரை அதிகளவில் அழைத்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து - அவர்கள் மனதிலும் காயல்பட்டணம்.காம் நிலையாக இடம்பெறுவதற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வேண்டுகோள்: ஒரே நாளில் பல செய்திகளை - குறிப்பாக பெருநாள் தினங்களில் அடுத்தடுத்து வரும் செய்திகளின் தலைப்புகள், மறுநாளிலேயே முகப்புப் பக்கத்தை விட்டும் மறைந்து விடும் நிலையுள்ளது. இதனால், அதிகமானோர் அனைத்து செய்திகளையும் முழுமையாகப் படிக்க முடியாத நிலை.
பெருநாள் கொண்டாட்டங்கள் என்று ஒவ்வோர் ஊரிலும் – குறிப்பாக வெளிநாடுகளில் தரப்படும் செய்திகளை தனித்தனி தலைப்புகளில் வெளியிடாமல், ஒரு நாட்டில் – பல இடங்களில் நடைபெறும் பெருநாள் கொண்டாட்டங்களை ஒரே செய்தியில் பல துணைத் தலைப்புகளுடன் வெளியிடலாம். உதாரணமாக, “சஊதியில் காயலர் பெருநாள் கொண்டாட்டம்” என்ற தலைப்பின் கீழ் - ஜித்தா, தம்மாம், ரியாத், மக்கா, யான்பு என துணைத்தலைப்புகளிட்டு வெளியிடலாம்.
பாபநாசம் அணையின் நீர்மட்டம், காயல்பட்டினம் கடலின் காட்சி போன்ற செய்திகளை - நான் அறிந்த வரை அதிகமானோர் படிப்பதில்லை. இதுபோன்ற செய்திகளை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ வெளியிடுவது ஏற்றது என்று நான் கருதுகிறேன்.
நேர்காணல் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதாவது, Walk the Talk, அக்னி பரீட்சை போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அதில் சமூக ஆர்வலர்கள், மாற்றுக் கருத்துடையோர், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் போன்றோரை நேர்காணல் செய்து, அவற்றை ஒரு இணைப்பில் (link) பதிவு செய்து, ஒளி - ஒலி வடிவமாக வெளியிடலாம்.
மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், கல்வி - உயர்கல்வி மேம்பாட்டு செய்திகளை வெளியிடல், உள்ளூர் - வெளியூர் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிடல் போன்றவற்றையும் செய்யலாம்.
ஆக, என் மனதில் உதித்த சில ஆலோசனைகளை தங்கள் முன் கூறியிருக்கின்றேன். இவை குறித்து தாங்கள் கலந்தாலோசித்து, நல்ல முடிவெடுப்பதன் மூலம் இந்த காயல்பட்டணம்.காம் இணையதளம் அனைவரின் மனதிலும் அசையாத இடத்தைப் பிடிக்கும் என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கையுள்ளது.
இதன் ஆதரவாளர்களது கருத்துக்களை நீங்கள் கேட்பதை விட, யாரெல்லாம் எதிர்ப்பதாகவோ - மாற்றுக் கருத்துடையவர்களாகவோ நீங்கள் கருதுகின்றீர்களோ அவர்களது கருத்துக்கள்தான் உங்களை மேம்படுத்துவதற்கு பெரிதும் துணை புரியும்.
அந்த அடிப்படையில், அப்படிப்பட்ட சகோதரர்களை நீங்கள் வரவழைத்து - அல்லது அதற்கென நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அவர்கள் மனதிலும் இந்த காயல்பட்டணம்.காம் இடம் பிடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று எனது அன்பான வேண்டுகோளை உங்கள் முன் வைத்து நிறைவு செய்கிறேன்.
நன்றி, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்... (உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், அளவிலாக் கருணையும், அபிவிருத்தியும் உண்டாவதாக!) |