முன்னுரை:
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயயரால்!
வங்கக்கடலோரம் வாகுடன் இலங்குகின்ற வரலாற்றுச்சிறப்புமிக்க வனப்புமிகு பதியாகும் காயல்பட்டணம்.பண்டைய பாண்டியரின் துறைமுக நகரமான
இதற்கு வகுதை, காஹிர் மற்றும் பெளத்திரமாணிக்கப்பட்டணம் என்ற பல்வேறு பெயர்கள் உண்டு. பாமரர்கள், படித்தவர்கள்,பணம்
படைத்தவர்கள்,நடுத்தர மக்கள்,வறியவர்கள்,அறிஞர்கள்,ஆன்றோர்கள், ஆலிம் பெருமக்கள்,ஹாபிழ்கள்,வணிகர்கள்,என்று சமூகத்தின் பல்வேறு
தரப்பினரை உள்ளடக்கிய இந்த ஊர், ஆயிரக்கணக்கான இறைநேசர்களை தன் மடியில் ஏந்துகின்ற புண்ணிய பூமியாகும். சீரழிக்கும்
திரைக்கொட்டகை,மதிமயக்கும் மதுபானவிடுதி மற்றும் காவல் நிலையம் இல்லாத எமது ஊருக்காக சேவைசெய்திட தேர்ந்தேடுக்கபடவிருக்கும்
நகர்மன்றம் எப்படியானதாக இருக்க வேண்டும் என்ற எனது உள்ளக்கிடக்கையே இந்தக்கட்டுரையின் முக்கிய அம்சமாகும்.
நகர்மன்றம் - ஒரு வரலாற்றுப்பார்வை:
ஆறாயிரம் ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிய காயலம்பதியின் முதல் பஞ்சாயத்து போர்டு கி.பி.1886 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால்
உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட சுங்கத்துறை அதிகாரி இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். அதனைத்
தொடர்ந்து, 1895 ஆம் ஆண்டு இதன் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட மரியாதைக்குரிய திரு.பொன்னையா நாடார் அவர்கள் 18 ஆண்டு காலம்
திறம்பட இப்பணியைச் செய்தார்கள். அதன் பின்னர் 1914 ஆம் ஆண்டு தலைவர் பொறுப்புக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மர்ஹூம்.
முஹம்மது தம்பி அவர்கள், இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட முதலாவது மண்ணின் மைந்தராவார். இவர் 1953 ஆம் ஆண்டு முதல் 1965
ஆண்டு வரையில்,பிற்காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கல்விப் புரவலர், மர்ஹூம்.எம்.கே.டி.முஹம்மது அபூபக்கர் ஹாஜியார்
அவர்களது தந்தையார் ஆவார்கள்.
நவம்பர் 1929 ல், தோல்சாப் முஹம்மத் உவைசனா லெப்பை அவர்கள் தலைவராக இருந்தபோது, காயல்பட்டணம் பிரிக்கப்பட்டு, ஆறுமுகநேரி
பஞ்சாயத்து போர்டு உருவாகியது. இப்படி பல்வேறு நன்மக்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தப்பதவிக்கு 1996 ஆம் ஆண்டு ஜனாபா.நாச்சி தம்பி
அவர்கள், இவரைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஜனாபா வஹீதா அவர்கள் ஆகிய இரு பெண்மணிகள் அணி சேர்த்தனர். தொடர்ந்து இன்றைய
தலைவரான ஹாஜி.வாவு செய்யத் அப்துல் ரஹ்மான் அவர்களது தலைமையில்,நகர்மன்ற வரலாறு இறையருளால் தொய்வின்றித் தொடர்கிறது.
இந்த வரலாற்றுப்பார்வையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி, 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற மன்ற தேர்தலில், மிகப்பெரும்
சண்டையும் , சர்ச்சைகளும் ஏற்பட்டு, ஒரு ஜூம்ஆ பள்ளி இரண்டாக ஆகியதுதான். காலம்தான் எல்லாக்காயத்திற்கும் சிறந்த மருந்து என்பதற்கொப்ப
காலப்போக்கில் கிழக்கென்றும், மேற்கென்றும் வேற்றுமை பாராத இளைய தலைமுறை, பெரியவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு புதிய ஒற்றுமையான
காயலை உருவாக்கியது நமது சமகால வரலாறு.
இன்றைய நகர்மன்றம்:
சுமார் ஐம்பத்தி ஐயாயிரம் மக்கள் வாழக்கூடிய காயல்பட்டணத்தில், பெரும்பான்மை முஸ்லிம்களும், ஏனைய சிறுபான்மை ஹிந்து,கிருத்துவர்களும்
சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வருவது, நகரின் சிறப்புகளில் ஒன்றாகும். தற்போதைய நகர்மன்றத்தின் 18 வார்டுகளில் 12 முஸ்லிம்களும்,ஆறு
முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இறைபக்தி,நேர்மை,பொது வாழ்விற்கான தூய்மையுடன் பணியாற்றும் தலைவர் அவர்கள் தனது தயாள குணத்தின் காரணமாக, நகர் நலனுக்காக
அள்ளித்தந்தவைகள் ஏராளம்!ஏராளம்!! தனது சொந்தப்பணத்தில் இருந்து ரூ.ஐம்பது இலட்சத்தை நகரின் குடிநீர் திட்டத்திற்காக இந்த
ஆண்டு வாரி வழங்கியது, இந்தப்பெருமகனாரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தது என்றால் மிகையாகாது. இத்தனை நல்ல குணங்களை உள்ளடக்கிய
தலைவருக்கு உறுப்பினராக வாய்த்தவர்களுள் பெரும்பான்மையானோர் பணம் தின்னும் கழுகுகளாக மாறியதால்,ஒரு சிறந்த நிர்வாகத்தை இவரால்
வழங்க முடியவில்லை.
கழிவு நீர்த்தொட்டி முதல், கபரஸ்தான் பெட்டி வரை, எதெற்கெடுத்தாலும் காசு,காசு என்று நாக்கூசாமல் பேரம் பேசும் இவர்களது கரங்கள்,மக்கள்
பணம் பதினான்கு இலட்சத்தை சூறையாட முயன்றதுவரை விரிந்தது. இவர்களது சரியான ஒத்துழைப்பு இன்மையாலும், தலைவர் அவர்களது
பலவீனமான நிர்வாக சக்தியாலும், நமது கடற்கரை ஓரம், சட்டவிதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டு வருகின்ற சுனாமிக்குடியிருப்பு என்னும் பெயரில்,
திட்டமிட்டு நிறைவேற்றப்படும் அந்நிய ஆக்கிரமிப்பை தடுக்க முடிய வில்லை. இதன் பெரும்பான்மையான காரியங்கள், நகராட்சிக்குத்
தெரியாமலேயே நடந்து விட்டதை எண்ணி எண்ணி கொதிப்படைந்த மக்களின் போராட்ட உணர்வுகளை, போலி வாக்குறுதிகளால் அரசியல்வாதிகளுடன்
கைகோர்த்து அவமதித்த பல பெரியவர்களை நோக்கி இந்தக் கட்டுரை பயணிக்க, இந்த தலைப்பு சரியானது அல்ல என்று கருதுகிறேன்.
ஆகமொத்தத்தில் தற்போதைய நகர்மன்றம் , ஒரு சிறந்த மனிதரின் தலைமையில் இயங்கும் எந்த சிறப்பும் இல்லாத நிர்வாகம் என்பதை பதிவு செய்ய
எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இனிவரும் பகுதிகளில் சரியான,முறையான நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? அதில் ஒவ்வொரு காயலனும்
ஆற்ற வேண்டிய பங்கு என்ன? என்பதைக் குறித்து அலச விரும்புகிறேன்.
தகுதியுள்ள தலைமை:
பிறக்குமுன்பே தந்தையை இழந்து, பிறந்ததுமே தாயையும் இழந்து, மரணிக்கும் வரையில் எழுதவோ,வாசிக்கவோ அறியாத மாமனிதர் நபி (ஸல் )
அவர்கள், தனது இறைபக்தி,ஒழுக்கம், நேர்மை,நீதி தவறாமை,இன்னும் எண்ணற்ற மகத்தான குணங்களால், ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப்
பின்னும் 240 கோடி முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான தலைவராக நிலைகொண்டு இருக்கின்றார்கள் சொன்னதைச் செய்யும் துணிவும்,செய்ததை
மட்டும் சொல்லும் நேர்மையும், சமநீதிக்கொள்கையும்,நிர்வாகத் திறனும், நாயகம் (ஸல் ) அவர்களை ஓர் ஆன்மீக தலைவராக மட்டுமின்றி,
சிறந்த அரசியல் தலைவராகவும் பரிணமிக்கச் செய்தது. அப்பேர்ப்பட்ட மாமனிதரின் குணத்தில்,ஒரே ஒரு துளியேனும் தன்னுள் கொண்ட,
அல்லாஹ்விற்கு அஞ்சுகிற, நம்பிக்கைத் துரோகம் செய்யாத, துணிந்து செயலாற்றுகின்ற, மார்க்கக் கல்வியும், உலகக்கல்வியும் ஓரளவுக்கு
கற்றுணர்ந்த இளைஞர் ஒருவரை, நகரின் அனைத்து ஜமாத்துகளும் ஆதரிக்கக்கூடிய பொதுவான ஒரு நபரை, அடையாளம் காணும் முயற்சியை
இன்றே துவங்கவேண்டும்.
அப்படி ஒருநபரை அடையாளம் காணும் முயற்சி, கருத்து வேற்றுமையால் தோல்வி அடைந்தால், ஜனநாயக ரீதியில் அவர்கள் தேர்தல் களம் காண
வேண்டும்.அந்தக் களத்தில், பணம், குடும்பம், தெரு, கொள்கைவேறுபாடு உட்பட அனைத்து சுயநல காரணிகளும், சந்தர்ப்பவாதங்களும்,
அரசியல் கட்சிகளும் நடுநிலைவாதிகளால் தோற்கடிக்கப்பட்டு, நியாயமாக வெற்றிபெறும் நபர் இறையருளால் சிறந்த தலைவராக விளங்குவார் என்று
நம்பிக்கை வைப்போம்.
உறுப்பினர்கள் தகுதி :
நகரமன்றத்தின் கடந்த நூறாண்டுகால வரலாற்றை நோக்கும்போது,தலைவர்கள் அனைவருமே கண்ணியமாகவும், நேர்மையாகவும், விதிமுறை
மீறாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஒரு சிலருக்கு வேண்டுமானால் பெரிய நிர்வாகத்திறன் இல்லாமல் இருந்திருக்கலாம்.ஆனால் மன்ற
உறுப்பினர்களாக இருந்த பெரும்பான்மையோரின் வரலாறு வேறுதிசையை நோக்கி பயணம் செய்கிறது. பொதுமக்களை சுரண்டுபவர்களாக, ஆண்கள்
இல்லா வீட்டின் அப்பாவிப்பெண்களிடம் பணம்பறிக்கின்ற வசூல் ராஜாக்களாக, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாக, முதலாளிமார்களின்
கொத்தடிமைகளாக பல்வேறு அரசியல்கட்சிகளின் அடிவருடிகளாக என்று இவர்களது ஜெகதால கதாபாத்திரங்கள் தொடர்கிறது.
குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டுமே தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்மையாக பணியாற்றி இருக்கின்றார்கள். ஆதலால் யாரைத்
தேர்ந்தெடுப்பது என்பதைவிட யாரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதில் அதிக கவனம் வேண்டும்.
அரசியல் கட்சியின் சின்னங்களில் போட்டியிடும் அரசியல்வாதிகள், குற்றப்பின்னணி கொண்ட வன்முறையாளர்கள்,பணத்திற்காகப் பல்லிளிப்பவர்கள்,
மோசடிப் பேர்வழிகள், ஜமாத்துக்குக்கட்டுப்படாத அடங்காப்பிடாரிகள், தனி மனித ஒழுக்கமற்றவர்கள்,மார்க்க சட்டத்தை மதித்து ஏற்காதவர்கள் என
தரம்பிரித்து எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல் இவர்களை தனியாக வடிகட்டவேண்டும். அல்லவை தொலைந்திடின் நல்லவை மிஞ்சும்
என்பதுதானே உண்மை!
உறுப்பினர்கள் தேர்வு:
ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுக்கும்போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அவரது கடந்த காலத்தை !செயல்திறன்மிக்க, நல்ல இளைஞர்களுள்
தானாக முன்வந்து சமூகப்பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், இவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அரசு வழங்கும்,
பஞ்சப்படி மிகவும் குறைவு என்பதால், இவர்கள் நேர்மையுடன் தொடர்ந்து செயல்பட குறிப்பிட்ட ஒரு தொகை மாதாமாதம் இவர்களுக்கு வழங்கப்பட
வேண்டும். அந்தத் தொகை கண்டிப்பான முறையில் தனிநபரால் வழங்கப்படக்கூடாது. வெளிநாட்டு நலமன்றங்கள் உட்பட ஏதாவது சமூக அமைப்பால்
இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் பட்சத்தில், உறுப்பினர்கள் அவரவர் பகுதியில் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கும் நிர்பந்தம் ஏற்படும்.
மேலும், அதே உறுப்பினரை அந்தந்த பகுதியில் உள்ள காயிதேமில்லத்,ஐஐஎம் போன்ற ஏதாவது ஒரு சமூக அமைப்பில் உறுப்பினராக்கி, அந்த
அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பணியாற்றத் துவங்கினால் மிகப்பெரும் சமூக மாற்றம் ஏற்படும் என்பதில் இன்ஷாஅல்லாஹ் எவ்வித ஐயமும்
இல்லை.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராக விரும்பினால், அந்தந்த ஜமாத்துகள் ,சமூக அமைப்புகளுடன் இணைந்து ,கொள்கை பாகுபாடின்றி
நடுநிலையுடன் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓர் உண்மையான சமூக மாற்றம் வேண்டுமெனில், நல்லதொரு நகர்மன்றம்
வேண்டுமெனில் அந்தந்தப்பகுதி ஜமாத்துகளும், சமூக அமைப்புகளும் மிகமிக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது அவசியம். தேவையில்லாத
கொள்கைகளைப்பேசி, வேண்டாதவர்கள் எல்லாம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆவதற்கு ஜமாத்களும்,சமூக அமைப்புகளும் காரணாமாக ஆகிவிடாது
என்று நம்புவோமாக!
பெண் உறுப்பினர்கள் :
நான் அறிந்ததுவரையில், நமது பெண் உறுப்பினர்களுள் பெரும்பான்மையோர் அவர்ளது தந்தை, கணவர்,சகோதரர் போன்ற குடும்பத்து
ஆண்களாலேயே இயக்கப்படுகிறார்கள். ஆதலால், இவர்களது குடும்பப்பின்னணியும், பொதுவாழ்வின் புயல்வீச்சை சந்திக்கும் துணிவும், இவர்களைத்
தேர்ந்தெடுக்கும்போது முக்கிய காரணியாகக் காணப்பட வேண்டும்.
சகோதர சமய உறுப்பினர்கள் :
சமய நல்லிணக்கம் என்பது நமதூரின் தனிச்சிறப்புகளில் ஒன்று. நமது முன்னோர் நமக்கு காட்டித் தந்த, இந்த மகத்தான ஒற்றுமை இன்றைய
தலைமுறைவரை தொய்வின்றி தொடர்ந்துவருவது, தமிழகத்திற்கே ஒரு முன்னுதாரணமாகும். அதற்கு எவ்வித பங்கமும் ஏற்படாமல் இருக்க ,
சமய நல்லிணக்கம் பேணுகின்ற நல்லவர்கள், சகோதர சமயத்தினின்றும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக நமது பெரியவர்கள், மற்ற சமய
பெரியவர்களை அன்புடன் அணுகி, நல்லவர்கள் வெற்றி பெற வழிகாண வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கு
வாக்களிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும்.
துணைத் தலைவர் :
தலைவர் ஒரு பகுதியைச் சார்ந்தவராக இருந்தால், துணைத்தலைவர் மற்றொரு பகுதியைச் சார்ந்தவராக இருப்பது, நகரின் எல்லா பகுதிகளுக்கும்
பிரதிநித்துவம் கிடைத்திட வழிகாட்டும் என்ற முந்தைய நடைமுறை நியாயமானது. ஆனால், இதை ஒன்றை மாத்திரம் அளவுகோலாக
ஏற்றுக்கொண்டால்,கடந்த காலத்தில் ஏற்பட்ட விபரீதங்கள் மீண்டும் ஏற்படலாம். இரண்டரை ஆண்டுகாலம் ஒரு இளைஞன் துணைத்தலைவர்
பதவிக்கு பெருமை சேர்க்க மற்றொருவர் அந்தப் பதவியையே இழிவுபடுத்திய நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியபாடம், காயல்
ஒன்றுதான். அதில் கிழக்கு,மேற்கு,மத்திய என்றெல்லாம் எதுவும் இல்லை. உம்மா வீட்டை மேற்கிலும், மனைவி வீட்டை கிழக்கிலும்
வைத்துக்கொண்டு, கிழக்கென்றும் மேற்கென்றும் வீண்ஜம்பம் எதற்கு ? கல்வியும்,மார்க்கமும் அறிந்த,ஒழுக்கத்தைப்பேணும் இளைஞரொருவர்
இந்தப் பதவிக்கு வரவேண்டும். அவர் நகரின் எந்தப்பகுதியில் இருந்து வந்தாலும் வாழ்த்துவோம்.
மனதில் படுபவை :
நல்லவர்,மார்க்கம் கற்றவர்,ஒழுக்கம் பேணுபவர்,இளைஞர் இப்படி ஏதேதோ எழுதுகின்றீரே? அப்படி யாராவது ஒருசிலரை உம்மால் அடையாளம்
காட்ட முடியுமா என்று என்னிடமே திருப்பிக் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை கேட்டுவிட்டால்? அதற்கும் பதில்
இருக்கிறது. சமூக ஊழியர் ஜனாப்.கலாமி காக்கா, சமூகபார்வையாளர் மற்றும் ஆர்வலர்.ஜனாப். என்.எஸ்.இ.மஹ்மூது மாமா (இருவரும் மனதால்
இளைஞர்கள்), பா.மு.ஜலாலி காக்கா, துளிர் ஷேக்னா காக்கா, வக்கீல் அஹமத் காக்கா, போன்றவர்கள் தலைவர் பதவிக்கும், ஐஐஎம் வாஹித்
காக்கா, தம்பி.கே.ஜே.சாஹுல் ஹமீத், ஏ.தர்வேஷ் முஹம்மத் காக்கா, ஹாபிழ்.எஸ்.கே.ஸாலிஹ் போன்றோர் துணைத்தலைவராகவும்
வரலாமே?
மேலும் வெளிநாடுகளில் வாழும், தகுதியும் திறனும் படைத்த காயலர்களை, கட்டுரையின் விரிவஞ்சி பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறேன்.
நான் அறியாத இவர்களினும் சிறந்த நன்மக்கள் ஏராளம் நமதூரில் இருக்கலாம்.நான் சுட்டிக்காட்டிய பெயர்கள் அனைத்தும், இவர்களைப்போன்றவர்கள்
வரலாமே என்ற எண்ணத்தை வெளிப்படுத்த மாத்திரமே! முந்தைய பகுதியில் நான் குறிப்பிட்டதைப்போல பொதுவான ஒரு நபரை அடையாளம்
காணும்பணி, இன்றே, இப்போதே,இந்த நிமிடமே துவங்கப்பட வேண்டும். அப்பாடா! மனதில் பட்டவைகளை , மக்கள் மன்றத்தில் பதிவு
செய்துவிட்டேன்.இதயத்தின் பாரம் இலேசாவதை உணர்கிறேன்.
நிறைவுரை :
பெற்றோரே,பெரியோரே! சகோதர சகோதரியரே! தோழர்களே , தம்பிகளே! களமாற்றும் இளைஞர்களே! வழிநடத்தும் மூத்தவர்களே! சமீபத்தில்
நான் கேட்டு இரசித்த ஒரு கவிதையை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்து,இந்தக்கட்டுரையை நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன். ஐந்தில்
வளையாதது ஏது தெரியுமா? ஒன்று மட்டும்தான்.
2 3 4 என்று அனைத்தும் வளைந்துவிட்டது. அதனால் ஐந்தில் வளையாதது 1 மட்டும்தான்.
நாமும் ஒன்றாவோம்! ஒற்றுமையாய் வளையாமல் நிமிர்ந்து நிற்போம்!
வானின்றிழியும் மழை எவ்விதப் பேதமும் இன்றி எல்லோருக்கும் பொதுவானதோ அதுபோல, கொள்கை, பகுதி என்ற பேதமின்றி ஒன்றுபட்ட
உயர்வான காயலை உண்டாக்குவோம்! இன்ஷா அல்லாஹ்!
நம் கனவு நனவாகும் ! அந்த நல்ல நாளை விரைவில் கொண்டாடுவோம்!
எல்லாப் புகழும் இறைவனுக்கே! |